திங்கள், 17 பிப்ரவரி, 2014

சென்னை IIT ஐஐடியில் இந்துமத வெறியர்களின் ரவுடிக் கூச்சல் !

ஐ.ஐ.டி ஃபார் சொசைட்டி ஐ.ஐ.டி ஃபார் சொசைட்டி (IIT for Society) என்ற மாணவர்களது கூட்டமைப்பானது ‘மனித உரிமைகள் மற்றும் சமூக நல்லிணக்கத்’திற்கான கருத்தரங்கு ஒன்றை கடந்த பிப்ரவரி 10-ம் தேதியன்று சென்னை இந்திய தொழில்நுட்ப கழகத்தில் (ஐ.ஐ.டி, சென்னை) நடத்தியது. குடிமக்களுக்கான நீதி மற்றும் அமைதி என்ற மனித உரிமை அமைப்பின் செயலர் தீஸ்தா சேதல்வாத் இதில் கலந்து கொண்டு ‘மனித உரிமைகளும், சமூக அமைதியும்’ என்ற தலைப்பில்  சென்னை ஐஐடியில் உள்ள மைய விரிவுரை அரங்கில் உரையாற்றினார். 2002 குஜராத் கலவரத்திற்கு காரணமான இந்துமதவெறியர்களை நீதிமன்ற வழக்குகள் மூலம் வெளியுலக கவனத்திற்கு கொண்டு வந்ததில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது. இதனால் இவர் மீது ஆர்.எஸ்.எஸ் கும்பல் பெரும் வெறுப்புடனும், சினத்துடனும் இருந்து வந்தது.

ஐ.ஐ.டி ஃபார் சொசைட்டி – தீஸ்தா
சேதல்வாத் உரை நோட்டிஸ்
இந்நிலையில் சென்னை ஐ.ஐ.டியில் நடந்த நிகழ்வில் கலந்து கொண்டு” ’மோடி பாணி அரசியல் முன்னுக்கு வரும் இன்றைய சூழலில் முற்போக்காளர்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம், அடுத்த தலைமுறையை பாசிசத்தின் தாக்குதலில் இருந்து பாதுகாப்போம்’’ என்று தனது அரைமணி நேர உரையில் தீஸ்தா சேதல்வாத் அறைகூவல் விடுத்தார்.
ஆனால் அடுத்து நிகழ்ந்த கேள்வி-பதில் பகுதியில் ஐ.ஐ.டி மாணவர்கள் என்ற போர்வையில் இந்துமத வெறியர்கள் திட்டமிட்டு கலகம் செய்தனர். கேள்விகள் என்ற பெயரில் பல அவதூறுகளை தீஸ்தா மீது திரும்ப திரும்ப வீசினர். பல முறை அவர்களது கேள்விகளில் சொல்லப்பட்ட தகவல்களே தவறு என சேதல்வாத் சுட்டிக் காட்டியபிறகும் ஊளையிட்டு தங்களது தரத்தை  நிரூபித்துக் கொண்டது, மக்கள் பணத்தில் படித்து உயர் அறிவாளிகள் என்று நினைத்துக் கொள்ளும் அந்தக் கூட்டம். கல்வித் துறையில், அதுவும் குறிப்பாக அறிவியல், தொழில்நுட்ப துறையிலேயே மோடிக்கு இவ்வளவு ரசிகர்கள் இருப்பதிலிருந்து நாடு எத்தகைய அபாயத்தில் இருக்கிறது என்பதை உணரலாம். நிகழ்ச்சியின் இடையே அவர்களது அநாகரீக நடத்தையை பொறுக்காமல் ஆசிரியர் ஒருவரே வந்து அறிவுரை நிகழ்த்தி விட்டு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
திட்டமிட்ட ரீதியில் ஆணும் பெண்ணுமாக சுமார் முப்பது பேர் மூன்று திசைகளில் பரவலாக (திட்டமிட்டு) உட்கார்ந்து கொண்டு இந்த அராஜகத்தை நிகழ்த்தினர். அரசியல் ரீதியில் பேசியதை விட தனிப்பட்ட ரீதியில் விசமத்தனமாக அவதூறு செய்த அவர்கள், ஆணாதிக்க ரீதியில் சில வசைகளையும், இந்து தேசிய வெறியின் போதையில் வம்படியான சிற்றுரைகளையும் நிகழ்த்திய வண்ணம் இருந்தனர். கேள்விகளை விட ஊளையிட்ட நேரம் அதிகமாக இருந்தது. ஏறக்குறைய அரை மணி நேரத்தில் சேதல்வாத் தன் உரையை முடித்த பிறகும், ஒன்றரை மணி நேரம் கேள்வி-பதில் பகுதி நீடித்தது. ஓரிரு முறைகளில் இந்துமதவெறி மாணவர்கள் இந்நிகழ்வை தங்கள் விரும்பியபடி மாற்றி சீர்குலைத்தனர். ஒரு கேள்வியை முழுமையாக கேட்காமாலும், கேட்ட பின் அமராமலும்,  சேதல்வாத் பதில் சொன்னாலும் அவ்வப்போது குறுக்கிட்டு திரும்ப திரும்ப கேள்விகளை அடுக்கி ஒரு தெருச்சண்டையை போல மாற்றினர். அந்த முயற்சி பலராலும் ஆட்சேபிக்கப்படவே மூன்று நான்கு முறைக்கு மேல் அவர்கள் வாயடைக்கப்பட்டனர்.
இவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொண்ட பிறகும் சேதல்வாத்திடம் “நீங்கள் ஏன் இந்துக்கள், பெரும்பான்மையினரது அரசியல் என்று பிரித்து பார்க்கின்றீர்கள். பெரும்பான்மை, சிறுபான்மை என்று பிரிக்காமல் பொதுவாக மனிதர்கள், மனிதாபிமானம் என்று பார்க்கலாமே’’ என்றெல்லாம் கேள்வி என்ற பெயரில் முட்டாள்களுக்கே உரிய அறிவுரையெல்லாம் கூறினர். உடனே கை தட்டுவதற்கு முப்பது பேரும் தயாராக இருந்தனர். அவர்களில் ஒரு பெண் கேள்வி கேட்கையில் ‘”உங்கள் மீது தொடரப்பட்ட வழக்கு மோசடியானதா என்றெல்லாம் எனக்கு தேவையில்லை. நிபந்தனைகளுக்குட்பட்ட ஜாமீனில் மாத்திரமே வெளிவரத் தக்க அந்த மோசடி வழக்கில் ஜாமீனுக்கு மனுப் போட்டுள்ளீர்களா?” என நக்கலாகக் கேட்டார்.
மாயா கோத்னானி, பாபு பஜ்ரங்கி
97 பேர் கொல்லப்பட்ட நரோடா பாட்டியா படுகொலை வழக்கில் குற்றவாளிகளாக ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட மோடி அரசின் முன்னாள் அமைச்சர் மாயா கோத்னானி மற்றும் பஜ்ரங் தள் தலைவர் பாபு பஜ்ரங்கி.9
‘2002 குஜராத் படுகொலைகளைப் பற்றி பேச குஜராத் போக வேண்டியிருப்பதால் அவசியம் கருதி மனு போட்டு நான் வெளியூர்களுக்குப் பிரயாணம் செய்ய அனுமதி பெற்று விட்டேன். சட்டம் இந்த அளவில் தான் என்னை அனுமதித்துள்ளது. அதனை நான் பயன்படுத்துகிறேன். இப்போதும் சரி, எப்போதும் சரி தேவைப்படும் போது முன் ஜாமீன் பெறுவேன்’’ என்று பதிலளித்தார் சேதல்வாத்.
பாபர் மசூதி இடிப்பிலிருந்து, நாடெங்கிலும் பல்வேறு கலவரங்களில் சிறுபான்மை மக்களை வேட்டையாடும் இந்துமதவெறிக் கூட்டம்தான் சட்டத்தை காலில் போடும் செருப்பு அளவுக்கு கூட மதிப்பதில்லை என்பதை சேதல்வாத் கூறத் தவறி விட்டார். அடுத்து ‘‘குல்பர்கா காலனியை ஏன் தொடர்ந்து பேசி ஒரு அருங்காட்சியமாக மாற்ற முயல்கிறீர்கள்?’’ என்று கேள்வி எழுப்பினர். குல்பர்கா காலனி அருங்காட்சியகமா என அங்கு உயிர்நீத்த இசுலாமியர்களைக் கேட்டால் தெரிந்து விடும். ஆனால் இந்துமதவெறியர்களுக்கு இதெல்லாம் ஒரு பிரச்சினை இல்லை. “நரோதா பாட்டியாவில் வீரதீரமாகப் பாசிசத்தை எதிர்த்துப் போரிட்ட பெண்களைப் பாருங்கள். என்றுமே அந்த வரலாற்றை உலகுக்கு அறிவிக்கவே இவ்வாறு செய்கிறோம். இதில் தவறு என்ன?’’ என்று சாட்சியாய் பதில் கொடுத்தார் தீஸ்தா. கேள்விகள் என்ற பெயரில் வக்கிரங்களை முன் வைத்தனர்.
குறிப்பாக கேள்வியே “நீங்கள் சொன்ன கதை…’’ என்று சேதல்வாத் கூறியதெல்லாம்கற்பனை என்று நிறுவும் விதமாகத்தான் இருந்தது. ‘‘எனக்கு கதை சொல்ல வேண்டிய அவசியமில்லை. நான் ஒரு பத்திரிகையாளனாக அவர்கள் சொன்னதைப் பதிவு செய்தேன்..’’ என்று சேதல்வாத் பதில் சொன்ன போதும், அதனை மறுத்து அதற்கு டைம்ஸ் ஆஃப் இந்தியாவை ஆதாரம் என்று முன்வைத்தனர். இந்து பெரும்பான்மையினரது சமூக வாழ்வு பெரும் ஆபத்தில் இருப்பதாகவும் கூச்சலிட்டனர். முதலில், ஆதாரங்கள் என்று அவர்கள் சொல்ல வருபவை எதுவும் வெளி வரவே இல்லை என மறுத்து, “பொய் சொல்வது உங்களுக்கு வழக்கம் தானே’’ என்றும் சூடாகப் பதில் சொன்னார் தீஸ்தா. மேலும் தீஸ்தா சேதல்வாத், இம்மியளவும் அச்சமில்லாமல் நேருக்கு நேர் தலை நிமிர்ந்து அவர்களுக்கு நறுக்காகப் பதில் சொல்லிய  தருணங்களில் மாத்திரம் ஜனநாயக சக்திகள் ஓரளவு கை தட்டினர். மற்றபடி மொத்த கேள்வி நேரப் பகுதியையும் மோடி ரசிகர்கள்தான் கைப்பற்ற முயன்றனர். அதுவே அன்றைய அவலமும் என்றாலும் அதை தடுத்த நிறுத்துமளவு கூட்டத்தின் ஜனநாயக உணர்வு இல்லை என்பது வருத்தமான விசயம்.
அடுத்து ஒருவர் ‘‘எஸ்.ஆர்.எம் கல்லூரியில் மோடி வந்து பட்டம் வழங்கியதைப் பற்றி என் நண்பன் குறை கூறினான். நான் நேற்று என் பட்டத்தை மோடியிடமிருந்து தான் பெற்றேன்’’ என்றார். ‘‘அதற்காக வெட்கப்படுங்கள்’’ என்றார் தீஸ்தா சேதல்வாத். இதையெல்லாம் வைத்து அந்த கூட்டம் ஊளையிட்டபடியே இருந்தது.
தீஸ்தா சேதல்வாத்
குஜராத் படுகொலைகள் தொடர்பான வழக்குகளில் தொடர்ந்து போராடி வரும் தீஸ்தா சேதல்வாத் (கோப்புப் படம்)
சில உருப்படியான கேள்விகளும் இருந்தன. குறிப்பாக மாணவர் ஒருவர் இப்படி கேட்டார், “இந்தியாவின் மிக உயர்ந்த அறிவாளி மாணவர்கள் கற்பதாகச் சொல்லப்படும் அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சியெல்லாம் நடக்கும் சென்னை ஐ.ஐ.டிக்குள் மட்டும் 3 கோவில்கள் இருக்கின்றன. இது அவமானகரமானதில்லையா? மற்ற மதத்தவர்க்கு வழிபாட்டு இடங்கள் இல்லையே?’’ எனக் கேட்டார். ‘’இதுதான் நமது ஜனநாயகத்தின் வெளிப்பாடு’’ என்று பதில் சொல்லி கிண்டல் செய்தார் சேதல்வாத்.ஆனாலும் இந்த மதவெறி மற்றும் முட்டாள்கள் கூட்டம் இதற்கெல்லாம் அசருவதில்லை. பேச்சாளரது பதிலுக்கு முன்னரே ஊளையிடத் துவங்கும் டைம்ஸ் நவ் அருணாப் கோஸ்வாமியின் வாரிசுகள் இவர்கள்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு 1948-லேயே தடை நீக்கப்பட்டதைப் பற்றி ஊளையிட்ட அக்குரங்குப் படைகளுக்கு அது எப்படி பெறப்பட்டது என்ற உண்மை தெரிந்திருக்க நியாயமில்லை. மன்னிப்பு, கெஞ்சுதல், எழுதிக் கொடுத்தல் என்று “இனி கலாச்சார அமைப்பாக மட்டுமே தொடருவோம்” எனக் கோல்வால்கர் காலில் விழாத குறையாக எழுதிக் கொடுத்துத்தான் தடை நீக்கப்பட்டது.
இந்தச் சூழலில் ஒரு மாணவி “தீஸ்தா என்ற தனிநபரைத் தாக்குவதற்காகவே இந்த ஆட்கள் கேள்வி கேட்கிறார்கள்’’ என்று நச்சென்று  கூறினாலும் அது இந்துமதவறியர்களுக்கு கேட்கவும் செய்திருக்காது.
ஒன்று மட்டும் நிச்சம், இந்துமதவெறியர்களை சட்டம், நீதி, ஜனநாயகத்தின் பெயரால் ஒரு போதும் தண்டிப்பதோ, ஒரு கலந்துரையாடல் மூலம் திருத்துவதோ முடியாது. அவர்களுக்கு புரியும் மொழியில் புரியும் விதத்தில் அவர்கள் இருக்கும் எல்லா இடங்களிலும் உழைக்கும் மக்கள் ஒரு போரையே நடத்த வேண்டியிருக்கும். அத்தகைய தெருச்சண்டைகள் மூலம்தான் இவர்களுக்குரிய வரலாற்றுச் சமாதியை நம்மால் எழுத முடியும். எழுதுவோம்.
-  வசந்தன். vinavu.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக