செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

காவிப் படையின் அடியாளாக கருப்புத் துண்டு வைகோ !

இன்று கமலாலய வைகோ ஆன பின்பு அவரிடம் சந்தர்ப்பவாதம், பார்ப்பனிய அடிமைத்தனம், பிழைப்புவாதம், சுயநலத்தின் கேவலமான தர்க்கம் மட்டும் தான் எஞ்சி இருக்கிறது. பதவி எங்களுக்கு துண்டு போன்றது அது போனால் கவலை இல்லை ஆனால் கொள்கை எங்களுக்கு வேட்டி போன்றது” இது அண்ணாவின் புகழ் பெற்ற வாக்கியம். ஓட்டு பொறுக்கி திராவிட இயக்கத் தலைவர்களுக்கு இந்த வேட்டி எப்போதும் இடுப்பில் இருந்ததில்லை. இது சொன்ன அண்ணாவிலிருந்து இன்று வை.கோ வரைக்கும் பொருந்துகிறது.
கமலாலய வைகோ ஆன பின்பு அவரிடம் சந்தர்ப்பவாதம், பார்ப்பனிய அடிமைத்தனம், பிழைப்புவாதம், சுயநலத்தின் கேவலமான தர்க்கம் மட்டும் தான் எஞ்சி இருக்கிறது.
“கலிங்கப்பட்டியிலிருந்து கமலாலயம் வரை” இந்த நெடிய பயணத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் வேட்டியை பறி கொடுத்ததோடல்லாமல் மற்ற திராவிட இயக்க பிழைப்புவாதிகள் பெற்ற மேல்துண்டைக் கூட பெற முடியாமலேயே இருந்திருக்கிறார் வைகோ. உச்சகட்டமாக, கடந்த சட்டமன்ற தேர்தலையொட்டி போயஸ் தோட்டத்தில் மையம் கொண்டிருந்த புரட்சி புயல் அன்புச் சகோதரியின் ‘கவனிப்பால்’ கரை சேர முடியாமல் “சீச்சீ இந்த தேர்தல் பழம் புளிக்கும்” என்று தாயகத்திலேயே முடங்கிய கூத்தும் நடந்தது.  அன்று கலிங்கப்பட்டியில் கிளம்பிய வை.கோவிடம் பெயரளவுக்கு கொள்கை என்று திராவிட இயக்க கொள்கைகள் ஏதேனும் ஒருவேளை ஒட்டிக் கொண்டிருந்திருக்கலாம். ஆனால் இன்று கமலாலய வைகோ ஆன பின்பு அவரிடம் சந்தர்ப்பவாதம், பார்ப்பனிய அடிமைத்தனம், பிழைப்புவாதம், சுயநலத்தின் கேவலமான தர்க்கம் மட்டும் தான் எஞ்சி இருக்கிறது.

இவர் 93-ல் திமுக-வில் இருந்து பிரிந்து மதிமுக ஆரம்பித்த போது தமிழக ஆட்டுக்குட்டிகளை இரட்சிக்க இந்த இரட்சகராக அந்தக் காலத்து ‘முற்போக்கு’ வாதிகள் இவரை தூக்கிபிடித்தனர். ஆனால் திமுக-விலிருந்து மதிமுக பிரிந்தது என்பது கொள்கை வேறுபாடினால் இல்லை, வாரிசுப் போரில்தான். அன்றைய புதிய ஜனநாயகம் மட்டுமே,  “துணிவுமிக்க செயல்வீரர், மொழி-இனப்பற்றாளர், உணர்ச்சிமிகு பேச்சாளர் என்கிற திறமை வைகோ விற்கு இருக்கலாம்; இவை மட்டுமே எந்த விதத்திலும் திமுக விற்கு மாற்றுத் தலைமையையோ மாற்றுப் பாதையையோ தந்துவிட முடியாது. கருணாநிதிக்கு பின் கட்சியை வேண்டுமானால் பிடிக்கலாம்; அவ்வளவு சுலபமாக ஆட்சியை பிடிக்க முடியாது”  என்று சரியாக கணித்து எழுதியது. தி.மு.கவின் பிழைப்புவாதம், காரியவாதம், ஊழல் அத்தனையும் கொண்டிருந்த பத்து பதினைந்து கொட்டை போட்ட பெருச்சாளிகள் சிலர் அப்போது வைகோ உடன் சென்றனர். அவர்களும் பின்னாளில் தி.மு.கவை வைகோ கைப்பற்றுவார் என்று கணக்கு பார்த்து சென்றிருக்கலாம். தற்போது அந்த கணக்கு பொய்த்திருப்பதால் அவர்களில் பெரும்பகுதியினர் மதிமுகவிலிருந்து விலகி விட்டனர்.
வைகோவும் வெகு சீக்கிரமாகவே தன்னை அம்பலப்படுத்திக் கொண்டார். உண்மையான திராவிட இயக்க வாரிசு என்று சொல்லிக் கொண்டே, அன்றைய நிலையில் பாபர் மசூதி இடிப்பு, மும்பை கலவரம், தமிழகத்தில் மண்டைக்காடு கலவரம் என கொலை வெறியாட்டம் போட்டுக் கொண்டிருந்த பார்ப்பன பாசிச பாஜக  மற்றும் தமிழகத்தையே மொட்டை அடித்து மக்கள் மத்தியில் அம்பலப்பட்டிருந்த ஜெ-சசி கும்பல் ஆகியோருடன் 98-ல் கூட்டணி வைத்தார். 2002  குஜராத் படுகொலைகளுக்கு பின்னரும் பாஜக அமைச்சரவையில் பங்கேற்று மோடி உள்ளிட்ட இந்துத்துவா கொலையாளிகளை காப்பாற்ற பிரச்சாரம் செய்தார். அதுவும் அத்வானியே,’இந்த வேலைக்கு வை கோபால்சாமிதான் சரியானவர், நீங்கள் பேசுங்கள்’ என்று நம்பி பொறுப்பு கொடுக்கும் அளவுக்கு, பார்ப்பனியத்தின் விசுவாசமான அடியாளாக இருந்து வேலை செய்தார். அப்படி அடியாள் வேலை செய்ததை இன்றளவும் வெட்கமில்லாம்ல, சிறு கூச்சநாச்சம் கூட இல்லாமல் பெருமையாக வேறு சொல்லி திரிகிறார்.
வைகோ பாஜக கூட்டணி
2011-ல் ஜெ-வும் அடித்து துரத்த போக்கிடம் இல்லாமல் அரசியல் அனாதையாக சுற்றி திரிந்து தற்போது மீண்டும் பாஜக கூட்டணி சேர்ந்திருக்கிறார்.
பின்னர் 2001-ல் ஜெயலலிதாவால் பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு 19 மாதங்கள் சிறையில் இருந்தார். பொடா-வுக்கு பின்னர் வாரிசு சண்டையில் யாரை எதிர்த்து தனியே வந்தாரோ அந்த கருணாநிதியுடன் வெட்கமே இல்லாமல் கூட்டணி சேர்ந்தார். அண்ணன்-தம்பி என்று இருவரும் தழுவிக் கொண்டனர்.  பின்னர் 2006 சட்டமன்ற தேர்தலில் ஒரு சீட் பேரம் படியாததால் தன்னை பொடாவில் உள்ளே வைத்து நொங்கெடுத்த பாசிச ஜெயா உடன் அன்பு சகோதரியே என்றபடி கூட்டணி சேர்ந்தார். 2009-ம் ஆண்டு ஈழப்பிரச்சினையை வைத்து இங்கே அதிமுக கூட்டணிக்கு ஆதாயம் தேட நினைத்தார். 2011-ல் ஜெ-வும் அடித்து துரத்த போக்கிடம் இல்லாமல் அரசியல் அனாதையாக சுற்றி திரிந்து தற்போது மீண்டும் பாஜக கூட்டணி சேர்ந்திருக்கிறார். இப்படி தேர்தலுக்கு தேர்தல் புரட்சி புயல் சுழண்டு சுழண்டு ஊரையே சுற்றி வந்த போதும், பாவம் அதை யாரும் மதிப்பதில்லை.
இப்படியாக 98-ல் தான் ஆரம்பித்த இடத்திற்கே இரண்டாவது முறையாக வந்து, வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை நிரூபித்திருக்கிறார். ஆனால் முன்பு போல் சொல்லிக் கொள்ளும் உதார்கூட இன்று இல்லை. நான் ஏறமாட்டேன், ஏறமாட்டேன் என விஜயகாந்த், ராமதாஸ் ஆகியோர் அடம்பித்து, தங்கள் பேரத்தை அதிகப்படுத்திக் கொண்டிருக்கும் போது, யாருமே இல்லாத பிஜேபி பேருந்தில் அவசர அவசரமாக ஜன்னல் வழியே கருப்புத்துண்டை போட்டு சீட் பிடித்து, யாரும் துண்டை எடுத்து கடாசிவிட்டால் என்ன செய்வது என்று, கவலையுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த கவலையில் தான் “தமிழகத்தில் பா.ஜ.க பெரிய சக்தியாக வளரும்” என்று கூட சொல்லி பார்க்கிறார். மோடியை காத்திருந்து சந்திக்கிறார். நேற்று கட்சி ஆரம்பித்த விஜயகாந்தை தன்னை கருணாநிதி அழைக்கிறார், பொன்னார் அழைக்கிறார் எனும் போது, தான் வலிய போய் நின்றாலும் தமிழருவி மணியன், ஜூனியர் விகடன் திருமாவேலன் தவிர யாரும் தன்னை மதிப்பதில்லை என்ற மனக்குறை வை.கோ வுக்கு இல்லாமல் இல்லை.
மோடி கூட்டம்
சீட் பேரம் முடியாமல் மோடி கூட்டத்தில் பங்கேற்பதில்லை என்று கூட சொல்லிப் பார்த்தாகி விட்டது.
சீட் பேரம் முடியாமல் மோடி கூட்டத்தில் பங்கேற்பதில்லை என்று கூட சொல்லிப் பார்த்தாகி விட்டது, எதுவும் நடந்தபாடில்லை. விரக்தியுற்ற அடிமையின் விசுவாசத்துடன் நரவேட்டை மோடி மற்றும் ‘குஜராத் மாயையை’ முன்னின்று பரப்பி வருகிறார். இந்த மாயையை  அகற்றும் வரலாற்றுக் கடமையை ம.க.இ.க உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகள் செய்து கொண்டிருக்கும் போது வைகோ பார்ப்பன பாதந்தாங்கியாக வலம் வருகிறார்.
சேது சமுத்திர திட்டம் என்னால் தான் வந்தது என்றும், நான் தான் நடைபயணம் சென்றேன் என்றும் இத்தனை காலம் உறுமிய வை.கோ, இன்று பா.ஜ.க கூட்டணிக்கு பிறகு “என்னம்மா அங்க சத்தம்” என சு.சாமி கேட்கும் முன்னரே முந்திக்கொண்டு “சேது சமுத்திர திட்டம் சுற்றுச்சூழலுக்கு கேடு” என்று இன்று இறுமி பின் வாங்குகிறார்.
பெரியாரை செருப்பால் அடிப்பேன், பெரியார் சாதி வெறியன் என்று பேசுகிறான் பார்ப்பன பிஜேபி யின் எச்.ராஜா. அதை கேட்டு பல்லிளித்துகொண்டு இன்னும் இரண்டு சீட்டு போட்டு கொடுங்க என்று கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார் வை.கோ.  தமிழகத்தில் சீந்த ஆள் இல்லாமல் அரசியல் அநாதைகளாக இருந்த இந்துமதவெறியர்களுக்கு வாழ்வளித்தது. இப்படி பேசுவதற்கு தைரியம் கொடுத்தது  கருணாநிதி, வைகோ உள்ளிட்ட திராவிட இயக்க வரிசுகள் தான்.
எச்.ராஜா பெரியாரை அடிப்பதற்கு செருப்பு எடுத்து கொடுக்கும் விபீஷ்ண வேலையை செய்வதே வைகோ என்ற கோடாரி காம்பு தான். நாளை இந்துமதவெறி பாசிஸ்ட்டுகள் அதிகாரத்திற்கு வந்து, பெரியார் சிலையை அவமதித்தால் பார்ப்பனிய சங்க பரிவாரங்களை மட்டுமல்ல வை.கோ வையும் சேர்த்து தான் நாம் பதம் பார்க்க வேண்டும். இது தான் பெரியாரை மதிப்பவர்களது செயலாக இருக்க முடியும். பெரியாரை அசிங்கப்படுத்துபவர்களுக்கு அடியாள் வேலை பார்க்கும் வைகோ போன்றவர்கள் பெரியாரையோ, திராவிட இயக்க பெயரை பயன்படுத்தவோ எள்ளளவும் தகுதியற்றவர்கள்.
வைகோ கொள்கை இல்லாதவர் தான், மாறி மாறி கூட்டணி வைப்பவர் தான் என்பதை ஏற்றுக் கொண்டாலும், மக்களுக்காக போராடுகிறார் என்று இன்னும் சிலர் அப்பாவியாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அதில் உண்மை இல்லை என்பதை சற்று பரிசீலித்து பார்த்தாலே விளங்கும். மக்கள் தன்னெழுச்சியாக நடத்தும் போராட்டங்களுக்க் செல்வது,  நேதாஜி சுபாஸ் சந்திரபோஸில் ஆரம்பித்து எலிசெபத்து ராணி வரை பேசுவது இடையிடையே கண்ணீர் சென்டிமென்ட, ஆக்சனுக்கு சில சவடால்கள், என தன்னை முன்னிறுத்திக்கொண்டு திரும்ப வருவது என்பது தான் இவரது போராளி தன்மை.
வைகோ கூடங்குளம்கூடங்குளமோ, ஈழப்பிரச்சனையோ  தன் கட்சிக்காரர்களை திரட்டி என்றும் இவர் போராடியதில்லை. கட்சி  மாநாட்டுக்கு தொண்டர்களை வரவழைக்கும் இவரால் மக்கள் போராட்டங்களுக்கு அப்படி  செய்ய முடிவதில்லையே ஏன்? யாராவது போராடுவார்கள் என்றால் அங்கு தொண்டர்கள் புடைசூழ சென்று பேசுவார், அவ்வளவுதான். மதிமுக தமிழக மக்களுக்காக இந்த இந்த பிரச்சனைக்காக திட்டமிட்டு முன்னணியாக நின்று போராடியிருக்கிறதா என்றால் ஏதும் இல்லை. கூடங்குளமோ, ஸ்டைர்லைட்டோ இன்னபிற பிரச்சினைகளில் வாய்ஸ் கொடுத்தால் அந்தந்த பகுதிகளில் கொஞ்சம் வாக்குகளை அறுவடை செய்யலாம் என்பதைத் தாண்டி வைகோவுக்கு வேறு ‘உயரிய’ நோக்கங்கள் இருந்ததில்லை.
லெட்டர் பேடு தமிழ்தேசிய இயக்கங்களும் இன்னபிற உதிரி இயக்கங்களுக்கும் வை.கோவை அழைத்தால் தங்கள் போராட்டமும் செய்தியில் பேசப்படும் என்ற நன்மை இருப்பதால் இவரை அழைக்கிறார்கள். இவர்கள் மூலம் வைகோவும் தன் போராளி தலைவன் என்ற இமேஜை தக்கவைத்துக் கொள்ள முயற்சிக்கிறார். ஆனால் தேர்தல் நேரத்தில் எந்தப் பிரச்சினைகளுக்காக போராடினாரோ அந்த பிரச்சினைகளின் எதிரிகளுடன் கூட்டு சேர்ந்து அம்பலப்பட்டு போகிறார். இவரை அழைப்பவர்களும் இதை தட்டிக் கேட்காமல் வேறு என்ன செய்வது என்று இந்த சந்தர்ப்பவாதத்திற்கு சாமரம் வீசுகிறார்கள்.
இடிந்தகரை சென்று போராட்டத்தை ஆதரிப்பதாக பேசினார். ஆனால் இடிந்தகரை மக்களை திருநெல்வேலி  ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து தாக்கிய,  அன்னிய கைக்கூலிகள் என்று இன்றளவும் பிரச்சாரம் செய்யும் பாஜக  கும்பலுடன் கூட்டணி சேர்ந்து இத்தனை நாள் தான் போட்டது நாடகம் என்பதை அம்பலப்படுத்திக் கொண்டுள்ளார். “இடிந்தகரை மக்களை தாக்கிய இந்துத்துவா சக்திகளுடன் எப்படி கைக்குலுக்க முடிகிறது உங்களால்” என்று எந்த தொண்டனும் இவரை கேட்கவில்லை.
காவிரியில் தண்ணீர் தராமல், காங்கிரசு மட்டுமல்ல, கர்நாடக பி.ஜே.பி அரசினாலும் கொல்லப்பட்ட தஞ்சை விவசாயிகள் பிணத்தின் மீது நின்று கொண்டே பி.ஜே.பி உடன் கைகுலுக்குகிறார்.  காவிரிக்காக போராடுவதாக பம்மாத்து செய்கிறார். காவிரி நீரை திறந்துவிட மாட்டோம் என்பது தான் பிஜேபி நிலைப்பாடு என்று தெரிந்தும் கூட்டணி வைக்கிறார் என்றால் இவருடைய போராட்ட குணத்தின் யோக்கியதை என்ன? இதையெல்லாம் மக்கள் யோசிக்கமாட்டார்கள் எனுமளவுக்கு அவரது சந்தர்ப்பவாதம் பீடு நடை போடுகிறது.
முல்லைப்பெரியாறு அணைக்கு என்ன சொல்கிறது பிஜேபி? அணையை காப்பாற்ற மோடி பேசுவாரா? இப்படி காங், போலிக் கம்யூனிஸ்டுகளோடு போட்டி போட்டுக் கொண்டு தமிழகத்திற்கு துரோகம் செய்வதையே தொழிலாக கொண்ட பிஜேபி யிடம் கூட்டணி வைத்து தமிழ் மக்களை விற்கும் துரோக வேலையை தான் வைகோ செய்கிறார். ஆனால் மேடைகளில் பேசும் போது கருப்புத் துண்டை முறுக்கியவாறு இவர் பேசும் தமிழர் உரிமைக்கான எனர்ஜி எங்கேயிருந்து வருகிறது என்பதுதான் தெரியவில்லை.
வைகோ மோடி
மொழிவாரி மாநிலங்களையே ஏற்றுக்கொள்ளாத மோடியுடன் கூட்டணி வைத்து தமிழ் மக்களின் உரிமையை காப்பாற்ற போகிறாராம் இந்த சூரப்புலி.
மோடி திருச்சி கூட்டத்தில் “மொழிவாரி மாநிலங்களை பிரித்து தேசத்தை துண்டாக்கி விட்டது காங்கிரஸ்” என்று மொழிவாரி மாநிலத்திற்கே எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மொழிவாரி மாநிலங்களையே ஏற்றுக்கொள்ளாத மோடியுடன் கூட்டணி வைத்து தமிழ் மக்களின் உரிமையை காப்பாற்ற போகிறாராம் இந்த சூரப்புலி.
2009-ல் குஜராத்தில் நடந்த மோடியின் வைபரண்ட் குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் ( Vibrant Gujrat Investers Summit)  இலங்கையின் சுற்றுலாத்துறை அமைச்சர் மலிந்த மொரகொடாவுடன் சுற்றுலாதுறையில் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டது. இதன்படி இலங்கையின் கடற்கரையில் உல்லாச சுற்றுலா விடுதிகளை குஜராத்தும், குஜராத்தில் இலங்கையும் கட்டிதருவார்கள். “இனப்படுகொலைக்கு பின்னர் இன்று தன் போர்குற்றத்தை மறைக்க சுற்றுலாவை பயன்படுத்துகிறான், அதனால் ஈழத்தில் கலைநிகழ்ச்சிகளுக்கு, விருது விழாக்களுக்க்கு, படப்பிடிப்புகளுக்கு செல்லாதீர்கள்” என்று தமிழினவாதிகள் கூறுகிறார்கள் அல்லவா அப்போதே குஜராத் அரசுடன் சேர்ந்து ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள்.
பாஜக உடன் கூட்டணி சேர்வதற்கு, வாஜ்பாய் ஆட்சி காலத்தில் அவர் ஈழத்திற்கு ஆதரவாக இருந்தது போன்று ஒரு பொய்யை தொடர்ந்து பரப்பி வருகிறார் வைகோ. ஈழ விசயத்தில் வாஜ்பாயின் யோக்கியதை என்ன? “புலிகள் யாழ்கோட்டை முற்றுகையை விலக்கி கொள்ள வேண்டும் இல்லையேல் புலிகளை இந்திய ராணுவம் அழித்தொழிக்கும்” என்று அறிவித்தவர் தான் வாஜ்பாய். இந்திய ஆளும் வர்க்க நலனுக்காக அன்று புலிகளை பின்வாங்க கோரி இந்திய ஆளும் வர்க்கம் சார்பாக தரகு வேலை பார்த்தார் வைகோ.
அதுமட்டுமல்ல இவர் ஏற்றி போற்றும் வாஜ்பாயும் ரனில் விக்கரமசிங்கேவும் அக்டோபர் 2003ல் புதுடில்லியில் விடுத்த கூட்டறிக்கை பின்வருமாறு கூறுகிறது.
  • “இலங்கையின் பாதுகாப்பில் இந்தியா அக்கறைகொண்டிருக்கிறது, இலங்கையின் இறையாண்மையையும், பிரதேச ஒருமைப்பாட்டையும் காக்கும் கடப்பாடு கொண்டிருக்கும்.
  • இலங்கையில் அதிகாரப் பகிர்வுக்கான ஏற்பாடுகள் ஏதும் இலங்கையின் ஒற்றுமை, பிரதேச ஒருமைப்பாடு என்னும் சட்டகத்திற்குள்ளேதான் உருவாக்கப்பட வேண்டும்.
  • பயங்கரவாதம் எந்த வடிவத்தில் இருந்தாலும் அது இருப்பதற்கு எந்த நியாயமும் இல்லை.பயங்கரவாதத்திற்கு எதிராக இரு நாடுகளும் போராடும்.  (இச்சமயம் புலிகள் பயங்கரவாதிகள் என்று ஐரோப்பிய் யூனியன், அமெரிக்கா, கனடா ஆகியவை தடை செய்திருந்தன).
  • பாதுகாப்பு கூட்டுறவுக்கான ஒப்பந்தமொன்றுக்கான அடிப்படையை உருவாக்க இரு அரசுகளின் பாதுகாப்பு துறை செயலர்கள் விரைவில் சந்தித்து பேசுவார்கள்.
  • 2000-ம் ஆண்டில் 700 சிங்களப் படையினருக்கு கொடுக்கப்பட்டிருந்த பயிற்சி 2002 முதல் 2000 ஆக உயர்த்தப்பட்டது
இந்த வருகைக்கு முன்பு அதிகாரிகள் மட்டத்தில் “ஒட்டுமொத்த பொருளாதாரக் கூட்டாளி ஒப்பந்தம்” (Comprehensive Economic Partnership Agreement- CEPA) பேச்சு வார்த்தைகள் ஆரம்பித்திருந்தன. இந்த ஒப்பந்தம் இரு நாடுகளும்  பரஸ்பர முதலீடுவதற்கான தடைகளை அகற்றி தடையற்ற வர்த்தகத்தை ஏற்படுத்துவதாகும்.
எச் ராஜா
“இலங்கை தமிழ் மக்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். இன்று இலங்கையில், ஆர்.எஸ்.எஸ் இன் சேவா பாரதி தான் சேவை செய்கிறது. நீ பண்ணல. நீ போனா ராஜபக்சே உன்னை அன்னைக்கே காலி பண்ணிடுவான்.”
இந்திய ஆளும் வர்க்கம் இலங்கை தீவை கொள்ளையடிக்க திறந்துவிடுவற்கான பொருளாதார ஒப்பந்தங்கள், கொள்ளையடிப்பதற்கு வசதியாக ‘முதலீட்டிற்கு உகந்த சூழலை’ உருவாக்குவதற்கு உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவர சிங்கள அரசுடன் இராணுவ கூட்டு என்ற திட்டத்தின் ஆரம்ப நிலையில் வாஜ்பாய் பிரதமர் என்றால் அதன் இறுதி நிலையில் மன்மோகன் சோனியா இருந்தார்கள். வாஜ்பாய் காலத்தில் அடித்தளம் அமைக்கப்பட்டது என்றால்  காங்கிரஸ் காலத்தில் முடித்து வைக்கப்பட்டது.
ஆனால் வாஜ்பாயை நல்லவர் என்று கூறுவதன் மூலம் ஈழத்தமிழர்களை ஏமாற்ற முயல்கிறார் வைகோ. காவிகளின் ஈழஎதிர்ப்பு வேலைகள் இன்று இந்தியாவில் மட்டுமல்ல ஈழத்திற்குள்ளும் செயல்பட்டு கொண்டிருக்கிறது. சீமானுக்கு எதிராக காவிகள் நடத்திய கூட்டத்தில் சீமானை விமர்சிக்கிறேன் என்ற பெயரில் சில முக்கியமான உண்மைகளை உளறி இருக்கிறான் எச்.ராஜா.
“இலங்கை தமிழ் மக்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். இன்று இலங்கையில், ஆர்.எஸ்.எஸ் இன் சேவா பாரதி தான் சேவை செய்கிறது. நீ பண்ணல. நீ போனா ராஜபக்சே உன்னை அன்னைக்கே காலி பண்ணிடுவான்.”  என்று பேசி இருக்கிறான்.
மற்றவர்கள் சென்றால் காலி செய்துவிடும் ராஜபக்சே ஆர்.எஸ்.எஸ் ஐ அனுமதிப்பதன் மர்மம் என்ன? அதை விளக்குகிறார். ஆர்.எஸ்.எஸ் இன் தமிழக தலைவர் டாக்டர் எம்.எல். ராஜா. 2013 மார்ச் 19-ல் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஆர்.எஸ்.எஸ் இன் மாநில தலைவர் டாக்டர்.எம்.எல். ராஜா வின் பேட்டி பின்வருமாறு செல்கிறது
“ஆர்.எஸ்.எஸ் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதி மக்களிடையே பணியாற்றி வருகிறது. நான் கடந்த 10 ஆண்டுகளில் இரண்டு முறை இலங்கைக்கு சென்று வந்துள்ளேன். தமிழ் மக்களிடம் அச்சம் கணிசமாக குறைந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் (இலங்கை) ஒற்றுமைக்கு தான் இருக்கிறதே ஒழிய பிரிவினைக்கு அல்ல.
இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு மறுவாழ்வு, பாதுகப்பு, அரசியல் உரிமை வழங்கவேண்டும். இலங்கையில் கூட்டாட்சி முறை ஏற்படுத்த வேண்டும். இந்தியாவில் இருக்கும் அகதிகளை திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும். “
இதன் படி போர் நடந்த காலத்திலும் அதற்கு பின்னும்  சிங்கள பேரினவாதத்திற்கு கட்டுப்பட்ட இலங்கை என்ற  குறிக்கோளுடன் ஆர்.எஸ்.எஸ் அங்கு செயல்பட்டு வருவது தெளிவாகிறது. (ஆர்.எஸ்.எஸ்-ன் அகண்ட பாரதத்தில் ஈழமும் ஒரு சமஸ்தானம் என்பதை நினைவில் கொள்க.)
மேலும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் என்.ஜீ.ஓ வும் இலங்கையில் செயல்படுகிறது. சுனாமியை காரணமாக வைத்து இந்த வானரங்கள் அங்கு படையெடுத்தன.  இதனால் தான் செஞ்சிலுவை சங்கம் உள்ளிட்ட  போன்ற சர்வதேச அமைப்புகள் அனுமதி மறுக்கப்பட்டிருக்கும் நிலையிலும் ஆர்.எஸ்.எஸ் அங்கு செயல்படமுடிகிறது. இதை தங்களின் வாயாலேயே ஒப்புக்கொள்கிறார்கள். அதையே எச்.ராஜா பெருமையாகவும் பேசுகிறான். தான் ஆட்சியில் இருந்த போதும் சரி,  தற்போது இல்லாத போதும் கூட என்.ஜி.ஒ மூலம் ஈழத்திற்கு எதிராக வேலை செய்யும் இந்த இந்துத்துவ கும்பல் மூலம் ஈழம் கிடைக்கும் என்று நம்மை நம்பச் சொல்கிறார்கள் வைகோ உள்ளிட்ட தமிழினவாதிகள்.
வைகோ மோடி கார்ட்டூன்ராஜபக்சேவிடம் சுஸ்மா சுராஜ் நெக்லஸ் பரிசு வாங்கி வந்ததும், ராஜபக்சே போர் குற்றவாளி இல்லை என்று பா.ஜ.க அறிவித்திருப்பதையும், பா.ஜ.க ஆளும் மாநிலங்களுக்கு அரச விருந்தாளியாக ராஜபக்சே வரவேற்கப்படுவதையும், பா.ஜ.க வின் சுப்பிரமணிய சாமி ராஜபக்சேவுக்கு ஆதரவாக லாபி செய்வதையும்  இந்த பின்னணியில் பரிசீலிக்க வேண்டும். இந்திய ஆளும் வர்க்க நலன் என்ற அஜெண்டாவில் தான் காங், பிஜேபி இரண்டும் செயல்படுகின்றன. முக்கியமாக இந்துத்துவா கும்பல் இந்தியாவில் இருந்து மட்டுமில்லாமல் ஈழத்தில் நுழைந்தும் வேலை செய்கிறது.
இலங்கை அரசின் நம்பிக்கைக்குரிய கூட்டாளியாக இருக்கும் மோடி உள்ளிட்ட பா.ஜ.க வினர் தான் இன்று வைகோ வின் நண்பர்கள். ‘என் நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே’ என்று இவர் நாளை ராஜபக்சேவுடன் நண்பேண்டா என்று ஜே போட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
சென்னை வண்டலூர் பொதுக்கூட்டத்தில் தமிழ் சென்டிமெண்டை கவர மோடியின் இந்தி வாய் பாரதிதாசனின் பாடலை பேச, மதிமுக சார்பில் அங்கு பேசிய மல்லை சத்யாவோ மகாபாரதத்தை பேசினார். விபிஷணர்களின் வித்தைக்கு இதை விட என்ன சான்று வேண்டும்?
இதில் வைகோவை தேரோட்டும் கண்ணனாகவும், மோடியை வில்லேந்திய அர்ஜுனனாகவும் பிளக்ஸ் வைத்து மதிமுக அடிப்பொடிகள் அழகு பார்க்கின்றன. ஆனால் இது மோடியையும், கடவுளர்களையும் இழிவுபடுத்துவதாகும் என்று பாஜக தலைவர்கள் கண்டித்திருக்கின்றனர். செய்வது ஒரு வார்டு கவுன்சிலர் அடியாள் வேலை என்றாலும் இந்தியாவைக் கைப்பற்ற நான்தான் மோடிக்கு உபதேசம் செய்கிறேன் என்றால் வைகோவின் உதாரை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
பார்ப்பனிய புராணங்களை ஆராய்ச்சி செய்து இந்துமதவெறியர்களை குஷிப்படுத்தி வரும் வை.கோவிற்கு ஆரியமாயை நினைவில் இருக்குமா என்று தெரியவில்லை. இருந்தாலும் நினைவுபடுத்துகிறோம். அண்ணாவின் இந்த வரிகள் வைகோவுக்காகவே எழுதப்பட்டது போல இருக்கிறது. அந்த வகையில் ஆரியமாயையில் திராவிட விபீஷ்ணர்களும் இருக்கிறார்கள்.
“பேச நா இரண்டுடையாய் போற்றி
தாசர் தம் தலைவா போற்றி
வஞ்சக வேந்தே போற்றி
பயங்கொள்ளி பரமா போற்றி
எம் இனம் கெடுத்தோய் போற்றி
ஈடில்லா கேடே போற்றி”
- ரவி  vinavu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக