சனி, 8 பிப்ரவரி, 2014

கலைஞர்: அரிசிக்கு சேவை வரி ! ஆனால் கோதுமைக்கு NO சேவை வரி ! ஏன் இந்த வடக்கு தெற்கு பாரபட்சம் ?

அரிசிக்கு விதிக்கப்பட்டிருக்கும் சேவை வரியை, மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.இதுகுறித்து, அவரது அறிக்கை:மத்தியில் ஆட்சியை நடத்திக் கொண்டிருப்போருக்கு, விரைவில் லோக்சபா தேர்தல் வரப்போகிறது என்ற உணர்வே, அற்றுப் போய்விட்டது போலும். அந்த அளவிற்கு பொதுமக்கள் விரும்பாத, ஏற்றுக்கொள்ள இயலாத அறிவிப்புகள், என்னென்ன உண்டோ அவற்றையெல்லாம், தொடர்ந்து சவால் விட்டுச் செய்து கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில் ஒன்றாக, தென்னக மக்களின் அடிப்படை உணவான அரிசிக்கு, வரி விதித்துள்ளனர். அதற்கு பெயர் சேவை வரியாம். சேவை என்றால் என்ன என்பதற்கு, புதிய அர்த்தத்தை மத்திய அரசு கண்டு பிடித்திருக்கிறது.அரிசியை, வேளாண்மை விளை பொருள் பட்டியலில் இருந்து நீக்கிய நிதித்துறைச் சட்டம், கோதுமையை மட்டும் அப்படி நீக்கிவிடாமல், 'வேளாண்மை விளைபொருள்' எனச் சொல்லி, அதற்கு சேவை வரியில் இருந்து விலக்கு அளித்துள்ளது.ஏன் இந்த வடக்கு தெற்கு பாரபட்சம்; கோதுமைக்கு மட்டும் வரி விலக்கு; அரிசிக்கு கிடையாதா?
அரிசியை முக்கிய உணவாக நுகர்ந்திடும் பகுதிகளில் இருந்து சென்று, மத்திய அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்களா; இல்லையா? அரிசி உண்ணும் மக்களின் ஓட்டுக்கள் தேவையில்லை என, டில்லியில் ஆட்சிக்கட்டிலில் இருப்போர் முடிவு செய்து விட்டார்களா?இந்திய மக்கள் அனைவருக்கும், சமநீதி வழங்கக் கூடிய வகையில், அரிசிக்கு மட்டும் விதிக்கப்பட்டிருக்கும் சேவை வரியை, மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.

நமது நிருபர்
dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக