ராமன் கோயில் கட்டுவது, யூனிபார்ம் சிவில்கோட்
காஷ்மீர் மாநிலத்துக்கான 370ஆவது பிரிவு நீக்கம்!
பி.ஜே.பியின் ஹிந்துத்துவா அஜண்டா தேர்தல் அறிக்கையானது
மதவாதத்தை வீழ்த்த, மதச் சார்பின்மையைக்
காப்பாற்ற தேர்தலில் பிஜேபியையும், அதன் அணியையும் தோற்கடிப்பீர்!
பி.ஜே.பி. தன் ஹிந்துத்துவா கொள்கையைத் தேர்தல் அறிக்கையாக வெளியிட்டு
விட்டது. மதச் சார்பின்மையைக் காப்பாற்றிட பி.ஜே.பி.யையும் அதன் கூட்டணிக்
கட்சிகளையும் வீழ்த்த வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி
அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கை
பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாளர் நரேந்திரமோடியின் முன்னிலையில்
டில்லியில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இலை மறை காயாக இருந்தது அதிகாரப்
பூர்வமானது! இதுவரை இலை மறை காயாகச் சொல்லப்பட்டு வந்த இந்துத்துவாவின்
அஜண்டா - பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கையில் அதிகாரப்பூர்வமாக இப்பொழுது
அறிவிக்கப்பட்டு விட்டது.
மூன்று முக்கிய பிரச்சினைகள்
1. பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமன் கோயில் கட்டுவது.
2. யூனிபார்ம் சிவில் கோட்.
3. காஷ்மீர் மாநிலத்திற்கு இந்திய
அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள 370 ஆம் பிரிவு சிறப்புச் சலுகைகள்
நீக்கப்படும் என்ற மூன்றும் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டன.
சங்பரிவாரின் நீண்ட நாள் கோரிக்கைகள்
பசு நமது நாட்டின் தேசிய சின்னங்களில்
ஒன்றாகும், பசுப்பாதுகாப்பு இந்திய நாட்டின் முக்கிய கொள்கைகளில்
ஒன்றாகும்; இதை கருத்தில் கொண்டு பசு பாதுகாப்பிற்கு தனியான ஒரு துறை
ஏற்படுத்தப்படும். பசு பாதுகாப்பு குறித்து தனியான சட்டம்
கொண்டுவரப்படும். கால்நடை வளர்ப்புத் துறையில் சீர்திருத்தம் கொண்டு
வந்து பசுக்களுக்கு என சிறப்பு பாதுகாப்பு அமைப்பு நாடுமுழுவதும்
செயல்படுத்தப்படும்.
சேதுசமுத்திரம்: ராமர்சேது பாலம் இந்திய
பாரம்பரிய மற்றும் கலாச்சார மய்யமாக திகழ்கிறது. இது பலகோடி இந்துக்களின்
நம்பிக்கைகளை சார்ந்த ஒன்றாகும். என்றும் பிஜேபியின் தேர்தல் அறிக்கை
கூறுகிறது. ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார்களின் இந்த நீண்ட காலக்
கோரிக்கைகளும் இந்தத் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
தேவை புதிய சிந்தனை - பார்வை
இதுவரை இந்திய வாக்காளர்கள் எந்த
முடிவில் இருந்திருந்தாலும், பிஜேபியின் அதிகாரப் பூர்வமான இந்தத் தேர்தல்
அறிக்கைக்குப் பிறகு கண்டிப்பாக திறந்த மனத்தோடு, புதிய பார்வையைச்
செலுத்தக் கடமைப்பட்டுள்ளனர். இந்திய மக்களை ஹிந்துக்கள் - ஹிந்துக்கள்
அல்லாத சிறுபான்மையினர் என்று கூறுபோடும் ஆபத்தான அஜண்டா வெளியிடப்பட்டு
விட்டது.
1992 டிசம்பர் 2002 பிப்ரவரி
1992 டிசம்பரில் அயோத்தியிலும், 2002
பிப்ரவரியில் குஜராத் மாநிலத்திலும் கட்டவிழ்த்து விடப்பட்ட மதவாத
வன்முறைகளுக்கு அரசு ரீதியான அங்கீகாரம் கொடுப்போம் என்பதை இதன் மூலம்
சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள்.
அரசமைப்புச் சட்டத்துக்கே விரோதம்!
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள சில அடிப்படை உரிமைகளைத் தகர்க்கும் ஆபத்தான போக்கு இதில் மய்யம் கொண்டு விட்டது.
பிஜேபி வரும் தேர்தலில் வெற்றி பெறக்
கூடிய வாய்ப்பை இந்திய வாக்காளர்கள் அளிப்பார்களேயானால், அது சுனாமியாக
எழுந்து இந்திய மக்கள் மத்தியில் மிகப் பெரிய அளவுக்கு மதக் கலவரத்தை
அன்றாடம் கட்டவிழ்த்து விடும் என்பதில் அய்யமில்லை.
தேர்தல் ஆணையம் என்ன செய்யப் போகிறது?
தேர்தல் ஆணையம் என்ன செய்யப் போகிறது?
தேர்தல் ஆணையம் கூட பிஜேபியின் தேர்தல்
அறிக்கைபற்றி ஆய்வு செய்யக் கடமைப்பட்டுள்ளது. அரசமைப்புச் சட்டத்துக்கு
விரோதமாகவும், குடிமக்களை மத ரீதியாகப் பிரித்து அவர்களுக்கிடையே பகைமை
உணர்வைத் தூண்டும் வகையிலும் வெளியிடப்பட்டுள்ள பி.ஜே.பி.யின் தேர்தல்
அறிக்கை குறித்து தேர்தல் ஆணையம் உரிய முறையில் ஆலோசனைக்கு உட்படுத்தக்
கடமைப்பட்டுள்ளது.
பூனைக் குட்டி வெளியில் வந்தது!
ஆகக் கோணிப்பைக்குள் இருந்த பூனைக்
குட்டி வெளியில் வந்து விட்டது. இந்த நேரத்தில் மேலும் ஒரு முக்கியமான
பிரச்சினை மக்கள் முன் எழுந்து நிற்கிறது.
பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கை
வெளியிடப்படுவதற்கு முன் அக்கட்சியோடு கூட்டணி சேர்ந்துள்ளன சில அரசியல்
கட்சிகள் - பி.ஜே.பி.யின் இந்த அப்பட்டமான ஹிந்துத்துவா வெறி உணர்ச்சி
கொண்ட தேர்தல் அறிக்கைக்குப் பிறகு - அக்கட்சியுடன் கூட்டணி வைப்பதுபற்றி
மறு பரிசீலனை செய்யக் கடமைப்பட்டுள்ளன. அதனைச் செய்யத் தவறினால் நாட்டு
மக்கள் மத்தியில் குறிப்பாக சிறுபான்மை மக்கள் மத்தியில், பெரும் விலை
கொடுக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்படும் என்பதை சுட்டிக்காட்ட வேண்டியது
நமது கடமையாகும்.
ஒரு வகையில் நல்லதே!
ஒரு வகையில் மூடி மறைக்காமல் பி.ஜே.பி.
தன் நிறத்தைக் காட்டிக் கொண்டது கூட நல்லதாகத்தான் தோன்றுகிறது. நாட்டு
மக்கள் அடையாளம் கண்டு பி.ஜே.பி.யை அறவே புறக்கணிக்க இது பெரிதும் உதவும்
என்பதில் அய்யமில்லை. திராவிடர் கழகத்தின் தொலை நோக்கு!
திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரை பி.ஜே.பி.யின் இந்த நிலையைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டும், எச்சரித்துக் கொண்டும் வந்திருக்கிறோம்.
இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை இதுவரை
பிஜேபியின் பின்புலத்திலிருந்து இயக்கி வந்த ஆர்.எஸ்.எஸ். இப்பொழுது
முன்னே வந்து கட்டளையிடும் இடத்திற்கு வந்துவிட்டது என்று அறுதியிட்டு
நாம் சொல்லி வந்தது - எழுதி வந்தது நூற்றுக்கு நூறு சரி என்பது இந்தத்
தேர்தல் அறிக்கை மூலம் மிக மிகத் தெளிவாக உறுதிப்பட்டு விட்டது!
கழகத்தின் இந்தக் கணிப்பு - தொலைநோக்கு - நூற்றுக்கு நூறு சரியே என்பதைக் காலந்தாழ்ந்தாவது பொது மக்கள் - வாக்காளர்கள் உணரக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டு விட்டது!
கழகத்தின் இந்தக் கணிப்பு - தொலைநோக்கு - நூற்றுக்கு நூறு சரியே என்பதைக் காலந்தாழ்ந்தாவது பொது மக்கள் - வாக்காளர்கள் உணரக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டு விட்டது!
வீழட்டும் மதவாதம்! வெல்லட்டும் மதச் சார்பின்மை!
நடக்கவிருக்கும் தேர்தல்
(ஹிந்துத்துவாவுக்கு) மதவாதத்துக்கும் - மதச் சார்பற்ற தன்மைக்கும்
இடையிலான போட்டி என்பதை உணர்ந்து பி.ஜே.பி.யையும், அதன் அணியையும்
முற்றிலும் நிராகரிக்குமாறு வாக்காளப் பெரு மக்களைக் கேட்டுக்
கொள்கிறோம். வீழட்டும் மதவாதம்! வெல்லட்டும் மதச் சார்பின்மை!
கி.வீரமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக