திங்கள், 24 பிப்ரவரி, 2014

மரண தண்டனையிலிருந்து இத்தாலி வீரர்கள் தப்பினர்


புதுடில்லி: 'இத்தாலி கடற்படை வீரர்கள் மீது, கடல் கொள்ளை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படாது' என, மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது. இதன் மூலம், இத்தாலி வீரர்கள், மரண தண்டனையிலிருந்து தப்பியுள்ளனர்.
கடந்த, 2012ல், கேரள கடல் எல்லைக்குள் மீன் பிடித்து கொண்டிருந்த, இந்திய மீனவர்கள் மீது, இத்தாலி கடற்படையினர் தாக்குதல் நடத்தினர். இதில், இரண்டு மீனவர்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக, இத்தாலி கடற்படை வீரர்கள் இருவர் கைது செய்யப்பட்டு, பின், ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், டில்லியில் உள்ள, இத்தாலி தூதரகத்தில் தங்கி உள்ளனர். இந்நிலையில், இத்தாலி வீரர்கள் மீதான வழக்கு விசாரணையை தாமதப்படுத்து வதாக, அந்த நாட்டு அரசு, அதிருப்தி தெரிவித்திருந்தது.


இந்த வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில், இன்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில் ஆஜரான, அட்டர்னி ஜெனரல், வாகனவதி கூறியதாவது: இத்தாலி வீரர்கள் மீது, எந்த மாதிரியான வழக்கு பதிவு செய்வது என்பது குறித்து, சட்ட அமைச்சகத்திடம் ஆலோசிக்கப்பட்டது. இதில், 'இத்தாலி வீரர்கள் மீது, கடல் கொள்ளை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு வேண்டாம்' என, சட்ட அமைச்சகம் தெரிவித்தது. சட்ட அமைச்சகத்தின் இந்த ஆலோசனையை ஏற்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். கடல் கொள்ளை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தால், குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு, அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படும். தற்போது, மத்திய அரசு எடுத்துள்ள முடிவின் மூலம், இத்தாலி வீரர்கள், கடுமையான தண்டனையிலிருந்து தப்பி உள்ளனர். dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக