ஞாயிறு, 11 மே, 2014

சொத்துக் குவிப்பு வழக்கு( அத்தியாயம் - 6 ) ஒரு தொடர் கதை!

திமுக தலைவர் கலைஞர் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கு விபரங்களை தொடர்ந்து எழுது வருகிறார்.  இன்று அத்தியாயம் -6! உடன்பிறப்பே,
21-3-2014 முதல் தனது இறுதி வாதத்தை பவானி சிங் தொடங்கினார். பெங்களூரில் நடைபெறும் இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் பவானி சிங் அவர்களே, சாட்சிகள் எல்லாம் தங்கள் சாட்சியங்களில் என்ன தெரிவித்தார்கள் என்பதையெல்லாம் வரிசையாக நீதிமன்றத்திலே தொகுத்துச் சொல்லியிருக்கிறார்.
அந்தச் சாட்சியங்கள் மூலமாக வெளிவந்த விபரங்கள் தமிழகத்தில் “முரசொலி”, “தினகரன்” ஆகிய ஏடுகளைத் தவிர மற்ற ஏடுகளால் வெளியிடப் படவில்லை. அவர் படித்துக் காட்டிய சாட்சியங் களாவன:-
ஜெயலலிதாவிற்குச் சொந்தமாக கொடநாட்டில் 800 ஏக்கர் நிலமும், நெல்லையில் 1,190 ஏக்கர் நிலமும், ஊத்துக்கோட்டையில் 200 ஏக்கர் நிலமும், சிறுதாவூரில் 25 ஏக்கர் நிலமும் வாங்கப்பட்டதற்கான சாட்சியங்களை நீதிமன்றத்தில் அவர் படித்துக் காண்பித்தார்.


``அந்த நிலங்களை, அப்போது அரசுப் பணியில் இருந்த வேளாண்மைத் துறை அதிகாரி ராதா கிருஷ்ணன் என்பவரை, முறைகேடாக சொந்தத் தேவைகளுக்குப் பயன்படுத்தி, நிலங்களை அவர் ஆய்வு செய்த பிறகு, வாங்கப்பட்டுள்ளன’’ என்றும் பவானி சிங் குறிப்பிட்டார். மேலும், வாகனங்கள் வாங்கிக் கொடுத்தவர்கள் அளித்த சாட்சியங்களின் விவரத்தையும் பவானி சிங், நீதிபதியிடம் எடுத்துரைத்தார்.

``1991 ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் முதல் 1996 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் வரையிலான அந்த ஐந்தாண்டுகளில் ஜெயலலிதா உள்ளிட்ட குற்றவாளி கள், சேர்த்த சொத்துக்களின் அன்றைய மதிப்பு பல லட்சங்கள். இன்று அதன் மதிப்பு 4 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பெருகி உள்ளது” என்றும் பவானி சிங் தனது வாதத்தின் போது சுட்டிக் காட்டினார்.

மேலும் அரசு வழக்கறிஞர், “இந்த வழக்கில் 1 முதல் 4 வரையிலான குற்றவாளிகள் ஒருவருக் கொருவர் தொடர்புடையவர்கள் என்பதற்கு பல கம்பெனிகளின் ஆவணங்கள் தாக்கல் செய்யப் பட்டிருக்கின்றன. அதன் மூலம் நான்கு குற்றவாளிகளும் கூட்டுச் சதி செய்து, முதல் குற்றவாளி முதலமைச்சராக இருந்த போது, அவரது அதிகாரத்தைப் பயன்படுத்தி, அவருக்காகவும், அவரைச் சார்ந்த மற்ற 3 குற்றவாளி களுக்காகவும் தங்களது வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துக்களைச் சேர்த்திருக்கிறார்கள் என்பதுதான் இந்த வழக்கின் சாராம்சமாகும்” என்றும் எடுத்துரைத்தார் பவானி சிங்.
“இந்த வழக்கில் மூன்றாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள வி.என்.சுதாகரனை முதல் குற்றவாளி யாகச் சேர்க்கப்பட்டுள்ளவர் (ஜெயலலிதா) தத்துப் பிள்ளையாக ஏற்றுக் கொண்டு பிரம்மாண்ட மான முறையில் திருமணம் செய்து வைத்துள்ளார்.”


“குற்றம் சாட்டப்பட்டவர்கள் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்திருப்பதற்கான ஆவணங் கள் உள்ளன” என்ற விபரங்களை நீதிமன்றத்தில் எடுத்துக் கூறினார். குற்றவாளிகள் பல நிறுவனங்களை வாங்கி யதற்கான ஆவணங்கள் குறித்தும், அந்த நிறுவனங் களின் பெயர்களிலேயே பல அசையாச் சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ள விவரங்களையும் பவானி சிங் படித்துக் காண்பித்தார்.
சசிகலாவும், இளவரசனும் சென்று நீலாங்கரையில் உள்ள ஒரு பங்களாவை சுற்றிப் பார்த்து, அதை வாங்கியது சம்மந்தமாக அந்த இடத்தின் உரிமையாளர் வழங்கியிருந்த சாட்சியத்தையும்; அதேபோன்று நீலாங்கரையில் நீச்சல் குளம் உள்பட ஒரு பங்களா அமைந்த இடத்தினை சுதாகரன் வாங்கியது சம்மந்தமாக அந்த இடத்தின் உரிமையாளர் அளித் திருந்த சாட்சியத்தையும்;

ஜெயலலிதா கொடநாட்டில் வாங்கிய 800 ஏக்கர் நிலத்தினைச் சீரமைக்க வேளாண்மைத் துறை அலுவலர் ராதாகிருஷ்ணனை அழைத்தது பற்றி அந்த அதிகாரியே அளித்த சாட்சியத்தையும்; மேலும், அதே வேளாண்மைத் துறை அதிகாரி ராதாகிருஷ்ணன், சுதாகரனால் முறைகேடாக சொந்தத் தேவைகளுக்காக அனுப்பப்பட்டு, அவர் திருநெல் வேலியில் 1190 ஏக்கர் நிலத்தினை ஆய்வு செய்த பிறகு, வாங்கியது குறித்த சாட்சியத்தையும்; சென்னை அருகே உள்ள வாலாஜாபாத்தில் 100 ஏக்கர் நிலத்தினை அந்த இடத்தின் உரிமையாளர் களை அணுகி, வாங்கிக் கொடுத்த நிலத்தரகர் ராஜாராம் வழங்கியிருந்த சாட்சியத்தையும்; நீதிமன்றத்தில் படித்துக் காண்பித்த அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானி சிங், ``வழக்கில் குற்றவாளிகளாக
சேர்க்கப்பட்டுள்ளவர்களின் பொருளாதார நிலைக்கும், அவர்கள் வாங்கிக் குவித்துள்ள நிலங்களுக்கும் துளியும் சம்மந்தமில்லை.

இவை அனைத்தும் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளதன் மூலம் வாங்கப்பட்ட நிலங்கள் என்பது சாட்சியங்கள் மூலம் தெளிவாகத் தெரிகிறது. 5 ஆண்டுகளில் பல லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பான சொத்துக்கள், இன்றைக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ளவையாக விளங்குகின்றன’’ என்றும் குறிப்பிட்டார்.
அரசு வழக்கறிஞர் பவானி சிங் - நீதிமன்றத்தில் பட்டியலிட்ட ஜெயலலிதாவின் சொத்துக்களில் சில!
 1. சென்னை அருகே வாலாஜாபாத்தில் 600 ஏக்கர்,
 2. சிறுதாவூரில் 25 ஏக்கர் பரப்பளவில் ஒரு பங்களா.
 3. நீலாங்கரையில் 2 ஏக்கர்.
 4. கொடநாட்டில் 800 ஏக்கர் மற்றும் பங்களாக்கள். (இங்கு ஒரு ஏக்கர் ரூ. 5 கோடி மதிப்பு இருக்கும். இதுவே 4
ஆயிரம் கோடியைத் தாண்டுகிறது. இது ஒரு உத்தேச மதிப்புதான்.)
 5. காஞ்சிபுரத்தில் 200 ஏக்கர்.
 6. கன்னியாகுமரியில் மீனங்குளம், சிவரங் குளம், வெள்ளங்குளம் பகுதியில் 1,190 ஏக்கர்.
 7. தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் பகுதியில் 200 ஏக்கர்.
 8. ரெவரே அக்ரோ பார்ம் பெயரில் 100 ஏக்கர்
 9. 30 வண்ணங்களில் பலவித கார்கள் மற்றும் டிரக்கர்கள்
 10. ஐதராபாத்தில் திராட்சைத் தோட்டம்.
அரசு வழக்கறிஞரால் நான்கு நாட்களில் நீதிமன்றத்தில் எடுத்து வைக்கப்பட்ட, சாட்சியங்களால் பதிவு
செய்யப்பட்ட சொத்துக்களின் மதிப்பு வருமாறு :-
 1) வாலாஜாபாத்தில் ஜெயலலிதா தரப்பினர் வாங்கி யிருப்பது 100 ஏக்கர் நிலம். இந்த 100 ஏக்கர் நிலத்தின்
அரசு மதிப்பு 40 கோடி ரூபாய் - சந்தை மதிப்பு 50 கோடி ரூபாய்.
 2) சிறுதாவூரில் வாங்கியிருப்பது 25.4 ஏக்கர். இந்த நிலத்தின் அரசு மதிப்பு 42.5 கோடி ரூபாய்; சந்தை
மதிப்பு 50 கோடி ரூபாய்.
 
 3) நீலாங்கரையில் இருக்கும் ஜெயலலிதா தரப் பினரின் 2 ஏக்கர் நிலத்தின் அரசு மதிப்பு 70 கோடி ரூபாய்;
சந்தை மதிப்பு 100 கோடி ரூபாய்.
 4) காஞ்சிபுரத்தில் ஜெயலலிதா தரப்பினர் வாங்கி யுள்ள 200 ஏக்கர் நிலத்தின் அரசு மதிப்பு 60 கோடி ரூபாய்;
சந்தை மதிப்பு 100 கோடி ரூபாய்.
 5) கன்னியாகுமரியில் ஜெயலலிதா தரப்பினர் வாங்கியுள்ள 1,190 ஏக்கரின் அரசு மதிப்பு 175 கோடி ரூபாய்;
சந்தை மதிப்பு 292 கோடி ரூபாய்.
 6) பையனூரில் வாங்கியுள்ள 5 ஏக்கர் நிலத்தின் அரசு மதிப்பு 10 கோடி ரூபாய்; சந்தை மதிப்பு
15 கோடி ரூபாய்.
 7) கொடநாட்டில் ஒரு ஏக்கர் நிலத்தின் அரசு மதிப்பு 3 கோடி ரூபாய்; சந்தை மதிப்போ 5 கோடி ரூபாய்.
அங்கே ஜெயலலிதா தரப்பினர் வாங்கியுள்ள 898 ஏக்கர் நிலத்தின் அரசு மதிப்பு 2,450 கோடி ரூபாய்,
சந்தை மதிப்போ 4,500 கோடி ரூபாய்.
 8) தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் பகுதியில் 200 ஏக்கர்.
 9) ரெவரே அக்ரோ பார்ம் பெயரில் 100 ஏக்கர்
 10) 30 வண்ணங்களில் பலவித கார்கள், டிரக்கர்கள்
 11) ஐதராபாத்தில் ஜெயலலிதாவின் திராட்சைத் தோட்டம்.

இந்தப் பட்டியல்படி, 1991-96 - இந்த ஐந்து ஆண்டுகளில், ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது, வாங்கிப் போட்டுள்ள சொத்துக்களில், ஒரு பகுதி சொத்துக்களின் இன்றைய அரசு மதிப்பு 2,847 கோடியே 50 இலட்சம் ரூபாய்; சந்தை மதிப்போ 5,107 கோடி ரூயாய். இத்துடன் நகை, வைரம், கம்பெனி முதலீடுகள் போன்ற அசையும் சொத்துக்களின் மதிப்பையும் கணக்கில் சேர்த்தால் மேலும் பல கோடி ரூபாய் வரும். அதாவது ஜெயலலிதா முதலமைச்சர் பொறுப்பை ஏற்காதபோது இருந்ததைவிட 310 மடங்கு அதிகச் சொத்துகளை ஐந்தாண்டுகளில் குவித் திருக்கிறார்.
இவ்வாறு சொத்துக்களை வாங்கிக் குவிப்பதற்காகவே ஜெயலலிதா தரப்பினர் இரண்டாண்டு காலத்தில் (1993-1994) 32 புதிய கம்பெனிகளை உருவாக்கியிருக்கிறார்கள். இந்தக் கம்பெனிகளின் பெயரில் வங்கிகளில் கோடிக்கணக்கான ரூபாய் ரொக்கமாக டெபாசிட் செய்யப்பட்டு, அந்தப் பணத்தின் மூலம், அந்தக் கம்பெனிகள் பெயரில் தமிழகம் முழுவதும் பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் வாங்கிக் குவிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, மெடோ அக்ரோ பார்ம்ஸ் பெயரில் 200 ஏக்கர் நிலமும்; ரிவர்வே அக்ரோ ப்ராடக்ட்ஸ் பெயரில் 1,190 ஏக்கர் நிலமும்; கொடநாடு எஸ்டேட்ஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் 898 ஏக்கர் நிலமும்; ராமராஜ் அக்ரோ மில்ஸ் பெயரில் 50 ஏக்கர் நிலமும் வாங்கப்பட்டுள்ளதுடன்; சூப்பர் டூப்பர் கம்பெனி; ஆஞ்சனேயா பிரிண்டர்ஸ் (ஜெ.ஜெ. டி.வி. ஆபீஸ், நமது எம்.ஜி.ஆர். அலுவலகம் எல்லாம் இங்கேதான் உள்ளன); ஜெயா பப்ளிகேஷன்ஸ்; சசி எண்டர்பிரைசஸ்; இண்டோ-டோகா கெமிகல்ஸ் அண்ட் பார்மசூடி கல்ஸ்; கிரீன் பார்ம் ஹெளசஸ்; மெட்டல் கிங்ஸ் (இந்தக் கம்பெனிக் காகத்தான் டான்சி நிலம் வாங்கப்பட்டது) என 32 கம்பெனிகள் ஜெயலலிதா தரப்பினர் பெயர்களில் வரிசையாகத் தொடங்கப்பட்டுள்ளன.
இவை தவிர, சென்னை மாமல்லபுரம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள நீலாங்கரையில் 2 ஆயிரத்து 400 சதுர அடி நிலம், நான்காவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள இளவரசி பெயரில் கடந்த 1995 மே 17ம் தேதி கிரயம் செய்யப்பட்டுள்ளதாக அகமது என்பவர் சாட்சியம் அளித்துள்ளார்.
தமிழக அரசின் பொதுப்பணித் துறையில் செயற் பொறியாளராக இருந்த வி. பாஸ்கரன் அளித்துள்ள சாட்சியத்தில், திருவாரூர் மாவட்டம், வண்டாம் பாளையத்தில் இயங்கி வந்த ராம்ராஜ் ரைஸ் மில்லை வாங்கி ராம்ராஜ் ஆக்ரோ மில்லாக மாற்றம் செய்ததாகத் தெரிவித்திருக்கிறார். வழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட் டுள்ள ஜெயலலிதாவின் ஆடிட்டராக இருந்த கோபால்ரத்தினம் அளித்துள்ள சாட்சியத்தில், “கடந்த 1964 முதல் 1986-ஆம் ஆண்டு வரை ஜெயலலிதாவின் ஆடிட்டராக நான் பணியாற்றி வந்தேன். ஜெயலலிதா மற்றும் அவரது தாயார் பெயரில் இருந்த சொத்துகள், அதன் மூலம் கிடைத்த வருவாய் ஆகியவற்றை ஆண்டுதோறும் தணிக்கை செய்யப்பட்டு, வருமான வரியும் செலுத்தப்பட்டது.

கலாநிகேதன் நாடக மன்றம், ஜாக்பாட், (குதிரைப் பந்தயத்தின் மூலம் 1970ஆம் ஆண்டில் கிடைத்தது) நிலத்தில் விளையும் பயிர்கள் மூலம் கிடைத்த வருவாய் ஆகியவையும் சொத்துக் கணக்கில் காட்டப்ப ட்டுள்ளன’’ என்றார்.

தமிழகக் காவல் துறையில் வீடியோகிராபராகப் பணியாற்றி வந்த ராஜேந்திரன் கொடுத்துள்ள சாட்சியத்தில், வழக்கின் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள ஜெயலலிதா உள்பட வழக்கில் குற்றவாளிகளாக இருப்போருக்குச் சொந்தமான - எண் 31ஏ, போயஸ் கார்டன், எண் 36 போயஸ் கார்டன் வீடு, சிறுதாவூர் பங்களா, பையனூர் பங்களா, ஐதராபாத் திராட்சைத் தோட்டம், கொடைக்கானல் பங்களா, கொடநாடு தேயிலைத் தோட்டம், சென்னையில் உள்ள கிண்டி, தியாகராய நகர், அண்ணாநகர், கொட்டிவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், வெட்டுவாங்கேணி, அரும்பாக்கம், பரமேஸ்வர்நகர், மந்தைவெளி, நுங்கம்பாக்கம், சாந்தோம், செய்யூர் உள்பட பல பகுதிகளில் உள்ள வீடு, பங்களா, அலுவலகங்கள் மற்றும் `நமது எம்.ஜி.ஆர்.’, ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ், ஜெயா பப்ளிகேஷன், சசி எண்டர்பிரைசஸ் உள்பட பல இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புப் போலீசார் சோதனை நடத்தியதைப் படம் பிடித்துள்ளதை ஆதாரங்களாகத் தெரிவித்துள்ளார்.
தாஜுதீன் என்பவர் கொடுத்துள்ள சாட்சியத்தில், சென்னை ஜெம்ஸ் கோர்ட் சாலையில் தங்களுக்குச் சொந்தமான கட்டிடத்தை விற்பனை செய்ய முடிவு செய்திருந்ததாகவும், அதைத் தெரிந்துகொண்ட ஒருவர், கட்டிடத்தைத் தங்களுக்கு விற்பனை செய்யும்படி வலியுறுத்தியதாகவும் கூறியுள்ளார். சுமார் 60 ஆயிரம் சதுர அடிகள் கொண்ட அந்தக் கட்டிடத்தை ஜெயலலிதா, சசிகலா, வி.என்.சுதாகரன் பெயரில் தாஜுதீன் கிரையம் செய்து கொடுத்துள்ளார். இதற்காக ரூ.1 லட்சத்து 84 ஆயிரத்து 500 காசோலையாகவும், ரூ.500 ரொக்கப் பணமாகவும் கொடுத்ததாக தாஜுதீன் சாட்சியம் அளித்துள்ளார். அந்தக் கட்டிடம் `சசி எண்டர் பிரைசஸ்’ நிறுவனத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது.
ராஜகோபாலன் என்பவர் கொடுத்துள்ள சாட்சியத்தில் தஞ்சை மாவட்டம், மன்னார்குடியில் தங்கள் குடும்பத்திற்குச் சொந்தமான நிலத்தை ரூ.8 லட்சத்து 85 ஆயிரம் கொடுத்து குற்றவாளிகள் வாங்கியதாகக் கூறியுள்ளார். அதை - எண் 36, போயஸ் கார்டன், சென்னை என்ற முகவரியில் பத்திரம் பதிவு செய்யப்பட்டதாகக் கூறியுள்ளார்.
வெங்கட்ராமன் என்பவர் கொடுத்துள்ள சாட்சியத்தில், மாமல்லபுரம் சாலையில் உள்ள சிறுதாவூரில் தனக்குச் சொந்தமாக 1.5 ஏக்கர் நிலம் இருந்தது என்றும், தான் திருவல்லிக்கேணியில் வசித்து வந்தாலும், அடிக்கடி சிறுதாவூரில் உள்ள நிலத்தைப் பார்த்து வந்ததாகவும், ஒருமுறை நிலத்தைப் பார்க்கச் சென்றபோது, நிலத்தின் ஒரு பகுதியில் முள்வேலி போடப்பட்டிருந்ததைப் பார்த்து, நிலத்தின் பக்கத்தில் உள்ளவர்களிடம் கேட்டதாகவும், அதற்கு அவர்கள், “மூன்று பேர் வந்து வேலி போட்டதாகக் கூறியதாகவும், அதன் பின்னர் வேலி போட்டவர்களே அவரைச் சந்தித்து, ``நிலத்தை முழுமையாக தங்களுக்கு விற்க வேண்டும்” என்று வற்புறுத்தியதாகவும் கூறியுள்ளார். ``தான் நிலத்தை விற்பனை செய்யும் யோசனையில் இல்லை’’ என்று இவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், ``இந்த நிலத்தை வாங்குபவர் தமிழக முதல்வராக இருக்கும் ஜெயலலிதா. எனவே முரண்டு பிடிக்காமல் நிலத்தை எழுதிக் கொடுக்க வேண்டும்’’ என்று மிரட்டினர்.``வேறு வழியில்லாமல், பல லட்சம் மதிப்புள்ள நிலத்தை ரூ.39 ஆயிரத்திற்கு எழுதிக் கொடுத்தேன்’’ என்று அந்த நிலத்தின் உரிமையாளரான வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா உள்ளிட்டோர் எப்படிப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றி, எத்தனை இடங்களில் சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளனர் என்ற விபரங்களை அரசு வழக்கறிஞர் பவானி சிங் மேலே கூறிய சாட்சியங்களின் அடிப்படையில் விளக்கினார்.

அன்புள்ள,
மு.க.
(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக