புதன், 5 மார்ச், 2014

தி.மு.க., தொகுதி பங்கீட்டில் கும்மாங்குத்து ! தினமலரின் ஊகம் ?

தி.மு.க., உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில், சுமுக முடிவு எட்டப்படாததால், விடுதலை சிறுத்தைகள் கட்சி அதிருப்தி அடைந்துள்ளது. ஒரு தொகுதிக்கு, மூன்று கட்சிகள் போட்டி போடுவதால், தி.மு.க., கூட்டணிக்குள், 'கும்மாங்குத்து' துவங்கியுள்ளது. சிதம்பரத்தில் வெற்றி: தி.மு.க., கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் புதிய தமிழகம் என, நான்கு கட்சிகள் இடம் பெற்றுள்ளன. 2009ல், நடந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றிருந்த, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, சிதம்பரம், விழுப்புரம் என, தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில், சிதம்பரம் தொகுதியில், திருமாவளவன் வெற்றி பெற்றார். விழுப்புரத்தில், அக்கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் தோல்வி அடைந்தார். இந்நிலையில், சென்னை அறிவாலயத்தில், நேற்று நடந்த, தி.மு.க., கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் தலைமையிலான குழுவினரும், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தலைமை யிலான குழுவினரும் பங்கேற்றனர். பேச்சின் போது, சிதம்பரம், காஞ்சிபுரம், விழுப்புரம், மயிலாடுதுறை, கடலூர் என, ஐந்து தொகுதிகளில் போட்டியிட, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் விருப்பம் தெரிவித்தனர்.
அதை ஏற்க மறுத்த, தி.மு.க., தலைவர்கள், சிதம்பரம், காஞ்சிபுரம் என, இரு தொகுதிகளை மட்டும், ஒதுக்கீடு செய்வதாக தெரிவித்தனர். ஆனால், கடலூர் தொகுதியையும் தர வேண்டும் என, திருமாளவன் பிடிவாதமாக இருந்ததால், பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்படாமல், இழுபறி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து திருமாவளவன் கூறியதாவது:
தி.மு.க., கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் போட்டியிட விரும்பும் தொகுதிகள் பட்டியலை வழங்கி இருக்கிறோம். பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்தது. மீண்டும் இன்று பேச்சு வார்த்தை நடத்துகிறோம். நாங்கள், மூன்று தனித் தொகுதி, இரண்டு பொதுத் தொகுதிகளிலும் போட்டியிட விரும்புகிறோம். இவ்வாறு, திருமாளவன் கூறினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர், காதர் மொய்தீன் நடத்திய பேச்சுவார்த்தையில், மயிலாடுதுறை, வேலூர், மத்திய சென்னை, திருநெல்வேலி, திருச்சி ஆகிய, ஐந்து தொகுதிகளில், இரண்டு தொகுதிகளைத் தர வேண்டும் என, கேட்டுள்ளனர். ஆனால், ஒரு தொகுதி தான் தர முடியும் என, தி.மு.க., தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 'வேலூர் தொகுதியை தொடர்ந்து, முஸ்லிம் லீக்கிற்கு ஒதுக்கீடு செய்யப்படுவதால், அத்தொகுதி யில் தி.மு.க.,வை வளர்க்க விரும்புகிறோம். எனவே, இந்த முறை வேலூர் தொகுதியை தி.மு.க., எடுத்துக் கொள்வதால், ராமநாதபுரம் தருகிறோம்' என, தி.மு.க., தரப்பில் பேச்சு வார்த்தையில் பங்கேற்ற குழுவினர் தெரிவித்துள்ளனர். ஆனால், ராமநாதபுரத்தில் போட்டியிட, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மறுத்து, மயிலாடுதுறை தொகுதியை, ஒதுக்கீடு செய்யுங்கள் என, கூறியுள்ளனர். அதிருப்தி:
மயிலாடுதுறை தொகுதியை, மனிதநேய மக்கள் கட்சியும் கேட்பதால், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒதுக்கீடு செய்ய முடியாது. அதற்கு பதிலாக, திண்டுக்கல் தொகுதியை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒதுக்கீடு செய்ய, தி.மு.க., தரப்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினருக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அனேகமாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு திருநெல்வேலி தொகுதி ஒதுக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து காதர் மொய்தீன் கூறுகையில், '' எங்கள் கட்சிக்கு, இரண்டு தொகுதிகள் வேண்டும் என, கேட்டோம். ஒரு தொகுதி தருவதாக உறுதி அளித்தனர். அதில், மகிழ்ச்சி இல்லை என்றாலும் ஏற்றுக் கொண்டோம்,'' என்றார். மனிதநேய மக்கள் கட்சிக்கு மயிலாடுதுறை தொகுதியும், புதிய தமிழகத்திற்கு தென்காசி தொகுதி யும் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அக்கட்சிகளுடன் சுமுக பேச்சுவார்த்தை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. விடுதலை சிறுத்தைகளுடன் இன்று மீண்டும் பேச்சு வார்த்தை நடத்திய பின், முழுமையான தொகுதி பங்கீடு அறிவிப்பை, தி.மு.க., வெளியிடும் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமலர்.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக