செவ்வாய், 13 மே, 2014

நைஜீரியா தீவிரவாதிகளின் பிடியிலிருந்து 55 மாணவிகள் தப்பியிருக் கிறார்கள்


 நைஜீரியாவில் அடுத்தடுத்து இரண்டு பயங்கரச் சம்பவங்கள். அந்த நாட்டில் சிபோக் என்ற ஊரின் அரசு உறைவிடப் பள்ளி யிலிருந்து 270 மாணவிகளை ‘போகோ ஹராம்' மதவாதக் குழுவினர் ஏப்ரல் 14-ம் தேதி இரவு கடத்திச் சென்றனர். மே 5-ம் தேதி இன்னொரு கிராமத்திலிருந்து 5 மாணவிகளைக் கடத்திச்சென்றனர். அதே நாள் இன்னொரு நகரத்துக்குள் நுழைந்த அந்தக் குழுவினர் 300-க்கும் மேற்பட்ட அப்பாவிகளைச் சுட்டுக் கொன்றிருக்கின்றனர். அவர்களை எதிர்த்து அங்கிருந்த 15 ராணுவ வீரர்கள், உதவிக்கு எந்தத் துருப்புகளும் வராத நிலையில், சுமார் 5 மணி நேரம் சண்டை போட்டனர். போகோ ஹராம் தீவிரவாதிகளை அந்த ஊர் மக்கள் எதிர்த்துச் சண்டை யிட்டுக் காட்டுக்குள் துரத்தினர்.
இந்தத் தீவிரவாதிகளின் பிடியிலிருந்து 55 மாணவிகள் தப்பியிருக் கிறார்கள். மலைப்பாங்கான காட்டுப் பகுதியாக இருப்பதால் அங்கு எளிதில் நுழைந்து தேடவும் முடியவில்லை. கேமரூன் நாட்டையொட்டிய எல்லையில் 11 லாரிகளில் இளம் சிறுமிகளை, ஆயுதமேந்திய பலர் கூட்டிச் சென்றதாக கிராமவாசிகள் கூறுகின்றனர். கடந்த 10 மாதங்களில் 80 மாணவிகளை போகோ ஹராம் தீவிரவாதிகள் கொன்றுள்ளனர். அத்துடன் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர் என்று 1,500 பேரையும் கொன்று குவித்துள்ளனர்.

கடத்தப்பட்ட மாணவிகளை ‘பாலியல் அடிமைகளாக' விற்று விடுவோம் என்று ‘போகோ ஹராம்’ தலைவர் அபூபக்கர் ஷெகா சொல்லியிருக்கிறார். அந்த மாணவிகள் மேற்கத்திய கல்வியைப் பயின்றதுதான் இந்தக் கடத்தல்களுக்கெல்லாம் காரணம் என்று கூறப்படுகிறது. மேற்கத்திய கல்வியைக் கற்றுத்தரும் பள்ளிகளை அரசு மூட வேண்டும், ஜனநாயக அடிப்படையிலான தேர்தல்முறையும் - அரசும் கூடாது, ஆண்கள் மேற்கத்திய சட்டை, பேண்ட் அணியக் கூடாது என்பதெல்லாம் போகோ ஹராமின் கட்டளைகள்.
நைஜீரிய அதிபர் குட்லக் ஜோனதானின் நிர்வாகம் வலுவில்லாமல் இருப்பதால் தீவிரவாதிகள் மக்களை இப்படியெல்லாம் அலைக் கழிக்கிறார்கள். போகோ ஹராம் தீவிரவாதிகள் மதத்தின் பெயரால் நடத்தும் அராஜகங்களை இனியும் சகித்துக்கொண்டிருக்கக் கூடாது என்றும், ஆனால், மேற்கத்திய நாடுகளைத் துணைக்கு அழைத்தால் இராக், ஆப்கானிஸ்தானுக்கு ஏற்பட்ட கதிதான் நைஜீரியாவுக்கும் ஏற்படும் என்றும் அங்குள்ளவர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.
கடந்த காலத்திலும் இதுபோன்ற அமைப்புகள் சிறுமிகளைக் கடத்திச்சென்று தங்கள் வீரர்களுக்குப் பாலியல் அடிமைகளாக்குவது, சிறுவர்களைக் கடத்திச்சென்று அவர்களைச் சிறார் போர்வீரர்களாக ஆக்குவது என்றெல்லாம் மிக மோசமாக மனித உரிமை மீறலில் ஈடுபட்டிருந்தன. இதுபோன்ற அடிப்படைவாதக் குழுக்கள் உலகெங்கும் பல்வேறு மதங்கள், இனங்களிடையே காணப்படுவது நம் உலகை மீண்டும் மத்திய காலத்தை நோக்கிக் கொண்டுசென்றுவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.
இதுபோன்ற அட்டூழியங்களால் அடிப்படைவாதிகள் நீண்ட நாட்களுக்கு அதிகாரத்தைச் செலுத்த முடியாது. தங்களுடைய செயல்களால் தங்கள் மதங்களுக்கும் அந்த மதங்களைப் பின்பற்றும் கோடிக்கணக்கான அப்பாவி மக்களுக்கும்தான் பெரும் பிரச்சினை என்பதை அடிப்படைவாதிகள் உணரப்போவதே இல்லை. tamil.thehindu.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக