வெள்ளி, 28 மார்ச், 2014

அமெரிக்க டாலரில் ஆம் ஆத்மி – நியாயப்படுத்தும் ஞாநி

ஞாநி
ஜெமினியில் விக்ரம் “ஓ” போடச் சொல்லி பாடுவதற்கு முன்பேயே தமிழக வாக்குச் சாவடிகளில் ‘ஓ’ போடப் சொல்லி காலம் எல்லாம் இசைத்தவர் பத்திரிகையாளர் ஞாநி சங்கரன். அவரது ‘கோரிக்கையை ஏற்று’ தேர்தல் ஆணையமும் “நோட்டா” பொத்தானை இந்த தேர்தலில் அறிமுகப்படுத்துகிறது. ஆனால் இன்று நோட்டாவுக்கு ஓ போடச் சொல்லும் நிலையில் ஞாநி இல்லை.

ஓ போடச் சொன்ன ஞாநியை மாற்றியது அமெரிக்க ஆத்மியின் ‘யானம்’ !
ஆம். அவர் தேர்தல் அரசியலில் போட்டியிடும் ஞானத்தை பெற்று விட்டார். ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பாகப் போட்டியிடப் போகிறார். இதைத் தொடர்ந்து அவரை ஆதரித்தும், விமர்சித்தும் சமூக வலைத்தளங்களில் பலர் எழுதி வருகின்றனர். அதில் முக்கியமானது, ஆம் ஆத்மி கட்சி மீதான விமரிசனங்களை ஞாநி எப்படி எதிர்க்கொள்கிறார் என்பது. இந்த எதிர்கொள்ளலிலிருந்தே அவரது ஆம் ஆத்மி ஞானத்தை உண்மையில் யானத்தை (24-ம் புலிகேசியின் ஞானம்) அறியலாம்.
“ஏதோ நம்மாலான தானம்” என்று கோவில் படிக்கட்டு பிச்சைக்காரர்களுக்கு தர்மமளிக்கும் ‘வள்ளல்கள்’ போல “ஏதோ நம்மாலான தொண்டு அரசியல்” என்று மட்டும் ஞாநியின் ஆம் ஆத்மி ஞானத்தை குறைத்து மதிப்பிட முடியாது. அதே சமயம் தமிழகத்தில் ஞாநியோ இல்லை ஒட்டுமொத்த ஆம்ஆத்மியையோ கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து ஆய்வு செய்யுமளவு அவர்கள் எதையும் சாதிக்கப் போவதில்லை. ஆனால் சாதிக்காத போதே இவர்களது சந்தர்ப்பவாதம் எப்படி விசுவரூபமெடுக்கிறது என்பதை முக்கியத்துவம் கொடுத்துத்தான் பார்க்க வேண்டும்.

ஒருவகையில் நடுத்தரவர்க்கத்தை தலைமை தாங்கும் கருத்துக்களாக இவை இருப்பதால் நமது அன்பிற்குரிய நடுத்தர வர்க்கத்தை அந்த போதையில் இருந்து மீட்பது அவசியம்.
ஆம் ஆத்மி கட்சி, தனது தேர்தல் செலவுக்கான நிதி சேகரிக்கும் வழிகளில் ஒன்றாக அரவிந்த் கேஜ்ரிவாலுடன் விருந்து சாப்பிட கட்டணம் வசூலிக்கிறது. ‘டின்னர் வித் கேஜ்ரிவால்’ என்று இதை விளம்பரப்படுத்தி ஒரு நபருக்கு 20 ஆயிரம் முதல் சில லட்சங்கள் வரை வசூலிக்கிறார்கள். மேற்குலக நாடுகளில் மிகவும் பிரபலமான, இந்த பணக்காரர்களிடம் நிதி திரட்டும் முறையை இந்தியாவுக்குள் இறக்குமதி செய்திருக்கிறது ஆம் ஆத்மி. இதிலிருந்தே இந்த கட்சியின் இயக்கம் பாமரர்களை சார்ந்து அல்ல, மேட்டுக்குடியை சார்ந்தது என புரிந்து கொள்ளலாம். தேர்தலை பண வசூலும், அந்த வசூலை இது போன்ற மேட்டுக்குடியிடம் திரட்டுவதுமே தீர்மானிக்குமென்றால், இந்தக் கட்சி காங்கிரஸ், பாஜகவின் புதுப் பங்காளி என்று காட்டி விடுகிறது.
இது தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு நடந்த இணைய விவாதம் ஒன்றில் ஞாநியும் பங்கேற்றார். அப்போது அவரிடம், அர்விந்த் கேஜ்ரிவாலின் என்.ஜி.ஓ. அல்லது அரசு சாரா நிறுவனத் தொடர்புகள் குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு ஞாநி என்ன பதில் அளித்தார் என்பதை தெரிந்துகொள்ளும் முன்பு கேஜ்ரிவாலின் அரசு சாரா நிறுவன தொடர்பு குறித்து பார்த்து விடுவோம்.
கேஜ்ரிவால் நடத்தும் தொண்டு நிறுவனங்களில் ஒன்று, Public Cause Research Foundation. சுருக்கமாக பி.சி.ஆர்.எஃப். 2006-ம் ஆண்டு தனக்கு வழங்கப்பட்ட மகசேசே விருதுடன் கொடுக்கப்பட்ட பணப்பரிசை முதலீடாகக் கொண்டு இந்த தொண்டு நிறுவனத்தை துவங்கினார் கேஜ்ரிவால். இவருடன் பத்திரிகையாளர் மனிஷ் சிசோதியா, அபிநந்தன் சேக்ரி ஆகியோரும் இணைந்திருந்தனர். அண்ணா ஹசாரேவின் செட்டப் எழுச்சிக்குப் பிறகு நாடு முழுவதும் படித்த மேல்தட்டுப் பிரிவினர் மட்டுமல்ல சாதாரண மக்களும் ஊழலே இந்தியாவின் தலையாய பிரச்சினையாக சீற்றம் கொள்கின்றனர். அதற்கு தோதாக மாபெரும் ஊழல்கள் இந்தியாவில் அணிவகுக்க ஆரம்பித்தன.
அரவிந்த் கேஜ்ரிவால்
தேர்தல் மேளா கங்கையில் குளித்து காவி கெட்டப்பில் கேஜ்ரிவால். கும்பமேளா கங்கையில் குளித்த ஜெயமோகனது இந்துஞானமரபு அமெரிக்க ஆத்மியை ஆதரிப்பதில் வியப்பென்ன?
ஹசாரேவுடன் கேஜ்ரிவாலும் இணைந்து கொள்கிறார். அப்போது இவர்கள் எல்லோரும் இணைந்து ஊழலுக்கு எதிரான இந்தியா (India Against Corruption -IAC) என்ற அமைப்பைத் தொடங்குகின்றனர். பிறகு கேஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சித் துவங்கி அரசியல் அதிகாரத்தில் மேலே வந்த பிறகு அண்ணா ஹசாரே உறவு முடிந்தது. இவர்களுக்கிடையே இருந்த கோஷ்டி மோதல் முதலில் மறைவாகவும் விரைவிலேயே பகிரங்கமாகவும் வெளிவரத் துவங்கியது. அச்சமயத்தில் ஹசாரேவும், சுவாமி அக்னிவேஷ் போன்றோரும் கேஜ்ரிவால் மீது ஒரு குற்றச்சாட்டைக் கூறினார்கள்.
‘‘ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பின் நிதி சுமார் 70 லட்சம் ரூபாயை, அர்விந்த் கேஜ்ரிவால், தன் சொந்த தொண்டு நிறுவனத்திற்கு திருப்பி விட்டுள்ளார். இந்தப் பணம் ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்புக்காக நன்கொடையாகப் பெறப்பட்ட தொகை. அதை இப்படி திருப்பிவிட்டது முறைகேடானது’’ என்றார்கள். இதற்கு பதில் அளித்த கேஜ்ரிவால் குற்றச்சாட்டு பொய் என்றோ, பணத்தை திருப்பி விடவில்லை என்றோ கூறவில்லை மாறாக, ‘‘ஊழலுக்கு எதிரான இந்தியா என்பது ஓர் இயக்கமாக இருந்ததே ஒழிய, நிறுவனமாக இருக்கவில்லை. பி.சி.ஆர்.எஃப். (அவரது தொண்டு நிறுவனம்) என்பது ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பின் தலைமை அலுவலகம் போல செயல்பட்டது’’ என்று சொன்னார்.
அதாவது ஊழலுக்கு எதிரான இந்தியாவின் இயக்க செயல்பாடு மற்றும் நிதி செயல்பாடு உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் அவரது தொண்டு நிறுவனம் இயக்கியிருக்கிறது. இந்த பணத்தை தமது சொந்த நிறுவனத்தின் செலவிற்காக பயன்படுத்தவில்லை என்பதைத் தவிர கேஜ்ரிவால் வேறு எதையும் மறுக்கவில்லை. இதெல்லாம் தெரிந்துதான் அன்று ஆர்.எஸ்.எஸ் கூட்டம் அண்ணாவை ஆதரித்தது. எனில் அந்த தொண்டு நிறுவனம் இதை இலவச சேவையாக செய்ததா, அதன் நோக்கம் என்ன? அதன் நிதி வள மூலம் என்ன?
அடுத்தது, கேஜ்ரிவால் கபீர் (Kabir) என்ற மற்றொரு தொண்டு நிறுவனத்தையும் வைத்துள்ளார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மையப்படுத்தி இயங்கும் இந்த நிறுவனம், அமெரிக்காவைச் சேர்ந்த ஃபோர்டு பவுன்டேஷனிடம் இருந்து இரண்டு முறை நிதிபெற்றுள்ளது. ‘‘2005-ம் ஆண்டு 1,72,000 டாலர் நிதியும், 2008-ம் ஆண்டு 1,97,000 டாலர் நிதியும் ‘காபிர்’ நிறுவனத்திற்க்கு அளிக்கப்பட்டுள்ளது’’ என்கிறார் ஃபோர்டு பவுன்டேஷன் இந்தியா பிரதிநிதி ஸ்டீவன் சோல்நிக். இதை கேஜ்ரிவாலும் ஒப்புக்கொண்டுள்ளார். ‘‘நாங்கள் நிதி பெற்றது உண்மைதான். ஆனால் அவை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்தப்பட்டு விட்டன. பழையனவற்றை இப்போது கிளறுவது அண்ணா ஹசாரே அணியினரின் வேலை’’ என்கிறார் அவர்.
ஸ்டீவன் சோல்னிக்
கேஜ்ரிவாலுக்கு படியளந்த அமெரிக்க பகவானின் இந்திய பிரதிநிதி : ஸ்டீவன் சோல்னிக்
ஆனால் இது குறித்து அண்ணா ஹசாரே மட்டுமின்றி பிற ஜனநாயக சக்திகளும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.  ‘‘ஃபோர்டு பவுன்டேஷனிடம் இருந்து சுமார் 4 லட்சம் டாலர் அளவுக்கு கேஜ்ரிவாலின் தொண்டு நிறுவனம் நிதியுதவி பெற்றுள்ளது’’ என்று தனது கட்டுரை ஒன்றில் அருந்ததி ராய் குறிப்பிட்டார்.
மாசுமருவற்ற மகானாக கேஜ்ரிவால் சித்தரிக்கப்பட்ட சமயத்தில், அமெரிக்க ஏகாதிபத்திய நலனுக்காக உருவாக்கப்பட்ட ‘இன்டெலக்சுவல்’ மற்றும் தொண்டு நிறுவன கையாளான ஃபோர்டு பவுன்டேஷனிடம் இருந்து நிதிபெற்ற விஷயம் திரும்பத் திரும்ப அவரைச் சுற்றி வரத் தொடங்கியது. கடுப்பான கேஜ்ரிவால், ‘‘இந்தக் கேள்வி தொடர்ந்து என்னிடம் எழுப்பப்படுகிறது. ஃபோர்டு பவுன்டேஷன் தவறானது என்றால், முதலில் அதைத் தடை செய்யுங்கள். இந்திய சட்டப்படி அனுமதிக்கப்பட்டுள்ள ஒரு அமைப்பிடம் இருந்து நிதிபெறுவதில் என்ன தவறு?’’ என்று கேட்டார். உண்மையில் இது நெத்தியடி கேள்விதான்.
ஏனெனில் இன்றைக்கு ஆம் ஆத்மியை தொண்டு நிறுவனங்களின் சதி என்று பிலாக்கணம் வைக்கும் பாஜக வீரர்கள் எவரும் தமது வீராதி வீரனான மோடியை வைத்து ஃபோர்டு பவுண்டேஷன் உள்ளிட்ட அன்னிய சேவை நிதி நிறுவனங்கள் தடை செய்யப்படும் என்று பேசவைக்க முடியுமா? காங்கிரசும், பாஜகவும் அமெரிக்காவின் அணுசக்தி ஒப்பந்தத்தையே பாராளுமன்றத்திற்கு தெரியாமல் நிறைவேற்றி அழகு பார்த்தவர்கள், பவுண்டேஷனுக்கு மட்டும் சவுண்டு விட முடியுமா? அதனாலேயே கேஜ்ரிவாலின் சவால் அப்படியே இருக்கிறது. ஆனால் பாஜக போன்ற மதவெறியர்கள் மற்றும் அமெரிக்க அடிமைகள் வேண்டுமானால் இதை கேட்பதற்கு அருகதை இல்லாதவர்களாக இருக்கலாம். நாம் கேட்போம்.
மகசேசே விருது கமிட்டிக்கும், ஃபோர்டு பவுன்டேஷனுக்கும் உள்ள தொடர்புகள் குறித்துக் கேட்கப்பட்டதற்கு அதைப்பற்றி தனக்குத் தெரியாது என்று சொன்னார் கேஜ்ரிவால். இந்தியாவில் எப்படி கிராம சுயராஜ்ஜியம் கொண்டு வரவேண்டும் என்று ஆய்வு செய்தவருக்கு இந்த உலகறிந்த விசயம் கூடத் தெரியாதாம். சந்தர்ப்பவாதத்திற்காக அறியாமை அடித்து பிடித்து தேடி வருகிறது.
இந்தப் பின்னணியில் நாம் ஞாநியிடம் திரும்ப வருவோம். அவரிடம், ‘இப்படி உங்கள் கட்சித் தலைவர் ஃபோர்டு பவுன்டேஷனிடம் நிதிபெற்றிருக்கிறாரே?’ என்று கேட்கப்பட்டதற்கு ‘‘கேஜ்ரிவால், தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நிதிபெறுவதை நிறுத்தி விட்டதாக தெளிவாக சொல்லிவிட்டார். மேலும் ஃபோர்டு பவுன்டேஷன் நாடு முழுக்க பல கலை அமைப்புகளுக்கு நிதி உதவி செய்தது; செய்தும் வருகிறது. ‘கூத்துப்பட்டறை’ கூட ஃபோர்டு பவுன்டேஷனிடம் இருந்து நிதிபெற்றுள்ளது. (என்னுடைய ‘பரீக்‌சா’ நாடகக் குழுவுக்கு ஃபோர்டு பவுன்டேஷனிடம் நிதியுதவி பெறும் சாத்தியம் இருந்தும் நாங்கள் மறுத்துவிட்டோம்). தமிழ்நாட்டு நாட்டுப்புற கலைகள் தொடர்பான செயல்பாடுகளில் ஃபோர்டு பவுன்டேஷனின் நிதியுதவி குறிப்பிடத்தகுந்தது’’ என்று ஞாநி சொல்கிறார்.
தலித் ஆதார மையம்
மதுரை அரசரடி இறையியல் மையத்தில் இருக்கும் தலித் ஆதார மையம். தமிழகத்தில் தோற்றுவிக்கப்படும் தன்னார்வக் குழுக்களின் மெக்கா.
அவரது இந்த எட்டு வரி விளக்கமே எண்ணிலடங்கா கேள்விகளையும், விமரிசனங்களையும் கேட்க வைக்கின்றன. முதலில் கேஜ்ரிவால் ‘முன்னாடி வாங்கினேன். இப்போது வாங்கவில்லை’ என்றுதான் சொல்கிறார். ‘அப்போது வாங்கியது தவறு’ என்று சொல்லவில்லை. மேலும் இந்திய அரசு அங்கீகரித்த நிறுவனத்திடமிருந்து காசு வாங்குவதில் என்ன தவறு என்று ஏற்கனவே கேட்டிருக்கிறார். அப்படி தவறு என்றால் தடை செய்யுங்கள் என்றும் சவால் விட்டிருக்கிறார். அதாவது, ‘குடுக்குறான், வாங்குறேன். தப்புன்னா முதலில் அவனை நிறுத்தச் சொல்லு, நான் நிறுத்தரேன்’ என்று மணிரத்தினத்தின் குரலில் சொல்கிறார்.
இந்நிலையில், ‘அது போன மாசம்’ என்று கைப்புள்ள கணக்காக கேஜ்ரிவாலும், அவரை அடியொற்றி ஞாநியும் கூறும் விளக்கம் எந்த வகையிலும் ஏற்கத் தக்கது இல்லை. அவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கினால் என்ன, 20 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கினால் என்ன… ஒரு குற்றத்தின் தன்மை அது செய்யப்பட்டு எவ்வளவு காலம் ஆகிறது என்பதில் இருந்து தீர்மானிக்கப்படுவது இல்லை. அதன் தன்மையில் இருந்துதான் அதை முடிவு செய்ய வேண்டும். அந்த வகையில் ஃபோர்டு பவுன்டேஷன் என்ற அமெரிக்காவுடன் பின்னிப்பிணைந்த ஒரு அமைப்பிடம், அமெரிக்க மேலாதிக்கத்தை உலகம் முழுவதும் கொண்டு வர கலை, சேவை, இலக்கிய, அறிவுஜீவித் துறைகளில் செயல்படும் ஒரு சதிகார நிறுவனத்திடம் நிதி பெற்றது சரியா, தவறா என்பதுதான் இங்கு பேச வேண்டிய விஷயம். அதற்கு ஒரு பதிலை கூறாமல் கடந்து செல்வது ஞாநியின் அயோக்கியதனம்.
ஒரு குற்றவாளி குற்றத்தை ஒப்புக்கொள்வதன் நோக்கம் செய்த தவறுக்கு மனம் வருந்துவதும், எதிர்காலத்தில் அத்தகைய தவறுகளை செய்யாமல் இருப்பதும்தான். இத்தகைய குறைந்தபட்ச நாணயம் கூட இல்லாத ஆம் ஆத்மி கும்பல்தான் முழு இந்தியாவிற்கும் நேர்மைன்னா என்னவென்று சொல்லித் தரப்போகிறதாம். இதை நம்புங்கள் என்று நம்மையும் சித்திரவதை செய்கிறார் ஞாநி.
இங்கு கேஜ்ரிவாலிடம் ஃபோர்டு பவுன்டேசனிடம் நிதி பெற்றது குறித்த வருத்தம் இல்லை என்பதோடு பெருமையும் இருக்கிறது. எதிர்காலத்தில் வாங்கமாட்டோம் என்றும் உத்தரவாதம் ஏதும் இல்லை. சொல்லப்போனால் 2014-ம் ஆண்டும் அவரது ‘காபிர்’ தொண்டு நிறுவனம், ஃபோர்டு பவுன்டேஷனிடம் நிதியுதவி கோரியிருக்கிறது. ‘‘2014-ம் ஆண்டுக்கு நிதியுதவி கோரி கேஜ்ரிவாலின் ‘காபிர்’ என்.ஜி.ஓ. விண்ணப்பித்துள்ளது. நாங்களும் நிதி தர இசைந்துள்ளோம்’’ என்கிறார் ஃபோர்டு பவுன்டேஷன் இந்தியப் பிரிவின் பிரதிநிதி ஸ்டீவன் சோல்நிக். ஆக இப்போது வரை கேஜ்ரிவால் நிதி பெறுவதில் முனைப்போடு இருக்கிறார் என்பது உறுதியாகிறது. எனில் ஞாநியின் விளக்கத்தில் அறிவு நாணயம் ஏதும் இருக்கிறதா?
கூத்துப்பட்டறையின் நா. முத்துசாமி
ஃபோர்டு பவுண்டேசனிடம் கூத்துப்பட்டறையை விற்ற நா. முத்துசாமி
ஞாநி தனது முகநூல் விவாதத்தில், ஃபோர்டு பவுன்டேஷனிடம் இருந்து கூத்துப்பட்டறை நிதிபெற்றது என்பதை சொல்கிறார். இது உலகறிந்த விசயம்தான். ஆனால் ஞாநியின் கோணத்தில் இந்த நிதி பெறுவதில் தவறில்லை என்றால், ஏன் அவர் தனது ‘பரீக்சா’வுக்கு வாங்க மறுக்க வேண்டும்? நீங்களும் நிதி வாங்க வேண்டியதுதானே.. நிதியை மறுத்ததை இப்போது பெருமையாக அறிவித்துக்கொள்கிறார் என்றால் நிதிபெற்றதை அவர் சிறுமையாக கருதுகிறாரா? எனில் அந்த சிறுமையை இப்போது வரை செய்து கொண்டிருப்பவரை எப்படி அவர் தலைவராக ஏற்றுக்கொள்கிறார்?
கூத்துப்பட்டறை ஆரம்பத்தில் நாடகம் குறித்து அறிந்து கொண்டு வளர விரும்பிய எளிய அமைப்பாகத்தான் இருந்தது. பின்னர் நா.முத்துச்சாமி அதைக் கைப்பற்றி ஃபோர்டு பவுண்டேசனிடம் விற்று விட்டார். கூத்துப் பட்டறை மட்டுமல்ல, பல்வேறு இலக்கியவாதிகள், அறிவுஜீவிகள் ஃபோர்டு பவுண்டேசன் நிதிபெறுவதை 80-களின் ஆரம்பத்திலேயே மகஇக மட்டுமே அம்பலப்படுத்தி போராடியிருக்கிறது. அதன் பிறகு தொடர்ச்சியாக தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை அம்பலப்படுத்தியும் வருகிறது. அப்போதே ஞாநி இத்தகைய நிலைப்பாட்டினை எடுக்கவில்லை. மேலும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களது நிகழ்ச்சிகளுக்கு செல்வது, பேசுவது, அவர்களுக்கு தேவையான ஆவணப்படங்கள் எடுத்துக் கொடுப்பது போன்றவற்றை செய்திருக்கிறார். இன்றைக்கும் பல எழுத்தாளர்கள், கவிஞர்கள், பெண்ணியவாதிகள் இதைத்தான் செய்கிறார்கள். அதைப்பட்டியலிட்டால் எவரும் மிஞ்சமாட்டார்கள் என்றே நம்புகிறோம்.
பத்திரிகையாளராக தனது பணியை நடத்திக் கொண்டு பகுதி நேரமாக பரிக்ஷா போன்ற நாடக முயற்சிகளை செய்ததால் அவருக்கு தொழில் முறையில் இயங்கும் கூத்துப்பட்டறைக்கு அவசியமாக இருந்த நிதி தேவைப்படவில்லை. மற்றபடி அவர் கொள்கை காரணமாக ஃபோர்டு பவுண்டேசனிடமிருந்து பணம் வாங்கவில்லை என்பதை இங்கே ஓங்கிச் சொல்கிறோம்.
மல்லிகா சாராபாய்
ஆம் ஆத்மியின் மல்லிகா சாராபாய் : அமெரிக்க டாலர் வாங்கிக் கொண்டு இந்திய நடனம் ஆடுவதில் வல்லவர்..
ஆகவே ஆம் ஆத்மியின் தன்னார்வத் தொண்டு நிறுவனத் தொடர்பு குறித்து நமக்கு ஏற்படும் கோபமும், விமரிசனமும் ஞாநிக்கு ஏற்படாது. மாறாக அவரது போன மாசம், இந்த மாசம் உளறலுக்கு காரணம் பொதுவில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மக்களிடையே அம்பலப்பட்டு போயிருப்பதுதான்.
கேஜ்ரிவாலும், ஞாநியும் மட்டுமே இந்த வளையத்திற்குள் இல்லை. ஆம் ஆத்மி என்ற கட்சியே என்.ஜி.ஓ.க்களின் கூடாரமாக இருக்கிறது. குறிப்பாக ஃபோர்டு பவுன்டேசனிடம் நிதிபெறுபவர்கள் அனைவரும் ஆம் ஆத்மி என்ற சரடின் கீழ் ஒன்றிணைந்துள்ளனர். இந்தக் கட்சியின் பொருளாதார கொள்கைகளுக்கான தேசிய குழு உறுப்பினராக மீரா சன்யால் என்பவர் இருக்கிறார். ‘ராயல் பேங்க் ஆஃப் ஸ்காட்லாந்து’ வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த இவர் இதற்கு முன்பாக 2009-ம் ஆண்டு மும்பை தெற்கு தொகுதியில் சுயேட்சையாக தேர்தலில் போட்டியிட்டார். இப்போது இவர்தான் ஆம் ஆத்மியின் மும்பை தெற்குத் தொகுதி வேட்பாளர். இவரது ‘பிரதான்’ தொண்டு நிறுவனத்திற்க்கு ஃபோர்டு பவுண்டேசன் பெருமளவு நிதி அளிக்கிறது.
மல்லிகா சாராபாய் என்கிற பிரபல நாட்டியக் கலைஞரும் ஆம் ஆத்மியில் ஐக்கியமாகியுள்ளார். இவரது ‘தர்பனா’ (Darpana)  என்ற தொண்டு நிறுவனமும் ஃபோர்டு பவுண்டேசனிடம் நிதி பெறுகிறது. தேர்தல் கணிப்பாளராக புகழ்பெற்றிருந்த யோகேந்திர யாதவ் இப்போது ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஐ.சி.எஸ்.எஸ்.ஆர். அமைப்பிடம் இருந்து நிதிபெறுகிறார். இந்த அமைப்புக்கு நிதி உதவி செய்வது ஃபோர்டு பவுன்டேசன்.
கவிதா ராமதாஸ்
கப்பற்படை தளபதி ராமதாஸின் மகள் கவிதா ஃபோர்டு பவுண்டேசனின் இந்தியத் தலைவர். இந்திய ராணுவமே சி.ஐ.ஏ கையில் இருக்கும் போது ஆம் ஆத்மி இருப்பதில் வியப்பென்ன?
இப்போது கேஜ்ரிவாலுக்கு நெருக்கமான ஆலோசகராக இருப்பவர், இந்திய கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ராம்தாஸ் (இவரும் மகசேசே விருது பெற்றவர்). இவரது மகள் கவிதாதான் டெல்லியில் உள்ள ஃபோர்டு பவுன்டேஷன் அலுவலகத்தின் தலைமை செயல் அதிகாரி. இந்தியா, நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளுக்கு ஃபோர்டு பவுன்டேசன் வழங்கும் நிதியை அனுமதிப்பதும், ஒழுங்குப்படுத்துவதும் இவர்தான். அது மட்டுமின்றி மகசேசே விருதை வழங்கும் ‘ராக்பெல்லர் பவுன்டேசனின்’ நிதியளிக்கும் அமைப்பான ‘ராக்பெல்லர் பிரதர்ஸ் ஃபண்ட்’டின் தலைமை உறுப்பினராகவும் உள்ளார். இந்த கவிதாவின் கணவரும் லேசுபட்டவர் இல்லை… பாகிஸ்தானைச் சேர்ந்த சுல்பிகர் அஹமத் என்ற அவர், ‘பெர்க்லீஸ் நாட்டிலஸ் இன்ஸ்டிடியூட்’ என்ற அமைப்பின் தெற்காசிய பகுதி பொறுப்பாளர். தெற்காசியப் பகுதிகளின் அணு உலைகளில் ரஷ்யா மற்றும் சீனாவின் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்துவதும், அமெரிக்க சார்பை உறுதிபடுத்துவதும்தான் இந்த அமைப்பின் முக்கியமான பணி.
இப்படி ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ள பலர் நேரடியாகவும், மறைமுகமாகவும் என்.ஜி.ஓ.க்களாகவே உள்ளனர் என்று நாகரீகமாக சொல்லலாம். சரியாகச் சொல்வதாக இருந்தால் அமெரிக்க கைக்கூலிகள். கேஜ்ரிவாலே, ‘பரிவர்த்தன்’ என்ற மற்றொரு தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அருணா ராய், கோபால் ராய், மேதா பட்கர் என ஆம் ஆத்மியில் உள்ள மற்றவர்களும் நேரடியான என்.ஜி.ஓ. தொடர்பிலும் அந்த பாணி அரசியலும் உள்ளவர்களே.
ஆம் ஆத்மி கட்சியின் தமிழ்நாட்டு ஒருங்கிணைப்பாளராக இருக்கும் கிறிஸ்டினா சாமி, கரூரைச் சேர்ந்தவர். இவரும் இவரது கணவர் ஆரோக்கியசாமி என்பவரும் சேர்ந்து கரூரில் அரெட்ஸ் (AREDS -Association of Rural Education and Development Services), ஸ்வாதி (SWATE – Society for Women in Action for Total Empowerment) ஆகிய இரண்டு தொண்டு நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். இந்த இரண்டுக்கும் கடந்த காலங்களில் உலகின் பல நிதி உதவியளிக்கும் நிறுவனங்களிடம் இருந்து நிதி வந்துள்ளது. முக்கியமாக Catholic Committee against Hunger and for Development (CCFD-France)  World Solidarity, an organisation of Christian Workers Movement in Belgium (WSM) ஆகிய இரண்டும் கிறிஸ்டினா சாமியின் முக்கியமான நிதி மூலங்கள். கிறிஸ்டினாவுக்கு கிறிஸ்துகள் காசு கொடுக்கிறார்கள்.
கிறிஸ்டினா சாமி
ஆம் ஆத்மியின் தமிழகத் தலைவர் கிறிஸ்டினாவுக்கு படியளப்பது ஏகாதிபத்தியங்களின் அறக்கட்டளைகள். பதிலுக்கு கிறிஸ்டினா தாலியறுப்பது எதை?
இதைப் பற்றி எல்லாம் ‘ஜெயமோகனின் ஆசிபெற்ற வேட்பாளரான’ ஞாநி தவறாக கருத மாட்டார். ஜெயமோகனுக்கும் அப்படியே. ஆனால் ஒரு சிறிய வேறுபாடு உண்டு. ஞாநி ஒரு பத்திரிகையாளர் என்பதால் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிடம் காசு வாங்குவதெல்லாம் தவறல்ல என்று எளிமையாக சொல்கிறார். ஜெயமோகனோ மெகா சைஸ் புக் போடும் எழுத்தாளர் என்பதால் அதை சுற்றி வளைத்து சொல்லும் இழுப்பு தேவையாக இருக்கிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஃபோர்டு பவுண்டேசன் தொடர்பாக எம்.டி.முத்துகுமாரசாமிக்கும், ஜெயமோகனுக்கும் நடந்த இணைய விவாதம் ஒன்றில் ‘‘இத்தகைய நிதிகள் எப்போதுமே முதல்பார்வைக்கு ‘சரியான’ பண்பாட்டு நடவடிக்கைகளுக்கு நேர்மையான தோற்றமுள்ள பண்பாட்டு அமைப்புகள் வழியாகவே அளிக்கப்படுகின்றன. அவற்றின் உள்நிபந்தனைகள் பெறுபவர்களுக்கும் தெரியும்… நிதிபெற்றவர்களெல்லாம் அயோக்கியர்கள் என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் நிதி பெற்றவர்களின் கருத்துக்களையும் செயல்பாடுகளையும் அந்த நிதியையும் கணக்கில் கொண்டே யோசிக்கவேண்டும் என்கிறேன். அந்த நிதியும் நம் பண்பாட்டுச் சூழலில் பேசப்பட்டாக வேண்டும் என்கிறேன்’’ என்று கூறியிருந்தார் ஜெயமோகன்.
அதாவது ஃபோர்டு பவுண்டேசனது நிதியை வாங்கிக் கொண்டு ஜெயமோகனுக்கு ஆதரவான கருத்துக்களை கூறினால் பகவான் மன்னிப்பார். எதிரான கருத்துக்களை கூறினால் பகவான் கொஞ்சம் பதட்டப்படுவார்.
ஜெயமோகன்
ஃபோர்டு பவுண்டேசனிடம் காசு வாங்குபவர்கள் கருத்தளவில் ஜெயமோகனை எதிர்க்காமல் இருந்தால் அன்னாரது அருள் நிச்சயம் கிடைக்கும்.
ஜெயமோகனுக்கு இன்னும் அமெரிக்க என்ஜிஓக்களின் அருள் நமக்குத் தெரிந்து கிடைக்க வில்லை என்றாலும் அவரது ஆஸ்திரேலிய, மலேசிய, பயணங்களின் யோக்கியதை குறித்து வினவில் ஏற்கனவே எழுதியிருக்கிறோம். இவையெல்லாம் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பாவக்கணக்கில்தான் வரும். பகல்கொள்ளைக்காரர் பச்சமுத்து, திமுக அமைச்சர் தம்பி எஸ்கேபி கருணா, இந்துதேசியத்தின் ஆகாசவாணி மணிரத்தினம்- கமல்ஹாசன், பொள்ளாச்சி மகாலிங்கம் ஆகியோருக்கு மட்டுமல்ல, மூப்பனாருக்கும் காவடி தூக்கியவர்தான் ஜெயமோகன். என்ஜிவோக்களில் கூட உள்நாடு வெளிநாடு, இந்துஞான மரபு, மேலைத்தேய கிறித்தவம் என்று பாகுபாடு பார்க்கிறார் ஜெயமோகன். அவ்வளவுதான் அவரது வேறுபாடு.
மேலும் ‘அஞ்ஞாடி’ நாவல் எழுத எழுத்தாளர் பூமணி, ஃபோர்டு பவுன்டேசனிடம் நிதி பெற்றிருப்பது தனக்கு ஏமாற்றமாக இருப்பதாகவும் ஜெயமோகன் சொல்லியிருக்கிறார். கவனியுங்கள், கண்டிக்கவில்லை, ஏமாற்றம்தான். ஜெயமோகனுக்கு பிடித்தவர்கள் பவுண்டேசனிடம் நிதி பெற்றால் ஏமாற்றம், பிடிக்காதவர்கள் வாங்கினால் அவர்களை மட்டும் எதிர்த்து விட்டு பவுண்டேசனிடம் நிதி வாங்கி வேலை செய்வது தவறில்லை என்று சமாளிப்பது – இதுதான் இவரது அறம்.
ஜெயமோகனோடு நடந்த விவாதத்தில் ஃபோர்டு பவுன்டேசனிடம் நிதிபெறுவதில் தமிழ்நாட்டில் முன்னோடியான எம்.டி.முத்துகுமாரசாமி, ‘‘என்.சி.இ.ஆர்.டி., நேஷனல் புக் ட்ரஸ்ட் போன்ற நிறுவனங்கள் ஃபோர்டின் நிதியுதவியுடன்தான் நிறுவப்பட்டன. க்ரியா பதிப்பகம் வெளியிட்ட ‘தற்கால தமிழ் அகராதி’ கூட போர்டு பவுன்டேஷன் ஃபண்டிங்தான். அதற்காக இதை எல்லாம் தவறு என்று சொல்வீர்களா?’’ என்று பல ஆதாரங்களை வெளியே எடுத்துவிட்டார். மொத்தமாக தொகுத்துப் பார்க்கும்போது ஃபோர்டு பவுன்டேசன் மொத்த அறிவுலகத்தையும் தத்து எடுத்திருக்கிறதோ என்று தோன்றுகிறது.
எம்.டி.முத்துக்குமாரசாமி
சைவப்பிள்ளை எம்.டி.முத்துக்குமாரசாமி மலேசியாவுக்கும் போவார், மங்காத்தாவைப் பற்றி ஆய்வும் செய்வார்.
பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியின் நாட்டுப்புறவியல் துறையில் வேலை பார்த்து விட்டு வெளியே பருப்பு வடையும், டிகிரி காபியும் குடித்து வந்த முத்துக்குமாரசாமி பின்னொரு நாளில் ஃபோர்டு பவுண்டேசனின் ஆசிய நிர்வாகிகளில் ஒருவராக பரிணமிப்போம் என்று கருதியிருக்க நிறையவே வாய்ப்பிருக்கிறது. நமது மக்கள் நாளைக்கு கால்வயிற்று கஞ்சி கிடைக்குமா என்று அஞ்சிய அந்தக் காலத்து நாட்களில் திருநெல்வேலி சைவப்பிள்ளை கூட்டம் எதிர்காலத்தில் நாம் எங்கே என்ன செய்து கொண்டிருப்போம் என்று குறிப்பான ஐந்தாண்டுத் திட்டங்கள் போட்டு கற்பனை செய்து கொண்டது. பார்ப்பனர்களுக்கு சற்றும் குன்றாத இந்த சாதியின் நீதியை எம் டி எம் நன்றாகவே பராமரிக்கிறார்.
அமெரிக்கா ரிட்டர்ன் என்.ஆர்.ஐ அம்பியான பத்ரி சேஷாத்ரி ஞாநியின் தேர்தல் செலவுக்கு எளிய நிதி உதவி அளிப்பதை பெருமையுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டார். இந்த உதவி ஞாநியின் மூலம் ஆம் ஆத்மியிடம் சென்று அமெரிக்காவுக்கு சேவை செய்கிறது. ஆனால், அதே அமெரிக்காவில்தான் பத்ரி சம்பாதித்தார் என்பதால் இது ஒரு பெரிய ‘குற்றம்’ இல்லை.
மானுடவியல், சமூகவியல், நாட்டுப்புறவியல், இயற்கை விவசாயம், மருத்துவம், இயற்கை வளம் என்று ஒன்று விடாமல் எல்லா துறைகளையும் குறித்து உலகம் முழுவதும் உள்ள அறிவு தேடல் மற்றும் ஆய்வுகளை அமெரிக்காதான் பிரதானமாக நடத்துகிறது. தமிழ்நாட்டில் இருக்கும் கூத்தோ இல்லை கோலாட்டமோ, இருட்டு கடை அல்வாவோ அந்த அல்வாவின் சுவைக்கு காரணமான, தாமிரபரணி தண்ணீரோ இன்னபிற விவரங்கள் அனைத்தும் ஏகாதிபத்தியங்களின் கையில். இதனால் என்ன ஆதாயம்? பிளாச்சிமடாவில் உள்ள சுவை நீர், கங்கைகொண்டானில் உள்ள தாமிரபரணியின் இனிமை நீர் இரண்டிலும் அமெரிக்க கோக் நிறுவனம் வந்து ஆலை திறந்து உறிஞ்சுவது இத்தகைய ஆதாயங்களுக்கு ஒரு சான்று.
மேலும் அரசியல், பொருளாதாரம், மதம், சாதி, தொன்மம், பால் என்று ஏராளமான துறைகளில் பயன்படத்தக்க இந்த விவரங்களை ஏகாதிபத்தியங்கள் சேகரித்துக் கொள்கின்றன. நேரம் மற்றும் தேவை வரும் போது அதை எடுத்து விடும். பயன்படுத்திக் கொள்ளும். மேலும் மூன்றாம் உலக நாடுகளில் உள்ள அறிஞர்கள் மற்றும் கலைஞர்கள் அனைவரும் வர்க்க போராட்டம் மற்றும் புரட்சிகர அரசியலுக்கு சென்று விடக்கூடாது என்பதோடு அவர்களை சிந்தனை மற்றும் வாழ்வியல் ரீதியாக ஊழல்படுத்த வேண்டும் என்ற காரணங்களுக்காகவும், இப்படி காசு கொடுத்து ஆய்வு வேலைகளை கொடுத்தும் வருகின்றது ஏகாதிபத்தியங்கள்.
ஆனால் இந்த சதிகார அரசியலை விடுத்து, நாங்கள் அகராதி போட்டோம், ஆமை வடை கண்டுபிடித்தோம், மகாபாரதம் ஆராய்ச்சி செய்தோம், விளிம்பு நிலை ஆய்வு செய்தோம் என்று இந்த சோரம் போன அறிவாளிகள் வியாக்கியானம் செய்கிறார்கள். இதைப் பற்றி எல்லாம் ஞாநிக்கு கருத்து வேறுபாடு இல்லை.
கேஜ்ரிவால்-அஷூதோஸ் குப்தா
கேஜ்ரிவாலுடன் ஐ.பி.என்&7&ன் முன்னாள் நிர்வாக ஆசிரியரான அஷூதோஸ் குப்தா : அமெரிக்க ஆத்மியில் அணிவகுக்கும் ஆங்கில பத்திரிகையாளர்கள்.
இந்தியா முழுவதுமே ஏராளமான பத்திரிகையாளர்கள் ஆம் ஆத்மியில் இணைந்துள்ளதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஜீ செய்தியின் முன்னாள் பத்திரிகையாளர் மனிஷ் சிசோதியா, சி.என்.என்.-ஐ.பி.என்.னில் தேர்தல் நிகழ்ச்சி நடத்திய யோகேந்திர யாதவ், ஐ.பி.என்7-ன் முன்னாள் நிர்வாக ஆசிரியரான அஷூதோஸ் குப்தா, முன்னாள் பத்திரிகையாளர் சேஸ்யா இல்மி, பிரபல பத்திரிகையாளர் அனிதா பிரதாப் என பட்டியல் நீள்கிறது (பட்டியலில் உள்ளவர்களை முழுமையாக ஆய்வு செய்தால் இந்த எண்ணிக்கை கூடலாம்). பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல… அறிவுஜீவிகள் என்று தங்களை கருதிக்கொள்வோர் பலர் ஆம் ஆத்மியுடன் தங்களை ஐக்கியப்படுத்திக் கொள்வதில் முனைப்புடன் இருக்கின்றனர். வாராது வந்த மாமணி போல ஆம் ஆத்மியை சித்தரிக்கும் இவர்கள், இதுநாள் வரை இந்த தேவதூதனின் வருகைக்காகத்தான் காத்திருந்ததைப் போல கதையளக்கிறார்கள்.
காங்கிரஸின் ஊழல், பா.ஜ.க.வின் இந்துமத வெறி இரண்டுக்கும் மாற்றுபோல ‘ஆம் ஆத்மி’யை முன்னகர்த்தும் இந்த அறிவுஜீவிகள் உண்மையில் யாருக்காக உழைக்கிறார்கள் என்பது இப்போதாவது உங்களுக்கு புரிகிறதா? ஏனெனில் அடுத்து வரும் பத்தாண்டுகளில் இந்திய நடுத்தர வர்க்கத்தின் மோகத்துக்குரிய கட்சியாக, அவர்களின் கனவுக் கட்சியாக ஆம் ஆத்மியை ஊடகங்களில் சித்தரிக்கப் போவது இந்த அறிவுஜீவிகள்தான். செத்து வீழ்ந்து கொண்டிருக்கும் இந்த போலி ஜனநாயகத்திற்கு செயற்கை சுவாசம் வழங்குபவர்கள் இவர்கள்தான்.
முக்கியமாக இந்தியாவில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை இயக்கும் அமெரிக்கா இப்போது நேரடி அரசியலிலும் தனது கிளையை துவங்கிவிட்டதன் அடையாளம்தான் ஆம் ஆத்மி. ஏற்கனவே அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற பல்வேறு கட்சிகளுக்கு விருந்து கொடுத்து உத்தரவு போட்ட அமெரிக்க தூதர் வாழும் தில்லியில் இனி அந்த தேவை இல்லை. அமெரிக்காவிற்கு பல்வேறு கட்சிகளில் தூதர்கள், புரோக்க்ர்கள் இருந்தாலும், காங்கிரஸ் மற்றும் பாஜக போன்ற கட்சிகளே முழு அடிமைகளாக இருந்தாலும் போதவில்லை. புரட்சிகர முழக்கங்களுடன், புத்திசாலித்தனத்துடனும் ஒரு புதிய கட்சி அதுவும் சொந்தமாக இருந்தால் என்ன என்று யோசித்ததன் விளைவுதான் ஆம் ஆத்மி.
ஆம் இது அமெரிக்காவின் ஆத்மி. vinavu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக