வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

பா.ஜ.க.விற்குக்கு SRM பச்சமுத்துதான் Sponsor. கட்டவுட் , போஸ்டர் அடிப்பது, விஜிபி மைதா ஏற்பாடு ! ஆகையால் இவர் அடித்த கூத்துகளையெல்லாம் பா.ஜ.க.வினர் சகித்துக்


பச்சமுத்து உரைபாஜகவை பதம் பார்த்த புதிய தலைமுறை பாரிஜி ! மோடியின் சென்னை பொதுக்கூட்டத்தில் கர்ஜித்த பாரிவேந்தரின் பேச்சை நேரிலோ, யூ டிபிலோ பார்க்க முடியாதவர்கள் சபிக்கப்பட்டவர்கள். இந்தியாவை உய்விக்க வந்த பா.ஜ.க-ஐ.ஜே.கே கூட்டணி, அதன் ‘விடிவெள்ளி’ மோடி, தமிழகத்தின் ‘வலுவான’ மாற்று அணி’, அதன் கொள்கைகள், கூட்டணி ஏற்பட்ட வரலாறு அனைத்தையும் தரிசிக்க வைக்கிறது அன்னாரின் உரை. அதை பா.ஜ.க அணியின் கொள்கை அறிக்கை ஆவணம் என்று  குறிப்பிட்டால் கூட மிகையல்ல. ஐஜேகே, பாஜக நடத்திய வண்டலூர் திறந்த வெளி பொதுக்கூட்டத்தில் பச்சமுத்து உரை.

இனி வண்டலூருக்குச் செல்வோம்.
பாரிவேந்தர் பேசுவார் என்று தமிழிசை அறிவிக்கிறார். உடனே மைதானம் குலுங்கி, விசில் சத்தம் காதை பிளந்தது, தொண்டர்களின் ஆரவாரம் விண்ணை முட்டியது. எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழிசை ஆகியோர் பேசும் போது, ஒரு அனக்கம் கூட இல்லை. மெதுவாக மைக்கை பிடிக்கிறார் பாரிஜி. சில மணித்துளிகள் தொண்டர்களின் ஆரவாரத்தை புன்முறுவலுடன் இரசிக்கிறார். வாங்குற காசுக்கு மேற கூவுறாய்ங்களோ என்று கூட அவருக்கு ஒரு ஐயம் வரும் அளவுக்கு ஆரவாரம். “அமெரிக்க ஜனாதிபதி வாழ்க” என்று யாராவது சொல்கிறார்களா என்ற ஆசை கூட அந்த நிமிடங்களில் இல்லாமல் போயிருக்காது.
கையை சிறிதளவு உயர்த்தி கூட்டத்தை அமைதிப்படுத்தி விட்டு அடுத்து அவர் பேசியது,
“மோடி அவர்கள் வருவார்கள்… வருவார்கள்… அவர் முன்னால் பேசலாம் என்று காத்து இருந்தேன். கூட்டணி தலைவர்கள் எல்லோரும் பேசி விட்ட நிலையில் மேலும் காலம் தாழ்த்த முடியாது என்பதால் வேறு வழியில்லாமல் உரையாற்றுகிறேன்” என்று ஆரம்பித்தார். நமது செல்வாக்கை மோடி பார்க்காமல் போய்விட்டாரே! என்ற வருத்தம் முகத்தில் தெரிந்தது. வைத்த கட்டவுட்டை ஜெயா பார்க்கவில்லையோ என ஒரு அதிமுகவின் வித்தவுட்டுக்கு வரும் மனக்கிலேசம் இது. மாரியம்மன் கோவில் அன்னதான சுவரொட்டியில் தனது பெயர் எழுத்தளவு சிறியதாகி விட்டதோ என்று ஒரு ‘வள்ளலுக்கு’ வரும் கவலையும் இதுதான்.
“ஐ.ஜே.கே என்பது வயதில் இளையது, ஆனால் தோழமையில் மூத்தது. எப்படி மூத்தது?”  என்று கேட்டு விட்டு இந்த இலட்சிய கூட்டணி கருவாகிய வரலாற்றை விளக்குகிறார்.
அதாகப்பட்டது சில ஆண்டுகளுக்கு முன்னால் காமராஜர் அரங்கத்தில் பாரிவேந்தரின் பிறந்த நாள் விழா நடந்திருக்கிறது. அரங்கம் நிரம்பி வழிந்திருக்கிறது. அவரே இதை சொல்லிக் கொள்கிறார். பணத்தை வீசினால் பந்தலை நிரப்பப் போகிறது கூட்டம், என்றாலும் அதிலும் மப்பு இருக்கத்தானே செய்யும். திடீரென “பொன்னார் வருகிறார், பொன்னார் வருகிறார்” என பராக் பராக் சொல்லியிருக்கிறார்கள். பொன்னார்ஜிக்கு பாரிஜி அழைப்பிதழே கொடுக்கவில்லையே என வேந்தருக்கு அதிர்ச்சி.
பொன். இராதாகிருஷ்ணன்
பாரிவேந்தரின் பிறந்த நாள் விழாவில் கூட்டணி கட்சியை கண்டெடுத்த பாஜக மாநிலத் தலைவர் பொன். இராதாகிருஷ்ணன்
பிறந்த நாள் விழா கூட்டத்தில் பாரிஜியை வாழ்த்திப் பேசுகிறவர்கள் எல்லாம் ஐ.ஜே.கே கட்சியின் கொள்கைகளை பிரித்து மேய்ந்து கொண்டிருந்தார்கள். இதை கேட்டுக் கொண்டிருந்த பொன்னாருக்கு அடடே நம்ம கொள்கையும் இதுவும் ஒன்றாக இருக்கிறதே என்று மண்டையில் குண்டு பல்பு எரிந்திருக்கிறது. பிறகென்ன “யாயும் ஞாயும் யாராகியரோ” என்று அவர் பாட “செம்புலப் பெயல் நீர்போல”  என அந்த மேடையிலேயே இரு கட்சிகளும் கூட்டணியாகி விட்டார்கள். இது தான் இந்த கொள்கை கூட்டணியின் வரலாறாம். இது உண்மையாக இருந்தால் பாரிஜி சிறிய வயதில் ஆர்.எஸ்.எஸ் ஷாகா ஏதும் போய் வார்க்கப்பட்டிருப்பாரோ, தெரியவில்லை. இதன்றி இவர்களை இணைக்கும் கொள்கை வேறு ஏது? இதற்கு அடுத்த நாள் மோடி பதிலளித்தார்.
எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பேசிய மோடி “மிகப் பெரும் இளைஞர் சமுதாயத்தைக் கொண்ட இந்தியாவில், எஸ்.ஆர்.எம். போன்ற சிறந்த கல்வி நிறுவனங்களில் மிகச் சிறிய எண்ணிக்கையிலான மாணவர்களே சேர முடியும் என்ற நிலைமை உள்ளது. இந்த நிலை மாறும் வகையில், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இதுபோன்ற கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்பட வேண்டும். தனியார் நிறுவனங்கள், கல்வித் துறையில் கால் பதிக்க மிகுந்த ஆர்வமுடன் இருக்கின்றன. அவர்களை இத்துறையில் அனுமதிக்க வேண்டும்” என்று தனியார்மய கல்விக் கொள்ளை தான் தங்களை இணைத்த அந்தக் கொள்கை என தெளிவுபடுத்தினார்.
ஆனால், முந்தைய நாள் பொதுக்கூட்டத்தில் பேசும் போது இதற்கு நேர் மாறாக, “அரசாங்கம் என்பது ஏழைகளுக்காக இருக்க வேண்டும். பணக்காரர்கள் மருத்துவ வசதி வேண்டுமென்றால் பணம் செலவழித்து பெற்றுக் கொள்வார்கள், பணக்காரர்களின் குழந்தைகள் படிக்க வேண்டுமென்றால் பணம் செலவழித்து தனியார் பள்ளிக்குப் போக முடியும். ஏழைகளுக்கு அரசு மருத்துவமனைகளும், அரசு பள்ளிகளும்தான் புகலிடம்” என்று காசு கொடுத்து கூட்டி வரப்பட்ட ஏழைகளுக்கு ஏற்றபடி பேசியிருந்தார். அதே போல எஸ்.ஆர்.எம் பட்டமளிப்பு விழாவில் காசு கொடுத்து படிக்க வந்த கூட்டம் என்பதால் அங்கே தனியார் மய கொள்ளைக்கு ஆதரவாக பேச்சு. முன்னது நடிப்பு, பின்னது உண்மை.
ஏழைகளின் குழந்தைகள் 5-ம் வகுப்பு வரை படித்தால் போதும், எஞ்சினியர், டாக்டர் எல்லாம் பணக்காரர்களுக்குத்தான் என்பதுதான் மோடி மற்றும் பாரிவேந்தரின் கொள்கை.
மோடி எஸ்ஆர்எம் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில்
மோடி எஸ்ஆர்எம் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் : ஏழைகளின் குழந்தைகள் 5-ம் வகுப்பு வரை படித்தால் போதும், எஞ்சினியர், டாக்டர் எல்லாம் பணக்காரர்களுக்குத்தான் என்பதுதான் மோடி மற்றும் பாரிவேந்தரின் கொள்கை.
அடுத்து வண்டலூர் பேச்சில் வரலாற்றிலிருந்து சுயமுன்னேற்றதுறைக்கு தாவினார் பாரிஜி. “உலக நாடுகளிலிருந்தும், டெல்லியிலிருந்தும் வருபவர்கள் எல்லாம் எனக்கு விசன் (Vision) இருப்பதாக கூறுவார்கள். முதலில் அதை நான் நம்பவில்லை. ஆனால் அது உண்மைதான் என்று இப்போது புரிகிறது.” என்று தன்னடக்கமாக கூறிக்கொண்டார். பா.ஜ.க தான் வெற்றிபெரும் என்று தனக்கு விசன் இருந்ததால் தான் அன்றே பா.ஜ.க உடன் கூட்டணி வைத்துக் கொண்டதாக கூறினார். ஒருக்கால் பா.ஜ.க மத்தியில் ஆட்சிக்கு வந்தால் மாநிலத்திற்கு மாநிலம் எஸ்.ஆர்.எம் கல்லூரிகள், டி.வி, பத்திரிகைகள் பட்டையைக் கிளப்பும் என்பது இந்த விசனுக்கு அடிப்படை.
பாரிஜியின் விசன் இவ்விதம் வேலை செய்தது என்றால், பொன்னாரின் விசன் புதியதலைமுறை சேனல், எஸ்.ஆர்.எம் காலேஜ் சீட், நன்கொடை வசூல், வேந்தர் மூவீஸ் வரவு என விரிந்திருக்க வேண்டும். இதைத் தாண்டி இந்த விசன்களில் வில்லங்கமோ, விதண்டாவாதமோ ஏதுமில்லை.
இவ்வாறு கூட்டணியின் வரலாற்றை சொல்லி முடித்துவிட்டு அடுத்த கியரைப் போட்டார்.
“பா.ஜ.க உடன் எங்களுக்கு இருப்பது இயற்கையான கூட்டணி. நேச்சுரல் அல்லை (natural ally). எப்படி?”  அவரே விளக்குகிறார் “பி.ஜே.பி மூன்றெழுத்து, ஐ.ஜே.கே மூன்றெழுத்து. இரு கட்சிகளின் பெயர்களிலும் நடுநாயகமாக ‘ஜே’ இருக்கிறது. ஜே என்றால் ஜெயம் வெற்றி. இருவருக்கும் கொள்கை ஒன்றாக இருக்கிறது” மாபெரும் தத்துவத்தை உதிர்த்த பெருமிதத்தில் மேடையில் இருந்த எச்.ராஜா, இல.கணேசன் உள்ளிட்டவர்களின் ரியாக்சனை, புன்முறுவலுடன் திரும்பி பார்க்கிறார். “கவித, கவித..இப்படில்லாம் பேசி கேட்டதே இல்லப்பா”  என்று சொன்னார்களோ என்னவோ மீண்டும் தொடர்ந்தார்.
அதுதான் வண்டலூர் கூட்டத்தின் மறை பொருள் இரகசியம்.
“நான் எஸ்.ஆர்.எம் பல்கலைகழக பட்டமளிப்பு விழாவுக்கு மோடியை அழைக்க போயிருந்தேன், அப்படியே அன்று மாலை ஐ.ஜே.கே கட்சியின் பொதுக் கூட்டத்திலும் கலந்து கொள்ளுங்கள், என் சக்தியை, பலத்தை உங்களுக்கு காட்டுகிறேன். மாநாடுகளும், ஐந்து லட்சம், ஏழு லட்சம் என்று மக்களை கூட்டுவதும் எங்களுக்கு சாதாரணமான ஒன்று”  என்று மோடியிடம் அவர் கூறியிருக்கிறார். “பட்டமளிப்பு விழாவில் நிச்சயம் கலந்து கொள்கிறேன், ஆனால் பொதுக்கூட்டம் குறித்து தமிழக பா.ஜ.க வுடன் கலந்து பேசுங்கள்” என்று மோடி கூறியிருக்கிறார்.
ஐஜேகே பச்சமுத்து
“மாநாடுகளும், ஐந்து லட்சம், ஏழு லட்சம் என்று மக்களை கூட்டுவதும் எங்களுக்கு சாதாரணமான ஒன்று” – ஐஜேக கட்சி கூட்டம், பாரிவேந்தர் பச்சமுத்து.
அதன் படி மாநில பா.ஜ.கவுடன் பேசி “பா.ஜ.க வும், ஐ.ஜே.கே வும் இணைந்து இந்த பொதுக்கூட்டத்தை நடத்துகிறோம்” என்று கூறி இந்த பொதுக்கூட்டத்தின் நதிமூலம் ரிஷிமூலம் மட்டுமல்ல நிதிமூலமும் தான் தான் என்பதை பறைசாற்றினார். ஆண்டை வீட்டு திருமணத்திற்கு வந்திருந்த அடிமைகளைப் போல மல்லை சத்தியாவும், கொங்கு ஈஸ்வரனும் இவர் பேசுவதை கவனித்துக் கொண்டிருந்தார்கள்.
“எங்களைப் போன்றவர்கள் யாருக்காக பல்கலைக் கழகம் வைத்திருக்கிறோம்.? 17 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக. ஆனால் குழந்தைகளுக்கு பல்கலைக்கழகம் வைத்திருப்பவர் மோடி. அதைக் கொண்டு தாயின் கருவிலிருந்து 5 வயது வரை குழந்தைகளை பாதுகாப்பாக பார்த்துக் கொள்கிறார்.” என்று சிறிது நேரம் மோடி புராணம் பாடினார். குஜராத்தில் கொடிகட்டிப் பறக்கும் வாடகைத் தாய் தொழிலை பற்றிக் கூறினாரா இல்லை ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பு வீதத்தில் குஜராத் நாட்டிலேயே 21-வது மோசமான இடத்தில் இருப்பது, குறித்தா தெரியவில்லை. எனினும் தன்னால் காசு கொடுத்து கூட்டி வரப்பட்ட கூட்டத்திற்கு உண்மைகள் தேவையில்லை என்று நினைத்திருக்கலாம். அதனால்தான் 17 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தான் ஏதோ இலவச கல்வி கொடுப்பதாக அடித்து விட்டார். இத்தனைக்கும் அவரது சாம்ராஜ்ஜியம் நடுத்தர வர்க்கத்திடமிருந்து பல கோடி நன்கொடைகளை கொள்ளையடித்து கட்டப்பட்டது.
“மது ஒழிப்பிற்கு தமிழக தலைவர்கள் நடந்து நடந்து தமிழகத்தில் எத்தனை கிமீ சாலைகள் உள்ளன என்று அளந்து விட்டார்கள்,  ஒன்றும் முடியவில்லை, ஆனால் குஜராத்தில் மோடி மதுவிலக்கைக் கொண்டு வந்திருக்கிறார்” என்று 1961-லிருந்தே குஜராத்தில் அமலில் இருக்கும் மதுவிலக்கின் பெருமையை மோடியின் பாதங்களில் சமர்ப்பித்தார். கல்லூரியை வைத்தவனுக்கு வரலாற்றை மாற்றி எழுத முடியாத என்ன? போகிற போக்கில் வைகோவின் பாத யாத்திரையை எள்ளி நகையாடினாலும், கைப்புள்ள இந்த அடிக்கெல்லாம் மிரளமாட்டான் என மல்லை சத்யா ஜாலியாக எடுத்துக் கொண்டார்.
பச்சமுத்து பிறந்தநாள் விழா
கடந்தத தேர்தலில் தமிழகத்தில் குடும்ப ஆட்சியை ஒழித்தது ஐ.ஜே.கே.
கடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் குடும்ப ஆட்சியை ஒழித்தது ஐ.ஜே.கே தான் என்றால் நம்புவீர்களா? மோடியிடம் “2011-ல் தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சியை அகற்ற வேண்டும் என்று பிரச்சாரம் செய்தோம். அது நடந்திருக்கிறது. எங்கள் கொள்கையில் வெற்றி பெற்றிருக்கிறோம். நாங்கள் தெற்கில் முடித்து விட்டோம். நீங்கள் வடக்கே குடும்ப ஆட்சியை முடிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டாராம். அதற்கு மோடி “ஐ வில் டூ இட்” என்றாராம்.
கொஞ்சம் கொஞ்சமாக  புல் ஃபார்முக்கு முன்னேறிக் கொண்டிருந்தார் பாரிஜி.
“நாட்டை முன்னேற்ற ஐந்து T களை (Talent,Tradition,Tourism,Trade,Technology) சொல்கிறார் நரேந்திர மோடி. அவர் இன்னும் ஒரு டீ யை சேர்த்திருக்க வேண்டும்.” என்று கூறிவிட்டு அமைதியானார். அவரே சஸ்பென்சை உடைத்து “அது தான் நமோ டீ. அது தான் நாட்டை ஆளப் போகிற டீ. அதையும் சொல்லி இருக்க வேண்டும்.” முகத்தில் அவ்வளவு பெருமிதம். இந்த விவகாரத்தில் டி.ராஜேந்தருக்கு கூட இத்தனை செருக்கு இல்லை என்பதையும் இங்கே பதிவு செய்ய வேண்டும். அத்தோடு விடவில்லை இன்னும் தொடர்ந்தார்.
“நான் வழக்கமாக எனது பல்கலைக் கழகத்தில் ஐந்து ‘E’ களை (Education,Employment,Electricity,Eradication of liqour,Empowerment of Women) சொல்லுவேன். என் ஐந்து ‘E’ யும் மோடியின் ஐந்து T  யும் சேர்ந்து மொத்தம் 5 ET.  அதாவது ET = ஈட்டி.  உங்களுக்கு தெரியும் ஈட்டி என்றால் கூர்மையான போர் வாள் போல. பி.ஜே.பி யும் ஐ.ஜே.கே யும் சேர்கிற போது ஒரு போர் படையாக, இதோடு தோழமை கட்சிகளும் சேர்கிற போது பெரிய போர்ப் படையாக மாற்றி காட்ட முடியும்,” பாரிஜி பேசிக்கொண்டே போக  ஜெயமோகனின் மகாபாரதத் தொடரே தோற்றுவிடும் போல இருந்தது. புரிந்ததோ,புரியலையோ கூட்டத்தின் ஆர்ப்பரிப்பு மட்டும் குறையவில்லை.
இந்து தத்துவஞான மரபில் ஈட்டிக்கு இப்படி ஒரு விளக்கம் இருக்கும் என்று அந்தக்கால அத்வைத ஆதிசங்கரரோ, இல்லை இந்தக் கால சில்லறைத்துவ அரவிந்தன் நீலகண்டனோ கூட யோசித்திருக்க முடியாது. ஜெயமோகனது அறம் சிறுகதை தொகுப்பிற்கு பாரிஜி குரூப் விருது கொடுத்திருப்பதால் பகரமாக பாரிஜியின் உரையை விஷ்ணுபுரம் வாசகர் வட்ட கம்பெனி எழுதிக் கொடுத்திருக்குமோ என்னமோ. இல்லையெனில் ஈட்டி எனும் புது வார்த்தைக்கு இத்தனை பெரிய டெரரான பொருள் விளக்கம் தங்கத் தமிழுக்கு கிடைத்திருக்காது.
மோடி - பச்சமுத்து
5E பச்சமுத்துவும், 5T மோடியும்.
“மோடிக்கு ஐந்து ஆண்டுகள் கொடுத்துப் பாருங்கள், பின் அவரை காலாகாலத்துக்கும் மாற்ற முடியாது”, என்ற பேசிய பாரிஜி அவசர நிலையை கொண்டு வந்து சர்வாதிகாரியாகி விடுவார் என்பதை வாய்தவறி சொல்லியிருந்தாலும் பிறகு ஷார்ப்பாக விழித்துக் கொண்டு “மக்கள் மகிழ்ச்சியில் மாற்ற மாட்டார்கள்” என்று கூறி சமாளித்தார். ஒரு வேளை மக்கள் மகிழ்ச்சியில்லை என்றாலும் மோடியை மாற்ற முடியாது என்பதால் மகிழ்ச்சியின் இலக்கணத்தைத்தான் மக்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் போல. எதுவாக இருந்தாலும் பாரிஜியின் பேச்சு வரலாறுதான், அதை யாரும் மாற்ற முடியாது.
கூட்டணிக் கட்சிகள் குறித்து ஏதும் பேசுவார் என்று எதிர்பார்த்தவர்களையும் மாற்ற விரும்பவில்லை அவர். “இனி பி.ஜே.பி யார் முன்னும் வரமாட்டார்கள். நீங்கள் தான் அவர்கள் முன் மண்டியிட்டு கெஞ்ச வேண்டும்.” என்று யாருக்கோ சொன்னார். இதே சமயத்தில் மோடியின் வருகைக்காக ஹோட்டலில் வைகோ காத்திருந்தார் என்பதை அடுத்த நாள் செய்தித் தாளில் தெரிந்துகொண்டோம்.
அனைத்துக்கும் உச்சகட்டமாக,
“எங்களைப் பொறுத்தவரை இ.ஜ.க ஒரு தேசியக் கட்சி. பெயரிலேயே இந்தியா என்று வைத்திருக்கிறோம், பெயரில் மட்டுமல்ல கட்சி துவங்கிய மூன்றாவது மாதத்திலேயே பீகாரில் 10 இடங்களில் போட்டியிட்டோம். பல்லாயிரக்கணக்கான வாக்குகளைப் பெற்றோம். இத்தனைக்கும் நான் பிரச்சாரம் செய்யவில்லை. நாங்கள் நினைத்தால், பிஜேபி விரும்பினால் இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் வேட்பாளர்களைக் கொடுக்க தயராக இருக்கிறோம், அதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்” என பேசி தமிழக பா.ஜ.கவிற்கு தான் போட்ட பிச்சையினை அடிப்படையாக வைத்து ஒரு நாக்அவுட் பஞ்ச் கொடுத்தார். இதில் பொன்னாருக்கு மாரடைப்பே வந்திருக்க வேண்டும். இருந்தாலும் கருவூலத்தின் கடவுள் என்பதால் பாரிஜியை அவர் தாங்கிக் கொண்டிருக்க வேண்டும்.
முன்னதாக தமிழிசை சவுந்தர்ராஜன் தனது உரையில் 1967-க்கு பிறகு தமிழகத்தில் இப்பொழுது தான் தேசியக் கட்சி தலைமையில் கூட்டணி வைக்கப்பட்டுள்ளது என்று மொட்டையாக பேசி சென்றிருந்தார். பாரிஜி பேச்சில் தான் அந்த தேசிய கட்சி பா.ஜ.க அல்ல ஐ.ஜே.கே என்று புரிந்தது.
அடுத்து அறிவிப்பு செய்ய வந்த தமிழிசை சவுந்தரராஜனின் முகத்தில் பாரிவேந்தரின் மருந்து குடித்த கோணல் தென்பட்டது. கடுகடுப்பாக, இல கணேசனை பேச அழைத்தார். அவர் அதை விட கடுப்பாக ஒரு பள்ளி தலைமையாசிரியர் போல கூட்டத்தை கடிந்து கொண்டு பேசினார்.
குத்துவாங்கிய பிஜேபியினர் மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் தவித்தனர். அங்கிருந்த பா.ஜ.க தொண்டர்களின் மனநிலையை இப்படி படம்பிடிக்கிறது ஒரு அம்பியின் முகநூல் குறிப்பு.
“பா.ஜ.க.விற்குக்கு இவர் தான் Sponsor. கட்டவுட் வைப்பது, போஸ்டர் அடிப்பது, விஜிபி மைதானத்தை ஏற்பாடு செய்தது போன்றவை முற்றிலும் இவர் செலவு. ஆகையால் இவர்கள் அடித்த கூத்துகளையெல்லாம் பா.ஜ.க.வினர் சகித்துக் கொள்ள வேண்டியதாயிற்று. இவரது (பாரிவேந்தரது) தேவை ஒரு சீட்.”
பொங்கச் சோறு வேணும் ஆனால் பூசாரித்தனம் பண்ணக் கூடாது என்றால் எப்படி?
நாங்கள் வித்தியாசமான கட்சி என்று சொல்லிக்கொள்ளும் பா.ஜ.க-வின் யோக்கியதை இது தான். காசு கொடுத்தால் தேர்தலில் சீட், மேடையில் இடம், கல்விக் கொள்ளைக்கு துணை எல்லாம் கிடைக்கும்.
பச்சமுத்துவின் பணமும் ஊடகமும் பா.ஜ.க வுக்கு தேவை, தன் கல்விக்கொள்ளையை பிரச்சனை இல்லாமல் விரிவுபடுத்த பச்சமுத்துக்கு பா.ஜ.க தேவை. இவர்கள் உண்மையிலேயே நேச்சுரல் அல்லையன்ஸ் தான். அந்த வகையில் மக்களின் இயற்கையான எதிரிகள் இவர்கள்தான் என்பதற்காவது இந்த நேச்சுரல் அல்லையன்ஸை நாம் பாராட்ட வேண்டுமல்லவா?
- ரவி  vinavu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக