மறுமதிப்பீடு செய்யும் பேராசிரியர்களின் மண்டைக்கனம்!
திமிருக்கு சாமரம் வீசுகிறது அழகப்பா பல்கலைக்கழகம்!
பாதிக்கப்படும் மாணவர்களே! யோசிப்பீர்!
பூனைக்கு மணி கட்டப் போவது யார்?
அதிக அளவில் மதிப்பெண் எடுக்காத கல்லூரி மாணவர்களைப் பற்றி பேராசிரியர்களால் கூறப்படும் நக்கலான வசனங்கள் ஏராளம். ஒரு மாணவன் அதிக அளவில் மதிப்பெண் எடுக்காததற்குக் காரணம் கல்விமுறையும் பேராசிரியர்கள் பாடம் நடத்தும் லட்சணமும்தானே தவிர மாணவனல்ல. அதே சமயத்தில் அதிக அளவில் மதிப்பெண் எடுக்கக்கூடிய மாணவர்களுக்கு ஏற்படும் கதிகளை பார்க்கும்போது சிலநேரங்களில் அப்படி மதிப்பெண் எடுக்காமலேயே இருந்துவிடலாம் என்றே தோன்றுகிறது. அப்படிப்பட்ட அடிவயிறு கலங்க வைக்கும் வேலைகளைச் செய்வதும் அதே கல்லூரிப் பேராசிரியர்கள்தான். இவர்கள் பேராசிரியர்களா? அல்லது பேராசிறியர்களா?
அதிகமான மதிப்பெண் எடுத்தால்தான் ஏதேனும் வேலை பார்க்கலாம் என்பதை தலையெழுத்தாக மதித்துப் போற்றி நடக்கும் ஒரு மாணவர் தனக்குக் கிடைக்கப்போகும் ஒவ்வொரு மதிப்பெண்ணையும் கவனித்தே தேர்வுகளை எழுதுகிறார். அதுபோல தேர்வு முடிந்ததும் எத்தனை மதிப்பெண்கள் கிடைக்கும் என பலமுறைகளில் மதிப்பீடு செய்து பார்க்கிறார். தேர்வு முடிவு வந்து மதிப்பெண்ணைப் பார்க்கும்போது அவருக்குக் கிடைத்த மதிப்பெண் குறைவாக இருப்பதாக எண்ணினால், உடனே மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கிறார். மறுமதிப்பீடு செய்யப்பட்டு மீண்டும் வருகின்ற மதிப்பெண்ணைப் பார்த்தால் ஒன்று அதே மதிப்பெண் இருக்கவேண்டும் அல்லது சற்றுக்கூடி இருக்கவேண்டும், ஆனால் மதிப்பெண் அதலபாதாளத்திற்குக் குறைந்தால்………?
காரைக்குடி அழகப்பா பலகலைக்கழகத்தின் கீழ் வருகிற ஒரு கல்லூரியில் ஒரு மாணவர் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கிறார். அவர் எடுத்த மதிப்பெண் 74. ஆனால், அவர் எதிர்பார்த்த மதிப்பெண் 83. எனவே, மறுமதிப்பீட்டிற்கு அனுப்புகிறார். ஆனால், மறுமதிப்பீடு செய்து அவருக்கு வந்த மதிப்பெண் 4. அதாவது வெறும் 4. பதறிப்போன அம்மாணவர் அந்தப் பாடத்தை நடத்திய தனது கல்லூரிப் பேராசிரியரிடம் கேட்கிறார். அவர் துறைத் தலைவரைப் போய்ப் பார்க்கச் சொல்கிறார். இவர் துறைத் தலைவரைப் போய்ப் பார்க்கிறார். அவர் முதல்வரைப் போய்ப் பார்க்கச் சொல்கிறார். இவரும் முதல்வரைப் போய்ப் பார்க்கிரார். அவரோ, இது பல்கலைக்கழக விவகாரம். அங்கே போய்க் கேட்டுக்கொள் என்கிறார். மாணவர் உடனே காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு வருகிறார். மறுமதிப்பீட்டுத்துறையில் போய்க் கேட்கிறார். அதற்கு அங்கே அவருக்குக் கிடைத்த பதில் என்ன தெரியுமா?
“அப்படித்தான் போடுவோம். நீ என்ன செய்வ? ஒழுங்கா கிடச்ச மார்க்க வச்சுக்கிட்டு இருந்திருக்கலாம்ல. இப்ப இதுதாம்ப்பா மறுமதிப்பீட்டு மார்க்கு. நீ என்ன செய்ய முடியுமோ? செஞ்சுக்க. எங்க போக முடியுமோ? போய்க்க.”
எப்படி இந்த பதில்!. மாணவர் பதறிப்போய் மீண்டும் கல்லூரிக்கு வந்து பேராசிரியர்களிடம் சொல்கிறார். ஆனால், அதற்குக் கிடைத்த பதில்
“அவர்கள் அப்படித்தான் செய்வார்கள். நம்மால் ஒன்றும் செய்ய இயலாது.”
ஏன் பேராசிரியர் இப்படிச் சொல்கிறார்? இவரும் மறுமதிப்பீட்டிற்குப் போவார். நாளைக்கு இவர்மீது ஏதாவது புகார் வந்தால் யார் காப்பாற்றுவார்? பல்கலைக்கழகமா? மாணவரா?
ஆக, மொத்தமாக பட்டை நாமம் சாத்தப்பட்ட நிலையில் கொல்லங்குடிக் காளியாத்தாவிற்கு காசு வெட்டிப் போடுவதைத்தவிர மாணவருக்கு வேறு வழியில்லை.
அப்படியே காசு வெட்டிப்போட்டாலும் ஒரு பயனும் இல்லை. காரணம், இது அழகப்பா பல்கலைக்கழகத்தில் மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் இதே நிலைதான் நிலவுகிறது.
மறுமதிப்பீடு செய்யும் பேராசிரியர் காலை பத்துமணிக்கு வருகிறார். ஒருநாளைக்கு அவர் 50 விடைத்தாள்கள் திருத்தவேண்டும். அதற்கு அவருக்கான கூலி 1000 ரூபாய். இந்தக்கூலி அவரது வருமானத்தில் சேராது. அதாவது இந்தக் கூலிக்காக அவர் அரசுக்கு வரி எதுவும் செலுத்துவதில்லை. ஆனால், 11 மணிக்கு டீ வருவதற்குள்ளேயே அவர் 50 விடைத்தாளையும் திருத்திவிடுவார். எந்திரன் படத்தில் இயந்திர மனிதனான ரோபோ சிட்டி புத்தகத்தை முகத்திற்கு நேரே வைத்துக்கொண்டு இப்படியும் அப்படியும் ஆட்டியதும் படித்தாகச் சொல்லுமே, அது போலக்கூடச் செய்யாமல், இந்தப் பேராசிரிய எந்திரங்கள் விடைத்தாளைக் கையில் எடுக்காமலேயே மதிப்பெண்ணை மறுமதிப்பீடு செய்து விடுகிறது. இந்த அக்கிரமம் குறித்து பல்கலைக்கழகத்திற்கு நன்றாகத் தெரியும். ஆனால், வேலை சீக்கிரமாக நடந்தால் சரி, எவன் தாலி அறுந்தால் நமக்கென்ன? என அது கல்விக் கடமையாற்றிய பொறுப்போடு இருந்துவிடுகிறது. மாணவர் கதிதான் அதோ கதியாகி விடுகிறது.
கல்வித் துறையில் கூட மாணவர்களுக்கு குறைந்தபட்ச ஜனநாயக உரிமை இல்லை என்பதையே இந்த சம்பவம் காட்டுகிறது. மறு மதிப்பீடு கேட்டாலே பேராசிரியர்களும், நிர்வாகமும் ஆண்டைகள் போல நடந்து கொள்ளுகின்றார்கள். அதிகார வெறியில் ஆட்டம் போடும் இந்தஆண்டைகளுக்கு மாணவர்கள் தக்க பாடம் கற்பித்தால்தான் போதையை தெளிய வைக்க முடியும். செய்வார்களா? vinavu.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக