திங்கள், 17 பிப்ரவரி, 2014

இரண்டு படகுகளுக்கும் இடையில் சுருக்குமடி, இரட்டைமடி போன்ற வலைகளைக் கட்டி அவர்கள் இழுத்துச்செல்லும்போது அதில் தப்பிக்காத மீனே இருக்கமுடியாது.

கடல் வளம் அழிக்கும் தரகு முதலாளிகள்! கைக்கூலிகளாக நிற்கும் அரசு அதிகாரிகள்!
இழந்துகொண்டிருக்கும் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற, தொடங்கியிருக்கிறது நாட்டுப்படகு மீனவர் போராட்டம்!
மனிதனின் முதல் உணவு மீன் என்று பல ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். மனிதனின் பரிணாம வளர்ச்சியில் பெரும்பாலும் அவ்வளவாக மாறாத ஒரு உணவு வகை உள்ளதென்றால் அது மீனுணவாகத்தான் இருக்க முடியும். விதவிதமான மீன்களை விதவிதமாகச் சமையல் செய்து ருசித்து உண்ணும் மக்களில் பெரும்பாலோர் மீனவரின் வாழ்நிலை குறித்து சாதாரணமாகக் கூடச் சிந்திப்பதில்லை. எல்லாத் தொழிலாளிகளின் நிலையினைப் போலவேதான் மீன்பிடித்தொழிலாளர்களின் அவலநிலையும் உள்ளது.
மீன்பிடித்தொழில் செய்பவர்களில் இரண்டு வகையினர் உள்ளனர். ஒன்று, சிறிய அளவுகளிலான நாட்டுப்படகுகளைக் கொண்டு மீன்பிடிப்பவர்கள். இரண்டு, பெரிய அளவிலான மோட்டார்களைக் கொண்டு இயக்கப்படும் விசைப்படகுகளைக் கொண்டு மீன்பிடிப்பவர்கள். தொடக்க காலங்களில் கட்டுமரங்கள் மூலமாகவே மீனவர்கள் மீன்பிடித்து வந்தனர். அதன் பின்னர் கட்டுமரமானது சிறிய படகுகளானது. இதைத்தான் நாட்டுப்படகுகள் அல்லது வல்லம் என்று அழைக்கிறார்கள்; அதன் பின்னர் இப்படகுகளில் சிறிய மோட்டார் பொருத்தப்பட்டது.
பின்னர் பெரிய அளவு சக்திகளைக் கொண்ட மோட்டார்கள் பொருத்தப்பட்ட விசைப்படகுகள் வந்தன. அதுபோலவே மீன்களைப் பிடிக்கப் பயன்படும் வலைகளும் கூட சாதாரணமான வலைகளிலிருந்து இன்று மிகப்பிரம்மாண்டமான இரட்டைமடி வலைகள் மற்றும் சுருக்குமடி வலைகள் போன்றவைகள் வரை பயன்பாட்டுக்கு வந்துள்ளன. பிரச்சினையும் இதிலிருந்தே ஆரம்பமாகிறது.
பாம்பன் பாலம்
பாம்பன் பாலம்
இப்போது போராட்டம் நடத்துபவர்கள் நாட்டுப்படகுகளின் மூலமாக மீன்பிடித்தொழில் செய்துவருகின்ற மீனவத் தொழிலாளிகள். விசைப்படகுகள் மூலமாக மீன்பிடிப்பவர்கள் சுருக்குமடி, இரட்டைமடி போன்ற வலைகளால் ஒட்டுமொத்த மீனவளத்தையும் அள்ளிக்கொண்டு போய்விடுகிறார்கள். இதனால் நாட்டுப்படகு மீனவர்கள் பிடிப்பதற்கு மீன்கள் இல்லாமல் போய் விடுகிறது. இதனால் இவர்களின் தொழிலும் வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது. எனவே, சுருக்குமடி, இரட்டைமடி போன்ற வலைகளைப் பயன்படுத்தக் கூடாது என கோரிக்கை வைத்து இவர்கள் இப்போது போராட்டம் நடத்துகிறார்கள். ஆனால், இது முதன் முறையாக நடத்தப்படும் போராட்டம் அல்ல.
1983 ஆம் ஆண்டில்,
  1. சுருக்குமடி, இரட்டைமடி போன்ற வலைகளைப் பயன்படுத்தக்கூடாது;
  2. வாரத்தில் நான்கு நாட்கள் நாட்டுப்படகு மீனவர்களும் மூன்று நாட்கள் விசைப்படகு மீனவர்களும் மீன்பிடித்துக் கொள்ள வேண்டும்;
  3. இறால் பண்ணைகளை அமைக்கக்கூடாது
கழுத்தறுக்கும் மின்விசைப்படகு
கழுத்தறுக்கும் விசைப்படகு
என்கிற கோரிக்கைகளுக்கான நீண்ட போராட்டத்தை நாட்டுப்படகு மீனவர்கள் நடத்தினர். மிகவீச்சாக நடைபெற்ற இப்போராட்டம் 1995 – 96 களில் விசைப்படகுகளுக்குத் தீ வைப்பது வரை போனது. பிறகு, நான்கு – மூன்று நாட்கள் கோரிக்கை மட்டும் நிறைவேறியது. அதன்பின்னர் நடைபெற்ற போராட்டங்கள் மூலமாக சுருக்குமடி, இரட்டைமடி போன்ற வலைகளைப் பயன்படுத்த அரசு தடைவிதித்தது. ஆனாலும், இந்த வலைகளை விசைப்படகு உரிமையாளர்கள் தொடர்ந்து சட்டவிரோதமாகப் பயன்படுத்தியே வருகிறார்கள். இதுதான் தொடர்ச்சியாகப் பல்வேறு பிரச்சினைகள் உருவாகக் காரணமாகிறது.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது, பிடித்துச் செல்லப்படுவது பற்றி நாம் தினமும் செய்திகளில் படிக்கிறோம். இதை வைத்து ஓட்டுக் கட்சிகள் நடத்தும் நாடகங்களையும் நாமறிவோம். அவ்வாறு தாக்கப்படுகிற, பிடித்துச் செல்லப்படுகிற தமிழக மீனவர்கள் விசைப்படகு மீனவர்கள்தான். சுருக்குமடி, இரட்டைமடி போன்ற வலைகளை இவர்கள் பயன்படுத்துவதால் இலங்கைப்பகுதியில் உள்ள மீன்களையும் இவர்கள் அரித்துக்கொண்டு வந்துவிடுகிறார்கள். இதனால் இலங்கைப்பகுதி நாட்டுப்படகு மீனவர்களும் பெரும் இழப்பிற்கு ஆளாகிறார்கள். கடந்த 27-ம்தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இலங்கைத் தமிழ்மீனவர்களின் கோரிக்கைகூட இந்த சுருக்குமடி, இரட்டைமடி போன்ற வலைகளைத் தமிழக மீனவர்கள் பயன்படுத்தக்கூடாது என்பதுதான். தொழிலாளிகளாய் உள்ள நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கிற வேலையைத்தான் இந்த விசைப்படகு மீனவர்கள் செய்கிறார்கள்.
போராடும் மீனவத் தொழிலாளர், பாம்பன்
போராடும் மீனவத் தொழிலாளர், பாம்பன்
இராமநாதபுரம், மற்றும் புதுக்கோட்டைப் பகுதிகளில் விசைப்படகு வைத்துள்ளவர்கள் சுமார் 2,500 பேர். ஒரு விசைப்படகின் விலை குறைந்தபட்சம் முப்பது லட்சத்திலிருந்து ஐம்பது லட்சம் ரூபாய் வரை ஆகிறது. இவற்றின் உரிமையாளர்களாக மீனவர் சங்க நிர்வாகிகளும், ஓட்டுப்பொறுக்கி கட்சிகளின் பினாமிகளும் சிலர் இருக்கின்றார்கள். இவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகளைச் சொந்தமாகக் கொண்டுள்ள முதலாளிகள். கடலுக்கே செல்லாமல் கூலித் தொழிலாளர்களைப் பயன்படுத்தி பல லட்சம் ரூபாய்களைத் தினந்தோறும் சம்பாதிக்கும் முதலாளிகளாக இவர்கள் உள்ளனர்.
நாட்டுப்படகு வைத்துள்ளவர்கள் யார்?
இராமநாதபுரம், மற்றும் புதுக்கோட்டைப் பகுதிகளில் மட்டும் நாட்டுப்படகு வைத்துள்ளவர்கள் சுமார் 25,000 பேர். இதில் பாம்பன் பகுதியில் மட்டும் சுமார் 5,000 படகுகள் உள்ளன. 5 தொழிலாளர்கள் சம்பளம் ரூபாய் 2,500, டீசல் செலவு ரூபாய் 5,000 ஆக ஒரு நாள் கடலுக்குப் போகவேண்டுமென்றால் அதற்கான செலவே குறைந்தபட்சமாக ரூபாய் 7,500 தேவைப்படுகிறது. கடலுக்குப்போய்விட்டு வெறும் படகாகக் கரைக்குத் திரும்பினால் அன்று 7,500மும் நட்டம். விசைப்படகுக்காரர்கள் வலைகளைப் போட்டு இழுத்தபிறகு அந்த இடத்தில் ஓரளவாவது மீன்கள் வர சுமார் ஏழு நாட்களாகும். வலைகளை விரித்து சுமார் ஆறுமணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்து இழுத்தால்தான் நாட்டுப்படகுக்காரர்களுக்கு ஓரளவு மீன்களாவது கிடைக்கும். ஆனால், விசைப்பட்குக்காரர்கள் இரண்டே மணிநேரத்தில் மொத்தத்தையும் இழுத்துக் கொண்டு வந்துவிடுவார்கள்.
கருவாடாகிய மீன்
கருவாடாகிய மீன்
விசைப்படகுகள் பயன்படுத்துவதில் எந்தப்பிரச்சினையும் இல்லை. ஆனால், அதில் சுருக்குமடி, இரட்டைமடி போன்ற வலைகளைப் பயன்படுத்துவதுதான் பிரச்சினை. இவ்வலைகளைப் பயன்படுத்துவதால் நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தக்கடலின் மீன்வளமே அழிகிறது. இந்தியா முழுவதுமே இப்படித்தான் நடக்கிறது. இரண்டு விசைப்படகுகளை அருகருகே நிறுத்தி இரண்டு படகுகளுக்கும் இடையில் சுருக்குமடி, இரட்டைமடி போன்ற வலைகளைக் கட்டி அவர்கள் இழுத்துச்செல்லும்போது அதில் தப்பிக்காத மீனே இருக்கமுடியாது. மீன்கள் உள்ளிட்ட பல்வேறு கடல்வாழ் உயிரினங்கள் இதில் பிடிபடுகின்றன. அழிபடுகின்றன. அதுமட்டுமல்லாமல், இராமேஸ்வரத்தைச் சுற்றியுள்ள பல தனியார் தீவுகளில் இளைப்பாறுவதற்காகக் கூட நாட்டுப்படகு மீனவர்கள் நிற்க முடியாது, தப்பித்தவறி நின்றுவிட்டால் 500, 1000 தண்டம் கட்டவேண்டும். அதுபோல இவர்களின் வலைகளில் பால்சுறா எனப்படும் மீன் இனம் சிக்கினால் கைதுசெய்து விடுகிறார்கள். எத்தனையோதரம் அரசிடம் முறையிட்டும் எதுவுமே நடக்கவில்லை என்கிறார், போராட்ட ஒருங்கிணைப்பாளரும் பாம்பன் நாட்டுப்படகு மீனவர் முன்னேற்ற சங்கத் தலைவருமான அருள்.
அரசின் நிலை என்ன?
மீனவத்தொழிலாளர்
மீனவத்தொழிலாளர்
இது சட்டவிரோதமான செயல். இப்படியான சட்டவிரோதமான செயல்கள் நடப்பது அரசிற்கும் தெரியும். இருப்பினும் கூட, மாவட்ட நிர்வாகமும் சரி, மீன்வளத்துறையும் சரி, தமிழக அரசும் சரி, இதைக் கண்டுகொள்வதே இல்லை. மீன்பிடித்தொழிலாளிகளின் நலன்களை அலட்சியப்படுத்துகிறார்கள். விசைப்படகு மீனவர்களால் அரசு அதிகாரிகளுக்குக் கட்டப்படும் கப்பம் ஒரு படகிற்கு ரூபாய் 5,000. இது ஒரு நாளைக்கு மட்டும்தான். இப்போது நடைபெறும் நாட்டுப்படகு மீனவரின் வேலைநிறுத்தப் போராட்டத்தினைக் காட்டிக்கூட அதிகாரிகள் கப்பத்தொகையைக் அதிகமாகக்கேட்கிறார்கள். எல்லாத்துறைகளிலும் தரகு முதலாளிகளுக்கு ஆதரவாகவும், உள்நாட்டுத் தொழிலாளர்களுக்கு எதிராகவும் இருப்பதை தனது கொள்கையாக வைத்திருக்கும் மத்திய, மாநில அரசுகள்தான் விசைப்படகுத் தரகு முதலாளிகளுக்கு ஆதரவாக இருக்கும் இந்தக் குற்றத்திற்கும் உடந்தையாக இருக்கின்றன.
இலங்கையின் மீதான தனது மேலாதிக்க நலன்களுக்காக கச்சத்தீவுப்பகுதியில் மீன்பிடிக்கும் உரிமை இல்லையென்று தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை காவு கொடுத்துள்ளது மத்தியிலுள்ள காங்கிரஸ் அரசாங்கம்.
தீர்வு என்ன?
வெல்வோமா
வெல்வோமா
மீனவர் பிரச்சினை என்பது வெறும் மீனவர்களுக்கான பிரச்சினை மட்டுமல்ல. அது ஒட்டுமொத்தத் தொழிலாளர் வர்க்கத்தின் பிரச்சினை. போலிக் கம்யூனிஸ்ட்டுக் கட்சிகளின் சங்கமோ அல்லது தனித்தனியான நபர்களின் முயற்சியால் மட்டுமே செயல்படுகிற சங்கமோ இப்பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க முடியாது.
கடலினிடையே மீன்கள் நீந்திக்கொண்டிருக்கின்றன. அதேபோல தொழிலாளி வர்க்கத்தினரிடையே நீந்தும் மீன்களாக மீனவர்கள் முன்வரவேண்டும்.
ஒருபுறம் விசைப்படகு முதலாளிகளின் சட்டவிரோத அக்கிரமம்; மறுபுறம் வாழ்வாதாரமான கோரிக்கைகளைக்கூட அலட்சியப்படுத்தும் அரசு, இவைகளுக்கிடையில் கரையில் போடப்பட்ட அனாதை மீனாகத் துடிக்கும் நாட்டுப்படகு மீனவர்களுக்கு உடனடியாகத் தேவைப்படுவது ஒரு புரட்சிகரமான சங்கம்தான். புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி போன்ற புரட்சிகர சங்கங்களை மீனவர்கள் தொடங்குவதனால் மட்டுமே அவர்களின் பிரச்சினைகளுக்காக அரசியல் ரீதியில் அணிதிரண்டு சமரசம் செய்யாமல் போராட முடியும்.
- தகவல்
புதிய ஜனநாயகம் செய்தியாளர். vinavu .com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக