ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

குஷ்பு : என்னைப் போன்ற வெறிபிடித்த தொண்டரிடம் அந்தக் கேள்வியைக் கேட்காதீர்கள்!’

‘என்னைப் போன்ற வெறிபிடித்த தொண்டரிடம் அந்தக் கேள்வியைக் கேட்காதீர்கள்!’குஷ்பு ைரியசாலிதான்.கடந்த ஆண்டு தன்மீது செருப்பு வீசப்பட்ட அதே திருச்சியில் இருந்து தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டார். பிரசாரத்துக்குக் தயாராகிக்கொண்டு இருந்தவரை திருச்சியில் அவர் தங்கியிருந்த ஹோட்டலில் சந்தித்தோம். தர்பூசணி சாப்பிட்டபடி கூலாக பதில் அளித்தார்.
 ”தென் சென்னை தொகுதியில் நீங்கள் தி.மு.க. சார்பில் போட்டியிடப் போவதாகப் பேச்சு அடிப்பட்டது. ஆனால்,  உங்களுக்கு வாய்ப்பு தரப்படவில்லை. அப்படி என்றால் தி.மு.க-வில் இருந்து நீங்கள் ஓரளவு ஓரங்கட்டப்பட்டுவிட்டீர்கள் என்று சொல்லலாமா..?”

”நான் தேர்தல்ல போட்டியிடப்போகிறேன்னு எங்கேயாவது சொன்னேனா? எங்கேயும் சொல்லல. பத்திரிகையாளர்கள் ஆளாளுக்கு முடிவு பண்ணிட்டு, ‘குஷ்பு தென் சென்னையில போட்டியிட போறாங்க’ , ‘மத்திய சென்னையில போட்டியிடுறாங்க’னு எழுதினாங்க. தேர்தலில் போட்டியிட தலைமைக் கழகத்தில் நான் நாமினேஷன் செஞ்சேனா? இல்லையே! பிறகு எப்படி எனக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும்? கட்சியில் இருந்து ஓரங்கட்டப்படுகிறேன்னா பிரசாரத்துக்கு வந்திருப்பேனா? அவை அனைத்துமே வதந்திகள். நான் தி.மு.க-வின் கோடானு கோடி தொண்டர்களில் ஒருத்தி!”
”எதை மையமாகக் கொண்டு இந்தத் தேர்தலில் நீங்கள் பிரசாரம் செய்கிறீர்கள்..?”
”உண்மையை மட்டும் பேசி பிரசாரம் செய்றேன். கடந்த  சட்டமன்றத் தேர்தலின்போது, தேர்தல் அறிக்கையை ஜெயலலிதா வெளியிட்டாங்க. இதுவரை அவை அனைத்தும் வெறும் வாக்குறுதியாவே இருக்கிறதே தவிர, இந்த  மூன்று வருட ஆட்சிக்காலத்தில் சொன்ன எதையும் நடைமுறைப்படுத்தவே இல்லை. அதனால மக்கள் எந்தளவுக்கு கஷ்டப்படுறாங்க, பாதிக்கப்படுறாங்கன்னு நாம தினம் தினம் பார்த்துக்கிட்டுதான் இருக்கிறோம். ஸோ..  நான் என்னுடைய பிரசாரத்தில் உண்மையை மட்டும்தான் பேசுறேன். உண்மை எப்போதும் கசக்கும்.”
”அப்படி என்றால் ஜெயலலிதா அரசு, இந்த மூன்று வருடங்களில் மக்களுக்கு எதையுமே செய்யவில்லை என்கிறீர்களா?”
”என்ன செஞ்சாங்க? நான் ஆட்சிக்கு வந்தா ஆறு மாசத்துல மின்வெட்டு  பிரச்னையைத் தீர்ப்பேன்னு சொன்னாங்களே. செஞ்சாங்களா? கடந்த தி.மு.க. ஆட்சியில எல்லா பவர் பிளான்ட்ஸ் ரெடி பண்ணி வெச்சிருந்தாங்க. அதை நிறைவேற்றியிருந்தாலே மின்சார உற்பத்தியில் முழுமையடைந்த மாநிலமா தமிழ்நாடு மாறியிருக்கும்.
அந்தத் திட்டங்களைக் கைவிட்டுட்டங்க. அதனால இன்னைக்கு தினமும் 10 மணி நேரத்துக்கு மேல பவர் கட் இருக்கு. இதனால் படிக்கிற பசங்க பாதிக்கப்படுறாங்க. விவசாயிகளுக்குப் பிரச்னை, தொழிற்சாலையில பிரச்னை. இந்த மூன்று வருஷத்துல இந்த கரன்ட் பிரச்னையால ஜவுளி தொழில் பாதிக்கப்பட்டு 25 ஆயிரம் குடும்பங்கள் வீதிக்கு வந்திருக்காங்க. முதலாளிகள் இப்போ டிரைவர் வேலை பார்த்துக்கிட்டு இருக்கிறாங்க.
தலைவர் கலைஞர் ஆட்சியில 6,000 கோடியாக இருந்த ஜவுளி ஏற்றுமதி, இந்த மூன்று வருடத்தில் 600 கோடியாக குறைஞ்சிருக்கு. பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் தெருவுக்கு வந்திருக்காங்க. கடந்த மூணு வருஷத்துல தமிழகத்தில் விவசாய நிலைமை என்ன?
வறட்சி காரணமாக காவிரி டெல்டா பகுதியில மட்டும் 12 விவசாயிகள் தற்கொலை செய்திருக்காங்க. ஆனால், அவங்க எல்லாம் உடல்நலமில்லாமலும் வயது முதிர்வு காரணமாவும் இறந்ததா விளக்கம் சொல்லி விஷயத்தை மூடி மறைக்கிறாங்க.
இறந்த 12 விவசாயிகளின் குடும்பங்களுக்கு, தலா ரூ.50,000 உதவித் தொகை வழங்கியதோடு சரி. தன்னுடைய ஆட்சிக் காலத்தில் விவசாயிகளின் நலனுக்காக ரூ.7,000 கோடி கடன்களைத் தள்ளுபடி செய்தவர் கலைஞர்.
நிறைய இடங்களில் லேப்டாப் உள்ளிட்டவற்றைத் தேர்தலை மையமா வெச்சு வழங்கியிருக்காங்க. ஆடு, மாடு கொடுக்கிறாங்க. கரன்ட் இல்லாம, விவசாயம் பொய்த்து விவசாயிகள் தவித்துவரும் நிலையில், ஆடு, மாடு கொடுத்து என்ன புண்ணியம். இதுபோன்ற  உண்மையைத்தான் பேசப் போறேன்.”

”தி.மு.க-வின் தேர்தல் பிரசாரத்தில் கருணாநிதி, ஸ்டாலின் உட்பட யாருமே காங்கிரஸை விமர்சனம் செய்ய வில்லையே.. அப்படி என்றால் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸோடு தி.மு.க. கூட்டணி சேர வாய்ப்பு இருக்கிறதா?”
”தேர்தல் முடியட்டும். தி.மு.க. யாரோடு கூட்டணி வைக்கும் என்பதை கலைஞர் முடிவெடிப்பார். ஜெயலலிதா, அவருடைய பிரசாரத்தில் காங்கிரஸை கிழிகிழின்னு கிழிக்கிறாங்க. பி.ஜே.பி. குறித்து ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை. அவரிடம் நீங்கள் கேள்வி எழுப்பலையே? கலைஞரிடம் மட்டும் கேள்வி கேட்கிறீங்க. ஏன்னா தலைவர் மட்டும்தான் பத்திரிகையாளர்களுக்கு ஜனநாயகரீதியா கேள்வி எழுப்பும் உரிமையைக் கொடுத்துள்ளார். அந்தத் தலைமைக்கும் இந்தத் தலைமைக்கும் உள்ள முக்கியமான வித்தியாசம் இதுதான். கலைஞர் ஜனநாய மனிதர். அந்த அம்மாவுக்கும் ஜனநாயகத்துக்கும் சம்பந்தம் இல்லை.”
”முதல்வர் ஜெயலலிதாவின் ஹெலிகாப்டர் பிரசாரம் பற்றி உங்கள் கருத்து என்ன?”
”மக்கள் காலையில 10 மணியில இருந்து சாயங்காலம் 4 மணி வரைக்கும் கொளுத்துகிற வெயில்ல உட்கார்ந்து  காத்துக்கிடக்கிறாங்க. அந்தம்மா ஹெலிகாப்டர்ல வந்து இறங்குறாங்க.
இறங்கி அங்கிருந்து மேடைக்கு ஏ.சி. வேனில் வர்றாங்க. மேடையிலும் ஏ.சி. அதில் நின்று, கொஞ்சம் நேரம் ‘செய்வீங்களா செய்வீங்களா’னு கேட்டுட்டுப் போயிடுறாங்க.
மக்களை எங்க சந்திக்கிறாங்க? மக்களை சந்திச்சாத்தானே மக்களோட பிரச்னை தெரியும்? தளபதியும் தலைவரும் அப்படியில்லை. தலைவர் இந்த வயதிலும் ரோட்டில் பயணம் செய்கிறார். வேனிலும் ரயிலிலும் பயணிக்கிறார். மக்களைச் சந்திக்கிறார்.
தளபதி கால்ல சக்கரம் இருக்கான்னு முதல்ல பார்க்கணும். அவர் தமிழ்நாடு முழுவதும் சுற்றிக்கிட்டே இருக்கிறார். அதனால்தான் மக்கள்படும் கஷ்டங்களை உணர முடிகிறது. ஹெலிகாப்டரில் வந்துபோகவும், அதற்காக ஹெலிபேட் அமைக்கவும் ஒரு தடவைக்கு எத்தனை லட்சம் ரூபாய் செலவு செய்றாங்கன்னு பாருங்க.
இதுவரை 40 ஹெலிபேடுகளை அமைச்சிருக்காங்க. இந்த ஹெலிபேடுகளால் எந்தப் பயனும் கிடையாது. அஞ்சு கோடி செலவு செஞ்சு பொதுக்கூட்டம் நடத்துறாங்க.
அம்மையார் ஜெயலலிதா ஒரு தடவை பேசுவதற்கு அஞ்சு கோடின்னா ஒரு மாசத்துல எத்தனை ஊருக்குப் பிரசாரத்துக்குப் போயிருக்காங்க. எவ்வளவு செலவுன்னு நீங்களே கணக்குப் போட்டுக்கங்க.
மக்கள், அ.தி.மு.க. மேல அதிருப்தியா இருக்காங்க. பல இடங்கள்ல அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு எதிரா கறுப்புக் கொடி காட்டுறாங்க. மூணு வருஷமா எதுவுமே செய்யலையேன்னு அமைச்சர்களை முற்றுகையிடுறாங்க. இப்போது மக்கள் மனசு மாறியிருக்கு. 16-ம் தேதி மக்களின் மனநிலை முழுமையா தெரிந்துவிடும். ஒன்று மட்டும் உண்மை மக்களிடம் தி.மு.க-வின் மதிப்பு அதிகரித்துள்ளது.’
”கோவை பிரசாரத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி, இது என் கடைசி தேர்தலாக இருக்கக்கூடும் என பேசியிருக்கிறாரே?”
”இதுபோன்ற கேள்வியை என்னைப் போன்ற வெறிபிடித்த தொண்டர்களிடம் கேட்கக் கூடாது. ஏனென்றால் இதை கேட்கும்போது கஷ்டமாக இருக்கும். இந்த மூன்று வருடத்தில் நான், தலைவர் மீது இவ்வளவு பற்றாக இருக்கிறேன் என்றால் வருஷக்கணக்கில் தி.மு.க-வில் இருக்கும் தொண்டர்களின் மனநிலை எப்படி இருக்கும்? தி.மு.க. என்பது ஒரு எமோஷனலி அட்டாச்சுடு ஃபேமலி.”
- சி.ஆனந்தகுமார் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக