வியாழன், 13 பிப்ரவரி, 2014

இந்தியா இதுவரை கண்டிராத மனநோய் பீடித்த மதவாத சர்வாதிகாரி :அந்தப் பொண்ணு எப்படியாவது ஏமாத்திட்டு ஓடிடுவா”


2014 நாடாளுமன்றத் தேர்தல் போட்டியில் நிற்பதற்கு முன்பே ஜெயித்துவிட்டதாக நினைத்துக்கொண்டிருந்த பாரதிய ஜனதா கட்சியின் நினைப்பு ஒரு பெண் விவகாரத்தால் தடைபடுகிறது. பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளரல்ல, பிரதமரே அவர்தான் என்று ஊடகங்கள் சித்தரித்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக காங்கிரசுக்கு லட்டு மாதிரியான ஒரு பிரச்சினை கிடைத்திருக்கிறது. குஜராத் அரசாங்கம் 2009இல் சட்ட விரோதமாக ஒரு பெண்ணின் படுக்கையறை வரை உளவு பார்த்த விவகாரம், அதில் நேரடியாகத் தொடர்புடைய அப்போதைய பா.ஜ.க. உள்துறை அமைச்சர் அமித் ஷாவைத் தாண்டி, நரேந்திர மோடி ‘சாஹேபை’யும் பதம் பார்க்கிறது.

ஆறு மாதங்களுக்கு முன்பு குஜராத் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் 267 தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய இரண்டு பென் டிரைவ் டிஜிட்டல் ஆவணம் தாக்கல் செய்யப்பட்டது. ‘மாதுரி’ என்று புனை பெயரிடப்பட்ட ஒரு பெண்ணின் அத்தனை நடவடிக்கைகளையும் கண்காணிக்குமாறு உளவுத் துறை போலீஸாருக்கு அமித் ஷா ஒரு சட்ட விரோத வாய்மொழி உத்தரவு தருகிறார். அந்த உத்தரவையும் அது தொடர்பாக அவர் செய்த தொடர்ச்சியான அத்தனை தொலைபேசி உரையாடல்களையும் உஷாராகத் தனது செல்பேசி மூலம் பதிவு செய்து வைத்திருந்திருக்கிறார் அந்தக் காரியங்களை நிறைவேற்றிய காவல் துறை அதிகாரிகளுள் ஒருவரான ஜி.எல்.சிங்கால். இத்தனைக்கும் மாதுரி என்று புனைபெயரிடப்பட்ட மான்சி சோனி ஒன்றும் கண்காணிப்பிற்குரிய தீவிரவாதியோ, அத்தகைய சந்தேகங்களை எழுப்பும் பின்புலம் கொண்டவரோ அல்ல. சில குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால் 2004இல் 27 வயதாக இருந்த போதிருந்தே குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு நன்கு பரிச்சயமானவர்தான் மான்சி. அரசின் அழகுபடுத்தும் திட்டங்கள் பலவற்றுக்கான வடிவமைப்பாளராகவும் அத்தகைய அழகுபடுத்தும் திட்டங்கள் பலவற்றின் ஒப்பந்தங்களைப் பெற்றவராகவும் இருந்தவரும்கூட.
அப்படிப்பட்ட மான்சி சோனி எங்கெங்கு செல்கிறார், யாரிடம் பேசுகிறார், அவர் ஹோட்டலின் படுக்கை யறையில் இருக்கும்போது உடன் யாராவது இருக்கிறார்களா, பொது இடத்தில் யாரெல்லாம் அவரைச் சந்திக்கிறார்கள், விமானத்தில் பயணிக்கும் போது அவருக்குப் பக்கத்து இருக்கையில் அமர்பவர் யார், அந்தப் பயணிக்கும் மான்சிக்கும் தொடர்பு உள்ளதா என்றெல்லாம் ஒரு மாநிலத்தின் உளவுத் துறை நோட்டம் விடும் அவசியமென்ன? அப்போதைய குஜராத் உள்துறை அமைச்சர் அமித் ஷா அப்படிப்பட்ட சட்ட விரோத உத்தரவைப் பிறப்பிக்கும் அவசியமென்ன? ’சாஹேப்’ கேட்கிறார் என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்லும் அந்த ‘சாஹேப் யார்? அமித் ஷாவின் காட் ஃபாதர் நரேந்திர மோடிதான் அந்த சாஹேப்’ என்று கூறப்படுவது சரியா? அந்த சாஹேபுக்கு குஜராத் அரசுடன் அதிகாரபூர்வ உறவு வைத்திருந்த ஒரு பெண்ணின் அந்தரங்கத்தை இவ்வளவு நோண்டிப் பார்க்கும் அவசியம் என்ன?
 தினம் ஒரு புது அம்பலம் வந்துகொண்டிருக்கும் இந்த குஜராத்தின் உளவு விவகாரத்தில் குஜராத் ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரதீப் ஷர்மா ஒரு புதிய திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கிறார். உச்சநீதிமன்றத்தில் இப்போது புதிதாக ஒரு வழக்கு தொடுத்துள்ள அவர், மான்சி சோனிக்கும் மோடிக்கும் இருந்த நெருக்கத்தை அறிந்தவன் என்பதால், அதை நிரூபிக்கும் சி.டி. ஆதாரம் தன்னிடமிருப்பதாகத் தவறாக எண்ணிக்கொண்டு தன் மீது பழிவாங்கல் நடவடிக்கைகளில் குஜராத்தின் மோடி அரசு இறங்கியதாக அவர் குற்றம்சாட்டுகிறார். பூனைக் குட்டி இப்போது கிட்டத்தட்ட வெளியே வந்துவிட்ட மாதிரிதான். ஆனால் இது வெறும் மோடிக்கான அடியாக நின்றுவிடாது என்பதால், இந்த பிரச்சினையின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.ஸின் மோடி ஆதரவாளர்கள் பிரம்மப்பிரயத்தனப்படு கிறார்கள்.
குஜராத் இளம் பெண் உளவு விவகாரத்தில் தனது பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் வெள்ளை குர்தாவில் கறை விழுந்தால் பா.ஜ.க. பொறுத்துக் கொள்ளுமா? ஒரு பெண் விவகாரத்தை இன்னொரு பெண் விவகாரத்தால் மூடி மறைக்க அவர்களுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது. கோவாவில் வைத்து ‘தெஹல்கா’ பத்திரிகை ஆசிரியர் தருண் தேஜ்பால் தனக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்ததாக அப்பத்திரிகையின் பெண் செய்தியாளர் ஒருவர் சக பத்திரிகையாளர்களுக்கு மின்னஞ்சல் செய்திருக்கிறார். உடனே கோவாவின் பா.ஜ.க. அரசு வெகுண்டெழுந்துவிட்டது. ஒரு பெண்ணுக்கு நடக்கும் இப்படிப்பட்ட அநியாயங்களின் போது புகார் தரப்படும் வரை காத்திருக்க முடியாது என்று கூறி, பாதிக்கப்பட்ட பெண் புகார் மனு தரும் முன்பே சுயமாகப் புகாரைப் பதிவு செய்துவிட்டது. இளம் பெண் உளவு விவகாரத்தில் மோடி மீது கவனம் கொண்டிருந்த தலைப்புச் செய்திகளை வேறு பக்கம் திருப்பியதாக ஒரு வேளை அவர்கள் நினைத்திருந்தால் அங்குதான் ஒரு திருப்பம். அந்த ஆர்வக் கோளாறின் மூலம் காங்கிரஸின் வலையில் பா.ஜ.க. வசமாக சிக்கிக்கொண்டுவிட்டது: “கோவாவில் ‘தெஹல்கா’ ஆசிரியர் ஒரு பெண்ணுக்கு இழைத்த குற்றத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம். பெண்களுக்கு எதிரான எந்தக் குற்றத்தையும் நாங்கள் சகித்துக்கொள்ள மாட்டோம். ஆனால் ஆளுக்கொரு நியாயம் இருக்க முடியுமா? குஜராத்திலும் ஒரு பெண்ணுக்கு (மான்சி சோனி) இழைக்கப்பட்ட சட்ட விரோத காரியத்தை விசாரிக்க வேண்டும். கோவாவில் எப்படிப் புகார்தாரரே இல்லாவிட்டாலும் சுயமாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதோ அவ்வாறே மான்சி சோனி புகார் தரக் காத்திருக்காமல் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும். உச்சநீதிமன்ற நீதிபதியை வைத்து விசாரணை நடத்த வேண்டும்.” கடந்த காலத்தில் மோடி செய்த தவறுகளில் ஒன்று, காங்கிரசுக்கு வசதியாகியிருக்கிறது. குஜராத் இளம் பெண் உளவு விவகாரத்தில் இவ்வளவு காலம் பா.ஜ.க. உருவாக்கி வைத்திருந்த தப்பிக்கும் வழிகள் அடைபடுவது போல் தெரிகிறது.
“நேரங்கெட்ட நேரத்தில் என் மகள் வெளியே நடமாட வேண்டியிருக்கும் என்பதால் எனது மகளைக் கவனித்துக்கொள்ளும்படி எனது குடும்ப நண்பரான நரேந்திர மோடியிடம் வாய்மொழி வேண்டுகோள் வைத்தேன்” என்று கூறிய மான்சி சோனியின் தந்தை பிரான்லால் சோனியின் அறிக்கையை வைத்துத்தான் இந்த வழக்கை முடக்கலாம் என பா.ஜ.க. எண்ணியிருந்திருக்கும். ஆனால் அதில் வியூகபூர்வமான இரண்டு தப்பிதங்களில் சிக்கிக்கொண்டது. ஒன்று, குஜராத் இளம் பெண் உளவு விவகாரத்தில் உளவுத் தகவல்களைக் கோரிய அந்த சாஹேப் யார் என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாமலிருந்தது. தனது மகளை உளவு பார்க்குமாறு நான்தான் மோடியிடம் கூறினேன் என பிரான்லால் கூறியது, மோடிதான் அந்த சாஹேப் என உறுதியாகிவிட்டது. இது பா.ஜ.க.வுக்கும் மோடிக்கும் பெரிய சறுக்கல். இரண்டு, பாதிக்கப்பட்டவர் அல்லாமல் வேறு யார் சொன்னாலும் அல்லது பாதிக்கப்பட்டவரே மாற்றிச் சொன்னாலும்கூட தடுக்க முடியாத அளவுக்கு இந்தப் பிரச்சினை வேறு கட்டத்திற்கு நகர்ந்துவிட்டது. </>தொலைபேசி உரையாடல் பதிவுகளைக் கேட்கும்போது ஒன்று தெளிவாகத் தெரிகிறது. ஒரு பெண்ணின் பாதுகாப்பை உறுதிசெய்யும் உளவு வேலையாக அல்லாமல் அந்தப் பெண் மூலம் வேறு ஏதோ ஒன்று நடந்துவிடாமல் தடுப்பதற்கான உளவுபோல் அது தெரிகிறது. எவ்வளவு விளக்கம் கொடுத்தும் அடங்காத இந்தப் பிரச்சினையில் பா.ஜ.க மேலும் ஒரு விளக்கம் கொடுத்தது. ஒரு கிழவனை (ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷர்மா) லவ் பண்ணியதால்தான், அந்தப் பெண்ணைப் பாழுங்கிணற்றிலிருந்து காப்பாற்றுவதற்காக மோடி அவ்வாறு செய்தார் என பா.ஜ.க.வினர் புது விளக்கம் கொடுக்கிறார்கள். ஆனால் ஒரு குடும்பத்தின் மானத்தைக் காப்பாற்றத்தான் மோடி தனது ஒட்டுமொத்த உளவுப் படையை ஒரு பெண்ணின் பின்னால் முடுக்கிவிட்டாரா? பதிவான தொலைபேசி உரையாடல்களில் மோடி தரப்பின் பயமும் பரிதவிப்பும் கோபமும் தெரிவது வேறுவிதமான எண்ணங்களை ஏற்படுத்துகிறது. குடும்ப நண்பரின் ‘குடும்ப மானத்தை’ காப்பதற்காக மோடி உதவி செய்யலாம். ஏன் பதட்டம் அடைய வேண்டும்?
மான்சி சோனியுடனான மோடியின் தொடர்பை அறிந்ததால், தனது பிம்பத்திற்குத் என் மூலமாகப் பங்கம் வந்துவிடும் என்பதால் என்னை வழிக்குக் கொண்டு வருவதற்காக மோடி என்மீது பழிவாங்கும் நடவடிக்கைகளைப் பிரயோகித்ததாக பிரதீப் ஷர்மா 2011இல் ஒரு வழக்கு தொடர்ந்தார். வழக்கு ஆவணத்தில் அவர் சேர்த்திருந்த சில பகுதிகள் நீக்கப்பட வேண்டும் என் மோடி தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் கோரி அதில் வெற்றியும் பெற்றுவிட்டனர். எதற்காக அந்தப் பகுதிகளை நீக்கக் கோரினார்கள்? தனது அரசியல் கனவுகளின் மீது தீவிரமான பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான அம்சங்கள் அந்தப் பத்தியில் இருப்பதால், நீதிமன்ற விசாரணை நேர்மையாகவும், பாகுபாடின்றியும் நடப்பதை அது தடுக்கிறது என்பதால் ‘அவற்றை நீக்க வேண்டு’மென கோரியிருந்தது மோடி தரப்பு. மோடிக்கும் மான்சி சோனிக்குமான நெருக்கம், அந்தரங்கமாக அவர்களுக்கு இருந்த உறவு ஆகியவற்றையே அந்தப் பத்தி பேசுகிறது. அந்தப் பத்திகள் நீக்கப்பட்டாலும் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு 267 தொலைபேசி உரையாடல்களின் பதிவிலிருந்து மறைக்கப்படும் அந்த இடைவெளிகளை நன்கு உணர்ந்துகொள்ள முடியும்.
எண்ணிலடங்காத கண்களால் இந்த உலகைக் காணும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் கண்காணிப்பிலிருந்து யாரும் தப்ப முடியாது என்பதற்கு நரேந்திர மோடி மற்றொரு உதாரணமாகியிருக்கிறார். 2ஜி ஊழலில் ஒரு இமாலய முறைகேட்டையும் இந்திய தொழில் துறை பிதாமகரின் அந்தரங்க உரையாடலையும் சேர்த்தே அம்பலப்படுத்திய தொலைபேசி உரையாடல் இப்போது ஆர்.எஸ்.எஸ். ஆசையாக வளர்த்த பிரதமர் வேட்பாளரைக் காவு வாங்கப் பார்க்கிறது.
குஜராத்தின் ரஜோனா கிராமத்தில் ஒரு மனைவியை வைத்துக்கொண்டு, நாட்டுக்குத் தனது வாழ்வை அர்ப்பணித்தது போன்ற பிரம்மச்சரிய முகமூடியை அணிந்துகொண்டிருக்கும் மோடி யார் எனத் தெரிந்து கொள்ள விரும்புகிறவர்கள் இந்தத் தொலைபேசி பதிவுகளைக் கட்டாயம் கேட்க வேண்டும்.
மான்ஸி சோனி அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியுடன் தொடர்பில் இருப்பதைப் பற்றி ஒரு கட்டத்தில் ஆத்திரமான ஒரு பேச்சு: அவனை (ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷர்மா) ஜெயிலில் தூக்கிப் போடணும்னு இருக்கோம். அவன்கிட்ட அவ (மான்சி சோனி) போய் பேசிக்கிட்டிருக்காளா?” மற்றொரு பதிவு: அமித் ஷா: ‘‘கமிஷனர் (பாவ்நகர் முனிசிபல் கமிஷனர் ஷர்மா) அவ (மான்சி சோனி) வீட்ல இருக்காரா அல்லது அங்க போவாரான்னு செக் பண்ணி சொல்லு.”
மற்றொரு பதிவு:
அமித்ஷா: கடைசியா நம்மாட்கள் அவங்கள (மான்சி) எப்ப பாத்தாங்க?
ஜி.எல்.சிங்கால்: அவங்க வீட்டுலதான் இருக்காங்க சார். நம்மாட்கள் அவங்க வீட்ட கண்காணிக்கிறாங்க.
ஷா: மதியம் யாரும் வந்து அவங்கள பாத்தாங்களா? காலைல வெளிய போயிருப்பாங்களே?
சிங்கால்: காலைல அரை மணி நேரம் ஷாப்பிங் போயிருந்தாங்க. அப்புறம் திரும்பிட்டாங்க.
ஷா: கடைசியா கண்ணுல தட்டுப்பட்டது எப்போ?
சிங்கால்: மதியம் 1.30 மணிக்கு.
ஷா: ஓக்கே.
சிங்கால்: அவங்க ஜிம்ல இருக்காங்க. அந்த இடம் ஒன்றரை கிலோமீட்டர் தூரத்துல இருக்கு.
ஷா: அந்த ஜிம் பேரு தெரியுமா?
சிங்கால்: தெரியாது சார். ஆனா அவங்க தன்னோட நாத்தனாரோட போயிருந்தாங்க.
ஷா: இன்னும் அங்கதான் இருக்காங்களா? ஜிம் ஊழியர்கள் மூலமா செக் பண்ணிட்டு எனக்குச் சொல்லுங்க.
"காலைல வெளிய போயிருப்பாங்களே” என்ற அமித் ஷாவின் கமெண்ட்டைக் கவனிக்கவும். அரசு உளவுத் துறையின் கண்காணிப்பு போக, வேறு ஆட்களை வைத்தும் வேவு பார்க்கிறார்கள் என்பதற்கு இது சாட்சி. வேறு ஒரு இடத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளூர பதற்றத்துடன் சொல்கிறார்: சாஹேபுக்கு உங்களுக்குத் தெரியாத தகவல்கள் எல்லாம் தெரியுது. திரும்ப செக் பண்ணுங்க. ஒரு குடும்ப நண்பரின் மகளது பாதுகாப்பிற்காக முதல்வரே இப்படி தனியாக ஆள் போட்டு கண்காணிப்பாரா அல்லது தன்னை தனிப்பட்ட முறையில் பாதிக்கும் விஷயங்கள் இதில் அடங்கியிருந்ததால் மோடி தனிப்பட்ட கவனம் எடுத்துக்கொண்டாரா?
மோடி செய்த பெரிய தவறுகளிலிருந்து அவரைக் காப்பாற்றுவதற்காக அவரது அபிமானிகள் சில சிறிய தவறுகளை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். அரசு அதிகாரத்தின் துஷ்பிரயோகம்தான் என்றாலும் அது ஒரு பெண்ணின் பாதுகாப்பிற்காகவே மேற்கொள்ளப் பட்டது என ஒரு நேரம் சொல்கிறார்கள். ஒரு கிழவன் மீது கொண்டிருந்த காதலால் அந்தப் பெண்ணின் வாழ்வு சீரழியாமல் காக்க முயற்சித்ததாக வேறு பொய்யை சொல்லிப் பார்க்கிறார்கள். கால்வாசி குற்றத்தை ஒப்புக் கொள்வதில் ஒரு பிரச்சினை உள்ளது. அரசியல்வாதிகளின் பொய்யைக் கேட்டே பழக்கப்பட்டவர்கள் உண்மையின் ஒரு பாகத்திலிருந்து ஒட்டுமொத்த குற்றத்தின் முகத்தை எளிதாகத் தரிசித்துவிட முடியாதா?
உரையாடல் ஆவணங்கள் பல உண்மைகளை உடைக்கின்றன. அந்தப் பெண்ணின் (மான்சி) அனுமதியுடன்தான் உளவு மேற்கொள்ளப்பட்டது என்பதையும் தொலைபேசி உரையாடல்கள் தெளிவாக நிராகரிக்கிறது. ஒரு உரையாடலில் மான்சி பயணிக்கும் விமானத்தில் குஜராத் அரசு செலவில் உளவாளியை அனுப்புமாறு அமித்ஷா சொல்கிறார். “அந்தப் பொண்ணு எப்படியாவது ஏமாத்திட்டு ஓடிடுவா” என்று ஒரு குறிப்பு வருகிறது. அவளுடன் யாரும் இருக்கிறார்களா என்று பொறி (trap) வைத்துப் பிடிக்கப் போவதாக ஒரு இடத்தில் போலீஸ் அதிகாரி சொல்கிறார்.
தனது முகமூடிகளுக்குப் பின்னே ஒளிந்திருக்கும் மோடி எப்படிப்பட்டவர் என அறிய முனைபவர்கள் இந்தத் தொலைபேசி பதிவுகளைத் தவற விடக்கூடாது. ஒரு ஃபாசிஸ்டின் இலக்கண சுத்தமான ஆளுமையைத் தெரிந்துகொள்ளாமல் விடலாமா? ஒரு ஒப்பற்ற தலைவராக முன்னிறுத்திக்கொள்ள பிரம்மச்சரியம் தேவை என்பதால் கட்டிய மனைவியை விரட்டிய ஒரு அரசியல்வாதி. தனது எதிரிகளை அரசியலை விட்டே அல்லது உலகத்தை விட்டே அனுப்பும் சர்வாதிகாரி. தனது வெகுஜன தேர்தல் அரசியல் வரலாற்றில் பா.ஜ.க. உருவாக்கிய மிகப் பெரிய தலைவரான வாஜ்பாயியையே தனது பதவி வெறியால், அதை அடையத் துடித்த வேகத்தால் நடுங்க வைத்தவர். அம்பலமாகும் மோடியின் உண்மையான இயல்புகள் இவரையா இந்திய நடுத்தர வர்க்கம் ஆபத்பாந்தவனாகக் கருதுகிறது என்று நடுங்கச் செய்கின்றன.
சர்வாதிகாரிகளின் இயல்பிற்கேற்ப மோடிக்கு ஒரு அகோர அதிகாரப் பசி இருந்தது. கடின உழைப்பும் அரிய பேச்சாற்றலும் இருந்தது. அதைவிட அதிகமாக சந்தர்ப்பவாதமும், தன்னை ஒரு தனித்துவ அடையாளமாக, -ஒரு பிராண்டாக முன்னிறுத்தும் தந்திரமும் இருந்தது. இந்தியா, குறிப்பாக அதன் நடுத்தர வர்க்கம் வலது சாரி அரசியலின் பக்கம் சாயத் துவங்கிய 1990களில் ஆர்.எஸ்.எஸ்.ஸின் காரியங்களை பா.ஜ.க. மூலம் மிக அதிகமாக நிறைவேற்ற திறமையான உழைப்பாளிகள் தேடப்பட்டபோது தனது அரசியல் எழுச்சியைத் துவக்குகிறார் மோடி. குஜராத்தின் அசைக்க முடியாத அரசியல் தலைவர்களாக இருந்த ஷங்கர் சிங் வகேலாவுக்கும் கேஷுபாய் படேலுக்கும் நடந்த அரசியல் சண்டையில் குரங்கு பங்கு வைத்த கதையாக மோடி அதிகாரத்தைக் கைப்பற்றினார். இப்போது மத்திய அரசியலில் பா.ஜ.க.வின் இரண்டாம் மட்ட தலைவர்களான சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி போன்றவர்களிடையே நடக்கும் சண்டையைப் பயன்படுத்திக்கொண்டு பிரதமர் வேட்பாளராகி யிருக்கிறார். முன்னெப்போதையும்விட மோடிக்கு அவரின் அதிகார இலக்கு பிரகாசமாகத் தெரிகிறது, முன்னெப்போதையும்விட அவரின் வீழ்ச்சிக்கான பாதையும் பிரகாசமாக கண்முன் நிற்கிறது.
பல நூற்றாண்டுகளாக சிறந்த தொழில் கேந்திரமாக இருந்த குஜராத்தின் வளர்ச்சியையும் பெருமையையும் தனது பிம்பத்துடன் வெற்றிகரமாக இணைக்க முடிந்த மோடியை விதி அழைக்கிறது. எல்லா சர்வாதிகாரிகளையும் போலவே இவர் தனக்குத் தோன்றிய அத்தனையையும் செய்தார். தன்னை எதிர்த்த ஒரே காரணத்திற்காக பா.ஜ.க.வின் நீண்ட கால எம்.எல்.ஏ.வான ஹரேன் பாண்டியாவைக் கொல்ல ஏற்பாடு செய்தார் என அவர் மீது குற்றச்சாட்டு உண்டு. மோடியை எதிர்த்த சஞ்சய் ஜோஷியின் அரசியல் வாழ்வு ஒரு நீலப் பட சி.டி.யில் முடிவுக்கு வந்தது. ஒரு பெண்ணுடன் நிர்வாணமாக அவர் இருப்பதாக ‘யாராலோ’ வெளியிடப்பட்ட அந்த சி.டி. போலியானது என இப்போது தெரிந்து என்ன? மோடியின் முகமூடிக்குப் பின்னால் உள்ள ஒரு மனநோய் பீடித்த, அழுக்கடைந்த மனதின் அடையாளங்களுக்குக் கூடுதல் ஆதாரமாக இந்த உளவும் அதன் தொலைபேசி உரையாடல் பதிவுகளும் அமைகின்றன.
மோடி அதிகாரப் பேராசையுடன் வளர்த்த பிம்பம் சிதைவதற்கான முதல் அடையாளங்கள் இந்தப் பெண் விவகாரத்தில் தெரிகிறது. இப்போது மோடி  வாழ்வா, சாவா நெருக்கடியில் இருக்கிறார். எப்படியாவது அவர் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் என்ற தனது அந்தஸ்தை இது போன்ற சர்ச்சைகளிலிருந்து காப்பாற்ற வேண்டும். அதைவிட முக்கியமாக, பிரதமர் வேட் பாளராக நின்றுவிடாமல் பிரதமராகிவிட வேண்டும். இல்லாவிட்டால் அவரின் விதியி லிருந்து மோடியை யாராலும் காப்பாற்ற முடியாது.
ஒன்று, இந்தியா இதுவரை கண்டிராத மனநோய் பீடித்த மதவாத சர்வாதி காரியாக அவர் இந்தியாவை ஆளுவார் அல்லது இருள் சிறையிலும் அதைவிட மோசமான யதார்த் தத்திலும் அவர் தன் மீதமுள்ள வாழ்நாளைக் கழிக்க நேரிடும். uyirmmai.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக