புதன், 14 மே, 2014

தேசிய அரசியலுக்கு செல்லும் ஜெயலலிதா: தேடி வருகிறது வாய்ப்பு?

மத்தியில் புதிய அரசு அமைந்த பின், தீவிரமாக, தேசிய அரசியலில் ஈடுபட வேண்டிய அவசியம் ஏற்பட்டால், ராஜ்யசபா மூலம், தமிழக முதல்வர் ஜெயலலிதா, எம்.பி.,யாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியொரு தகவல் டில்லியில் பரவ, தேசிய அளவிலான அரசியலில், புதிய பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. கட்டாயம் ஏற்படும் நடந்து முடிந்த, லோக்சபா தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை, வரும் 16ம் தேதி அன்று, காலையில் துவங்கும். அன்று இரவுக்குள்ளாகவே, பெரும்பாலான தொகுதிகளின் முடிவுகள் வெளியாகி விடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், 17ம் தேதியில் இருந்து, டில்லியில் புதிய ஆட்சி அமைக்கும் வேலைகள், அசுர வேகத்தில் துவங்கிவிடும்.  தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளின்படி, பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, பெருவாரியான இடங்கள் கிடைக்கும் என்று, செய்திகள் வெளியாகி உள்ளன.இருப்பினும், ஆட்சியமைப்பதற்கு தேவையான, பெரும்பான்மை இடங்கள், அந்த கூட்டணிக்கு கிடைப்பது, சந்தேகமே என்று, முக்கிய அரசியல் கட்சிகள் எல்லாம் கருதுகின்றன.  மேலும் வாய்தா வாங்குவதற்கு வசதியாக இருக்கும்... வருவாய்துறை, போலிஸ் என்று தடக்கென்று கைது செய்து விட முடியாது... ப்ரொடொகால் காக்கும்..
அவ்வாறு இருக்கும்பட்சத்தில், கணிசமான எண்ணிக்கையை, கையில் வைத்திருக்கும் கட்சிகளை, பா.ஜ., அணுக வேண்டி கட்டாயம் ஏற்படும்.

இப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டால், பா.ஜ.,வின் முதல் 'சாய்ஸ்' ஜெயலலிதாவாகத் தான் இருப்பார் என்று, பா.ஜ., தரப்பிலேயே சொல்ல ஆரம்பித்திருக்கின்றனர்.'நரேந்திர மோடியும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், நெருங்கிய நண்பர்கள் என்பதால், நிச்சயம், அ.தி.மு.க.,வின் ஆதரவை, பா.ஜ., நாடும்' என்றே, எல்லா தரப்பிலும் எதிர்பார்க்கின்றனர். அவ்வாறு அணுகும் பட்சத்தில், அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு, ஆட்சியில் பங்கேற்கக்கூடிய சூழ்நிலை, அ.தி.மு.க.,வுக்கு ஏற்படும். அந்த சமயத்தில், மத்திய ஆட்சியில், மிகப்பெரிய பொறுப்பை, ஜெயலலிதாவுக்கு பா.ஜ., தரப்பு கொடுக்கலாம்.

பல்வேறு பிரச்னைகளால், தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நலன்கள் அனைத்தும், கிடைக்காமல் போனதற்கான காரணம், தான் தேசிய அரசியலில் ஈடுபடாதது தான் என்கிற எண்ணம், முதல்வர் ஜெயலலிதாவுக்கு இருப்பதால் தான், அவர் தேசிய அரசியலில் இறங்கி, பிரதமர் பதவியை அடைய வேண்டும் என்று விரும்பினார். அந்த எண்ணத்தில் தான், அவர் தமிழகத்தில் நாற்பது தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டார்.


நழுவ விடமாட்டார்



தேசிய அரசியலில், தீவிரமாக ஈடுபட வேண்டுமென்ற ஆர்வம், அ.தி.மு.க.,வினர் மத்தியிலும் பெரிய அளவில் இருப்பதால், ஜெயலலிதா, அப்படியொரு வாய்ப்பு கிடைத்தால், அதை கட்டாயம் நழுவ விட மாட்டார். அப்படிப்பட்ட சூழ்நிலையில், அவர், உடனடியாக எம்.பி.,யாக வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதற்காக, கட்சியின் சார்பில், ராஜ்யசபா எம்.பி.,யாக இருக்கும் யாரையும் ராஜினாமா செய்ய வைக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஊழல் வழக்கில், சிறை தண்டனை பெற்றதால், தி.மு.க.,வைச் சேர்ந்த செல்வகணபதி, தன் ராஜ்யசபா எம்.பி., பதவியை, சில வாரங்களுக்கு முன் இழந்தார். அதனால், அந்த இடம், காலியாகவே உள்ளது. பொதுத்தேர்தல் நடந்து கொண்டிருப்பதால் தான், அந்த இடத்தை நிரப்புவதற்கான தேர்தல் அறிவிப்பு வெளியாகவில்லை. தேர்தல் முடிவுகள் வெளியாகி, புதிய அரசு பதவியேற்ற சில தினங்களிலேயே, அந்த இடத்தை நிரப்புவதற்கான தேர்தல் அறிவிப்பு வெளியாகும். அந்த இடத்திற்கு, தற்போதுள்ள சூழ்நிலையில், எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கையின் அடிப்படையில், அ.தி.மு.க.,வைத் தவிர, வேறு யார் போட்டியிட்டாலும், அவர் வெற்றி பெற முடியாது.எனவே, தேசிய அரசியலில், உடனடியாக ஈடுபட வேண்டிய அவசியம் ஏற்படுமானால், ஜெயலலிதாவுக்கு, எந்தவிதமான தடைகளும், இருக்கப் போவதில்லை.சூழ்நிலைகள் சரியாக அமைந்தால், ஜெயலலிதா உடனடியாக எம்.பி.,யா வதும், அதன்மூலம், புதிய அரசில் மிகப்பெரிய பொறுப்பை ஏற்பதும், தேசிய அரசியலில் தீவிரமாக ஈடுபடுவதும், தவிர்க்க முடியாததாகி விடும் என, டில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.


முதல்வர் இன்று வருகை



லோக்சபா தேர்தல் முடிந்ததும், முதல்வர் ஜெயலலிதா, கோடநாடு சென்றார். வரும் 16ம் தேதி, ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளதால்,முதல்வர், இன்று சென்னை திரும்புகிறார்.கோடநாட்டில் இருந்து, மதியம் ஹெலிகாப்டர் மூலம் கோவை வருகிறார். அங்கிருந்து தனியார் விமானம் மூலம், மாலை 3:30 மணிக்கு, சென்னை திரும்புகிறார். அவருக்கு, வரவேற்பு அளிக்க, அ.தி.மு.க.,வினர் முடிவு செய்து உள்ளனர்.

- நமது டில்லி நிருபர் dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக