சனி, 12 ஏப்ரல், 2014

தமிழகம் எங்கும் குடிநீர் பஞ்சம்!

தமிழகத்தில், தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், 'அய்யோ...திரும்பவும் பஞ்சம் வரப்போகுது' என, மக்கள் புலம்பிவந்த காலம் உண்டு. உண்மையில் திமுக ஆட்சியில் தான் மழை பொய்க்காமல் பெய்திருக்கிறது . ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக நிலவி வரும் வறட்சி மற்றும் குடிநீர் பற்றாக்குறையால் இப்போது, அ.தி.மு.க.,விற்கும் அந்த அடையாளம் ஒட்டப்படும் நிலை உருவாகி உள்ளது.தமிழகத்தில், காங்கிரஸ் ஆட்சி காலத்தில், முதல்வராக பக்தவத்சலம் இருந்த போது, 1964 - 65 காலகட்டத்தில் ஏற்பட்ட, தண்ணீர் பஞ்சத்தை, யாரும் மறந்துவிட முடியாது. அப்போது, விவசாயமே செய்ய முடியாத நிலை ஏற்பட்டு, மக்கள் எலிக்கறி சாப்பிடும் அளவிற்கு பஞ்சம் தலை விரித்தாடியது.  Jeya :கடந்த மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியை விட என் ஆட்சியில் அதிக அளவில் தான் மழை பெய்கிறது. இருந்தாலும் ஏன் தண்ணீர் பஞ்சம் ஏற்படுகிறது தெரியுமா ? யாரோ வேண்டுமென்றே சதி செய்து குடிநீர் குழாயை உடைத்து விடுகிறார்கள், அல்லது அடைத்து விடுகிறார்கள். அதனால் தான் தண்ணீர் பஞ்சம் ஏற்படுகிறது. அவர்கள் யார் என்று கண்டுபிடித்து, அவர்களை கடுமையாக தண்டனைக்கு உள்ளாக்குவேன் என்பார்.
பஞ்சத்தை முன்னிட்டு, ஐந்தாண்டு திட்டமே தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, ஆண்டு திட்டமாக மாற்றப்பட்டது.கடந்த 1967 முதல், 1975 வரையிலான காலகட்டத்தில், நாடு முழுவதும் பஞ்சம் ஏற்பட்டது.விவசாயம் முற்றிலும் படுத்ததால் உணவுப் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. தமிழகத்தின் பிரதான உணவான அரிசி கிடைக்கவில்லை. பட்டினியின் பிடியில் தவித்த மக்கள், மரவள்ளிக் கிழங்கு, சோள மாவை சாப்பிட்டு காலம் தள்ளினர். ரேஷனில் கூட, சோள மாவு கொடுக்கும் நிலை ஏற்பட்டது.
அடுத்ததாக வந்த அ.தி.மு.க., ஆட்சியின்போது, (1977 முதல் 1989 வரை) பருவ மழை ஓரளவு பெய்து நிலைமையை சமாளித்து வந்தது. பசி, பட்டினியில் வாடிப்போய் கிடந்த மக்கள், கொஞ்சம் நிம்மதி அடைந்தனர்.

இதனால், எம்.ஜி.ஆர்., காலம் தொட்டே, அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், 'அப்பாடா... எம்.ஜி.ஆர்., ஆட்சிக்கு வந்து விட்டாரா, நல்ல மழை பெய்யும்; பஞ்சம் போய்விடும்...' என, ஒரு வித எண்ணம், மக்கள் மத்தியில் பரவலாக இருந்து வந்தது. ஆனால், இந்த 'ராசி' எம்.ஜி.ஆர்., காலத்தோடு போய்விட்டது.தற்போதெல்லாம் யார் ஆட்சிக்கு வந்தாலும் வறட்சிக்கான வாய்ப்பு மட்டும் அதிகரிப்பதாக தெரிகிறது. கடந்த 2011 - 2012 என, அ.தி.மு.க., ஆட்சியின் முதல் இரண்டு ஆண்டுகளுமே வறட்சி ஆண்டுகளாக அமைந்துவிட்டன. 2013ல் ஓரளவிற்கு மழை இருந்தாலும், இன்றைய தேவைகளுக்கு போதுமானதாக இல்லை. இதனால், தற்போது, மாநிலம் முழுவதும் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. மறுபுறம், வேளாண்மை படுத்துவிட்டது.இது, தற்போதைய தேர்தலில், பல தொகுதிகளில் ஆளும்கட்சி மீது அதிருப்தியாக எதிரொலிக்கும் என, கள ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த இதழில், இந்த பிரச்னை குறித்து, மாவட்ட வாரியான நிலவரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன. அதில் உள்ள சில முக்கிய தகவல்கள்;
*தர்மபுரி, திண்டுக்கல், நாமக்கல், சேலம், திருவண்ணாமலை, வேலுார், தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலுார், புதுக்கோட்டை மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது
*இதனால், வேலுார் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 163 போராட்டங்கள் நடந்து உள்ளன
*சேலம் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில், இரண்டு ஆண்டுகளுக்கு முன், 300 அடியில் கிடைத்து வந்த நிலத்தடி நீர், 800 அடி தோண்டினாலும் கிடைப்பதில்லை, அதேபோல், மதுரை மாவட்டத்தில் நிலத்தடிநீர் அதிகபட்சமாக 1000 அடி வரை இறங்கி உள்ளது
*தமிழகம் முழுவதும், நினைத்துப்பார்க்க முடியாத அளவில், அசுர வேகத்தில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது

இத்தகைய நிலைக்கு, இயற்கையை மட்டும் காரணம் காட்ட முடியாது என, சுற்றுச்சூழல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். ஒருபுறம் மழை பற்றாக்குறை இருந்தாலும், கிடைக்கும் மழையை முறையாக சேமித்து வைக்க தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., அரசுகள் தவறிவிட்டனர். அதேபோல், மாற்று நீராதாரங்களை உருவாக்குவதற்கும், அண்டை மாநிலங்களிடம் சுமுகமான உறவு வைத்துக்கொள்வதற்கும் இரண்டு திராவிட கட்சிகளும் தவறிவிட்டன.மேலும், கணக்கில்லாத மணல் கொள்ளை; நீராதார, நீர்வழித்தட ஆக்கிரமிப்புகள்; ஏரிகள், கண்மாய்களின் முறையில்லா பராமரிப்பு ஆகியவை தமிழகத்தை நிரந்தர பஞ்ச காலத்தை நோக்கி அழைத்துச் செல்கின்றன. இதுகுறித்து, ஆட்சியாளர்கள் கண்டுகொண்டதாக தெரியவில்லை. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் துவங்கப்பட்ட மழைநீர் சேகரிப்பு திட்டம், நீராதாரங்களுக்காக செய்யப்பட வேண்டிய வேலைகளில் வெறும் ஒரு துளி தான். ஆனால், அந்த ஒரு துளியும் தற்போது மடையோடு அனுப்பப்பட்டு விட்டது.

ஒவ்வொரு ஆண்டும், தமிழகத்திற்கு, 1,921 டி.எம்.சி., நீர் தேவை. மக்கள் தொகை அதிகரிப்பால், இது, 2050ல், 2,038 டி.எம்.சி.,யாக உயரும். வழக்கமாக, 0.106 டி.எம்.சி., தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால் கூட, கடும் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது. தமிழகத்தின் சராசரி மழை அளவான 925 மி.மீ.,யை நாம் பார்த்தே பல ஆண்டுகள் ஆகின்றன.இந்த நிலையில், நீராதாரங்களை அதிகரிக்கவும்; ஏற்கனவே உள்ள ஏறத்தாழ 39 ஆயிரம் நீர்நிலைகளை ஆக்கிரமிப்புகளில் இருந்து பாதுகாத்து, பராமரிப்பதிலும்; ஆறுகளில் மணல் கொள்ளையை தடுத்து இயற்கை வளங்களை பாதுகாப்பதிலும்; மாநிலத்தில் உள்ள எட்டு முக்கிய அணைகளை முறையாக பராமரிப்பதிலும்; பருவமழை காலத்தில் கடலில் வீணாக கலக்கும் 150 டி.எம்.சி., நீரை சேமிப்பதிலும், எந்த முனைப்பும் காட்டப்படவில்லை என்பது, கவலையளிக்கிறது.அப்படி காட்டப்பட்டு இருந்தால், நீர்நிலைகள் மற்றும் அணைகளின் கொள்ளளவுகளும், இன்று, 30 சதவீதம் வரை குறைந்திருக்காது. மணல் கொள்ளையால் நிலத்தடி நீர்மட்டம் 500 அடி, 1,000 அடி என, அதள பாதாளத்திற்கு சென்றிருக்காது. ஆக்கிரமிப்பு இல்லாத வரத்துக்கால்வாய்கள், நீர்நிலைகளை நிரப்பி இருக்கும். கடலில் வீணாக கலக்கும் 150 டி.எம்.சி., நீரை சேமிக்க, கூடுதல் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கும்.இது இந்த தேர்தலில் பிரதிபலிக்கிறதோ இல்லையோ, இதுகுறித்து தமிழர்கள் அனைவரும் கவலைப்பட வேண்டும். நம் எதிர்காலத்திற்காக செயலில் ஈடுபட வேண்டும்.

- நமது நிருபர் குழு dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக