செவ்வாய், 11 மார்ச், 2014

கம்யூனிஸ்டு கட்சிகள் 12 தொகுதிகளில் போட்டி

அ.தி.மு.க.வுடனான தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால், இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் தனித்து விடப்பட்டுள்ளன. இந்த 2 கட்சிகளும் கூட்டாக சேர்ந்து பாராளுமன்ற தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளன.
10 அல்லது 12 தொகுதிகளில் கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலை சந்திக்க கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக தங்களுக்கு செல்வாக்குள்ள தொகுதிகளையும் அவர்கள் கண்டறிந்து வைத்துள்ளனர்.
இதன்படி, வடசென்னை, கோவை, திருப்பூர், மதுரை, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், தென்காசி, ஸ்ரீபெரும்புதூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட 2 கம்யூனிஸ்டு கட்சியினரும் தீவிரம் காட்டி வருகின்றனர்.
திருச்சியில் வருகிற 15–ந்தேதி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படுவதுடன், போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களும் அறிவிக் கப்படும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாக குழு கூட்டம் வருகிற 16–ந்தேதி நடக்கிறது. இதில் அக்கட்சி சார்பில் களமிறங்கும் வேட்பாளர்களின் பட்டியல் முடிவு செய்யப்படுகிறது.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு வடசென்னை, தென்காசி ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் தென்காசி தொகுதியில் அக்கட்சி வெற்றி பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் அ.தி.மு.க. கூட்டணிலேயே களம் கண்டது. அக்கட்சிக்கு கோவை, மதுரை, கன்னியாகுமரி தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் கோவையில் மட்டும் மார்க்சிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக