திங்கள், 17 மார்ச், 2014

12 தொகுதிகளில் போட்டி- பாமக அறிவிப்பு... பாஜக கூட்டணி உடைகிறது?


சென்னை: பாஜக கூட்டணியில் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 8 தொகுதிகள் குறித்து கடும் அதிருப்தி தெரிவித்துள்ள பாமக, ஏற்கனவே முன்பே அறிவித்த 10 தொகுதிகளுடன் கூடுதலாக 2 தொகுதிகளையும் சேர்த்து 12 தொகுதிகளிலும் கண்டிப்பாக போட்டியிடுவோம் என்று திட்டவட்டமாக அறிவித்து விட்டது. சிங்கங்கள் நரிகளிடம் பிச்சை கேட்காது, அதைச் சிங்கக் குட்டிகளான பாமகவினர் ஏற்க மாட்டார்கள் என்றும், அறிவித்த வேட்பாளர்கள் தங்களது தொகுதிகளில் பணிகளைத் தொடங்க வேண்டும், தொய்வின்றி நடத்த வேண்டும் என்றும் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். எல்லாம் நல்லபடியா முடிந்ததா, அக்கடா என்று சற்று இளைப்பாறலாம் என்று நினைத்திருந்த பாஜகவுக்கு இது பெரும் டென்ஷனைக் கொடுத்துள்ளது. பாமகவின் இந்த அதிரடிப் பேச்சால் கூட்டணி உடையும் சூழல் பிரகாசமாகியுள்ளது.
பலமான கூட்டணி என்று தங்களைத் தாங்களே பாஜக கூட்டணியினர் வர்ணித்துக் கொண்டாலும், இது பலவிதமான பலகாரங்கள் அடங்கிய நூதன கூட்டணியாகவே காணப்படுகிறது. தலைவர்களுக்குள் அப்படி ஒரு குழப்பமான ஒற்றுமை
ஆரம்பத்திலிருந்தே தொகுதிப் பங்கீட்டில் பெரும் சிக்கல் காணப்பட்டது. அவை அனைத்தையும் சமாளித்து கிட்டத்தட்ட உயிரைக் கொடுத்து கூட்டணியை உறுதி செய்தது பாஜக.
இதைத் தொடர்ந்து பாஜக ஒரு உத்தேசப் பட்டியலைத் தயாரித்தது. அதன்படி, தேமுதிகவுக்கு 14, பாஜக, பாமகவுக்குத் தலா 8, மதிமுக 7 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளன. இந்திய ஜனநாயக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, என்.ஆர். காங்கிரஸ் ஆகியவற்றுக்கு தலா ஒரு இடம் தரப்படுகிறதாம்
கூட்டணியில் வந்து வாலண்டியராக இணைந்த புதிய நீதிக் கட்சிக்கு எந்த சீட்டும் தரப்படவில்லை. இடப் பங்கீடு தொடர்பாக பேசிப் பேசி புண்பட்டுப் போன மனதில் மட்டுமே இடம் கொடுத்துள்ளது பாஜக.
தேமுதிகவினர் ஆரம்பத்திலிருந்தே படு விவரமாக இருந்து அடம் பிடித்து முரண்டு பிடித்துத் தங்களுக்குத் தேவையான தொகுதிகளைப் பெற்றுக் கொண்டு போய் விட்டார்கள்.
ஆனால் பாமகவுக்கு அவர்கள் கேட்ட முக்கிய தொகுதிகளை பாஜகவால் கொடுக்க முடியவில்லை. காரணம், அவற்றை தேமுதிக கொத்திக் கொண்டு போய் விட்டதால். இதனால் டாக்டர் ராமதாஸ் அதிர்ச்சி அடைந்தார்.
கூட்டணிப் பேச்செல்லாம் தொடங்குவதற்கு முன்பே பாமக, அரக்கோணம், கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, கடலூர், சிதம்பரம் தனி, விழுப்புரம், புதுச்சேரி, ஆரணி, மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக கூறி வே்பாளர்களையும் அறிவித்திருந்தது.
ஆனால் தற்போது பாஜக கூட்டணியில், பாமகவுக்கு அரக்கோணம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஆரணி, சிதம்பரம், மயிலாடுதுறை, ஸ்ரீபெரும்புதூர், கரூர் ஆகிய 8 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க பாஜக முன்வந்தது. இதற்குக் காரணம் தேமுதிகவின் கடும் நெருக்குதல்.
இதையடுத்து தங்களுக்கு சேலம், கடலூர், திருவண்ணாமலை ஆகிய தொகுதிகள் கண்டிப்பாக ஒதுக்க்பட வேண்டும். இதில் மறு பேச்சே கிடையாது என்று பாஜக தரப்பிடம் திட்டவட்டமாக தெரிவிக்குமாறு டாக்டர் ராமதாஸ் கூறி விட்டார். இதுதொடர்பாக கட்சித் தலைவர்களுடனும் நேற்று மாலை அவர் தர்மபுரியில் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் தனது நிலைப்பாட்டை அவர் மேலும் கடுமையாக்கினார்.
நேற்று தர்மபுரியில் நடந்த அன்புமணி ராமதாஸ் அறிமுகக் கூட்டத்தில் அவர் பேசுகையில் ஏற்கனவே அறிவித்த 10 தொகுதிகள் தவிர மேலும் கூடுதலாக 2 தொகுதிகளிலும் பாமக போட்டியிடும் என்று அதிரடியாக அறிவித்தார். இதனால் பாஜக அதிர்ச்சி அடைந்துள்ளது. பாமகவின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் அது கூட்டணியை விட்டு விலகும் என்று தெரிகிறது.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக