சென்னை கோயம்பேடு ஆலந்தூர் இடையே மே மாதம் 15-ம் தேதி மெட்ரோ ரயில் சோதனை
ஓட்டம் நடைபெறவுள்ளது. இதைத்தொடர்ந்து அக்டோபர் மாத இறுதியில் முதலாவது
மெட்ரோ ரயில் போக்குவரத்தைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் ரூ.16,500 கோடி செலவில்,
இருவழித்தடங்களில் நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக கோயம்பேடு பரங்கிமலை
இடையே மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால்,
பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையம், பறக்கும் ரயில் (எம்.ஆர்.டி.எஸ்.),
புறநகர் ரயில், எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவற்றுக்கு மாறிச் செல்லும் வகையில்
பிரமாண்டமாக கட்டப்படுவதால் கட்டுமானப்பணி தாமதமாகியுள்ளது. எனவே,
கோயம்பேடு - ஆலந்தூர் இடையே 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு முதலாவது மெட்ரோ
ரயில் போக்குவரத்து தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
கோயம்பேடு பணிமனையில் முதலாவது மெட்ரோ ரயில் சோதனை ஓட்டத்தை முதல்வர்
ஜெயலலிதா கடந்த நவம்பர் 6-ம் தேதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர், கடந்த பிப்ரவரி 14-ம் தேதி கோயம்பேடு அசோக்நகர் இடையே 5.5 கிலோ
மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
அசோக்நகர் ஆலந்தூர் இடையே சவாலான பணியான கிண்டி கத்திப்பாரா
மேம்பாலத்துக்கு மேலே (தரையில் இருந்து 80 அடி உயரத்தில்) பறக்கும் மெட்ரோ
ரயில் பாதை 175 மீட்டர் நீளத்துக்கு அமைக்கப்பட்டு, தண்டவாளம் பதிக்கும்
பணிகளும், எலக்ட்ரிக்கல் வேலைகளும் நடந்து வருகின்றன. இப்பணிகள் மே மாதம்
10-ம் தேதிக்குள் முழுவதுமாக முடிக்கப்பட்டு, 15-ம் தேதி கோயம்பேடு
ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்படும் என்று சென்னை
மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறினார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
கோயம்பேடு ஆலந்தூர் இடையே மே மாதம் 15-ம் தேதி தொடங்கும் மெட்ரோ ரயில்
சோதனை ஓட்டம் ஒரு மாதம் வரை நடைபெறும். ஜூன் மாத இறுதியில் உத்தரபிரதேச
தலைநகர் லக்னோவில் உள்ள இந்தியன் ரயில்வே ஆராய்ச்சி, வடிவமைப்பு மற்றும் தர
அமைப்பை (ஆர்.டி.எஸ்.ஓ.) சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சென்னை வர
உள்ளனர். அவர்கள் தங்களுடன் எடுத்து வரும் அதிநவீன சாதனங்களை மெட்ரோ
ரயிலில் பொருத்தி, கோயம்பேடு ஆலந்தூர் இடையே அதிகபட்சம் மணிக்கு 88 கிலோ
மீட்டர் வேகத்தில் மெட்ரோ ரயிலை இயக்கி சோதனை மேற்கொள்வார்கள்.
தண்டவாளம் நேராக உள்ள பகுதிகளில் அதிகபட்சம் மணிக்கு 88 கிலோ மீ்ட்டர்
வேகத்திலும், வளைவான பகுதிகளில் மணிக்கு 50 முதல் 70 கிலோ மீட்டர்
வேகத்திலும் மெட்ரோ ரயிலை இயக்கி சோதனை நடத்தப்படும்.
ரயில் ஓட்டத்தின்போது, ரயில் மேலும் கீழுமாக குதிப்பது, இடது வலதுபுறமாக
ஆடுவது போன்றவை அனுமதிக்கப்பட்ட அளவுக்குள் இருக்கிறதா என்று கம்ப்யூட்டர்
மூலம் கண்காணிக்கப்பட்டு ரயிலின் பாதுகாப்புத் தன்மை உறுதி செய்யப்படும்.
இந்தச் சோதனை ஜூலை இறுதிவரை நடைபெறும்.
இதற்கிடையே கோயம்பேடு ஆலந்தூர் இடையே உள்ள 7 மெட்ரோ ரயில் நிலையங்கள்
கட்டுமானப் பணிகள் முடிக்கப்படும். அக்டோபர் முதல்வாரம் தெற்கு ரயில்வே
பாதுகாப்பு ஆணையரை அழைத்து வந்து சோதனை ஓட்டம் நடத்தப்படும். அவர் அனுமதி
கொடுத்ததும், அக்டோபர் மாத இறுதியில் கோயம்பேடு ஆலந்தூர் இடையே பறக்கும்
பாதையில் முதலாவது மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கும். இவ்வாறு அவர்
கூறினார். tamil.thehindu.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக