திமுக தென் மண்டல முன்னாள் அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரியுடன் தொடர்புடைய
20 மாவட்டங்களைச் சேர்ந்த திமுக-வின் முக்கிய நிர்வாகிகள் பட்டியலை திமுக
தயாரித்துள்ளது. தேர்தல் நேரத்தில் கட்சி உடைந்துவிடாமல் தடுப்பதற்காகவே,
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஒழுங்கு நடவடிக்கை எச்சரிக்கை
விடுத்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட திமுக தென்மண்டல அமைப்புச்
செயலாளர் மு.க.அழகிரியின் பிறந்த நாள் விழாவில், திமுக எம்.பி.,க்கள்
ஜே.கே.ரித்தீஷ், நெப்போலியன், கே.பி.ராமலிங்கம் பங்கேற்றனர். இந்நிலையில்,
மு.க.அழகிரி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களுக்குச் சென்று, தனது
ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார். சென்னை பெரம்பூரிலுள்ள வட சென்னை திமுக
முன்னாள் செயலாளர் வி.எஸ்.பாபு, பல்லாவரத்தில் பம்மல் நல்லதம்பி,
கே.கே.நகரில் கருணாகரன், தேனியில் ஆர்.பி.ஈஸ்வரனின் ஆதரவாளர்கள் என,
பல்வேறு மாவட்டங்களில் அழகிரி தனது ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார்.
அண்மையில் டெல்லிக்கு சென்று, பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ராஜ்நாத்
சிங்கை சந்தித்துப் பேசினார். பின்னர், சென்னையில் நடிகர் ரஜினிகாந்தை
சந்தித்தார். இதனால் அழகிரி தனிக் கட்சி தொடங்கப் போகிறாரா என்ற எதிர்ப்பு
எழுந்தது. இதற்கிடையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, கடந்த இரு
தினங்களுக்கு முன் அழகிரி மதுரையில் நடத்திய கூட்டத்தில், திமுகவி-னர்
ஏராளமானோர் பங்கேற்றனர்.
இதனால் திமுக தலைமை கடும் அதிருப்தி அடைந்துள்ளது. தென் மாவட்டங்களில்
திமுக வேட்பா ளர்கள் வெற்றி பெற மாட்டார்கள் என்று அவர் அறிவித் துள்ளதும்
திமுக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, திமுக தலைமை வட்டாரங்களில் கிடைத்த தகவல்கள்: அழகிரிக்கு
பல்வேறு மாவட்டங்களிலும் ஆதரவாளர் கள் இருப்பதை திமுக தலைமை
கண்டறிந்துள்ளது. குறிப்பாக திமுக எம்.பி-க்கள் ரித்தீஷ், நெப்போலியன்,
கே.பி.ராமலிங்கம் ஆகியோர் அழகிரிக்கு நேரடி ஆதரவு அளித்துள்ளனர்.
திருநெல்வேலி முன்னாள் எம்.எல்.ஏ., மாலைராஜா, வில்லி
புத்தூரில் மூத்த நிர்வாகி அமுதன், தூத்துக்குடி அனிதா ராதாகிருஷ்ணன்,
குமரியில் ஹெலன் டேவிட்சன், மகேஷ், ராமநாதபுரத்தில் பவானி ராஜேந்தி ரன்,
கடலூர் சபா ராஜேந்திரன், உதகையில் முன்னாள் எம்.எல்.ஏ., குண்டன்,
திருவள்ளூர் சிவாஜி, செஞ்சி ராமச்சந்திரன், திருச்சி செல்வராஜ், நாகையில்
இளங்கோ, ஈரோட்டில் சச்சிதானந்தம் ஆகிய நிர்வாகிகளின் ஆதரவாளர்களில் ஒரு
தரப்பினர், அழகிரியின் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளதை திமுக தலைமை கண்டறிந்
துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தநிலையில், கடந்த 17-ம் தேதி தூத்துக்குடியில் பிரச்சாரம்
முடித்துவிட்டு வந்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், மதுரை விமான
நிலையத்தில் காத்திருந்தபோது, அவரை திமுகவில் ஸ்டாலின் ஆதரவு தென் மாவட்ட
நிர்வாகிகளும் வேட்பாளர்கள் சிலரும் நேரில் சந்தித்து அழகிரியின்
கூட்டங்களால் திமுகவில் பிளவு ஏற்படும் நிலை இருப்பதாகவும், வெற்றி
வாய்ப்பு மிகவும் பாதிக்கக்கூடும் என்றும் கவலை தெரிவித்தார்களாம்.
இதையடுத்து சென்னைக்கு வந்த ஸ்டாலினிடம், அழகிரியின் எதிர்ப்பாளர்கள்,
அழகிரியை நிரந்தரமாக நீக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளதாகத்
தெரிகிறது. ஆனால், இதை திமுக தலைவர் ஏற்றுக்கொள்ளாத நிலையில்தான்,
முதற்கட்டமாக ஒழுங்கு நடவடிக்கை எச்சரிக்கை மீண்டும் விடுத்துள்ளதாகத்
திமுக தலைமை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன tamil.thehindu.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக