செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

தமிழ் பட தயாரிப்பில் பிரபல இந்தி பட நிறுவனம் யாஷ்ராஜ் பிலிம்ஸ்


சில்சிலா, தில்வாலே துல் ஹனியா லே ஜாயங்கே, டர், தூம்–3 உள்பட 60 இந்தி படங்களை தயாரித்த நிறுவனம், யாஷ்ராஜ் பிலிம்ஸ். அமிதாப்பச்சன், ஷாருக்கான் போன்ற பிரபல கதாநாயகர்களுக்கு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்த நிறுவனம் இது. இந்த நிறுவனம் முதன்முதலாக தமிழ் பட தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. யாஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் முதல் தமிழ் படம், ‘ஆஹா கல்யாணம்’. இதில், ‘நான் ஈ’ படத்தில் நடித்த நானி கதாநாயகனாக நடித்து இருக்கிறார். கதாநாயகியாக டெல்லி அழகி வாணி அறிமுகமாகிறார். முக்கிய வேடம் ஒன்றில் சிம்ரன் நடித்துள்ளார். விஷ்ணுவர்தனிடம் உதவி டைரக்டராக இருந்த கோகுல் கிருஷ்ணா டைரக்டு செய்திருக்கிறார். தமிழ் படத்தில் நடிப்பது பற்றி நானி கூறியதாவது:– ‘‘வெப்பம், நான் ஈ படங்களை அடுத்து நான் நடிக்கும் தமிழ் படம், ‘ஆஹா கல்யாணம்.’ இதே படம் தெலுங்கிலும் தயாராகிறது. அந்த படத்திலும் நானே கதாநாயகனாக நடிக்கிறேன். இரண்டு மொழிகளிலும் சொந்த குரலில் பேசி நடிக்கிறேன்.
இந்த படத்தில் நானும், வாணியும் திருமண ஏற்பாடுகளை செய்து கொடுப்பவர்களாக நடித்து இருக்கிறோம். தமிழ் படத்தில் நடித்தது, ‘பிக்னிக்’ போய் வந்தது போல் ஜாலியாக இருந்தது.’’ யாஷ்ராஜ் பிலிம்சின் தென் பகுதி தலைமை அதிகாரியான பதம்குமார் கூறும்போது, ‘‘ஆஹா கல்யாணம் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. படத்தை இம்மாதம் இறுதியில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறோம். யாஷ்ராஜ் பிலிம்ஸ் தொடர்ந்து தமிழ் படங்களை தயாரிக்க முடிவு செய்து இருக்கிறது. அடுத்து, கோகுல் கிருஷ்ணா டைரக்ஷனில் மீண்டும் ஒரு தமிழ் படம் தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறோம்’’ என்றார்.  dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக