வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

காங்கிரசுடன் மீண்டும் கூட்டணியா? ஸ்டாலின் கொந்தளிப்பு; பிரசாரம் செய்ய மறுப்பு

தமிழகத்தில், புதிய கூட்டணியை ஏற்படுத்த, காங்கிரஸ் மேலிடம் காய் நகர்த்தி வருகிறது. தே.மு.தி.க.,வுடன் பேசி, கூட்டணியை உறுதி செய்துள்ள காங்., தலைமை, தி.மு.க.,வுக்கு தூது விட்டுள்ளது. தி.மு.க., தரப்பிலும், கனிமொழி உட்பட, சிலர், காங்., கூட்டணிக்கு ஆதரவாக உள்ளனர். அதனால், தி.மு.க., - காங்., - தே.மு.தி.க., கட்சிகள், ஓரணியில் வரலாம் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சென்னையில் நேற்று, இந்த தகவலை மறுத்த, தி.மு.க., தலைவர் கருணாநிதி, ''தி.மு.க., தலைமையில், தற்போதுள்ள கூட்டணியில், எந்த மாற்றமும் இல்லை,'' என, தெரிவித்துள்ளார்.

 கூட்டணியில் சேர்த்தால்: கருணாநிதியின் இந்த திடீர் அறிவிப்புக்கு, காங்., கூட்டணிக்கு, ஸ்டாலின் காட்டிய கடும் எதிர்ப்பே, காரணம் என, தெரியவந்துள்ளது. 'காங்கிரசை மீண்டும் கூட்டணி யில் சேர்த்தால், பிரசாரத்திற்கு செல்ல மாட்டேன்' என, ஸ்டாலின் எதிர்ப்பு கொடி பிடித்ததால் தான், கருணாநிதி இம்முடிவுக்கு வந்துள்ளார் என, அறிவாலய வட்டாரம் சொல்கிறது. இதுகுறித்து, அந்த வட்டாரம் மேலும் கூறியதாவது: தி.மு.க.,வை மீண்டும், ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு கொண்டு வர, காங்., மேலிடம் விரும்புகிறது.


அதற்காகவே, மத்திய அமைச்சர், குலாம் நபி ஆசாத், சென்னை வந்து, கருணாநிதியை சந்தித்து பேசினார். கனிமொழி தான் அதற்கான ஏற்பாடுகளை செய்தார். ஆனால், அப்போது பிடி கொடுக்காத கருணாநிதி, '2ஜி' விவகாரத்தில் நடந்த உரையாடல் தொடர்பாக, சமீபத்தில், 'சிடி' வெளியானதும், அதிர்ந்து போய் விட்டார். உடனடியாக, விடுதலை சிறுத்தைகள் தலைவர், திருமாவளவனை அனுப்பி, ராகுலை சந்திக்க செய்தார். காங்கிரசுடன் மீண்டும் கூட்டு சேர்வதற்கான வாய்ப்புகள் குறித்து, இருவரும் விவாதித்துள்ளனர். 

ஏற்கவில்லை: ராகுலை சந்திக்கச் செல்வதற்கு முன், அந்த தகவலை, ஸ்டாலினிடம், திருமாவளவன் சொல்லியுள்ளார். அப்போதே, இந்த முயற்சிக்கு ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். காங்கிரசுடன் கூட்டணி தொடர்பாக, திருமாவளவன் கூறிய விளக்கங்களையும், அவர் ஏற்கவில்லை. மேலும், 'தி.மு.க., பொதுக்குழுவில், காங்கிரசுடன் கூட்டணி இல்லை என, தீர்மானம் நிறைவேற்றி, அதை கட்சியினர் மனதிலும் பதிய வைத்த பின், மீண்டும் காங்., பின்னால் போனால், யாரும் மதிக்க மாட்டார்கள். தி.மு.க., மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி விடும். எந்த வகையிலும், கொள்கையை விட்டுக் கொடுக்கப் போவதில்லை' என்றும், ஸ்டாலின் தெளிவுபடத் தெரிவித்து உள்ளார். இந்த சூழ்நிலையில் தான், டில்லியில், காங்., தலைவர் சோனியாவை, கனிமொழி நேற்று முன்தினம் சந்தித்து பேசியுள்ளார். இந்த தகவல் அறிந்ததும், கடும் கோபம் அடைந்த ஸ்டாலின், 'காங்கிரசுடன் கூட்டு சேர்ந்தால், நான் பிரசாரத்திற்கு செல்ல மாட்டேன்' என, கருணாநிதியிடம் திட்டவட்டமாக கூறியுள்ளார். கடும்

காங்கிரஸ் எந்த நல்ல காரியத்தையும், தமிழகத்திற்கு செய்யவில்லை; எனவே அதை ஆதரித்து என்னால் பேச முடியாது; வேறு யாரையாவது வைத்து பிரசாரம் செய்து கொள்ளுங்கள்' என, முக்கிய நிர்வாகிகளிடம், அவர் கடும் குரலில் பேசிய தகவலும், கருணாநிதியின் காதுகளுக்கு எட்டியுள்ளது. அதன்பிறகே, 'காங்கிரசுடன் கூட்டணி என, வரும் செய்திகளில் உண்மை இல்லை' என்ற அறிவிப்பை, கருணாநிதி வெளியிட்டுள்ளார். இவ்வாறு, அறிவாலய வட்டாரம் தெரிவித்தது.


- நமது சிறப்பு நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக