புதன், 19 மார்ச், 2014

பா.ஜ.க. கூட்டணியில் இழுபறி நிலை ! சகல வாரிசுகளுக்கும் பதவி தொண்டர்களுக்கு துண்டு மட்டுமே !


தொகுதி பங்கீட்டில் பா.ம.க. முரண்டு பிடிப்பதால், பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் வேட்பாளரை அறிவிக்க முடியாமல் தவித்து வருகின்றன. கூட்டணி இறுதி அறிவிப்புக்காக காத்திருக்கின்றன.
பா.ம.க. இடம்பெறுமா?
தமிழகத்தில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், தே.மு.தி.க., ம.தி.மு.க., புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன. பா.ம.க.வும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பா.ஜ.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும் முன்பே, பா.ம.க. 10 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. இதனால், அதில் 8 தொகுதிகள் வேண்டும் என்று கேட்டு வருகிறது. ஆனால், பா.ஜ.க. தரப்பில், நீங்கள் வேட்பாளர்கள் அறிவித்ததில் 5 தொகுதிகளை அப்படியே தருகிறோம். மீதமுள்ள 3 தொகுதிகளை எங்கள் விருப்பப்படி தருவோம் ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கூறிவருகிறது.


விஜயகாந்த் பிரசாரம்
ஆனால், முதலில் தே.மு.தி.க.வுக்கு விட்டுக்கொடுத்த சேலம் தொகுதியை பா.ம.க. தற்போது மீண்டும் கேட்கிறது. சேலம் தொகுதியில் தே.மு.தி.க. சார்பில் எல்.கே.சுதீஷ் வேட்பாளராக நிறுத்தப்பட உள்ளார். அதனால், சேலம் தொகுதியை விட்டுக்கொடுக்க முடியாது என்று தே.மு.தி.க. கூறிவிட்டது.
பா.ஜ.க. கூட்டணியில் இழுபறி நிலை இவ்வாறு இருப்பதால், கூட்டணியை இறுதி செய்து அறிவிக்க முடியவில்லை. ஏற்கனவே, பா.ஜ.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை கடந்த 14–ந்தேதி அறிவித்துவிட்டு பிரசாரத்தை தொடங்க விஜயகாந்த் திட்டமிட்டிருந்தார். ஆனால், கூட்டணி இறுதி செய்யப்படாததால், முதற்கட்டமாக 5 வேட்பாளர்களை மட்டும் அறிவித்துவிட்டு விஜயகாந்த் பிரசாரத்தை தொடங்கினார்.
கூட்டணி கட்சிகள் தவிப்பு
அதேபோல், பா.ஜ.க. சார்பிலும் 8 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் தயார் நிலையில் உள்ளது. மேலும், ம.தி.மு.க. நேற்று வேட்பாளர்கள் பட்டியலை அறிவிக்க திட்டமிட்டிருந்தது. ஆனால், தொகுதி பங்கீட்டில் பா.ம.க. முரண்டு பிடிப்பதால், ம.தி.மு.க.வும் வேட்பாளர் பட்டியலை அறிவிக்க முடியவில்லை. இவ்வாறு பா.ஜ.க. கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுமே வேட்பாளர்களை அறிவிக்க முடியாமல் தவித்து வருகின்றன. இந்த கட்சிகள் எல்லாம், பா.ஜ.க. கூட்டணி இறுதி அறிவிப்புக்காக காத்திருக்கின்றன.
‘‘சிங்கம் என்றால் பா.ம.க. தனித்து போட்டியிடலாமே’’
பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. இடம்பெறுவது இன்னும் உறுதியாகாத நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு தருமபுரி தொகுதி வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் அறிவிக்கப்பட்டார். அவரை அறிமுகம் செய்து டாக்டர் ராமதாஸ் பேசும்போது, ‘‘சிங்கக் குட்டிகள் சிறுநரியிடம் போய் பிச்சை கேட்பதா?’’ என்று கருத்து தெரிவித்து பேசியிருந்தார்.
தே.மு.தி.க.வை குறிவைத்து அவர் இவ்வாறு பேசியது, தே.மு.தி.க., பா.ஜ.க. நிர்வாகிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில், டாக்டர் ராமதாஸ் கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில், பா.ஜ.க., தே.மு.தி.க. நிர்வாகிகள் நேற்று கூறும்போது, ‘‘சிங்கம் என்றால் பா.ம.க. சிங்கிளாக (தனியாக) நிற்க வேண்டியது தானே’’ என்று தெரிவித்தனர்.  dailythanthi.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக