செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

அம்மா பஜனைக்கு இழுத்துச்செல்லப்பட்ட மாணவர்கள் ! அம்மா… தாயே… வருங்காலமே… பாரதமே… வெங்காயமே… வெள்ளைப்பூண்டே

அம்மாவுக்கு வரவேற்பு என்ற பெயரில் ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகள் பள்ளி மாணவர்களை ரோட்டில் நிற்க வைத்தும், அம்மா வாழ்க என்று கூவ இவர்களின் கூட்டங்களுக்கு இழுத்துச் செல்வதையும் நாம் எப்படி அனுமதிக்க முடியும்? நாஞ்சில் சம்பத்துக்கு இனோவா கார்… பண்ருட்டியாருக்கு அண்ணா அவார்ட்…! அம்மா… தாயே… வருங்காலமே… பாரதமே… வெங்காயமே… வெள்ளைப்பூண்டே… என்று குட்டிச்சுவரைக்கூட விட்டுவைக்காத பிளக்ஸ் பேனர்கள்… அம்மா புராணம் பாடும் குத்தாட்டங்கள்… பொதுக்கூட்டங்கள்… என களை கட்டியிருக்கிறது, நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரமும் அம்மாவின் பிரதமர் கனவிற்கான அச்சாரமும்! ‘பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் அம்மா மட்டுமே’ என்றொரு தீர்மானத்தை நிறைவேற்றினார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற அ.தி.மு.க.வின் பொதுக்குழுவில் ‘பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் அம்மா மட்டுமே’ என்றொரு தீர்மானத்தை நிறைவேற்றினார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். ‘சென்னை எக்ஸ்பிரஸ் இனி செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ஆக மாறும்’ என்று ‘அம்மையாரும்’ தன் பங்குக்கு திரியை கொளுத்திப் போட, ர.ர.க்கள் பண்ணும் அலப்பறையைத் தாங்க முடியாமல் தகிக்கிறது தமிழகம்.

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கான மூன்று நாள் மாநாட்டில் கூட, “அம்மா.. உங்களால், எங்க வீட்டுக்கு மிக்ஸி, கிரைண்டர்,  ஃபேன், கறவை மாடுகள் எல்லாம் கிடைச்சுது. செலவே இல்லாமல் எங்களுக்கு கல்வியைக் கொடுத்திருக்கீங்க. நீங்கள் எப்ப பிரதமர் ஆகப் போறீங்கன்னு ஆவலாகக் காத்திருக்கிறோம்” என்று பள்ளி மாணவர்கள் அம்மாவிற்காக உருகுவதைப் போல குறும்படத்தை தயார் செய்து படம் ஓட்டியிருக்கிறார், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர். அரசு அதிகாரியான மாவட்டத்தின் ஆட்சியரே, ‘அம்மா படம்’ ஓட்டும் பொழுது, அ.தி.மு.க.வின் தொண்டர்கள் சளைத்தவர்களா என்ன? திரும்பிய பக்கமெல்லாம் திக்குமுக்காட வைக்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்.
அந்த வரிசையில், “ஜெயலலிதா பிரதமராக சபதமேற்கும் மாணவ சமுதாயத்தின் லட்சிய முழக்கம்” என்ற தலைப்பில் கோவைப்புதூர் மைதானத்தில் அ.தி.மு.க.வினரால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றுள்ள கூட்டத்தில் “ஈழத்தமிழர் இன்னல் தீர, இந்தியா வல்லரசாக, தமிழகத்தின் ஜீவாதார உரிமைகள் மீட்டெடுக்க… அம்மா பிரதமராக வேண்டு”மென்று பிஞ்சு பிள்ளைகளை அம்மா புராணம் பாட வைத்திருக்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள். அம்மா ஆதரவு ஏடுகளே இவற்றையெல்லாம் பொறுக்க மாட்டாமல் பொரிந்து தள்ளுகின்றன.
த.கணேசன்.
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாநில அமைப்பாளர் த.கணேசன்.
பெற்றோர்களுக்கு தெரிவிக்காமலும், பள்ளி நிர்வாகத்திடம் அனுமதி பெறாமலும் பள்ளி மாணவர்களை ஆளும் கட்சியின் அரசியல் கூட்டத்துக்கு ‘அழைத்து’ சென்றது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. இந்நிலையில், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாநில அமைப்பாளர் த.கணேசனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.
கேள்வி :
கோவைப்புதூர் மைதானத்தில் அ.தி.மு.க.வினரால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்குப் பள்ளி மாணவர்கள் அழைத்து செல்லப்பட்டுள்ளது பற்றி தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?
பதில் :
முதலில், அவர்கள் அழைத்து வரப்படவில்லை. “வினா-விடை வங்கி வழங்குகிறோம்”என்று கயிறு திரித்து சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள பள்ளிகளிலிருந்து 10- மற்றும் 12-வது வகுப்பு மாணவர்களை வலுக்கட்டாயமாக இழுத்து வந்திருக்கின்றனர். இழுத்து வந்தனர் என்பது கூட நாகரீகமாகத் தோன்றுகிறது. சட்டவிரோதமாகக் கடத்தி சென்றனர் என்றுதான் கூற வேண்டும். அடுத்து, நான் மட்டும் இதைக்கூறவில்லை, பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களின் புகாரும் இதுதான்.
“தேர்வுக்குத் தயார் ஆவதற்கான புத்தகத்தை வழக்குவதாக்கூறி, பள்ளி மாணவர்களை அரசியல் கூட்டத்துக்கு அழைத்து சென்றுள்ளது சரியல்ல. மதியம் 2.30 மணிக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவர்கள், இரவு 8.30 மணிவரை திரும்பவில்லை. இதனால் நாங்கள் பதறிப்போனோம். பள்ளியை முற்றுகையிட்டோம். மாநகராட்சி நிர்வாகத்திடம் பேசினோம். ஆனால், அவர்களுக்குக் கூட தகவல் தெரியவில்லை. இப்படி எந்த அனுமதியும் இன்றி மாணவர்களை அழைத்துச்செல்வது விதிமுறை மீறல். வாக்களிக்கும் வயதை எட்டாத பள்ளி மாணவர்களை அரசியல் கூட்டத்துக்கு, அதிகாரத்தின் காரணமாக கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்வது முறையல்ல. மாணவர்களைப் பகடைக் காய்களாகப் பயன்படுத்தி, நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியல் ஆதாயத்தை அடைய முயற்சித்துள்ளனர்.” என்று தனது ஆதங்கத்தை 22.01.2014 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் கொட்டியுள்ளார் பாதிக்கப்பட்ட மாணவர் ஒருவரின் பெற்றோர் வேல்முருகன்.
இந்த ஒரு சம்பவம்தான் என்றில்லை. இதற்கு முன்னரும் இதே போல், சென்னை வானகரத்தில் நடைபெற்ற அ.தி.மு.க.வின் பொதுக்குழுவிற்கு வருகை தந்த ஜெயாவை வரவேற்க மதுரவாயல் பகுதியில் பள்ளி மாணவிகள் கையில் லேப்டாப்-ஐ கொடுத்து நடுரோட்டில் கால் கடுக்க நிற்க வைத்திருந்தனர். இதை நாங்கள் அப்போதே அம்பலப்படுத்தியிருந்தோம். தற்பொழுது, கோவையில் அம்மாவின் கூட்டத்திற்கு பள்ளி மாணவர்களை இழுத்துச் சென்றுள்ளனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்த மாணவர் கடத்தலில் ஈடுபட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் மீதும், துணைபோன அதிகாரிகள் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீதும், சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கை.
கேள்வி:
பள்ளி மாணவர்களை அரசியல் கட்சிக் கூட்டத்திற்கு அழைத்துச் சென்றது அ.தி.மு.க.காரர்கள் தானே? இந்த சம்பவத்தில் பள்ளி நிர்வாகத்தையும், போலீசு அதிகாரிகளையும் நீங்கள் ஏன் குறை கூறுகிறீர்கள்?
பதில்:
நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இவர்களது ஒத்துழைப்பின்றி மாணவர்கள் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு சாத்தியமேயில்லை என்று பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டுகிறோம்.
’பள்ளி வளாகத்திற்குள் மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லை, சமூக விரோதிகள் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்துவிடுகிறார்கள்’ என்று கதைகட்டி கண்காணிப்புக் கேமராவை அரசுப் பள்ளிகளில் வைத்து மாணவர்களை வேவு பார்க்கும் போலீசாருக்கு, இந்த அ.தி.மு.க குண்டர்கள் மாணவர்களை கடத்திய செய்தி தெரியாத மர்மம் என்ன? கண்காணிப்புக் கேமரா வைத்திருப்பது யாரைக் கண்காணிக்க? ஜனநாயக உரிமைக்காக மாணவர்கள் போராடக் கூடாது, மாணவர் சங்க நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்பதற்காகத்தான் கண்காணிப்புக் கேமராக்கள் பள்ளிகளில் பொருத்தப்பட்டிருக்கின்றன என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறது, இந்த சம்பவம்.
புமாஇமு சாலை மறியல்
சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை அமல்படுத்தக் கோரி போராடிய புமாஇமு (கோப்புப் படம்)
தமது கல்வி உரிமைக்காக மாணவர்கள் போராடினால் – உன் படிப்பை மட்டும் நீ பார் – என்று உபதேசிக்கும் போலீசு-அதிகார வர்க்க கும்பல், ஓட்டுக்கட்சி நிகழ்ச்சிகளுக்கு பள்ளிக்கூடத்திலிருந்து மாணவர்கள் கடத்தி செல்லப்படுவது குறித்து என்ன சொல்கிறது?
இங்கே ஒரு சம்பவத்தை நிச்சயம் பகிர்ந்து கொண்டாக வேண்டும். சமச்சீர் பாடப்புத்தகங்களை உடனடியாக மாணவர்களுக்கு  வழங்கக்கோரி, 26.07.2011 அன்று திருச்சியில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் பள்ளிக் கிளைகள் சார்பில் திருச்சி-மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்து நடத்தியது. இப்போராட்டத்தில் பள்ளி மாணவர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டதை கண்டு ஆத்திரமுற்ற போலீசு, பள்ளி மாணவர்களை கடத்தி வந்து நாங்கள் போராட்டம் நடத்தியதாக வதந்தியைப் பரப்பியது. பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் எவருமே தமது பிள்ளைகளை நாங்கள் கடத்திவிட்டதாக புகார் அளிக்காத போதும், சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரை மிரட்டி பொய்ப்புகாரை எழுதி வாங்கிக்கொண்டு, எமது அமைப்பின் முன்னணியாளர்கள் மீது கடத்தல் வழக்கைப் பதிவு செய்து சிறையிலடைத்தது ஜெயாவின் போலீசு.
கோவைப் புதூர் பகுதியில், மாணவர்களிடம் பொய் சொல்லி உண்மையில் கடத்தி இருப்பது அ.தி.மு.க குண்டர்கள்தான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த மாணவர் கடத்தலில் ஈடுபட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் மீதும், துணைபோன அதிகாரிகள் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீதும், சட்டரீதியான நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்? இதனை என்னவென்று சொல்வது?
கேள்வி:
இலவச பஸ்பாஸ், இலவச லேப்டாப் உள்ளிட்ட அரசின் பல்வேறு நலத்திட்டங்களால் பலன் பெற்ற மாணவர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் அக்கூட்டத்தில் பங்கேற்பதில் என்ன தவறு இருக்க முடியும்?
பதில்:
’’இலவச பஸ்பாஸ் கொடுத்தார். இலவச லேப்டாப் கொடுத்தார்’’ என்று பட்டியல் வாசிக்கிறார்கள் 45 டிகிரியில் வளைந்திருக்கும் அம்மாவின் விசுவாசிகள். அவர்கள் சொல்லாமல் விடுபட்டதை நான் சொல்கிறேன். பஸ்பாஸ் இலவசமாக கொடுத்தார், ஆனால் மாணவர்களை இலவசமாக பேருந்தில் ஏற்றக்கூடாது என்று போக்குவரத்து தொழிலாளிகளுக்கு ரகசிய உத்தரவும் போட்டார். (கிராமப்பகுதிகளில் பேருந்தில் பள்ளி மாணவர்களை ஏற்றுவதில்லை என்ற செய்தி தினம் பத்திரிக்கைகளில் வருகிறது). லேப்டாப் இலவசமாக கொடுத்தார், இலவசக் கல்விக்கு குழிபறித்தார். இலவசக் கல்வியில் ஒரு அங்கம்தான் மாணவர்கள் வீடுகளில் இருந்து பள்ளிக்கு சென்று வருவதற்கான ஏற்பாடும். அனைத்துப் பிள்ளைகளும் சாதி, மத, சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இன்றி படிக்கும் பொதுப்பள்ளி முறையும், மாணவர்கள் வசிக்கும் பகுதியிலேயே உள்ள பள்ளிகளில் படிக்கும் (அந்தந்த வட்டாரப் பள்ளிகள்) அருகமைப்பள்ளி முறையும் அமுல்படுத்தப்பட்டால், பள்ளி மாணவர்கள் நீண்ட தொலைவு சென்று படிக்க வேண்டிய அவசியமும் இல்லை, அதற்கு இவர்கள் பஸ்பாஸ் இலவசமாக கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை. இத்தகைய இலவசக் கல்வியும், பொதுப்பள்ளி – அருகமைப்பள்ளி முறையும்தான் மாணவர்களுக்கு அவசியமானது, மாணவ சமுதாயத்திற்கு செய்யும் நன்மையும் இதுதான்.
சமச்சீர் கல்வி - பச்சையப்பா கல்லூரி
சமச்சீர் கல்வி புத்தகங்களை வழங்கக் கோரி போராடும் பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் (கோப்புப் படம்).
இதை நாங்கள் மட்டும் சொல்லவில்லை, 1964 லில் இருந்து மூத்தக் கல்வியாளர் எஸ்.எஸ் ராஜகோபாலன் போன்றவர்கள் வலியுறுத்தும் உண்மையும் இதுதான். மாணவர் நலனுக்காக சிந்திப்பவர் என்றால் இதைத்தானே செய்ய வேண்டும். ஏன் ஜெயலலிதா செய்யவில்லை? இது முதலாளிகள் நலனுக்கு எதிரானது. அந்த வகையில் ஜெ வுக்கும் எதிரானது. லேப்டாப், சைக்கிள் கொடுப்பது கொடுப்பது முதலாளிகளின் லாபத்துக்கு நல்லது, அது ஜெ வுக்கு ஒரு கல்லில் இரண்டு மாங்காய் போன்ற நல்லது. ஒன்று இலவசங்களைக் காட்டி ’கல்வித்தாயாகி’ ஓட்டுப் பொறுக்கலாம், மற்றொன்று லேப்டாப் போன்றவைகள் மூலம் சீரழிவுகளைப் பரப்பி மாணவர்களின் போர்க்குணத்தைப் மழுங்கடித்து அடிமையாக்கலாம். நான் சொல்வதில் நீங்கள் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. பள்ளிக்கூடங்கள் அருகில் சாராயக் கடைகளை திறந்து, படிக்கச் செல்லும் மாணவர்களை குடிக்க வைத்து அழகு பார்ப்பதில் ஜெ வுக்கு நிகர் ஜெ தான்.
மிகமுக்கியமாக, பார்ப்பன பாசிசத் திமிரோடு சமச்சீர் பாடத்திட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தவர்தான் ஜெயலலிதா. இவ்வழக்கில் தமக்கு எதிராக நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்பட்டதை சகித்துக்கொள்ள முடியாமல், பள்ளிக்கூடங்கள் திறந்து மூன்று மாதங்கள் கடந்த பின்னரும் சமச்சீர் கல்வி முறையில் தயாரிக்கப்பட்ட பாடப்புத்தகங்களை வழங்க மறுத்து வக்கிரமாக நடந்து கொண்டார் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த சமச்சீர் பாடப்புத்தகங்களில் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்ட வள்ளுவரின் படம் அச்சிடப்பட்டது என்ற அற்ப காரணத்துக்காக, அந்த வள்ளுவரின் முகத்தை வெள்ளைக் காகிதம் கொண்டு மறைக்க சொன்னவர் ஜெயலலிதா. குரங்கு கையில் கிடைத்த பூ மாலைப் போல, பாசிச ஜெயவின் கையில் சிக்கி சின்னாப்பின்னமானது சமச்சீர்க்கல்வி பாடத்திட்டம். சமச்சீர்க்கல்வி பாடத்திட்டத்தை எதிர்த்தது மட்டுமின்றி, அரசுப்பள்ளிகளில் ஆங்கில வகுப்புகளைத் திணித்து தமிழ்வழிக் கல்விக்கு குழி பறித்தவர் இந்த ஜெயலலிதா. திட்டமிட்டே அரசுப்பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கீட்டைப் படிப்படியாகக் குறைத்து, போதிய ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல், அரசுப்பள்ளிகளை சீரழித்து, தனியார் பள்ளிகளின் அநியாயமான கட்டணக்கொள்ளைக்கு ஆதரவாக சட்டப்பூர்வமாகவே ஜே போட்டவர் இந்த ஜெயலலிதா. மாணவர் சமூகத்தின் ஜென்மப்பகை இந்த ஜெயலலிதா, என்பதற்கு இன்னும் பல உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
இவர்கள் மாணவர்களின் நலன் பற்றி பேசுவதற்கு எந்த யோக்கியதையும் இல்லை! இவர்கள் நடத்தும் கூட்டத்திற்கு மாணவர்களை அழைத்துச் செல்வதற்கு எந்த உரிமையுமில்லை!
இனோவா காரையும், அவார்டையும் வாங்க அ.தி.மு.க. அடிமைகள் வேண்டுமானால் அம்மா புராணம் பாடிவிட்டு போகட்டும். அது அவர்கள் பாடு! தங்களின் பதவி சுகத்துக்காக, அம்மாவுக்கு வரவேற்பு என்ற பெயரில் ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகள் பள்ளி மாணவர்களை ரோட்டில் நிற்க வைத்தும், அம்மா வாழ்க என்று கூவ இவர்களின் கூட்டங்களுக்கு இழுத்துச் செல்வதையும் நாம் எப்படி அனுமதிக்க முடியும்?
கேள்வி :
மாணவர்கள் அரசியலிலிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டுமென்று கூற வருகிறீர்களா?
பதில் :
நாங்கள் எப்பொழுதும் அப்படிச் சொன்னதில்லை. அது எங்கள் கொள்கையும் இல்லை. மாணவர்களுக்கு அரசியல் வேண்டும். நாட்டின் எதிர்கால சமுதாயத்தை வழிநடத்தப் போகிறவர்களுக்கு, எதிர்காலத் தலைவர்களான மாணவர்களுக்கு அரசியல் வேண்டாம் என்று எப்படி சொல்ல முடியும். இந்த நாட்டின் தலை எழுத்தை தீர்மானிப்பது அரசியல் எனும் பொழுது அதிலிருந்து மாணவர்களை எப்படி விலக்கி வைக்க முடியும்?
ஓட்டுக்கட்சியினர்தான் மேடைக்கு மேடை மாணவர்களுக்கு அரசியல் கூடாது என்கிறார்கள். ஆட்சிக்கு வந்தால் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் மாணவர்களை பள்ளி, கல்லூரிகளில் இருந்து நீக்கம் செய்ய உத்தரவிடுகிறார்கள். தங்கள் ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடும் மாணவர்களை போலீசை ஏவி அடக்கி ஒடுக்குகிறார்கள். ஆனால், அம்மா புகழ் பாடுவதற்காக பள்ளி மாணவர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்வது, வேகாத வெயில் கால்கடுக்க நிற்க வைப்பது, தேர்தல் காலங்களில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய, ஓட்டுப் பொறுக்க தெருத் தெருவாக பிரச்சாரம் செய்ய, பொதுக்கூட்டங்களில் கூத்தாட என்று பிழைப்புவாத, கேடுகெட்ட, அழுகி நாறிக்கொண்டிருக்கும் பாராளுமன்ற ஓட்டுக்கட்சி அரசியலில் ஈடுபடுத்துகிறார்கள். மாணவர்களுக்கு அரசியல் கூடாது என்று சொல்லிக்கொண்டே தங்கள் அரசியல் ஆதாயத்துக்காக மாணவர் சமுதாயத்தையே சீரழிக்கிறார்கள். உண்மையில் இந்த ஓட்டுக்கட்சி அரசியல் மாணவர்களுக்கு கூடாதுதான்.
புமாஇமு போராட்டம்
பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவருக்கு ராஜீவ் கொலை வழக்கில் வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி போராடும் புமாஇமு (கோப்புப் படம்)
மாணவர்களுக்கு அரசியல் வேண்டும் என்கிறீர்கள், அப்புறம் வேண்டாமென்கிறீர்கள் புரியவில்லையே என்று நீங்கள் கேட்கலாம். நாங்கள் சொல்லும் அரசியல் இந்த நாட்டின் பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்களின் தலையெழுத்தை தீர்மானிப்பதற்கான அரசியல். பெரும்பான்மை உழைக்கும் மக்களை சுரண்டிக் கொழுக்கும் நிலபிரபுத்துவம், தரகு முதலாளித்துவ, ஏகாதிபத்தியங்களுக்காக இங்கு நடக்கும் ஆட்சியதிகாரத்தை தூக்கியெறிவதற்கான அரசியல் மாணவர்களுக்கு வேண்டும். லஞ்ச, ஊழல், முதலாளிகளின் சுரண்டல்,சமூக விரோத நடவடிக்கைகள் இல்லாத, அனைவருக்கும் கல்வி இலவசமாக கிடைக்கும் சமூகமாற்றத்திற்கான, ஒரு புதிய சமூகத்திற்கான புரட்சிகர அரசியல் மாணவர்களுக்கு வேண்டும்.
மாணவர்கள் அரசியல் போராட்டங்களில் ஈடுபடாமல் எதுவுமே கிடைப்பதில்லை. சமச்சீர் பாடபுத்தகம் வழங்கும் விவகாரத்தில், பள்ளிகள் திறந்து மூன்று மாதங்களை கடந்த பின்னரும் பாடப்புத்தகங்கள் வழங்கப்படாததை கண்டித்தும் உடனடியாகப் பாடப்புத்தகங்களை வழங்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்து எமது புமாஇமு சார்பில் தமிழகமெங்கும் பள்ளி மாணவர்களை ஒருங்கிணைத்துப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த பின்புதான் சமச்சீர் பாடப்புத்தகம் வழங்கப்பட்டது.
அரசுப்பள்ளிகளின் தரத்தை உயர்த்து! தனியார் பள்ளிகளை அரசுடைமையாக்கு என்ற முழக்கத்தின் கீழ் தமிழகமெங்கும் தொடர் போராட்டங்களை நடத்திவரும் எமது அமைப்பு சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி நடத்திய ரிப்பன் கட்டிடம் முற்றுகைப் போராட்டத்தையடுத்து, மாநகராட்சிப் பள்ளிகளில் எமது அமைப்பின் பிரதிநிதிகள் அரசு அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வுகளை மேற்கொண்டுள் vinavu.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக