புதன், 23 ஏப்ரல், 2014

தென் சென்னை தொகுதி பிரசாரத்தில் அக்ரஹார மாமிகள் அணிவகுப்பு ! பிஜெப்பியாய நமஹ !

பா.ஜ.க மகளிர் அணி`பா.ஜ.க மகளிர் அணி  சார்பில் தென் சென்னை தொகுதி வேட்பாளரான இல.கணேசனுக்கு ஆதரவு திரட்ட மாபெரும் பொதுக்கூட்டம் நடந்து கொண்டிருந்தது. எல் ஆர் ஈசுவரியின் மகமாயி பாடல்களில், பாஜக கோமகன்களது பேர்களை தூவி விட்டு நாராசரமாக தாக்கி வந்தனர். இதாவது பரவாயில்லை, அடுத்த பாட்டு ரஜினியின் “பொதுவாக எம் மனசு தங்கம்” எனும் பாடலை “பொதுவாக கணேசன்தான் தங்கம், போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்” என்று ரகளையாக போட்டு பட்டையைக் கிளப்பினர். யமஹா, நமஹா என்று அக்ரகாரத்தில் தவளை மந்திரங்களை கேட்டு வளர்ந்த அந்த மாமிகள் இப்படி தெருவில் இறங்கும் காட்சி ஜெயமோகனது ஆழ் கடல் அக மன கிடங்கை ஆவேசம் கொண்டு எழுப்பி விடும் என்பதில் ஐயமில்லை (இல கணேசனுக்கு பிரச்சாரம் செய்யும் பா.ஜ.க மகளிர் அணியினர், நின்றவாறு முழங்கும் மாமிதான் லலிதா சுபாஷ்) பாரத மாதாவின் புத்திரர்கள் இப்படி ஒரு சேர குத்தாட்டத்தையும், மகமாயி பாடலையும் இணைத்து பின் நவீனத்துவத்தின் கலை நோக்கை ஏற்றுக் கொண்டிருந்ததை பார்த்தால் அறிஞர் அ.மார்க்ஸ் ஆனந்தக் கண்ணீர் வடித்திருப்பார். கணேசன் எனும் முதியவர் இப்படி சிங்கம், தங்கம் என்று தனது பாடலை சுட்டிருப்பது மோடியின் ரசிகரான ரஜினிக்கு ஆனந்தமாக இருந்தாலும், அவரது ரசிகர்கள் தற்கொலையே செய்திருப்பார்கள்.

பா.ஜ.க மகளீர் அணி கூட்டம் என்றாலும், ‘கலீஜான’ சென்னை தெருக்களில் மூக்கைப் பிடித்துக் கொண்டு மாமிகள் வோட்டு கேட்க வந்திருக்கும் காட்சியினை பார்த்தால், எழுத்தாளர் ஜெயமோகன் அறம் கதைகளின் அடுத்த தொடரை எழுதுவது உறுதி. யமஹா, நமஹா என்று அக்ரகாரத்தில் தவளை மந்திரங்களை கேட்டு வளர்ந்த அந்த மாமிகள் இப்படி தெருவில் இறங்கும் காட்சி ஜெயமோகனது ஆழ் கடல் அக மன கிடங்கை ஆவேசம் கொண்டு எழுப்பி விடும் என்பதில் ஐயமில்லை. தி இந்து தமிழ் நாளிதழில் பேட்டியளித்த பா.ஜ.கவின் வானதி சீனிவாசன், எழுத்தாளர் ஜோ டி குருஸோடு சேர்ந்து எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடனும், ஜெயமோகனும் கூட மோடியை ஆதரிக்கிறார்கள் என்று கூறியிருந்தார். ஆகவே பா.ஜ.க மாமிகள், அறம் கதைகளில் வரப் போவது நமது கற்பனை அல்ல.
தமிழகத்தில் மோடி அலை வீசுவதாகவும், அது புரட்சி புயலுடன் சேர்ந்து 40 தொகுதிகளுடன் கரையை கடந்துவிடும் என்று ஜூ.வி, தினமலர், புதிய தலைமுறை, குமுதம் உள்ளிட்ட கூஜாக்கள் மஜா செய்து வந்த நிலையில் இந்த பொதுக்கூட்டத்தில் அந்த அலை எப்படி இருந்தது? என்ன செய்வது அந்தக் கூட்டத்தில் தாராளமாக கணக்கு போட்டால் கூட மொத்தம் 50 பேர்  மிஞ்ச மாட்டார்கள். இதுதான் அலையின் உண்மையான காட்சி அல்லது வறட்சி.
அதிலும் பாதி பேர் தேமுதிக கட்சி கொடி பார்டர் சேலையில் வந்திருந்தார்கள். இவர்கள் கருப்பு அல்லது மாநிறத்திலும், மஞ்சள் கயிறு தவிர வேறு நகைகள் இல்லாமலும் எளிமையாக இருந்தனர். ஆனால் பா.ஜ.க மாமிகள் தலைக்கு 50 அல்லது 100 பவுன் நகைகளுடன், ஏசி அறைகளில் பராமரிக்கப்படும் அழகுடனும், பட்டுச் சீலை அலங்காரத்துடனும் இருந்தனர். காஞ்சிபுரம் பட்டு தொழிலும், ஜோய் ஆலுக்காஸும் இவர்களை நம்பித்தான் பிழைக்கின்றனர் போலும். மோடியின் கட்சிக்கு அதானி, அம்பானி ஸ்பான்சர் என்ற தராதரத்தை மாமி மகளீர் அணியும் மெயின்டைன் பண்ணுவது ஒரு குற்றமல்ல.
“வருங்கால மத்திய அமைச்சர்’ இல.கணேசன் பேசுகிறார் என்று உசுப்பேத்தினாலும் கூட்டம் ஐம்பதைத் தாண்டாமல் அடம் பிடித்தது. மகளிர் அணியைத் தவிர மற்றவர்கள் எல்லாம் வயதான நபர்களாகவும், திருவிழாவில் காணாமல் போனவர்கள் போல பாவமாகவும் இருந்தனர். கேட்டால் இவர்களெல்லாம் எழுத்தாளர்கள், கலைஞர்களாம். ஒருவர் ஜோ-டி- குரூஸ் குறித்து ஆவேசமாக முழங்கிக் கொண்டிருந்தார். எழுத்தாளர்களுக்கும் மக்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்பது இங்கேயும் நிரூபிக்கப்பட்டது. இலக்கியவாதிகள் பேச்சைக் கேட்டவுடன் டீ, சிகரெட்டுடன் தற்செயலாக எட்டிப் பார்த்தவர்களெல்லாம் இடத்தை காலி செய்தார்கள். நாற்காலியில் அமர்ந்த ஐம்பதிலும் 15 எழுந்து மறைந்து போனது.
எழுந்து போனவர்கள் குரூஸை கண்டார்களா, கொற்கையை படித்தார்களா, ஒரு எழவும் புரியவில்லை. ஆனால் குரூஸ் எனும் துரோகியின் பெயர் எப்படியெல்லாம் பயன்படுகிறது என்று பார்த்தால் குமட்டிக் கொண்டு வந்தது. இறுதியாக ஜோடிகுரூஸ் மட்டும் தான் மதச்சார்பற்றவர் என்று கூறி ஒரே போடாக போட்டு உரையை நிறைவு செய்தார், அந்த எழுத்தாளர்.
அடுத்து ஏர்வாடி ராதாகிருஷ்ணன் என்று ஒருவரை பேச அழைத்தார்கள். பெரிய கவிஞர் எழுத்தாளர் என்று பல ரூபங்களை கொண்டவராம், அது போக தமிழகமெங்கும் பல நூறு கவிஞர்களை உருவாக்கி உலவ விட்டிருக்காராம். பொதுவில் கவிதை என்றாலே எனக்கு அலர்ஜி, அதுவும் மேடையில் கவிஞர் பேசுகிறார், கவிதை படிக்கிறார் என்றால் காய்ச்சலே வந்துவிடும். நல்ல வேளை ஏர்வாடி கவிதை பாடாமல் நம்மைக் காப்பாற்றியது.
“இல.கணேசன் என் நண்பர், எனது புத்தகத்தை வெளியிட்டு பேசியிருக்கிறார்.., எனக்கு எல்லா கட்சியிலும் நண்பர்கள் இருக்கிறார்கள்… எனது வெளியீட்டு விழாவில் ….” என்று சில நிமிடங்கள் தன் கதை கூறினார். எல்லா கட்சியிலும் நண்பர்கள் இருந்தாலும். இந்த ஜீவனை வைத்து ஓட்டு கேட்பது தற்கொலைக்கு சமமானது என்று மற்ற கட்சிகளுக்கு புரிந்திருப்பதால் யாரும் அழைக்கவில்லை. ஆனால் கிடைக்கும் எந்த அற்ப ஆதரவையும் விட்டுவிடக் கூடாது என்று அலையும் பாஜகவிற்கு எகத்தாளமான ஏர்வாடி கூட மதிப்புள்ளதாக தெரிகிறது. “பிஜேபி இந்துக் கட்சி என்று சொல்கிறார்கள் ஆனால் அப்படி அல்ல. அது இந்தியர்களுக்கான கட்சி” என்றார், ஏர்வாடி.
பிறகு யாரும் ராமர் கோவில் விவகாரத்தை தவறாக நினைக்க கூடாது என்று, “ராமன் யார்?  ஒழுக்கமானவன்.. @#@#, ###@#” என்று பல ‘வன்’களை கூறிவிட்டு அதைபோல ஆட்சி செய்வோம் என்பதை தான் அப்படி சொல்கிறோம் மற்றபடி இதற்கும் இந்து மதத்திற்கும் சம்பந்தமில்லை என்று பேசினார். ராமராஜ்ஜியத்தில் பசுவை கொன்றவனுக்கும், மதம் மாற்றுபவர்களுக்கும், பெண்ணுரிமை பேசும் பெண்களுக்கும் என்ன தண்டனை என்று மனு தர்மத்தில் தேடவேண்டாம். கடந்த பத்து வருட இந்திய சமூக வரலாற்றை பார்த்தாலே போதும்.
அடுத்து குஜராத்  வளர்ச்சி குறித்து இவர் கூறிய புள்ளிவிவரங்கள் தேசிய நெடுஞ்சாலையில் அடிபட்ட நாய்போல ஆனது. நோ கமெண்ட்ஸ்.
கூட்டணி கட்சிகளும் இருக்கிறார்கள் என்பதை காண்பிக்க இடையிடையே ‘இந்தக் கட்சியின் இத்தனையாவது வட்ட செயலாளர் இன்னாருக்கு பொன்னாடை போர்த்துவார்’ என்று போர்த்திக் கொண்டார்கள். கட்சிக்கு 10 பேரு வந்திருந்தா கூட 7×10= 70 பேராவது வந்திருக்கணுமே என்ற கவலையை இல.கணேசன் முகத்தில் பார்க்க முடிந்தது. ஆனால் கூட்டணி கட்சிகள் யாரையும் மேடையிலும், கீழிலும் காணக் கிடைக்கவில்லை, தேமுதிக பெண்கள் சிலரைத் தவிர.
அடுத்து தமிழக பா.ஜ.கவின் பிரபலமான லலிதா சுபாஷ் என்ற அக்மார்க் மாமி மைக்கை பிடித்தது. “ தேஷ்ஷிய ஜனநாயக கூட்டணியில் சார்பில் எங்கள் அண்ணா இல.கணேஷ்ஷனுக்கு வாக்கு ஷ்ஷேகரிக்க நடக்கும் ……”  என்று ஆரம்பமே அமர்க்களமாக இருந்தது. இத்தனை நாட்களானாலும் வடமொழி உச்சரிப்பை இங்கே காப்பாற்றி வருவது அவாள்தான்.
“குறைந்தபட்சம் 150 தொகுதிகளில் போட்டியிடும் கட்சிதான் பிரதமர் ஆக முடியும். நாற்பது தொகுதியில் போட்டியிட்டு பிரதமர் ஆக முடியும் என்று ஜெயா தொலைக்காட்சியில் ஒரு லேடி பேசிக்கொண்டிருக்கிறார்” என்று மரியாதையாக பேசினார் லலிதா. ஆனால் யார் அந்த லேடி? பாத்திமா பாபுவா? விந்தியாவா, சி கே சரஸ்வதியா?
ஜெயலலிதா என்ற பெயரை உச்சரிக்க மாமிக்கு பயமா இல்லை மானசீக கூட்டணி தலைவரான சக மாமியின் மீதான அபிமானமா என்று கண்டுபிடிப்பது உங்கள் திறமை. ஆனால் 150 தொகுதிகளில் போட்டியிட்டால் பிரதமர் ஆக முடியும் என்று மாமி கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு வேளை ஒட்டு மொத்த பாராளுமன்ற இடங்களை 300 ஆக குறைத்து விட்டார்களோ?
அதிமுக, திமுக எம.பிக்கள் கட்சியின் அடிமைகளாக இருப்பார் என்பதை விளக்க ஒரு கதையை கூறினார்.  அதாவது நேர்மையின் சிகரமாக காட்டிக் கொள்ளும் காவி கும்பலின் இந்த மாமி ஒரு ரெக்கமண்டேசனுக்கு ஒரு அதிமுக அமைச்சரை சந்திக்க காரில் போனதாம். வீட்டின் முன் நாலைந்து கார்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட அமைச்சர் தூக்கப்படுவார் எனும் மம்மியின் விதி எண் 110 படி அமைச்சரின் உதவியாளர் மாமி காரை பக்கத்து தெருவில் நிறுத்தச் சொன்னாராம். இதை வைத்து அம்மாவின் கட்சியில் அடிமைகள்தான் இருக்க வேண்டும், ஜனநாயமில்லை என்று பினாத்தினார் மாமி. ஒரு அமைச்சர் வீட்டின் முன் பந்தாவாக கார்கள் நிறுத்தக் கூடாது என்று  ஜெயா மாமி ஒரு உத்திரவு போட்டால் அது வெட்டி பந்தா செய்யும் அமைச்சர்களுக்கு நல்ல பாடம்தானே? ஆனால் இந்த அடிமைகளிடம் வெட்கம் கெட்டு சிபாரிசுக்கு போன மாமிக்கு என்ன தண்டனை? இதுதான் ஊழலற்ற ஆட்சி செய்யப் போகிறவர்களின் இலட்சணமா?
ஏதோ திராவிடக் கட்சிகள்தான் போலீஸ் ஸ்டேசன், கலெக்டர் ஆபீஸ், தலைமைச் செயலகத்தில் நுழைந்து சிபாரிசு, நிர்ப்பந்தம் என்ற பெயரில் கெடுத்து விட்டார்கள் என்று வெகு காலமாக தில்லானா வாசித்து வருகிறார் துக்ளக் சோ. எனில் இப்போது பாஜக கும்பலும் அதேதான் என்றால் இதற்கு என்ன ராகம் வாசிக்கலாம்? போகட்டும், அம்மா நினைத்தால் அமைச்சர் பதவியைத்தான் தூக்க முடியும். மோடி நினைத்தால் அமைச்சரையே தூக்கி விடுவாரே? அந்த வகையில் மோடி ஜனநாயகத்தை விட லேடி ஜனநாயகம் ‘தேவலாம்’ அல்லவா?
தியாகராய நகர்
தி நகர் பகுதியையே தரைமட்டமாக்கி விட்டு, தி நகர் முழுவதிலும் மேலே கார் பார்க்கிங்காம், பூமிக்கு அடியில் அனைத்து கடைகளும் கொண்டு வரப்படுமாம்
‘தென் சென்னை தொகுதியில் வேறு கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் அவர்கள் மோடியை சந்தித்து தொகுதிக்கு நல்லது செய்ய முடியாது, கணேஷன் ஜெயித்தால் எப்போது வேண்டுமானாலும் மோடியை சந்திக்க முடியும்’ என்றார் மாமி. இதை விட யாரும் மட்டமாக பேச முடியாது. அதாவது பா.ஜ.க எம்பிக்கள் அதுவும் கணேஷன் போன்று மோடியோடு நேரடியாக பேசுபவர்கள் தவிர மற்ற எம்பிக்கள் யாரும் மோடியை சந்தித்து தொகுதிகளுக்கு நல்லது செய்ய முடியாது என்றால், தென் சென்னை அல்ல இந்தியாவிற்கே மோடி ஆகாது என்றல்லவா பொருள்!
என்றாலும் மோடி அருகில் சென்று பேசுவதற்கான தகுதி கணேஷ்ஷனுக்கு தான் இருக்கிறது என்று லலிதா சுபாஷ் பேசும் போது இல.கணேசன் தன் பூணூலை பெருமையுடன் தொட்டு பார்த்திருப்பார்.
‘நடப்பது பாராளுமன்றத் தேர்தல், இதை கவுன்ஷிலர், எம்எல்ஏ தேர்தல் போன்று நினைக்காமல் இந்தியா, தேஷபக்தியை சென்டராக வைத்து ஓட் போடுங்கள்’ என்றார் மாமி. அடுத்த நிமிடமே, கோயம்பேடு மார்க்கெட்டை சுத்தப்படுத்த பிளான், சின்மயா நகர் கொசுக்களை தடை செய்ய சீனப் பெரும் சுவர் என்று இல கணேஷனின் மாஸ்டர் பிளான்களை அடுக்க ஆரம்பித்தார். அட அறிவுகெட்ட மாமியே, கொசு ஒழிப்பு, கடை சுத்தமெல்லாம் கவுன்சிலர் பார்க்கும் பொறுப்புகள்தானே, இதில் எம்பிக்கு என்ன வேலை?
ஒழியட்டுமென்றால் அடுத்ததாக ஒரு அணு குண்டை போட்டார் மாமி. அது தி.நகரை அடியோடு மாற்றி அமைப்பது. இந்த திட்டத்தை மட்டும் சுமார் 15 நிமிடங்கள், உதாரணங்கள் எல்லாம் கூறி அசத்தினார் லலிதா மாமி. அதன்படி தி நகர் பகுதியையே தரைமட்டமாக்கி விட்டு, தி நகர் முழுவதிலும் மேலே கார் பார்க்கிங்காம், பூமிக்கு அடியில் அனைத்து கடைகளும் கொண்டு வரப்படுமாம். முகமது பின் துக்ளக்கே காறித்துப்பும் இந்த மாஜிக்கல் ரியலிசத்தை உண்மை, நம்புங்கள் என்று பேச வேண்டுமென்றால் என்ன ஒரு லங்ஸ் அழுத்தம்?
யோசித்துப் பார்த்ததில் இந்த மாஜிகல் ரியலிசத்தின் பின்னணி புரிந்தது. அவாவாளுக்கு அவா அவா பிரச்சனை. மாமிகள் காரில் வந்து நல்லிக்கோ, போத்திசுக்கோ ஷாப்பிங் செய்வதில் நிறைய துன்பங்களை அடைந்திருப்பார்கள் போலும். மாநகர பேருந்துகளில் புளி மூட்டை போல வந்து போகும் மக்களுக்கு இந்த பார்க்கிங் பிரச்சினை இல்லை. இதை வைத்து தி நகரையே கார் பார்க்கிங்காக மாற்ற முடிவு செய்தார்கள் என்றால் அம்பானிக்கும், அதானிக்கும், அமெரிக்காவிற்கும் என்னவெல்லாம் செய்வார்கள்?
இறுதியாக “தேர்தல் நாளன்று காலையிலேயே நன்னா குளிச்சுண்டு, மோடி பிரதமராகனும்னு ஒரு ரூபா வெச்சு பிள்ளையாரை சேவிச்சுண்டு போய் ஓட்டு போடுங்க” என்று தன் உரையை நிறைவு ‘ஷெ’ய்தார் மாமி.
அடுத்து வேட்பாளரான இல.கணேசன் பேச வருவார் என்று அறிவித்தார்கள். அவர் எழுந்திருக்கவில்லை. தமிழ் சினிமா ஹீரோ என்ட்ரி பாடல் போல ஒரு பாட்டை போட்டு விட, மேடையே அமைதியானது. எட்டுக் கட்டையில் ஒரு விளங்காத கர்நாடக சங்கீத ராக இசையமைப்பில் ஒரு கோவில், புனித மூடைக் கிளப்பும் விதமான பாடல் அது. ஆனாலும் பக்கத்தில் பாய் ஒருவரின் புரோட்டாக் கடையில் போடப்பட்ட கலக்கியின் மணம் அதை கம்பீரத்துடன் காலி செய்தது. சுமார் ஏழெட்டு நிமிசம் அந்த கர்மத்தை கதற கதற ஒலிபரப்பினார்கள். இந்த பாட்டைக் கேட்டாவாது மக்கள் தனக்கு ஓட்டு போடும் மூடுக்கு வரமாட்டார்களா என்ற ஏக்கத்துடன் இல கணேஷன் மேடையில் பார்த்துக் கொண்டிருந்தார். அருகில் பீடி வலித்துக் கொண்டிருந்த தொழிலாளிகளெல்லாம் இதெல்லாம் ஒரு கட்சி கூட்டமா என்பதாக காலி செய்து கொண்டிருந்தார்கள்.
மேடையில் இருந்த எழுத்தாளர்களின் முகத்தை பார்க்கவேண்டுமே. விட்டால் கர்நாடக சங்கீதத்துக்கு குத்தாட்டம் போடுவார்கள் போல அவ்வளவு குஷி. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. மைக்கை பிடித்த இல.கணேசன் ‘அடுத்த ஆட்சியில் தேசிய விருது வாங்க போகும் எழுத்தாளர்கள் எல்லாம் எனக்காக பிரச்சாரம் செய்தை நினைத்து மகிழ்வதாக’ கூறி ஆரம்பித்தார். மக்கள் ஓட்டு போட வெறும் சில நூறு ரூபாய்களை கொடுக்கும் போது எழுத்தாளர்களுக்கு மட்டும் தேசிய விருது கொடுக்கப்படுகிறது என்றால் ஏர்வாடியோ, குருஸோ, ஜெயமோகனோ நாக்கைத் தொங்கப் போட்டு மோடிக்கு ஜே போட வரமாட்டார்களா என்ன?
சீ சீ இதற்குதானே ஆசைப்பட்டாய் எழுத்தாள பாலகுமாராக்களே! தனக்கு விருது கிடைக்காத விரக்தியில் இடதுசாரிகளின் கட்டுப்பாட்டில் தான் விருதுலகமும், அறிவுலகமும் இருக்கிறது என்று புலம்பும் ஜெயமோகன் இனி உற்சாகமாக அறிவடியாள் வேலையை தொடர்வார் என்று நம்புவோமாக!
இல கணேஷன் பேச ஆரம்பித்து, காங்கிரஸ், திமுக என்று முடித்துவிட்டு மெய்ன் சப்ஜெக்டுக்கு வந்தார். நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ஜெயலலிதா குஜராத் வளரவில்லை என்று சொல்லி விட்டாராம். அதனால் பாருங்கள் குஜராத் எவ்வளவு வளர்ச்சியடைந்திருக்கிறது என்று பல முறை அம்பலமான பொய்களையே திரும்பவும் கூறினார். அதை விட அவர் பேசியதில் முக்கியமான்து காவிரி பற்றியது. காவிரி நீரை ஏன் நம்புகிறீர்கள் என்றவர், மழைநீரை சேகரியுங்கள் வேறு ஏதாவது செய்யுங்கள் அதற்கு தானே முதல்வராக இருக்கிறீர்கள். அதை விடுத்து அவன் தண்ணீர் தரவில்லை இவன் தரவில்லை என்று குற்றம் சுமத்தவா இருக்கிறீர்கள் என்று கேட்டார். ஒரு வழியாக கர்நாடக பாஜகவின் காவிரி மறுப்பை தமிழக பாஜக ஒத்துக் கொண்டிருக்கிறது. இதேதான் முல்லைப் பெரியாறு விவகாரத்தில் சிபிஎம் கட்சியின் ஸ்டேண்டர்டு டயலாக். காவிகளும், போலிகளும் உண்மையிலேயே ‘தேசியக்’ கட்சிகள்தான்
குஜராத்தில் மோடி இப்படி குற்றம் சொல்வது இல்லை என்றும் மழை நீரை சேகரித்து தண்ணீரை பாட்டிலில் அடைத்து விற்காமல் அனைவருக்கும் வீட்டில் பைப்பை திறந்தால் தண்ணீர் வருவது போல் செய்கிறார் என்றும் விட்டால் இன்னும் சில மாதங்களில் வீட்டிலேயே எண்ணெய், பெட்ரோல், நெய், தேன் என்று சரக்கைத் தவிர அனைத்தும் கொட்டோ கொட்டும் என்று சொல்வார் போலும். குஜராத் கிராமப்புறங்கள் தாய்மார்கள் பல கி மீ நடந்து சுமந்து குடிநீரை எடுத்து வருவதெல்லாம் சும்மா உடற்பயிற்சிக்குத்தான் என்று இந்த கூ முட்டை பாசிஸ்டுகள் பேசினாலும் பேசுவார்கள்.
பா.ஜ.கூட்டணிக்கான மக்களின் ஆதரவை பற்றி பிற கட்சிகள் பயப்படுவதாகவும் அதன் விளைவுதான் ஜெயலலிதா பி.ஜே.பி யை விமர்சனம் செய்வது என்றும் தன் முன்னால் இருந்த காலி சேர்களை பார்த்து காரணமே இல்லாத கம்பீரத்துடன் பேசிக் கொண்டிருந்தார்.
இல கணேசன்
சமீப காலமாக புத்தி பேதலித்துவிட்டதா என்று சந்தேகப்படும் அளவுக்கு மோடியிலிருந்து இல.கணேசன் வர எல்லா சுயம்சேவக்குகளையும் சினிமா மோகம் போட்டு தாக்குகிறது.
படித்தவர்கள் எல்லாம் ஓட்டு போடவரவேண்டும், அவர்கள் வராவிட்டால் காசு வாங்கிக்கொண்டு ஓட்டு போடுபவர்கள் தவறான கட்சியை தேர்தெடுத்து விடுவார்கள் என்று கணேஷன் பேசியதிலிருந்து பாஜக ஏழைகளை இழிவுபடுத்தும் கட்சி என்பது நிலைநாட்டப்பட்டது. நடுத்தர வர்க்கம்தான் பாசிசக் கட்சிகளின் குறி என்பதை இப்போதாவது அம்மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
அடுத்து இந்தியன் திரைப்படத்தை வைத்து பேசினார். படத்தில் வர்மக்கலையை கொண்டு ஊழலை ஒழிக்கிறார், இந்தியன் தாத்தா. நிஜத்தில் இரண்டு விரலைக் கொண்டில்லாமல் ஒரு விரலில் தாமரை பொத்தானை அழுத்துவதன் மூலம் எளிதாக ஊழலை ஒழித்து விடலாம். அதற்கு இந்தியன் தாத்தாவாக வேண்டாம் இந்தியனாக இருந்தால் போதும் என்று பஞ்ச் வைத்து முடித்தார். சமீப காலமாக புத்தி பேதலித்துவிட்டதா என்று சந்தேகப்படும் அளவுக்கு  மோடியிலிருந்து இல.கணேசன் வர எல்லா சுயம்சேவக்குகளையும் சினிமா மோகம் போட்டு தாக்குகிறது.
ஹாலிவுட் படங்களில் ஊழலை மட்டுமல்ல, போரையே ஒரு பட்டம் போட்டு ராக்கெட்டை அனுப்பித்தான் நடத்துகிறார்கள். அதையெல்லாம் கணேஷன் பார்த்தால் பாரத மாதாவை அமெரிக்காவிற்கே நாடுகடத்தலாம் என்று தீர்வு சொல்வார்.
கூட்டத்தின் ஆரம்பத்தில் இல கணேசனுக்கு திருமணம் ஆகவில்லை, குடும்பம் குட்டி இல்லை, ஊழல் செய்ய மாட்டார், சொத்து சேர்க்க மாட்டார் என்று ஒரு பேச்சாளர் பேசிக் கொண்டிருக்கும் போது அருகில் இருந்த ஒரு தொழிலாளி, “ என்ன ஒரு மாதிரி சூசகமாக பேசுகிறார்கள்” என்று சிரித்தார். என்னவென்று கேட்டேன். “கல்யாணம், குடும்பம்னு வாழறவனை நம்பலாம், சாகுற வயசுலயும் கல்யாணம் பண்ணாத தியாகின்னா அத அவன் பெருமையா வெளிய பேச கூடாது, மீறி பேசினா அவன்தான் இந்த உலகத்துலேயே பெரிய ஃபிராடு” என்றார்.
என்ன இருந்தாலும் மக்கள் மக்கள்தான். பா.ஜ.கவை நாம் இவ்வளவு வார்த்தைகளை எழுதி விளக்கும் போது ரத்தினச் சுருக்கமாக முடித்து விட்டாரே அந்த தொழிலாளி. இதுதாண்டா உழைக்கும் மக்கள் இந்துமதவெறிக்கு வைக்கும் பஞ்ச்.
-    வினவு செய்தியாளர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக