திங்கள், 17 மார்ச், 2014

பாமக தனித்துப் போட்டி? கள்ளக்குறிச்சி தொகுதிக்கு வேட்பாளர் அறிவிப்பு

தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்ட கள்ளக்குறிச்சி தொகுதியில் பாமக சார்பில் ஆத்தூர் சண்முகம் போட்டியிடுவார் என அந்தக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்தார். மேலும், சேலம் தொகுதியில் பாமக வேட்பாளராக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள ரா.அருள் போட்டியிலிருந்து விலக மாட்டார் என்றும் தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ராமதாஸ் சூசகமாகத் தெரிவித்தார். அதுபோல, பாஜக கூட்டணியில் உள்ள என்.ஆர். காங்கிரஸýக்கு புதுச்சேரி தொகுதி வழங்கப்பட்டுள்ளது. அந்தத் தொகுதியில் பாமக சார்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள அனந்தராமன் போட்டியிடுவார் என்றும் ராமதாஸ் அறிவித்தார். இதனால், பாமக தனித்துப் போட்டியிட முடிவு செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிகவுக்கு 14, பாஜக, பாமகவுக்கு தலா 8, மதிமுகவுக்கு 7, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, என்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தலா 1 என தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக சனிக்கிழமை செய்திகள் வெளியாகின.
இதில் சேலம் தொகுதி தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டதாகவும், அங்கு விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே. சுதீஷ் போட்டியிட இருப்பதாகவும் கூறப்பட்டது.
சேலத்தில் ஏற்கெனவே பாமக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் அருள், பிரசாரத்தை தொடங்கியுள்ளார். இதனால், சேலம் மாவட்ட பாமகவினர் சேலத்தை விட்டுக் கொடுக்க கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
ஆனால், ஞாயிற்றுக்கிழமை இரவு தருமபுரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அத்தொகுதியின் வேட்பாளர் அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய ராமதாஸ், கள்ளக்குறிச்சி தொகுதியில் ஆத்தூர் சண்முகம், புதுச்சேரியில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட அனந்தராமன் போட்டியிடுவார் என்றும் அறிவித்தார்.
அதுபோல, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட அருள் (சேலம்), எதிரொலி மணியன் (திருவண்ணாமலை) ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதன்மூலம், பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்துப் போட்டியிட பாமக முடிவு செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது.dinamani.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக