திங்கள், 14 ஏப்ரல், 2014

ரஜினி: மோடி என் வீட்டுக்கு வந்து டீ சாப்பிட விரும்பினார் ! வருபவர்களுக்கு டீயைத் தவிர வேறு இல்லை


வோட்டுக்கு அலையும் மோடி
காரில் ஏறிய மோடி உர்ரென்று இஞ்சி தின்ற கொரில்லா போல இருந்ததற்கும் காரணம் இருக்கிறது. சார்த்திய கதவுக்குள்ளே மோடி எதிர்பார்த்தது போல ரஜினியின் பஞ்ச் டயலாக்குகள் மோடியின் காதுகளில் விழவில்லை. அதுதான் அந்த இஞ்சியின் கோரம்.
விதைகளோடு தர்ப்பூசணியை சுவைப்பது தொந்தரவாக இருக்கிறதே, ஏதும் தொழில் நுட்ப தீர்வு கிடையாதா” என்று கேட்ட போது ஒரு தோழர் ஆண்டிகளது கதை ஒன்றைச் சொன்னார்.
நாலு வோட்டு பெறுவதற்காக நாய் மாதிரி நாக்கை தொங்க விட்டு அலைவதற்கும் நரேந்திர மோடி தயாராகி விட்டார்.
சோம்பேறிகள் மடத்தில் வாசம் செய்யும் இரண்டு ஆண்டிகள் பேசிக் கொள்கிறார்கள்.
முதல் ஆண்டி :  “பக்கத்து தெருவில் கோயில்ல வாழைப்பழம் கொடுக்கிறாங்களாம், போய் வாங்கிக்கலாமா”.
இரண்டாவது ஆண்டி :  “உரிச்சி கொடுக்கறாங்களா, உரிக்காம கொடுக்கறாங்களா”.
எடுப்பது பிச்சை என்றாலும் தோல் உரிக்கப்பட்ட வாழைப்பழத்தை தின்றால் வேலை மிச்சம் என்று சோம்பேறித்தனத்தை நியாயப்படுத்தும் சுதந்திரம் ஆண்டிகளுக்கு உண்டுதான். ஆனால் இன்னும் பழுக்காத பச்சை வாழைக்காயை பிரசாதமாக கொடுக்கிறார்கள்; அதுவம் காலியாகி, பழமென்று நம்பி நாய் கடித்து போட்டுவிட்ட பாதிதான் கீழே கிடக்கிறது; அது தெரிந்தும் விடாமல் சாப்பிட்டு பெருமாள் கோவில் படிக்கட்டு பிச்சைக்காரர்கள் மத்தியில் அங்கீகாரம் கிடைக்காதா என்று அலையும் அற்பத்தனமான ஆண்டிகளை என்ன சொல்வது?
கதையை விஞ்சும் நிஜம். ஆம். நாலு வோட்டு பெறுவதற்காக நாய் மாதிரி நாக்கை தொங்க விட்டு அலைவதற்கும் நரேந்திர மோடி தயாராகி விட்டார்.
ரஜினியை வீடு தேடி மோடி சந்தித்தது குறித்த பத்திரிகை செய்திகளை சலித்து பார்த்தால் வாக்குக்காக அலையும் அந்த நாக்கின் யோக்கியதையை அறியலாம்.
நேற்று (13.04.2014) சென்னை பொதுக்கூட்டத்திற்காக வந்த மோடி, ரஜினி வீட்டிற்கு சென்று 45 நிமிடங்கள் இருந்திருக்கிறார். மோடி வீடு புகுந்ததும், கதவை சாத்திவிட்டு ஊடகவியலாளர்களை வீட்டுஅருகிலேயே அனுமதிக்கவில்லை. ‘வரலாற்று’ இகழ்மிக்க இந்த சந்திப்பு முடிந்ததும் மோடி வெளியே வந்து காரில் செல்ல ஆயத்தமானதும், ரஜினி அவரை திரும்ப அழைத்து பத்திரிகையாளர்களிடம் பேசுகிறார். ஏன்? ஒரு வேளை மோடி அப்படியே வெளியே போய் விட்டால் பாஜக முதலைகள் ஆளுக்கொரு கதை விட்டு, ‘ரஜினி தாமரைக்கு ஓட்டு போட மக்களுக்கு வேண்டுவதாக மோடியிடம் உறுதி கொடுத்தார்’ என்று வந்தால் முதலுக்கே மோசமாகிவிடும்.
காரில் ஏறிய மோடி உர்ரென்று இஞ்சி தின்ற கொரில்லா போல இருந்ததற்கும் காரணம் இருக்கிறது. சார்த்திய கதவுக்குள்ளே மோடி எதிர்பார்த்தது போல ரஜினியின் பஞ்ச் டயலாக்குகள் மோடியின் காதுகளில் விழவில்லை. அதுதான் அந்த இஞ்சியின் கோரம்.
ரஜினிகாந்த் - மோடி
காரில் ஏறிய மோடி உர்ரென்று இஞ்சி தின்ற கொரில்லா போல இருந்ததற்கும் காரணம் இருக்கிறது
இதற்கு ஆதாரம் என்ன?. ஊடகங்களிடம் அவர் தெரிவித்த வார்த்தைகளை கவனமாக ஆய்வு செய்தால் யாரும் ரசிக்கலாம். மட்டுமல்ல இன்றைக்கு வந்த தினமலருக்கு போட்டியாக, வரும் நாட்களில் ரஜினியை அட்டைப்படமாக போட்டு வெளிவரப் போகும் விகடன், சோ வகையறாக்களிலும், பூட்டிய கதவுக்குள் மோடிக்கு ஆதரவு தெரிவித்த ரஜினி குறித்து விதவிதமான சேதிகள் கூச்ச நாச்சமில்லாமல் புனையப்படும். அதன் பொருட்டும் நாம் இதை கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது.
கீழே ரஜினி பேசியதும், அடைப்புக்குறியில் நாங்கள் எழுதிய பொருள் விளக்கத்தையும் சேர்த்து போட்டிருக்கிறோம்.
“இது அரசியல் ரீதியான சந்திப்பு இல்லை. (முதல் வாக்கியமே மோடிக்கு வேட்டு வைக்கிறது. தேர்தலுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிறார் ரஜினி)
மோடி எனது நல்ல நண்பர். (ரஜினி எனக்கும்தான் நணபர், நானும் அவர் வீடு சென்று பார்க்க முடியும், என்ற காங்கிரசு தலைவர் ஞானதேசிகன் கூறியதை பாருங்கள், ரஜினியை பார்க்க எந்த பிரபலங்கள் வந்தாலும் பார்க்கலாம், கூர்க்காவும் தடுக்க மாட்டார், சூப்பர்ஸ்டாரும் தயங்க மாட்டார்.)
எனக்கு உடல்நிலை சரியில்லாதபோது மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்தார் மோடி.ஒவ்வொரு வாரமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்தார். (இந்த நல விசாரிப்பை பல்வேறு அரசியல் தலைவர்களும் செய்திருப்பார்கள். அவர்களையெல்லாம் பட்டியல் போட்டால் இருமுடி பலசரக்கு சீட்டு போல மைல் கணக்கில் நீண்டு விடும். அடுத்து உடல் நலத்தை விசாரிப்பவர்களெல்லாம் ரஜினியோடு நெருக்கமான நண்பர்களாக இருக்க வேண்டுமென்றால், ரஜினியின் செல்பேசி முகவரி மெமரி கார்டு வெடித்து விடும்.)
இன்றைக்கு என் வீட்டுக்கு வந்து டீ சாப்பிட விரும்பினார். அதன்படி நானும் அவரை வரவழைத்து உபசரித்தேன். அவர் என்னோடு டீ சாப்பிட்டார். ( நன்றாக கவனியுங்கள், ரஜினி தானே வலிய போய் மோடியை அழைக்கவில்லை. மோடியே தொந்தரவு செய்து வந்ததால்தான் இது நடந்தது. அதுவும் ஐந்து ரூபாய் பெறாத டீ மட்டும்தான். நெருங்கிய நட்பில் இல்லை என்றால் வருபவர்களுக்கு டீயைத் தவிர வேறு இல்லை.)
மோடியின் வருகை எனக்கு சந்தோஷத்தை அளித்துள்ளது. (பிறகு வீட்டுக்கு டீ தானம் கேட்டு வந்தவர் வருகையால் துக்கம் வந்தது என்றா சொல்ல முடியும். ஒரு வேளை துக்கம் துண்டையை அடைத்தாலும் அதை துப்ப முடியாத படி மோடியின் என்கவுண்டர் போலீசு நினைவுக்கு வந்திருக்குமோ?)
rajini-modi-with-dogsஅவர் இந்தியாவில் வலுவான தலைவர். திறமையான நிர்வாகி. அவருக்கு எனது வாழ்த்துக்கள். எல்லாம் நல்லபடி நடக்க வாழ்த்துகிறேன். அவரது எதிர்காலம் சிறக்க வாழ்த்துகிறேன். அவர் நினைப்பது எல்லாம் நிறைவேற ஆண்டவனை பிரார்த்திக்கிறேன். (இதெல்லாம் காலில் விழுபவர்களுக்கு பெருசுகள் சொல்லும் பொதுவான ஆசீர்வாதமன்றி வேறு எதுவுமல்ல. அதிலும் மோடி  என்ன நினைக்கிறாரோ அது வெற்றி பெற வேண்டும் என்றுதான் ஆண்டவனிடம்தான் பிராத்திக்கிறார். மாறாக தமிழக மக்களிடம் கோரிக்கை வைக்க விரும்பவில்லை. கடவுள் இல்லை என்ற உண்மை ரஜினியை எப்படியெல்லாம் காப்பாற்றுகிறது பாருங்கள்.)”
பிறகு மோடி பேசிய போது, “தமிழ்நாட்டில் நாளை புத்தாண்டு. எனவே, எல்லோருக்கும் வாழ்த்துக்கள்” என்று மட்டும் தெரிவித்தார். உர்ரென்று இருப்பதோடு வார்த்தைகளும் ஓரிரண்டோடு பேசிவிட்டு பறந்து போன மாயம் என்ன? எல்லாம் எதிர்பார்த்து வந்தது கிடைக்கவில்லை என்று வெறுப்பைத் தவிர வேறு என்ன?
இருப்பினும் ஊடகங்கள் அனைத்தும் தமிழக தேர்தல் காலத்தில் மாபெரும் பரபரப்பு என இந்த சந்திப்பை ஊதிப் பெருக்குகின்றன. தினமலரோ ஒரு படி இல்லை, ஒரு ஒளியாண்டு தூரம் மேலே போய் செய்தியை பச்சையாக திரிக்கிறது. அதாவது மற்ற தினசரிகள் எல்லாமே மோடிதான் ரஜினி வீட்டிற்கு வந்து ஒரு டீ குடிக்க விரும்பியதாக ரஜினி தெரிவித்தாக கூறியிருந்தன. ஆனால் தினமலர் மட்டும் இதை அப்படியே திரித்து ரஜினிதான் டீ குடிக்க வருமாறு மோடியை அழைத்ததாக புளுகியிருக்கிறது. இந்த லட்சணத்தில் தமிழகத்தில் மோடி அலை வீசுவதாகவும் இந்த ரஜினி சந்திப்பு அதை சுனாமி போல மாற்றிவிட்டதாகவும் ஊளையிடுகிறது பார்ப்பன தினமலர். பிச்சை எடுக்க வந்தவனை, பிச்சை போடுபவன்தான் அழைத்தான் என்று கூசாமல் எழுதுவதற்கு இந்த உலகில் தினமலரால் மட்டுமே முடியும்.
தினமலரே பரவாயில்லை என்று ஜூனியர் விகடனில் திருமாவேலன் பிய்த்து உதறுவார், காத்திருப்போம் அந்த கருமம் வரும் வரை.
உண்மையில் இந்த சந்திப்பு இவ்வளவு கேவலமாக பாஜகவின் ஆசையில் மண் அள்ளிப் போடுமளவு நடந்தது ஏன்?
அதற்கு இந்த சந்திப்பின் கிளைமேக்ஸ் உணர்ச்சியை தடயமாக வைத்து இது எப்படி நடந்திருக்கும் என்று நாம் கண்டுபிடிக்க வேண்டும்.
தேர்தல் அறிவிப்பு வந்த உடனேயே ஏதாவது  கூட்டணி வைத்து காவிக் கொடியை ஒரு சாண் குச்சியிலாவது ஏற்ற வேண்டும் என்று பாஜக துடித்தது. அதற்காக விஜயகாந்த பின்னால் விரட்டியடிக்கப்பட்ட தெரு நாய் போல சளைக்காமல் சுற்றி வந்தது. இந்த கேவலம் முடிவுக்கு வந்த போதே ரஜினி ஏதாவது நமக்கு வாய்ஸ் கொடுத்தால் ஏதாவது ஐந்து பத்து – ஓட்டுதான – தேற்றலாமே என்று பாஜகவிற்கு எச்சில் வழிந்தது. அதைத்தான் பல்வேறு நிர்வாகிகள் விரைவில் ரஜினி ஆதரவு தெரிவிப்பார் என்று ஊடகங்களில் அன்றாடம் ஜபித்து வந்தார்கள்.
இருப்பினும் ரஜினி கண்டு கொள்ளவில்லை. அதனால்தான் பாஜக தலைவர்களே மானம் கெட்டு ரஜினியிடம் தொடர்பு கொண்டு கேட்டிருப்பார்கள். அதற்கு காரியவாத பெருச்சாளியான ரஜினி, “ஜி இப்போ அரசியெல்லாம் வேண்டாமே, ப்ளீஸ்” என்றிருப்பார். பிறகு பொன்னார் கொஞ்சம் வேறு விதமாக மிரட்டியிருப்பார். அதாவது “ரஜினி சார், மோடிஜியை பார்க்க நீங்க ஒத்துக்கிட்டதாக அவரிடம் தெரிவித்து விட்டோம், இப்போ வேணாம்னா சொன்னா நல்லா இருக்காது, ப்ளீஸ்” என்று கொஞ்சம் மிரட்டலோடு கெஞ்சியிருப்பார்கள்.
சரி, நாளைக்கே பிரதமர் ஆகிறவர், வேண்டாமென்று சொன்னாலும் பிரச்சினை, ஓகேன்னு சொன்னா அம்மா வைக்கப் போகிற ஆப்பு நினைவுக்கு வருகிறது. கூடவே கோச்சடையானுக்கும் சேர்த்து வைத்துவிட்டால் பிறகு வடிவேலு கதைதான். எனவேதான் மோடிஜி வரட்டும், ஆனா நோ அரசியல் ஒன்லி சாயா என்று ரஜினி ஒப்பந்தம் போட்டிருப்பார்.
இதுவரைக்கும் யார் வீட்டிற்கும் நாம் போகவில்லை. ரஜினி வீட்டிற்கு போனால் பிறகு மேக்னா நாயுடு வீட்டிற்கும் போக வேண்டி வருமோ என்றெல்லாம் மோடி கொஞ்சம் தயங்கியிருப்பார். மேலும் வல்லரசு இந்தியாவுக்கு தலைமை தாங்கப் போகிறவர் போயும் போயும் ஒரு கூத்தாடி வீட்டுக்கு சாயாவுக்காக போகணுமா என்று ஒரு ஈகோ இல்லாமல் இருக்காது. இருந்தாலும் பத்து இருபது ஓட்டு கிடைப்பதாக இருந்தால் வெட்கம் மானம் பார்க்க கூடாது என்று மோடியும் கடைசியில் ஒத்துக் கொண்டிருக்கிறார்.
இந்த சந்திப்பு முடிந்த பிறகு அதை வைத்து தாமரைக்கு ரஜினி ஆதரவு என்று போஸ்டர், மோடி ரஜினி படம் போட்டு அறுவடை செய்யலாம் என்று பொன்னார் அன்கோ அசால்ட்டாக நினைத்திருக்கிறது. மேலும் சாணக்கிய குரு சோவோடும் ரஜினி கலந்திருக்க வேண்டும். “மோடியை பாருங்க, ஆனா ஆதரவுன்னு வெளிப்படையா சொல்ல வேண்டாம், இங்கே அம்மாதான் ஜெயிக்க வேண்டும். பாஜக நிச்சயமாக வெற்றிபெரும் இடங்களில் மட்டும் தாமரைக்கு ஓட்டு போடலாம் என்று நானே சொல்லிவருகிறேன், எனவே உசராக இருங்கள்” என்று எச்சரித்திருப்பார்.
பாஜக - கோயில் பிரச்சனைஇப்படித்தான் ரஜினி மோடி சந்திப்பு மகா கேவலமாக மேலே விவரித்தபடி நடந்திருக்கிறது. மேலும் 90-களின் இறுதியில் ரஜினிக்கு பெரிய வாய்ஸ் இருப்பதாக ஊடகங்கள் கொடுத்த பில்டப்பை நம்பிய ரஜினி அப்போதும் அரசியலுக்கு வரும் தைரியத்தையும், உழைப்பையும் பெற்றிருக்கவில்லை. திரைப்படங்களில் சுறுசுறுப்பாக அதுவும் கிராபிக்ஸ் உதவியுடன் மின்னிய சூப்பர் ஸ்டார், நிஜத்தில் அச்சமும், அறியாமையும் கலந்த ஒரு சோம்பேறித்தனமான காரியவாதி மட்டுமே.
அவருக்கென்று தனியாக செல்வாக்கு ஏதுமில்லை என்பதாலேயே 2004 தேர்தலில் அவர் அதிமுக – பாஜகவிற்கு ஆதரவு கேட்டும் ஒரு சீட்டு கூட தமிழகத்தில் கிடைக்கவில்லை. அத்தோடு ரஜினிக்கு ப்யூஸ் போய்விட்டது. இருப்பினும் அவ்வப்போது ஊடகங்கள் மட்டும் அவருக்கு உயிர் கொடுத்து வந்தன.
ஆக இன்று ரஜினியிடமிருந்து ஒரு கட்சிக்கு வாக்கு கிடைக்க வேண்டுமென்றால் அது ரஜினி, லதா, ஐஸ்வர்யா, சவுந்தர்யா என்று நாலு ஓட்டு மட்டும்தான் கிடைக்கும். பிறகு ரஜினி வீட்டை பாதுகாக்கும் செக்யூரிட்டிகள் கூட அவரது வாய்சுக்காக ஓட்டும் போட மாட்டார்கள், சினிமாவுக்கு  சீட்டும் எடுக்க மாட்டார்கள்.
ஆனாலும் சோ, விகடன், இந்து, குமுதம், தினமலர் முதலான பார்ப்பனிய ஊடகங்கள் சூப்பர் ஸ்டாருக்கு சோப்பு போடுவதோடு அவருக்கென்று செல்வாக்கு இருப்பதாக மாயையை உருவாக்க முயல்கின்றன. அதை பாஜகவிற்கு பயன்படுத்தவும் விரும்பின.அந்த அடிப்படையில்தான் இந்த எச்சக்கலை டீ சந்திப்பு  நடந்திருக்கிறது. ஆனாலும் ரஜினி அதை மறக்க முடியாத எச்சக்கலையாக மாற்றி விட்டார். வெளிப்படையாக ஆதரவு தெரிவித்திருந்தால் பலரும் எதிர்ப்பார்கள், குறிப்பாக இசுலாமியர்கள் எதிர்ப்பார்கள், ஆப்கானிலிருந்து அல்கைதா ஏதும் வந்து குண்டு வைத்து விட்டால் என்ன ஆகும் போன்ற பயமெல்லாம் ரஜினிக்கு இருக்காது என்பதல்ல.
ஆனால் அவர் இமயமலை போகிறார், பாபாவைப் பற்றி பேசுகிறார், ஆன்மீகம் படிக்கிறார், துக்ளக் கூட்டத்திற்கு தவறாமல் வருகிறார், இதற்கு முன் அத்வானியை ஆதரித்திருக்கிறார், அவர் இயல்பான இந்துத்துவ ஆதரவாளர் என்று பாஜக வானரங்கள் நம்புவதில் குறையில்லை. இருப்பினும் அம்மா விருப்பத்திற்கு மாறாக நடந்தால் பிழைக்க முடியாது என்ற பயமும் ரஜினிக்கு உண்டு. வடிவேலு போல இழப்புகளை தாங்கிக் கொள்ளும் உறுதி இவருக்கு கிடையாது.
ஆக இவை அனைத்தும் கூடித்தான் இந்த சந்திப்பை காமடியாக மாற்றியிருக்கிறது. ஆனாலும் பாஜகவும், மோடியும் தங்களது வெற்றிக்காக கேப்டன் பின்னாலும், சூப்பர்ஸ்டார் பின்னாடியும் ஓசிக்கறிக்கு அலையும் ஒரு சொறி நாயைப்ப போல அலைகிறார்கள் என்பது முக்கியம். இவர்தான் வருங்கால பிரதமர் என்று முன்னிறுத்தப்படுகிறார் என்றால் தில்லானா மோகனாம்பாள் வைத்திக்களே பிரதமராக வரலாமே?
எது எப்படியோ இந்த சந்திப்பின் மூலம் பாஜகவையும், மோடியையும் செருப்பால் அடித்த்து போல ஒரு எஃபெக்ட் கொடுத்ததற்கு ரஜினியை நாம் பாராட்டத்தான் வேண்டும். மற்ற மாநிலங்களில் விஐபிக்கள் மோடியை தேடி வந்து ஆதரிக்கிறார்கள். இங்கு மோடியே தேடி வந்து ஆதரவு பிச்சை கேட்டாலும் கிடைக்கவில்லை. இதுதாண்டா பெரியார் பிறந்த மண்!
இதற்கு மேல் ரஜினி வீட்டில் ராகுல் காந்தி வந்து பானி பூரி சாப்பிட விரும்பினாலும், மு.க.ஸ்டாலின் வந்து அவிச்ச வேர்க்கடலை சாப்பிட முனைந்தாலும், அவ்வளவு ஏன் நாடாளும் மக்கள் கட்சி தலைவர் நடிகர் கார்த்திக்கே மோர் அருந்த வந்தாலும் ரஜினி வரவேற்பார், மோடிக்கு சொன்னது போல அவர்கள் விரும்பியது நிறைவேற ஆண்டவனிடம் பிராத்திப்பதாகவும் சொல்வார்.
சரி எல்லாரது விருப்பங்களிலும் எது நிறைவேறும் என்று கேட்டால் “ அது அவன் கையில், என் கையிலில்லை” என்று மேலே பார்த்து கன்னத்தில் போட்டுக் கொள்வார்? இது எப்படி இருக்கு? vinavu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக