ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

விழுப்புரம் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது பெண் குழந்தையின் கதி என்ன?


தியாகதுருகம்,
தியாகதுருகம் அருகே ஆழ்துளை கிணற்றுக்காக தோண்டப்பட்ட குழியில், 3 வயது பெண் குழந்தை நேற்று காலை விழுந்தது. சுமார் 28 அடி ஆழத்தில் இருக்கும் அந்த குழந்தையை மீட்க விடிய, விடிய மீட்புகுழுவினர் போராடினர். நீண்ட நேரம் குழிக்குள் இருப்பதால் குழந்தை கதி என்ன என்பது கேள்விக்குறியாக உள்ளது.
தொடரும் சம்பவம்
பொது இடங்களிலோ, குடியிருப்பு பகுதிகளிலோ தோண்டப்படும் ஆழ்துளை கிணற்று குழிகளை உரிய முறையில் மூடவேண்டும் என்று பல முறை, அறிவுறுத்தப்பட்டும் போதிய விழிப்புணர்வு இல்லாததால், சரியாக மூடப்படாத அந்த குழிகளுக்குள் குழந்தைகள் விழும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன.
அதுபோல் விழுப்புரம் மாவட்டத்திலும் நேற்று ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:–
3 வயது குழந்தை
விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் அருகே பல்லகச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். விவசாயி. இவருடைய மனைவி அஞ்சலை. இவர்களுடைய ஒரே மகள், மதுமிதா (வயது 3).
ராமச்சந்திரன் விவசாயவேலைகளை கவனிப்பதற்காக, பல்லகச்சேரியில் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில், குடிசை (காட்டுக்கொட்டகை) அமைத்து குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார்.

அவரது காட்டுக்கொட்டகைக்கு அருகில், அவருடைய உறவினரான தாகப்பிள்ளை என்பவரும் காட்டுக்கொட்டகை அமைத்து வசித்து வருகிறார். குழந்தை மதுமிதாவுக்கு தாகப்பிள்ளை மாமா உறவுமுறை என்பதாலும், இருவரது காட்டுக்கொட்டகைகளும் அடுத்தடுத்து இருந்ததாலும் குழந்தை மதுமிதா அடிக்கடி தாகப்பிள்ளை வீட்டுக்கு சென்றுவருவாள்.
ஆழ்துளை கிணறு
இந்தநிலையில் ராமச்சந்திரன் தனக்கு சொந்தமான நிலத்தில், விவசாயத்துக்காக ஆழ்துளை கிணறு அமைக்க முடிவு செய்தார். அதன்படி கடந்த 10 நாட்களுக்கு முன்னர், அவரது காட்டுக்கொட்டகைக்கும், தாகப்பிள்ளை காட்டுக்கொட்டகைக்கும் இடைப்பட்ட இடத்தில் உள்ள தனது இடத்தில் ஆழ்துளை கிணறு தோண்டினார்.
முதலில் 100 அடி தோண்டியதும் சுமார் 30 அடி ஆழத்துக்கு பிளாஸ்டிக் குழாய் பதித்தார். தொடர்ந்து சுமார் 500 அடி வரை தோண்டியும் அதில் தண்ணீர் வரவில்லை. இதனால் மனம் உடைந்த ராமச்சந்திரன், ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை அப்படியே நிறுத்திவிட்டார். மேலும் அதில் 30 அடி ஆழத்துக்கு பதிக்கப்பட்டு இருந்த குழாயையும் அவர் எடுத்துவிட்டார். இதன் பின்னர், தரை மட்டத்தில் சிறிய வட்டம் போன்று இருந்த அந்த குழியை சாக்கு துணியால் மூடிவைத்துவிட்டு அப்படியே விட்டுவிட்டார்.
குழிக்குள் விழுந்த குழந்தை
இந்தநிலையில் நேற்று காலை வழக்கம்போல் தாகப்பிள்ளை வீட்டுக்கு குழந்தை மதுமிதா விளையாடச்சென்றாள். பின்னர் காலை 8.30 மணியளவில் அவள் தனது வீட்டுக்கு திரும்பினாள்.
அவள் தனக்கு நேரப்போகும் ஆபத்தை உணராமல், அங்குமிங்கும் ஓடியபடி துள்ளிக்குதித்து வந்தாள். அப்போது மதுமிதா, அங்கு தோண்டப்பட்டு அரைகுறையாக சாக்குத்துணியால் மூடப்பட்டு இருந்த ஆழ்துளை கிணற்று குழிக்குள் எதிர்பாராத விதமாக விழுந்தாள்.
அப்போது மதுமிதா, அம்மா....! என்று அலறினாள். அப்போது அந்த வழியாக வந்த அல்லிமுத்து என்பவர் மதுமிதாவின் சத்தம்கேட்டு, ஓடிவந்து பார்த்தார். அந்த சிறிய குழியில் குழந்தை மதுமிதா, கொஞ்சம் கொஞ்சமாக ஆழ்ந்து கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தீயணைப்பு படைக்கு தகவல்
இதுபற்றி உடனடியாக ராமச்சந்திரனுக்கு, அல்லிமுத்து தெரிவித்தார். தகவல் அறிந்த ராமச்சந்திரனும், அஞ்சலையும் பதறிதுடித்தபடி அந்த குழியை நோக்கி ஓடிவந்தனர். பின்னர் அவர்கள் குழிக்குள் இருந்த குழந்தையை மீட்க முயன்றனர். எதுவும் பலனளிக்கவில்லை.
இதையடுத்து காலை 9 மணிக்கு தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவித்தனர். 9.15 மணிக்கு தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் குழந்தையை எவ்வாறு மீட்பது என்று ஆலோசித்தனர். பின்னர் அந்த ஆழ்துளை கிணற்று குழியின் ஆழத்தை கணக்கிட்டு அதன் அருகே பெரிய குழி ஒன்றை தோண்டி அதன் மூலம் குழந்தையை மீட்கலாம் என்று முடிவு செய்தனர்.
மீட்பு பணி தொடங்கியது
குழி தோண்டுவதற்காக 2 பொக்லைன் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டன. காலை 9.30 மணிக்கு குழி தோண்டும் பணி தொடங்கியது.
இதற்கிடையே தீயணைப்பு படையினர், குழந்தை மதுமிதா இருந்த குழிக்குள் நீள கயிறு ஒன்றை விட்டு பார்த்தனர். அந்த கயிறு சுமார் 28 அடி ஆழம் வரை சென்றது அதன் பின்னர் தடைபட்டு நின்றது. எனவே குழந்தை 28 அடி ஆழத்தில்தான் உள்ளது என தீயணைப்பு படைவீரர்கள் முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் குழி தோண்டும் பணி நடைபெற்றது. குழந்தை இருந்த குழிக்கும், தீயணைப்பு படைவீரர்கள் தோண்டிய மீட்பு குழிக்கும் இடையே 3 அடி இடைவெளி இருந்தது.
குழியை விரைவாக தோண்டுவதற்காக மேலும் 2 பொக்லைன் எந்திரங்களும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு, மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
குழந்தை விழுந்த ஆழ்துளை கிணற்று குழி, வாய்பகுதியில் இருந்து 30 அடி ஆழத்துக்கு 9 அங்குல விட்டம் கொண்டது. அதற்கு மேல் 5½ அங்குல விட்டம் கொண்டதாக இருப்பதால் குழந்தை மதுமிதா சுமார் 28 அடி ஆழத்துக்கு கீழ் செல்லமுடியாமல், குழியில் அப்படியே தங்கிவிட்டாள். எனவே குழந்தையின் அழுகுரல் வெளியே இருப்பவர்களுக்கு ஓரளவு தெளிவாக கேட்டது.
உயிர்காற்று
இதற்கிடையே சம்பவம் பற்றிய தகவல் அறிந்து கள்ளக்குறிச்சி சுகாதார மாவட்ட துணை இயக்குனர் கோவிந்தன் தலைமையில் டாக்டர்கள் நடேசன், சந்தோஷ்குமார், செந்தில்ராஜா, தீனதயாளன் மற்றும் செவிலியர்கள் அடங்கிய மருத்துவ குழுவினரும், 108 ஆம்புலன்சும் காலை 9.30 மணிக்கு அங்கு வந்து சேர்ந்தனர்.
அவர்கள் உடனடியாக குழந்தையின் உயிரை காக்கவும், அதற்கு சுவாசம் தடையின்றி கிடைக்கவும் சிறிய குழாய் மூலம் உயிர்காற்றை (ஆக்ஸிஜன்) செலுத்தினர். இதற்காக 7 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வரவழைக்கப்பட்டன.
மேலும் குழிக்குள் இருக்கும் குழந்தை எப்படி இருக்கிறது என்பதை பார்க்க, அவ்வப்போது குழிக்குள் குழந்தையின் தாய் அஞ்சலை சத்தம் கொடுத்துக்கொண்டே இருந்தார். அதற்கு பதில் கொடுக்கும் வகையில் குழிக்குள் இருந்து அழுகை சத்தம் வந்து கொண்டே இருந்தது.
சம்பவம் பற்றிய தகவல் காட்டுத்தீ போல அந்த பகுதியில் பரவியது. இதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அந்த பகுதியில் திரண்டனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகரன், கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.
20 அடி பள்ளம்
போலீசார், அங்கு திரண்டு இருந்த கூட்டத்தினரை கட்டுப்படுத்தி, மீட்பு பணியை துரிதப்படுத்தினர். 4 பொக்லைன் எந்திரங்களும் தொடர்ந்து தோண்டியதால் மதியம் 1.30 மணிக்கு சுமார் 20 அடிக்கு பள்ளம் தோண்டப்பட்டது.
அதற்கு மேல் அந்த பகுதி கடினமான பாறையாக இருந்ததால், மேற்கொண்டு தோண்டுவது சிரமமாக இருந்தது. எனவே பாறையை துளையிடும் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு துளைபோடும் பணி தொடர்ந்து நடந்தது.
மயக்கம்
 தொடர்ந்து பல மணி நேரம் குழிக்குள் இருந்ததால் களைப்படைந்த குழந்தை ஒரு கட்டத்தில் மயங்கியது. எனவே மருத்துவர்கள் குழு ஆலோசனையின்பேரில், அவ்வப்போது குழிக்குள் குரல் கொடுக்கப்பட்டது. மயங்கிய நிலையில் இருந்ததால் குழந்தையிடம் இருந்து எந்த அசையும் இல்லை. குழந்தைக்கு தேவையான உயிர்காற்று கிடைப்பதால், குழந்தை பத்திரமாக இருப்பதாக மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.
பக்கவாட்டில் துளை
குழந்தை இருக்கும் இடம் சுமார் 28 அடி என்பதால் 30 அடி ஆழம் வரை குழி தோண்டுவது என்று முடிவு செய்யப்பட்டு, தொடர்ந்து பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது. மாலை 4 மணிக்கு மேல் 30 அடி ஆழ மீட்பு பள்ளம் தோண்டிமுடிக்கப்பட்டது. அதன் பின்னர் குழந்தையை பத்திரமாக மீட்க மீட்பு குழிக்கும், குழந்தை இருந்த ஆழ்துளை கிணற்று குழிக்கும் இடையே, பக்கவாட்டில் 3 அடி நீளத்துக்கு ஒரு ஆள் நுழையும் அளவுக்கு துளைபோடும் பணி தொடங்கியது.
குழிக்குள் விழுந்த குழந்தையை பத்திரமாக மீட்க காலை 9.30 மணியில் இருந்து 8 மணி நேரத்துக்கும் மேல் மீட்புகுழுவினர் போராடி வருகிறார்கள்.
மீட்பு பணியில் ரோபோ
இதற்கிடையே மதுரையில் இருந்து ஆழ்துளை மீட்புக்குழுவினர் மணிகண்டன் என்பவர் தலைமையில் 4 பேர் மாலை 4 மணிக்கு சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் கேமராவுடன் உள்ள ரோபோ கருவியை ஆழ்துளை குழிக்குள் விட்டனர், ஆனால் கருவியின்அகலம் அதிகமாக இருந்தால் குழிக்குள் 5 அடிக்கு மேல் செல்ல முடியவில்லை, இதனால் அந்த முயற்சிகைவிடப்பட்டது.
இதற்கிடையே கோவையில் இருந்து ஸ்ரீதர் என்பவர் தலைமையிலான குழுவினர் மாலை 5 மணிக்கு சம்வ இடத்துக்கு ஆழ்துளை மீட்பு கருவியுடன் வந்தனர். அவர்கள் தாங்கள் கொண்டு வந்த கருவியை குழிக்குள் இறக்கினார்கள். அந்த கருவி மூலம் குழந்தையை மீட்க முயற்சிமேற்கொள்ளப்பட்டது. இந்த கருவியின் உதவியுடன் குழந்தையை இழுத்தபோது, குழியின் மேல் பகுதியில் இருந்த சாக்கு குழந்தையை மீட்பு பாதையில் வருவதற்கு தடையாக இருந்தது. எனவே இந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது.
குழந்தையின் கதி என்ன?
இந்தநிலையில் மாலை 6 மணிக்குமேல் சூரிய ஒளி குறைந்ததும், அங்கே மின்விளக்கு உதவியுடன் மீட்பு பணி தொடர்ந்து நடந்தது. ஒரு கட்டத்தில் அனைத்து முயற்சியும் தேக்கமடைந்தது.
குழிக்குள் குழந்தை மதுமிதா விழுந்து, இரவு 8.30 மணியுடன் 12 மணி நேரத்துக்கு மேல் ஆவதால் அதன் கதி என்ன என்று தெரியவில்லை. மீட்பு முயற்சியில் குழிக்குள் ஏற்படும் மண் சரிவால் குழந்தைக்கு போதிய உயிர்க்காற்று கிடைக்காமல்போக வாய்ப்புள்ளது என்று அங்கிருக்கும் மருத்துவ குழுவினர் கவலையுடன் தெரிவித்தனர்.
விடிய, விடிய நடந்தது
குழந்தையை மீட்க தோண்டப்பட்ட 30 அடி ஆழ குழியில் இருந்து ஆழ்துளை கிணற்றை இணைக்கும் வகையில் போடப்பட்ட பக்கவாட்டு மீட்பு பாதை பயனில்லாமல்போனதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது.
இதையடுத்து ஏற்கனவே தோண்டப்பட்ட பக்கவாட்டு குழியின் மேல் பகுதியில் 5 அடி உயரத்தில் துளைபோடும் கருவியின் உதவியுடன் மற்றொரு துளைபோடப்பட்டது. அப்போது குழந்தை இருந்த இடம் சற்று உயரத்தில் இருந்ததால், அந்த இடத்தில் இருந்து சிறிது கீழே மேலும் ஒரு துளைபோடும் பணி நடந்தது. நள்ளிரவு தாண்டியும் மீட்பு பணி நடந்தது. குழந்தையை எப்படியாவது மீட்கவேண்டும் என்ற நோக்கத்துடன் தீயணைப்பு படையினர், மீட்பு குழுவினருடன் இணைந்து பணியாற்றிவருகிறார்கள். dailythanthi.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக