புதன், 12 மார்ச், 2014

‘நிமிர்ந்து நில்’ கமர்ஷியல் களத்தில் குதிக்க நினைத்த சமுத்திரகனி

நடக்கிற அவலங்களைப் பார்த்துக் கோபம் கொண்ட ஒரு இளைஞன் கொதித்தெழ, அவனை ஒரு இரட்சகர் போல சித்தரிப்பதும், அவனைக் கொண்டாடுவதும், அவன் க்ளைமாக்சில் பேசும் பத்து நிமிட வசனத்தில் நாடே திருந்திவிட்டது போல ஒரு தோற்றத்தை உருவாக்குவது நம் சினிமா உலகில் கால காலமாக நடந்து வருவது தான். அதையே, கொஞ்சம் வித்தியாசமான பாணியில் கையாண்டு இருக்கிறார் இயக்குனர் சமுத்திரகனி. இதேல்லாம் நடக்குமா என்ற கேள்வியைவிட இப்படியெல்லாம் நடந்தால் நல்லா இருக்கும் என்று தான் சொல்லத்தோன்றுகிறது.
தன் 12ஆம் வகுப்பு வரை ஒரு ஆஸ்ரமப் பள்ளியில் படிக்கும் ஜெயம் ரவி, அதையே தன் உலகமாக நினைத்து வாழ்கிறார். கல்லூரிப் படிப்பிற்காக சென்னை வரும் ஜெயம் ரவிக்கு இந்த சமூகத்தில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் அதிர்ச்சியை கொடுக்கிறது. ஆஸ்ரமத்தில் தான் கற்றுக்கொண்ட எதுவுமே இந்த சமூகத்தில் வாழ்வதற்கு பயன்படவில்லை என்று தெரியவருகிறது. இருந்தாலும் நான் இப்படித்தான் வாழ்வேன் என்று அடம் பிடிக்கிறார் ஜெயம் ரவி. ஒவ்வொரு முறையும் ரூல்ஸ் பேசி போலிசில்  மாட்டிக்கொள்வதும், அவர் நண்பரான சூரி போலிசுக்கு தேவையான கட்டிங்கை கொடுத்து அவரை மீட்டுவருவதும் சகஜமாகிவிடுகிறது.


இப்படி அநியாயத்துக்கு நல்லவரா இருக்கிறவரை பார்த்தால் அந்த பொண்ணுக்கு காதல் வராம இருக்குமா, அமலாபால் ஜெயம் ரவியை காதலிப்பதாக சொல்லி அவரைச் சுற்றிச் சுற்றி வருகிறார். ஒரு கட்டத்தில் காதலும் வருகிறது. ட்ராஃபிக் கான்ஸ்டபிள், இன்ஸ்பெக்டர், ஜட்ஜ் என தன் நேர்மையை கலங்கப்படுத்திவர்களைப் பற்றி மேல் இடத்துக்கு புகார் கொடுக்கிறார் ஜெயம் ரவி. அவர்கள் மேல் நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும் ஒன்று சேர்கிறார்கள். விசாரணை என்ற பெயரில் ஜெயம் ரவியை அழைத்துச் சென்று அடித்துத் துவைத்து உயிருக்குப் போராடும் நிலையில் அவரைக் குப்பைத்தொடியில் வீசிவிட்டுப் போகிறார்கள்.

அப்போதும் உண்மையைத் தவிர வேறு எதையும் பேச மறுக்கிறார் ஜெயம் ரவி. மீண்டும் விசாரணைக்கு வரவேண்டும் என்று மருத்துவமனைக்கே வந்து மிரட்டல் விடுகிறது அதிகார வர்க்கம். போலிஸ் ஒருபக்கம் ஜெயம் ரவியை தேடிக்கொண்டிருக்க. ஒரு வழக்கறிஞரின் துணையுடனும், உண்மை தொலைக்காட்சியின் துணையுடனும் ஒரு அதிபயங்கர செயலில் ஈடுபடுகிறார் ஜெயம் ரவி.


அரசு சம்மந்தப்பட்ட எல்லா துறைகளிலும் ஒரு நேர்மையானவரை தேர்வு செய்கிறார். அவர்களின் துணையுடன், லஞ்சம் வாங்கும் அதிகாரிகளையும் அடையாளம் கண்டுகொள்கிறார். போலியாக இல்லாத ஒருவருக்கு அனைத்து ஆவணங்களையும் தயாரித்து, அதில் எல்லா அரசு அதிகாரிகளிடமிருந்து கையெழுத்தும் வாங்குகிறார். காசுக்காக நீட்டிய இடத்திலெல்லாம் கையெழுத்துப் போடுகிறார்கள் அதிகாரிகள். அதற்காக தன் வீட்டை விற்று லட்சக் கணக்கில் பணம் செலவழிக்கிறார் ஜெயம் ரவி. இல்லாத ஒருவர் மீது கற்பழிப்பு புகாருக்காக அவருக்கு நீதிமன்றத்தில் தண்டனையும் கிடைப்பது ஆச்சரியம்!

மொத்தம் 140க்கும் மேலானவர்கள் லஞ்சம் வாங்கியுள்ளார்கள் என ஆதாரத்துடன் உண்மை தொலைக்காட்சியில் பதிவு செய்கிறார் ஜெயம் ரவி. அத்தனைப் பேர் மீதும் வழக்கு பதிவாகிறது. மீண்டும் பாதிக்கப்பட்ட அதிகாரிகள் ஒன்று சேர்கிறார்கள். இல்லாத ஒருவனை இருக்கிறான் என்று சொல்லிவிட்டால் தப்பித்துவிடலாம் என முடிவு செய்கிறார்கள். ஆவணங்களில் இருக்கும் புகைப்படம் கிட்டத்தட்ட ஜெயம் ரவியைப் போலவே இருப்பதால், அவரைப்போலவே இன்னொருவரைத் தேடி அலைகிறார்கள். ஆந்திராவில் கிடைக்கிறார் ‘நரசிம்ம ரெட்டி’ என்ற பெயரில் இருக்கும் இன்னொரு ஜெயம் ரவி! 


ஆந்திராவில் இருக்கும் ஜெயம் ரவி சென்னை வந்ததும் என்ன ஆனது, ஜெயம் ரவியின் உழைப்பு வீணாகிவிடுமா? அல்லது வெற்றியடையுமா? நாட்டி ஊழல் ஒழிந்ததா இல்லையா என்பது க்ளைமாக்ஸ்! 

அரசு தரப்பிலிருந்து ஒரு ஊடகத்திற்கு என்னென்ன நெருக்கடிகள் வரும் என்பதை நியூஸ் சேனல் பார்க்கும் அதே பதட்டமான மனநிலையில், மிகவும் நியாயமான விதத்தில் சொன்ன சமுத்திரகனிக்கு ஒரு சல்யூட். நிகழ்ச்சியை நடத்த கூடாது என்று தடைவந்த நிலையிலும் ஓடும் வாகனத்திற்குள் ஜெயம் ரவியைப் பேட்டி எடுத்து நேரடி ஒளிப்பரப்பு செய்யும் காட்சியும், அதை போலிஸ் உயர் அதிகாரி சரத்குமார் அந்த வாகனத்திற்குள்ளே சென்று கேமரா மீது கைவைத்து பிரச்சனை செய்யும் காட்சியும் சபாஷ் போட வைக்கிறது!

முதல் பாதியில் நிமிர்ந்து நிற்கும் திரைக்கதை, இரண்டாவது பாதியில் குப்புறப் படுத்துக்கொள்கிறது. இரண்டு ஜெயம் ரவி என்பதால் காட்சிப் படுத்துவதில் இருந்த சிரமங்களை கவனித்த இயக்குனர் திரைக்கதையில் இருந்த சோர்வை கவனிக்க முடியாமல் போய்விட்டதோ என்னவோ. இருந்தாலும் ‘படு மோசம்’ என்று சொல்கிற அளவுக்கு இல்லாமல் பரவாயில்லை என சொல்ல வைக்கிறது இரண்டாவது பாதி. 

முதல் பாதியில் ஜெயம் ரவியின் முன்பு சூரியும் அமலாபாலும் சேர்ந்து நடத்தும் கலாட்டாக்களும் ரசிக்கவைக்கிறது. ஜெயம் ரவியின் திட்டம் தெரிந்ததும் விலக்கிக்கொள்கிறார் அமலாபால், ஆனால் அவர் கூட நின்று ஆதரவளிக்கிறார் சூரி. சமுத்திரகனி நண்பனை விட்டுக்கொடுப்பாரா... இன்னொரு பெண்ணோடு அழகில் ஒப்பிடும் போது ‘நம்ம சைடு கொஞ்சம் வீக்கு தான்...’ என்று அமலா பாலிடம் உண்மையை சொல்லும் சூரிக்கு கைத்தட்டல் எக்கச்சக்கம்!


ஜெயம் ரவியின் இரண்டாவது கதாபாத்திரமான நரசிம்ம ரெட்டி அதிக வசனங்கள் பேசாமல் பாடி லாங்குவேஜை மட்டும் நம்பி இருப்பது மைனஸ். சொல்லப் போனால் நரசிம்ம ரெட்டி கதையில் சேர்க்கப்பட்டவுடன் கதையின் எதார்த்தத் தன்மை தொலைந்துபோய் விட்டது. ஜெயம் ரவிக்கும், ஜெயம் ரவிக்கும் ஒரு சண்டைக்காட்சி வருகிறதே, அதில் சவால் இருந்ததே தவிர சுவாரஸ்யம் இல்லை! 

சரத்குமார், தம்பி ராமய்யா, சூரி, கோபிநாத் என முதல் பாதியில் வந்தவர்கள் எல்லோரும் தங்கள் நேர்மையான நடிப்பின் மூலம் மனதில் பதிகிறார்கள். ’காதல் நேர்கையில்’ மற்றும் ’நெகிழினியில்’ பாடல்களில் இசையால் நம்மை நெகிழ வைக்கிறார் ஜி.வி.பிரகாஷ் குமார். பின்னணி இசை மிரட்டல்!


நீதிமன்ற காட்சியில் இரண்டாவது ஜெயம் ரவி திடீரென நல்லவராக மாறுவது ஆச்சரியம். இதுவும் வழக்கமான கமர்ஷியல் சினிமா என்ற பட்டியலில் சேர்த்துவிடுகிறது க்ளைமாக்ஸ் காட்சி. அதுசரி, நீதிமன்ற வளாகத்தில் கலவரம் நடந்துகொண்டிருக்க போலிஸ் என்ன செய்துகொண்டிருந்தது?

தமிழக முதல்வர் பதவியேற்றதும் ஊழல் புகார் இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களை பணி நீக்கம் செய்வது நியாயமான விஷயம் என்றாலும், இந்தியாவின் பல மாநில முதல்வர்கள் மீதே புகார்கள் இருக்கிறதே... அவர்கள் மீது யார் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற கேள்விக்கும் ‘நிமிர்ந்து நில்’ பதில் சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். 
இந்தியன், முதல்வன், ரமணா, அந்நியன் என்ற பல படங்கள் நம் நினைவுக்கு வந்து போனாலும் ‘நிமிர்ந்து நில்’ தனித்தே நிற்கும் என்பதில் சந்தேகமில்லை. கமர்ஷியல் களத்தில் குதிக்க நினைத்த சமுத்திரகனி கொஞ்சம் சுதாரித்துக்கொண்டால் அவருக்கு மட்டுமல்ல, படம் பார்க்கிற நமக்கும் நல்லது தான்! 
cinema.nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக