சனி, 29 மார்ச், 2014

Admk வெற்றிக்கு வேட்டு வைக்குது பஸ் டிக்கெட்டு ?

அவன் பட்டு வேட்டிக்கான கனவில் இருந்தபோது கட்டியிருந்த கோவணமும் அல்லவா களவாடப்பட்டது? சுதந்திரத்தைப்பற்றி எழுதப்பட்ட கவிதை, இன்றைய தமிழக அரசியலுக்கும் கச்சிதமாய்ப் பொருந்திப் போகிறது. தி.மு.க., மீதான அதிருப்தியால், அ.தி.மு.க.,வுக்கு வாக்களித்த மக்களின் உண்மையான நிலை, இன்று இதுதான்.லஞ்சம், ஊழல் அதிகரிப்பு, அதிகார அரசியல், மக்களின் உணர்வுகளை அறியாத மக்கள் பிரதிநிதிகள்... இவற்றோடு, மின் தடை, ஈழத்தமிழர் பிரச்னை என பல காரணங்களையும் மனதில் வைத்தே, கடந்த சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க.,வைத் தோற்கடித்தார்கள் மக்கள். ஆனால், இப்போதைய நிலை, 'உள்ளதும் போச்சுடா...' என்ற நிலையில்தான் இருக்கிறது.மற்றவற்றை விடுங்கள்...சாதாரண சாமானிய மக்கள், நடுத்தர வர்க்கம் அதிகமாகப் பயன் படுத்தக் கூடிய பஸ் கட்டணத்தில் இந்த அரசும், அதிகாரிகளும் செய்திருக்கிற, செய்து கொண்டிருக்கிற அநியாயத்தை எந்த மக்களும் அவ்வளவு எளிதில் மறந்து விட மாட்டார்கள்.
அரசு மற்றும் தனியார் பஸ்கள் எதுவாக இருந்தாலும், அதற்கான வழித்தடத்துக்கு அனுமதி வழங்கவும், கட்டணத்தை நிர்ணயிக்கவும் சாலை போக்குவரத்து அதிகாரியாகவுள்ள கலெக்டருக்கு அல்லது மாநில போக்குவரத்து அதிகாரிக்கே அதிகாரம் உள்ளது; கடந்த தி.மு.க., ஆட்சியின்போதுதான், முதன் முறையாக, இந்த நடைமுறை, குழி தோண்டி புதைக்கப்பட்டது.

அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிப்பதற்குப் பதிலாக, கூடுதல் கட்டணத்தை வசூலிப்பதற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள், புதிய வழிமுறை ஒன்றைக் கண்டு பிடித்தனர். அதாவது, சாதாரண பஸ்களுக்கே 'எல்.எஸ்.எஸ்.,', 'எக்ஸ்பிரஸ்', 'பாயின்ட் டூ பாயின்ட்' 'பை-பாஸ் ரைடர்' என புதுப்புது நாமகரணங்களைச் சூட்டி, எவ்வித அனுமதியுமின்றி கூடுதல் கட்டணம் வசூலிக்கத் துவங்கினர்.தமிழக அரசின் நிதியில் வாங்கிய பஸ்களில் மட்டுமின்றி, மத்திய அரசின் நகர்ப்புற அமைச்சகத்தின் ஜவஹர்லால் நேரு தேசிய நகர புனரமைப்புத் திட்டத்தின் கீழ், 80 சதவீத மானியத்தொகையில், தமிழக அரசுக்கு வழங்கப்பட்ட அனைத்து பஸ்களையுமே 'சொகுசு பஸ்கள்' என்று பெயரிட்டு, அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட இரு மடங்கு கட்டணம் வாங்கியது, தி.மு.க., அரசுதான்.

இந்த 'மறைமுக கட்டண உயர்வு' பற்றி, அன்றைய எதிர்க்கட்சித் தலைவரான ஜெயலலிதா, கடுமையான விமர்சனங்களை வெளியிட்டார்; ஆனால், ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததும், முதல்வர் ஜெ., கொடுத்த முக்கியமான 2 கசப்பு மருந்துகளில் ஒன்று, மின் கட்டண உயர்வு; மற்றொன்று பஸ் கட்டண உயர்வு.மின் கட்டணமாவது, பயன் பாட்டைப் பொறுத்தே அதிகரிக்கும் என்பதால், கீழ்த்தட்டு மக்களுக்குப் பிரச்னையில்லை; ஆனால், அன்றாடம் கூலி வேலைக்குச் செல்வதற்கே, டவுன் பஸ்களை நம்பியிருக்கும் ஏழை மக்களின் நிலையைப் பற்றி அரசு யோசிக்கவேயில்லை; ஆனாலும், மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழகத்தில் கட்டணம் குறைவு என்ற 'சமாளிபிகேஷனை' மக்கள் ஏற்றுக்கொண்டனர். அரசே பஸ் கட்டணத்தை உயர்த்தி விட்டதால், இனி மறைமுகமாக வெவ்வேறு பெயர்களில் பஸ்களை இயக்கி, கூடுதல் கட்டணம் வசூலிப்பது இருக்காது என்றே மக்கள் நம்பினர்; ஆனால், அந்த நம்பிக்கையும் பொய்த்துப்போனது. மாறாக, முன்பிருந்த சாதாரண பஸ்களை எல்லாம் 'சொகுசு பஸ்' என பெயர் மாற்றி, அரசு அதிகரித்த கட்டணத்தை விட, மேலும் கூடுதல் கட்டணத்தை வசூலிக்கத் துவங்கினர்.

உதாரணமாக, கோவையில், தி.மு.க., ஆட்சியின் இறுதிக்காலத்தில் இயக்கப்பட்ட 581 டவுன் பஸ்களில், 324 பஸ்கள், சாதாரண கட்டணத்திலும், 257 பஸ்கள், கூடுதல் கட்டணத்திலும் இயக்கப்பட்டன; இப்போது, இயக்கப்படும் 558 டவுன் பஸ்களில் 187 பஸ்கள் மட்டுமே சாதாரண கட்டணத்தில் இயக்கப்படுகின்றன; 371 பஸ்கள், கூடுதல் கட்டணத்தில் இயக்கப்படுகின்றன. கோவையில்தான் ஜே.என்.என்.யு.ஆர்.எம்., பஸ்கள் இயக்கப்படுகிறது என்பதால், இதனால், அதிகம் பாதிக்கப்பட்டது கோவை மாவட்ட மக்கள்தான்; இதனால், சாதாரண ஏழைக்குடும்பத்தின் மாதாந்திர பஸ் செலவு, 400 ரூபாயிலிருந்து 900 ரூபாயாக உயர்ந்தது; ஆனால், அந்த அளவுக்கு சம்பள உயர்வு கிடைக்கவில்லை.தங்களின் பாக்கெட்டை காலி செய்த பஸ் கட்டண உயர்வால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரும் கொந்தளிப்பில் உள்ளனர்;  dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக