வியாழன், 27 பிப்ரவரி, 2014

Mumbai நீர்மூழ்கி கப்பலில் விபத்து: கப்பல் படை தளபதி ராஜினாமா



புதுடெல்லி,
இந்திய கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பல்கள் விபத்துக்குள்ளாவது தொடர்கதை ஆகி வருகிறது.
போர்க்கப்பலில் தீ
இந்த நிலையில், மும்பை அருகே இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘ஐ.என்.எஸ். சிந்து ரத்னா’ என்ற நீர் மூழ்கி போர்க்கப்பல் நேற்று ‘திடீர்’ தீ விபத்துக்கு உள்ளானது.
இந்த தீ விபத்தில் சிக்கி 7 கடற்படை வீரர்கள் மயங்கி சரிந்தனர். அவர்கள் உடனடியாக மும்பை கடற்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்தின்போது 2 அதிகாரிகள் மாயம் ஆனார்கள். அவர்கள் கதி என்ன என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணி முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த விபத்து நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

தளபதி ராஜினாமா
இந்த நிலையில், தீ விபத்து நடந்த சில மணி நேரத்தில், ‘ஐ.என்.எஸ். சிந்து ரத்னா’ நீர் மூழ்கிக்கப்பல் தீ விபத்துக்கு தார்மீகப் பொறுப்பேற்று, கடற்படை தளபதி அட்மிரல் டி.கே.ஜோஷி நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அவருக்கு வயது 60. கடந்த 2012–ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 31–ந்தேதிதான் இந்த பதவிக்கு அவர் வந்தார். இன்னும் ஏறத்தாழ 15 மாதங்கள் பணிக்காலம் உள்ளது.
ராஜினாமா ஏற்பு
கடற்படை தளபதி அட்மிரல் டி.கே.ஜோஷியின் ராஜினாமாவை பாதுகாப்புத்துறை அமைச்சகம் உடனடியாக ஏற்றுக்கொண்டது.
இதுதொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘கடந்த சில மாதங்களாக நடந்து வந்த விபத்துக்கள், சம்பவங்களுக்கு தார்மீக பொறுப்பேற்று கடற்படை தளபதி அட்மிரல் டி.கே.ஜோஷி தனது பதவியை இன்று (நேற்று) ராஜினாமா செய்தார். உடனடியாக அரசு அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டு விட்டது’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
பொறுப்பு ஒப்படைப்பு
டி.கே.ஜோஷி ராஜினாமாவை தொடர்ந்து புதிய தளபதி நியமிக்கப்படும் வரையில், துணைத்தளபதி வைஸ் அட்மிரல் ஆர்.கே.தொவான், தற்காலிகமாக கடற்படை தளபதி பொறுப்பை கவனிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 15 ஆண்டுகளில் கடற்படை தளபதி ஒருவர் சர்ச்சைக்கிடமான சூழலில் பதவி விலகுவது இதுவே முதல் முறை ஆகும். 1998–ம் ஆண்டு பாரதீய ஜனதா கூட்டணி அரசில், ஜார்ஜ் பெர்னாண்டஸ் ராணுவ மந்திரியாக இருந்தபோது, கடற்படை தளபதி அட்மிரல் விஷ்ணு பகவத்தின் பதவி பறிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.
ஜனாதிபதியிடம் அந்தோணி விளக்கம்
‘ஐ.என்.எஸ். சிந்து ரத்னா’ நீர் மூழ்கிக்கப்பல் தீ விபத்தின் தீவிரம் கருதி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை ராணுவ மந்திரி ஏ.கே. அந்தோணி நேற்று சந்தித்துப்பேசினார்.
அப்போது ‘ஐ.என்.எஸ். சிந்து ரத்னா’ நீர் மூழ்கிக்கப்பல் விபத்துக்குள்ளானது பற்றியும், இது தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கினார்.
தொடர் கதையாகும் விபத்துகள்
பதவி விலகியுள்ள கடற்படை தளபதி டி.கே.ஜோஷியின் முழுப்பெயர் தேவேந்திரகுமார் ஜோஷி. அமெரிக்க கடற்படை கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவர். இவருக்கு சித்ரா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
டி.கே.ஜோஷி பதவி ஏற்றபின்னர், கடந்த 7 மாதங்களில் இந்திய கடற்படை போர்க்கப்பல்கள் தொடர்பான 10 சம்பவங்கள் நடந்துள்ளன. அதில் மிகப்பெரிய விபத்து, மும்பை துறைமுகத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 14–ந்தேதி ‘ஐ.என்.எஸ். சிந்துரக்ஷாக்’ என்ற போர்க்கப்பல், கடலில் மூழ்கியதாகும். இந்த விபத்தில் 18 அதிகாரிகள், வீரர்கள் பலியானார்கள். இந்த மாதத்தின் தொடக்கத்தில் ‘ஐ.என்.எஸ். ஐராவத்’ என்ற போர்க்கப்பல், தரைதட்டியதும், அதில் கமாண்டிங் அதிகாரி ஒருவரின் பதவி பறிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக