திங்கள், 7 ஏப்ரல், 2014

பிரவீண் குமாரும் தேர்தல் அதிகாரிகளும் நடத்தும் கோமாளிக் கூத்து ! A La ஏற்காடு இடைத்தேர்தல்


ஏற்காடு இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிகள் செல்லாக்காசாகியதையும், மாநிலத் தேர்தல் ஆணையர் பிரவீண் குமாரும் தேர்தல் அதிகாரிகளும் ஆளும் கட்சியின் கைப்பாவையாக இயங்கியதையும் நாடறியும்.
ள்ளூர் திருவிழாக்களின் போது, காப்பு கட்டப்பட்ட பின்னர் எல்லோரும் சுத்தபத்தமாக இருக்க வேண்டுமென்று போடப்படும் கட்டுப்பாடுகள் கேலிக்கூத்தாக முடிவதைப் போலவே, ஒவ்வொரு தேர்தலின் போதும் தேர்தல் அதிகாரிகள் விதிக்கும் கட்டுப்பாடுகளும் கெடுபிடிகளும் கோமாளிக் கூத்தாகிப் போகின்றன.
இந்திய தேர்தல் கமிசன்
வீடியோ கண்காணிப்புக் குழுக்கள், பறக்கும் படைகள் – எனத் தேர்தல் அதிகாரிகள் ஆரவாரம் செய்தாலும், வாகனச் சோதனைகள் நடத்தி கெடுபிடிகளைத் தீவிரமாக்கினாலும் இதுவரை எந்த ஓட்டுக்கட்சி அரசியல்வாதியோ, அவர்களது பணமோ சிக்கவில்லை. மாறாக, சேலம் மாவட்டம் குப்பனூர் சோதனைச் சாவடியில் பறிமுதல் செய்த ரூ.35 இலட்சத்தில் 8.25 இலட்சத்தை போலீசாரே சுருட்டிக் கொண்ட விவகாரம் வெளிவந்து நாறியது. இலஞ்ச ஊழலில் ஊறித் திளைக்கும் இத்தகைய அதிகார வர்க்கத்தையும் போலீசையும் கொண்டுதான், தம்மை மேலான அதிகாரமாகக் காட்டிக் கொள்ளும் தேர்தல் அதிகாரிகள் பணப் பட்டுவாடாவைத் தடுக்கப் போவதாகச் சதிராடுகிறார்கள்.

ஏற்காடு இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிகள் செல்லாக்காசாகிப் போனதையும், மாநிலத் தேர்தல் ஆணையர் பிரவீண் குமாரும் தேர்தல் அதிகாரிகளும் ஆளும் கட்சியின் கைப்பாவையாக இயங்கியதையும் நாடறியும். எல்லாவற்றுக்கும் மேலாக, ஜெயலலிதாவின் விசுவாசியான தமிழக போலீசுத்துறையின் சட்டம்-ஒழுங்கு பிரிவு டி.ஜி.பி. ராமானுஜம், பதவியிலிருந்து ஓவு பெற்ற பின்னரும் அப்பதவியில் தொடரும் நிலையில், அவர் தலைமையிலான போலீசைக் கொண்டு தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை நேர்மையாக நடத்த வாய்ப்பேயில்லை என்று தலைமைத் தேர்தல் ஆணையர் பிரம்மாவிடம் தி.மு.க. மனு கொடுத்துள்ள போதிலும் இது வரை நடவடிக்கை ஏதுமில்லை.
தேர்தல் சட்ட விதிமுறைகளின்படி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றவர்கள் ஒரு தொகுதியில்கூட போட்டியிட முடியாத நிலையில், டான்சி ஊழல் வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தால் மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதா, 2001-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் இவ்வுண்மையை மறைத்து நான்கு தொகுதிகளில் போட்டியிட மனு தாக்கல் செய்தார். ஜெயாவின் மனுக்கள் தேர்தல் அதிகாரிகளால் தள்ளுபடி செய்யப்பட்டன. எனினும், இரண்டு தொகுதிகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு, அவ்வாறு தாக்கல் செய்ய வில்லை எனப் பொய்யான வாக்குறுதி அளித்து மேலும் இரண்டு தொகுதிகளில் போட்டியிட மனு செய்த குற்றத்திற்காக அவர் மீது குற்றவழக்கு தொடரக்கோரி மத்திய தேர்தல் ஆணையத்தில் தி.மு.க. புகார் கொடுத்து, வழக்கு தொடுத்துள்ள போதிலும் இன்றுவரை நடவடிக்கை எடுக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.
தமிழகம் மட்டுமின்றி, நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அமைச்சர்கள் உள்ளிட்டு ஓட்டுக்குப் பணம் கொடுத்தோர் மீது ஒப்புக்காக வழக்கு பதிவானாலும், தேர்தல் முடிந்த பின்னர் அவை அப்படியே கிடப்பில் போடப்படுகின்றன. இதற்காக யாரும் தண்டிக்கப்படுவதோ, பதவி பறிக்கப்படுவதோ நடப்பதில்லை. இப்படி தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிகள் கழிப்பறைக் காகிதமாகிவிட்ட நிலையில், ஏதோ சாதிக்கப் போவதாகக் காட்டிக் கொள்ளும் நோக்கத்துடன், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தமிழக வாக்காளர்களுக்கு விநியோகிக்க ரூ. 5 ஆயிரம் கோடி பணம் மற்றும் பரிசுப் பொருட்களைக் கப்பல்கள் மூலம் கடத்தி வருவதாக தேர்தல் ஆணையருக்கு இரகசியத் தகவல் வந்துள்ளதாகக் கூறி, தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்த கப்பல்களில் தொடர்ந்து 3 நாட்களுக்குத் தேடுதல் வேட்டை எனும் கோமாளிக் கூத்தை அடிமுட்டாள்தனத்துடன் அரங்கேற்றி தேர்தல் அதிகாரிகள் பரபரப்பூட்டினர்.
ஓட்டுக்கட்சிகளுக்கிடையே கொள்கை வேறுபாடுகள் இல்லாமல் போய்விட்டதாலும், வாக்களிப்பதைத் தவிர வேறு பங்கேற்பு ஏதுமின்றி அரசியலிலிருந்தே படிப்படியாக மக்கள் விலக்கப்பட்டு வருவதாலும், நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீதும் ஓட்டுக்கட்சிகள் மீதும் அதிருப்தியும் நம்பிக்கையின்மையும் மக்களிடம் பரவி வருகிறது. இந்த அதிருப்திக்கு வடிகால் வெட்டி, நாடாளுமன்ற போலி ஜனநாயகத்தின் மீதும் இன்றைய அரசியலமைப்பு முறை மீதும் நம்பிக்கை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தேர்தல் ஆணையம் இத்தகைய சூரத்தனங்களுடன் சாமியாடிக் கொண்டிருக்கிறது. அதற்கு உடுக்கையடித்துக் கொண்டிருக்கின்றன ஆளும் வர்க்க ஊடகங்கள்.
- தலையங்கம் vinavu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக