ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

வெற்றி பெற்ற களிப்பில் சீமாந்திரா மக்களை நோகடிக்காதீர்கள் தெலங்கானா தலைவர்களுக்கு சோனியா வேண்டுகோ

புதுடெல்லி:தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்ட மகிழ்ச்சியில், சீமாந்திரா பகுதி மக்கள் மனம் புண்படும் வகையில் தெலங்கானா தலைவர்கள் பேசக் கூடாது என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஆந்திராவை பிரித்து புதிய தெலங்கானா மாநிலம் அமைப்பதற்கான மசோதா, நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. விரைவில் ஜனாதிபதி ஒப்புதல் பெறப்பட்டு அதிகாரப்பூர்வமாக அரசிதழில் வெளியிடப்பட உள்ளது. இது சீமாந்திரா பகுதி மக்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் கிரண்குமார் ரெட்டி உள்ளிட்டோர் தங்களது பதவிகளை தூக்கி எறிந்து விட்டு, கட்சியை விட்டு வெளியேறியுள்ளனர். இந்நிலையில், தெலங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திரா பகுதியில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. தெலங்கானா பகுதியில் வெற்றி கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.


இதற்கிடையே, தெலங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர்கள், புதிய மாநிலம் குறித்து சோனியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தெலங்கானா விவகாரத்தில் சிறப்பாக பணியாற்றிய எம்பிக்கள் மற்றும் அமைச்சர்களை சோனியா பாராட்டினார். அப்போது அவர் கூறுகையில், ‘தெலங்கானா மாநிலம் கிடைத்து விட்ட வெற்றி களிப்பில், சீமாந்திரா மக்கள் மனம் நோகும்படி யாரும் பேசக் கூடாது. இருதரப்பு மக்களும் நீண்ட காலமாக ஒற்றுமையுடனும், சகோதரத்துவத்துடனும் வாழ்ந்து வருகின்றனர். இருதரப்பிலும் உறவு நீண்ட காலத்திற்கு நீடிக்க வேண்டும். எனவே, தெலங்கானா தலைவர்கள் சீமாந்திராவை பழித்து பேசக் கூடாது’ என்று  கேட்டுக் கொண்டார். - tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக