புதன், 5 பிப்ரவரி, 2014

Microsoft மைக்ரோசாப்ட் CEOவாக இந்திய-அமெரிக்கர் சத்யா நாதெல்லா


மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இந்திய - அமெரிக்கரான சத்யா நாதெல்லா நியமிக்கப்பட்டுள்ளார்.
பல மாதங்களாக நீடித்து வந்த இந்தத் தேர்வின் முடிவை மைக்ரோசாப்டின் நிறுவனர் பில் கேட்ஸ் இன்று அறிவித்தார்.
"இந்தத் தருணத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை வழிநடத்த சத்யா நாதெல்லாவைவிடச் சிறந்த நபர் யாரும் இல்லை" என்று அவர் குறிப்பிட்டார்.
"சத்யா சாதித்துக் காட்டியுள்ள தலைவர். சிறந்த பொறியியல் திறன்கள், வியாபரத்திற்கான தொலைநோக்கு, மக்களை ஒன்றாக ஒருங்கிணைக்கும் திறமை என அனைத்துத் தகுதிகளையும் கொண்டவர். தொழில்நுட்பத்தை உலக மக்கள் எப்படி, எவ்வாறு பயன்படுத்துவது என அவர் வைத்திருக்கும் பார்வையே மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு தேவை" என்று அவர் மேலும் கூறினார்.
இதுவரை வாரிய இயக்குனர்களின் தலைவராக செயல்பட்டு வந்த பில்கேட்ஸ், அந்தத் பதவியிலிருந்து விலகி, தொழில்நுட்ப ஆலோசகராக புதிய பொறுப்பை எடுத்துக் கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைவராக ஜான் தாம்ப்ஸன் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்யா பற்றி...
1969-ஆம் ஆண்டு, ஹைதராபாதில் பிறந்தவர் சத்யா நாதெல்லா. அங்கு பள்ளிப் படிப்பை முடித்தவர், பொறியியல் படிப்புக்கு மணிப்பால் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் பயின்றார். மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்ற சத்யா, விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றார். மேலும் சிகாகோ பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டமும் பெற்றார்.
முதன்முதலாக சன் மைக்ரோசிஸ்டம்ஸ் நிறுவனத்தில் சேர்ந்தார். தொடர்ந்து, மைக்ரோசாப்டில் சேர்ந்தார். வெகுவேகமாக பணியில் உயர்வும் பெற்றார்.
"பல நிறுவனங்கள் உலகத்தை மாற்ற வேண்டும் என விரும்புகின்றன. ஆனால் சிலரிடம் மட்டுமே உலகை மாற்றத் தேவையான திறன் உள்ளது. மைக்ரோசாப்ட் அத்தகைய திறனுடன் தன்னை நிரூபித்தும் உள்ளது. இதை விட பெரிய தளம் எனக்கு எங்கும் கிடைக்காது" என சத்யா நாதெல்லா கூறியுள்ளார் tamil.thehindu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக