சேலம்,
கள்ளக்குறிச்சி, நாமக்கல், சேலம் நாடாளமன்ற தொகுதிகளில் போட்டியிடும்
திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய திங்கள்கிழமை சேலம் வந்த
திமுக தலைவர் கலைஞர், முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்துடனான
நினைவுகளை உருக்கத்துடன் தொண்டர்களிடம் பகிர்ந்து கொண்டார்.
சேலம் பழைய பேருந்து நிலையம் போஸ் மைதானத்தில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் கலைஞர் பேசும்போது,
சேலத்துக்கு
எப்போது வருவது என்றாலும் எனக்கு தனி உற்சாகம் இருக்கும், ஆனால், அந்த
உற்சாகம் இந்த முறை இல்லாமல் போய்விட்டது. வீரபாண்டி ஆறுமுகம் இங்கு
இல்லையே என்ற நினைவே என்னை உற்சாகம் இழக்கச் செய்துவிட்டது. அந்த வேதனையை
ஓரளவு சமாளித்துக் கொண்டுதான் நான் இங்கு வந்துள்ளேன்.
வீரபாண்டி
ஆறுமுகத்தின் வீரம் செறிந்த முகத்தைக் காண முடியாவிட்டாலும், அவர்
ஏற்படுத்திக் கொடுத்த அடையாளச் சின்னங்களை வரும் வழியில் நான் கண்டேன்.
இங்குள்ள திட்டப் பணிகள் யாவும் வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆர்வத்தால்,
உள்ளத்தில் உதித்த சிந்தனையால் மக்களுக்குக் கிடைத்தவை. இவ்வளவும் தந்த
ஆறுமுகம் இன்று இறந்துவிட்டார்.
ஒரு
ஆறுமுகம் இல்லையே என்ற கவலை இருந்தாலும் அவரால் உருவாக்கப்பட்ட
ஆயிரக்கணக்கான ஆறுமுகங்கள் இங்கு இருக்கின்றனரே என்ற ஆறுதலை நான்
பெறுகிறேன். அவர் இறந்தபோது என்னுடன் இருந்தவர்கள் நான் கதறி அழுததைக்
கண்டனர். அந்த அழுகை எனக்கு இன்னும் நின்றபாடில்லை. தமிழக அரசு அவரை 2, 3
முறை சிறையில் அடைத்தது.
சென்னை
சிறையில் அவரை நான் சந்தித்துப் பேசியபோது என்னை எப்படியாவது
காப்பாற்றுங்கள் என்று கேட்காமல், சேலம் மாவட்ட மக்களுக்கான திட்டங்கள்
பாதியிலேயே நிற்கின்றனவே என்று மக்களுக்காகத்தான் கவலைப்பட்டார். அவர்
இங்கு இல்லாவிட்டாலும் அவரது நட்பு, தோழமை, கொள்கைகளை நிறைவேற்ற வேண்டும்
என்ற சபதம் அழிந்துவிடவில்லை. என்றைக்கும் அழிந்துவிடாது.
சேலத்துக்கும்
எனக்கும் நெருங்கிய தொடர்பு காலகாலமாக உள்ளது. எனது கலை வாழ்க்கையில்
கோவைக்கு அடுத்த இடம் சேலத்துக்குதான் உள்ளது. சேலத்தில்தான் எனது கலை
வாழ்க்கையை பிரபலமாக நடத்தினேன். மந்திரி குமாரி படத்தில் எம்.ஜி.ஆரை நான்
தான் அறிமுகம் செய்தேன்.
தமிழகத்தில்
சிலர் கருணாநிதி தனியாக நிற்கிறார், அரசியல் கட்சிகள் அவரைக் கைவிட்டு
விட்டன என்கின்றனர். கை தான் என்னை விட்டு விட்டது என்றாலும், யாரும்
என்னைக் கைவிடவில்லை, கைவிடவும் முடியாது. “கை” சின்னம் என்னுடன் இல்லை
என்பதாலேயே நான் கைவிடப்பட்டதாகக் கூறக்கூடாது. எதிர்காலத்தில் நாடு
போகின்ற போக்கில், மதச்சார்பின்மை என்ற வார்த்தைக்கு பொருள் இல்லாமல்
போய்விடும் அபாயம் உள்ளது. சமுதாயத்தில் அதுபோன்ற ஒரு தாக்குதல்
நடத்தப்பட்டு, வேறு வழியில்லாமல் சென்றாலும், திமுக ஏழை, எளிய மக்களுக்காக
தொடர்ந்து பணியாற்றும்.
அடித்தட்டு
மக்களுக்கு நாம் ஆற்ற வேண்டிய பணிகளை தொடரவும் வேண்டும் என்ற ஒரு
காரணத்துக்காக மதச்சார்பற்ற முறையில் ஒரு ஆட்சி நடைபெற யார் கை
கொடுத்தாலும் அந்தக் கையைக் குலுக்கி வரவேற்போம். அதற்காக திமுகவின் தலையாய
கொள்கைகளான சாதி மறுப்பு, மதவாத மறுப்பு போன்றக் கொள்கைகளை, பெரியார்,
அண்ணா உருவாக்கிக் கொடுத்த லட்சியங்களை நாங்கள் கைவிட மாட்டோம்.
சிறுபான்மையினருக்கு யார் உதவ முன் வருகின்றனரோ, யார் தோழமையுடன் உள்ளனரோ
அவர்களுடன் தான் இனி வரும் காலத்தில் உறவு அமையும். இப்போது உள்ள
ஆட்சியாளர்கள் சிறுபான்மையினருக்கு நாங்கள் வேண்டியவர்கள் என்று
நாடகமாடினாலும், அதை நம்ப மக்கள் தயாராக இல்லை. சிறுபான்மையினரும் அதை
ஏற்கத் தயாராக இல்லை என்றார்.
சிவசுப்பிரமணியம் nakkheeran.in
சிவசுப்பிரமணியம் nakkheeran.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக