புதன், 5 பிப்ரவரி, 2014

தென்காசி கோர்ட்டில் கலைஞர், அன்பழகன் ஆஜராக உத்தரவு !


தென்காசி வடக்கு மவுண்ட் ரோடு பகுதியை சேர்ந்தவர் முகம்மது உசேன். இவர் 9–வது வார்டு அவைத் தலைவர் பதவிக்கு போட்டியிட வேண்டி முறைப்படி விண்ணப்பித்து, அதற்கான ரசீதும் பெற்றுள்ளார். இந்நிலையில் அவர், வக்கீல் இசக்கித்துரை மூலம் தென்காசி முதன்மை மாவட்ட உரிமையியல் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
அந்த மனுவில்,   ‘’தி.மு.க.வின் 14–வது உட்கட்சி தேர்தல் தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டது. தென்காசியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இதில் 2, 8, 11, 18, 19, 24, 25, 26, 29, 30 ஆகிய 10 வார்டுகளுக்கு நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதம் உள்ள 23 வார்டுகளுக்கு முறைப்படி தேர்தல் நடைபெற்று நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சமீபத்தில் கட்சி பத்திரிகையில் விடுபட்ட வார்டு, கிளை, வட்ட கிளை நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தென்காசி நகர தேர்தல் குறித்து எந்த தகவலும் அறிவிக்கப்படவில்லை. இது ஜனநாயக நடைமுறைக்கு மாறுபட்டது.
தேர்தலை நடத்தாமல் நிர்வாகிகளை நியமித்து ஒருதலைபட்சமாக தனக்கு வேண்டிய நபர்களை பொறுப்பாளர்களாக அறிவிக்கும் வகையில், தேர்தல் ஆணையாளர் 1.2.2014 முதல் செயல்பட்டு வருகிறார். அவ்வாறு பொறுப்பாளர் பட்டியலையும் தலைமை கழகத்தில் ஒப்படைக்கப்போவதாக கூறி வருகிறார். அவ்வாறு செய்துவிட்டால் ஜனநாயகம் கேள்விக்குறியாகி விடும்.
எனவே தென்காசியில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட 10 வார்டுகளை தவிர, மற்ற 23வார்டுகளுக்கு கட்சி நிர்வாகிகள் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட வேண்டும். அதுவரை யாரையும் பொறுப்பாளர்களாக நியமிக்க கூடாது என்று தடை உத்தரவு வழங்க வேண்டும்’’என்று கூறப்பட்டிருந்தது.


அந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி கவுதமன், இது தொடர்பாக தி.மு.க. தலைவர் கலைஞர், பொதுச்செயலாளர் அன்பழகன், நெல்லை மாவட்ட தி.மு.க. தேர்தல் ஆணையாளராக செயல் பட்ட விசுவநாதன் ஆகியோர் அடுத்த மாதம் (மார்ச்) 3–ந்தேதி ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தர விட்டார்.
nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக