வெள்ளி, 14 மார்ச், 2014

சீனாவின் உகுர் தீவிரவாதிகள் விமானத்தை கடத்தினார்களா?

பீஜிங்: காணாமல் போன மலேசிய விமானத்தை சீனாவில் உள்ள உகுர் தீவிரவாதிகள் கடத்தி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங் நகருக்கு கடந்த சனிக்கிழமை மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் 239 பயணிகளுடன் சென்றது. வியட்நாம் வான்வெளியில் தென் சீன கடல் பிராந்தியத்தில் பறந்த போது அதன் தொடர்புகள் கட்டுப்பாட்டு அறையை விட்டும், ரேடார் இணைப்பை விட்டும் துண்டிக்கப்பட்டது. விமானம் மாயமாக 6 நாட்களாகியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
விமானத்தை தேடும் பணியில் 12க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த விமானங்கள், கப்பல்கள் ஈடுபட்டுள்ளன.


இந்நிலையில் அமெரிக்க விமான தயாரிப்பு நிபுணர்கள், காணாமல் போன இன்ஜின்களின் செயல்பாடுகளை ஆராய்ந்த போது, ரேடார் இணைப்பில் இருந்து துண்டிக்கப்பட்ட பிறகும் சுமார் 4 மணி நேரம் விமானம் பறந்திருக்கலாம் என்று தெரிவித்தனர். இதனால் விமானம் எங்காவது கடத்தி செல்லப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சீனாவின் தென்மேற்கு பகுதியில் ஹூனான் மாகாணத்தில் உகுர் முஸ்லிம் பழங்குடியினத்தவர்கள் வசிக்கின்றனர். இவர்களில் ஒரு பிரிவினர் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். சீனாவில் இருந்து பிரிந்து தனியாக செல்ல வேண்டும் என்று அவர்கள் வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் காணாமல் போன மலேசிய விமானத்தை உகுர் பழங்குடியின தீவிரவாதிகள் கடத்தி இருக்கலாம் என்ற சந்தேகம் சீன அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

ஏனெனில், விமானத்தில் பயணம் செய்த 239 பேரில் 160 பேர் சீனாவை சேர்ந்தவர்கள். அதனால் விமானத்தை கடத்தி இருக்கலாம் என்று கூறுகின்றனர். இதை சர்வதேச போலீஸ் (இன்டர்போல்) தலைவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.எனினும், சீனாவுக்கு எதிராக போராடும் உகுர் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் நிதியுதவியும், பயிற்சியும் அளித்து வருவதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 1ம் தேதி உகுர் தீவிரவாதிகள் சீனாவின் குன்மிங் ரயில் நிலையத்தில் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்து கண்ணில் படுபவர்களை எல்லாம் சரமாரியாக வெட்டி சாய்த்தனர். இதில் 29 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். 100க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். இதற்கிடையில் விமானம் இந்திய பெருங்கடல் பகுதியில் விழுந்திருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது.dinakaran.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக