சனி, 1 மார்ச், 2014

ஜெ., வழக்கில் அரசு வழக்கறிஞருக்கு நீதிபதி 'டோஸ்': வழக்கை தாமதப்படுத்த முயற்சி செய்வதாக கோபம்

"தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை தாமதப்படுத்த, அரசு வழக்கறிஞர், பவானி சிங் முயற்சிக்கிறார்,'' என, பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ஜான் கூறினார். தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி மீதான சொத்து குவிப்பு வழக்கு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில், பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. நேற்றைய விசாரணையின் போது, சுதாகரன் ஆஜராகியிருந்தார். 'வைரஸ்' காய்ச்சல்: ஜெயலலிதாவுக்கு அரசு பணி, சசிகலாவுக்கு, 'வைரஸ்' காய்ச்சல், இளவரசிக்கு நீரிழிவு நோய் இருப்பதால், நீதிமன்றத்தில், அவர்களால் ஆஜராக முடியவில்லை என, அவர்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள், மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுக்களுக்கு, அரசு வழக்கறிஞர், பவானி சிங் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை; மனுவை, நீதிபதி ஏற்றுக் கொண்டார்.
 1,116 கிலோ வெள்ளி: கடந்த, 1996ல் ஜெயலலிதா வீட்டில் கைப்பற்றப்பட்ட, 1,116 கிலோ வெள்ளிப்பொருட்களை, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் கொண்டு வர வேண்டும் என, ஜன., 3ல், அரசு வழக்கறிஞர் பவானி சிங், மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவுக்கு, குற்றஞ்சாட்டப்பட்டோர் தரப்பு வழக்கறிஞர்கள் நேற்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
 நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா, தன் உத்தரவில் கூறியதாவது: இவ்வழக்கு துவங்கி, 13 ஆண்டுகளாகிறது. அரசு வழக்கறிஞர், பவானி சிங், பொறுப்பேற்று, ஒன்றரை ஆண்டுகளாகிறது. வழக்கின் சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, விவாதம் முடிவடைந்துள்ளன. அப்போதெல்லாம், இம்மனுவை சமர்ப்பிக்காமல், பாஸ்கரன் இறந்து விட்டார் என்பது தெரிந்தும், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 உள் நோக்கம்: இந்த வழக்கை, மேலும் தாமதப்படுத்த, அரசு வழக்கறிஞர் முயற்சிக்கிறார் என்பதை, இது காட்டுகிறது. வெள்ளிப்பொருட்களை, பெங்களூரு கொண்டு வருவது, வழக்கிற்கு, எந்த விதத்திலும் பயனளிக்காது. அரசு வழக்கறிஞரின் மனு, உள் நோக்கம் கொண்டதாக கருதுகிறேன். எனவே, இம்மனுவை தள்ளுபடி செய்கிறேன். இவ்வாறு, அவர் கூறினார். - நமது சிறப்பு நிருபர் -dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக