திங்கள், 14 ஏப்ரல், 2014

ஜெ. ஜெயிக்க முடியாது; ஜெயிலுக்குத்தான் போகவேண்டும் ! குவித்த சொத்துக்கள் 4 ஆயிரம் கோடியை தாண்டும் !


மதுரை: லோக்சபா தேர்தலில் ஜெயிக்கவும் முடியாது; பிரதமராகவும் முடியாது. ஜெயலலிதா குவித்த சொத்துக்களுக்கு அவர் ஜெயிலுக்குத்தான் போகவேண்டும் என்று மதுரையில் நடந்த பிரமாண்ட திமுக பிரசார கூட்டத்தில் கருணாநிதி காட்டமாக பேசினார். மதுரையில் நேற்று இரவு நடைபெற்ற மிகப் பிரம்மாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கருணாநிதி பேசியதாவது: நான் 75 ஆண்டுகளாக பொதுவாழ்க்கையில் இருக்கிறேன். இந்த பொதுவாழ்க்கையில் நான் கற்றுக்கொண்டது கடமை, கண்ணியம், அடக்கம். பெரியவர்களுக்கு, தலைவர்களுக்கு நாம் மரியாதை கொடுத்தால்தான் எதிர்காலத்தில் நமக்கு மரியாதை கிடைக்கும். பெரியார் தனது 80, 90வது வயதில் கூட அவரை பார்க்க யாராவது வந்தால், எழுந்து நின்று கும்பிட்டு மரியாதை செய்வார். மற்றவர்களை மதிப்பதுதான் சுயமரியாதை. நானும் சுயமரியாதையுடன் நடந்து கொள்பவன். காயிதே மில்லத் மரண படுக்கையில் இருந்தபோது நான் கோவையில் ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தேன். இதை கேள்விப்பட்டு நான் சென்னைக்கு வந்து அவரை பார்த்தேன். அவர் எனது கரங்களை பற்றிக் கொண்டு, ‘கருணாநிதி, இந்த முஸ்லிம் சமுதாயத்திற்காக எவ்வளவு உதவிகள் செய்துள்ளீர்கள். உங்களை ஆயுள் உள்ளவரை மறக்க மாட்டேன்‘ என்றார். அப்படி பண்பாடுகளை கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு ரூபாய் சம்பளத்தில் சொத்து குவிப்பு சல்லிக்காசு கூட ஓரணா, இரண்டணா கூட இல்லாத ஏழைகள் ஒரு வேளை சாப்பாடு இல்லாமல் எச்சிலைக்காக போராடும் ஏழைகள், தற்கொலை செய்யும் விவசாயிகள் தமிழ்நாட்டில் நிறைந்திருக்கிறார்கள். ஆனால், ஜெயலலிதா 5 ஆண்டு காலம் அமோகமாக ஆட்சி புரிவேன். எனது ஆட்சியில் இன்பம் கொழிக்கும். யாருக்கும் எந்த கஷ்டமும் இருக்காது. என்னுடைய ஆட்சியில் பொன்னாக விளையும் என்றார். பொன்னாக விளைந்தது போயஸ் கார்டனில்தான். விளைய வேண்டிய இடத்தில், ஏழைகள் வீட்டில் பொன் விளையவில்லை. ஜெயலலிதா முதன்முறையாக பொறுப்பேற்ற போது முதல்வர் பதவிக்காக சம்பளம் வாங்க மாட்டேன். வேண்டுமானால் மாதம் ஒரு ரூபாய் சம்பளமாக பெற்றுக் கொள்கிறேன் என்று அடித்து சொன்னார். அவர் அடித்து சொன்னாரா அல்லது நடித்து சொன்னாரா என்பது இப்போதுதான் புரிகிறது. சொத்து குவிப்பு வழக்கில் வக்கீல் பவானிசிங் பெங்களூர் நீதிமன்றத்தில் கர்நாடக அரசு வழக்கறிஞர். கர்நாடக நீதிமன்றத்தில் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘‘பவானிசிங் அரசு வழக்கறிஞர். அவர் குற்றவாளி கூண்டில் உள்ள ஜெயலலிதாவுக்கு எதிராக வாதாட வேண்டியவர். ஆனால், அவர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக செயல்படுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்‘‘ என்று வழக்கு தொடர்ந்தார். பெங்களூர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா குவித்த சொத்துக்கள் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. சென்னை அருகே வாலாஜாபுரத்தில் 100 ஏக்கர், நீலாங்கரையில் 2 ஏக்கர், கொடநாட்டில் 898 ஏக்கர் மற்றும் பங்களாக்கள். இங்கு ஒரு ஏக்கர் ரூ.5 கோடி மதிப்புடையது. மொத்த மதிப்பு 4 ஆயிரம் கோடியை தாண்டும். காஞ்சிபுரத்தில் 200 ஏக்கர், கன்னியாகுமரி மாவட்டத்தில் 1,290 ஏக்கர், தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம அருகே 200 ஏக்கர் இது ஜெயலலிதாவின் நிலங்கள். ஜெயலலிதாவை கேட்கிறேன். மாதம் ஒரு ரூபாய் சம்பளத்தில் இவ்வளவு சொத்து குவிக்க முடியும் என்றால், தமிழகத்தில் உள்ள மக்களுக்கு இந்த வித்தையை அனைவருக்கும் கற்றுக் கொடுங்கள். அவர்களும் உங்களை போல கோடீஸ்வரர்களாகவோ, லட்சாதிபதியாகவோ ஆகி விடுவார்கள். பிரதமராக முடியாது- ஜெயிலுக்கு போகனும் ஹைதராபாத்தில் ஒரு திராட்சை தோட்டம். அதற்கும் ஜெயலலிதாதான் சொந்தக்காரர். இந்த சொத்து விபரங்கள் எல்லாம் ஜெயலலிதா இல்லத்தில் இருந்த ஆவணங்கள், ரிக்கார்டுகள். ஆனால், உத்தமிபோல பேசுகிறார். இந்த தேர்தலில் பிரதமராகும் நப்பாசையில், எதிர்கால இந்தியாவின் தலைவியே, வருங்கால இந்திய பிரதமரே‘ என்று எல்லாம் போஸ்டர்களை ஒட்டினார்கள். இப்போது அதை காணோம். அவர்களுக்கே சந்தேகம் வந்து விட்டது. இப்போது அதை விட்டு, என்னையும், திமுகவையும், தோழமை கட்சிகளையும் திட்டும் காரியத்தில் ஜெயலலிதா ஈடுபட்டுள்ளார். எத்தனை போஸ்டர்கள் ஒட்டினாலும், திமுக அணிதான் வெல்லும். ஜெயலலிதா வெல்ல மாட்டார்.வழக்கு முடிவும், தேர்தல் முடிவும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். இவ்வளவு சொத்துக்களை கொள்ளை அடித்தவர்கள் விடுதலையானால், இந்த தீர்ப்பை அளித்தவர்கள் மீதுதான் சந்கேகம் ஏற்படும். ஜெயலலிதா ஜெயிலுக்கு தான் போக வேண்டும். அதுதான் சட்டத்தின் தீர்ப்பாக அமையும். சட்டம் தனது கடமையை செய்யும். ஜெயலலிதா என்ற தனிப்பட்ட ஒருவருக்காக அந்த நிலை ஏற்பட வேண்டுமென்று நான் நினைக்கவில்லை. தமிழக மக்கள் காப்பாற்றப்பட வேண்டும். இவ்வாறு கருணாநிதி பேசினார்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக