ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014

தி.மு.க.,வில் 'சீட்' பேரம் அதிகரிக்க விஜயகாந்த்:காங்கிரசை பகடையாக்கும் தந்திரம்

தி.மு.க.,வுடன் பேரத்தை அதிகரிக்கவே, பிரதமரை சந்திக்க, விஜயகாந்த் டில்லி சென்றதாகவும், காங்கிரஸ் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்மூலம், காங்கிரசை, அவர் பகடைக்காயாக பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. உறுதியான பதில் இல்லை: லோக்சபா தேர்தலுக்காக, தே.மு.தி.க.,வுடன் கூட்டணி வைக்க, பா.ஜ.,வும், தி.மு.க.,வும் விரும்புகின்றன. அதனால், இரு கட்சிகளும், தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்தை, கூட்டணி தொடர்பாக, பல முறை அணுகின, ஆனாலும், அவர் உறுதியான பதில் எதையும் அளிக்கவில்லை.கடந்த, 2ம் தேதி, உளுந்தூர்பேட்டையில் நடந்த, தே.மு.தி.க., மாநாட்டிற்கு பிறகாவது, விஜயகாந்த் கூட்டணி அறிவிப்பை வெளியிடுவார் என, நம்பப்பட்டது; அதுவும் நடக்கவில்லை. இந்நிலையில்தான், தமிழக பிரச்னைகள் தொடர்பாக, புகார் மனு அளிக்க, டில்லி சென்றார் விஜயகாந்த். டில்லி சென்ற அவர், காங்கிரஸ் மற்றும் பா.ஜ., தலைவர்களைச் சந்தித்துப் பேசியதாக, தகவல்கள் கசிந்தாலும், அதை எந்தத் தரப்பும் உறுதி செய்யவில்லை.
விஜயகாந்த்தை கூட்டணிக்கு அழைத்து, அவரிடம் இருந்து சரியான பதில் வராததால், சலிப்படைந்த, தமிழக பா.ஜ., தலைவர்கள், 'இனி, விஜயகாந்த்தான், பதில் அளிக்க வேண்டும்' எனக்கூறி, ஓய்ந்து விட்டனர்.

ஆனாலும், தி.மு.க.,வினர், 'எப்படியும், நம் கூட்டணிக்கு, விஜயகாந்த் வந்து விடுவார்' என, வழிமேல் விழிவைத்து காத்திருக்கின்றனர். தி.மு.க., அழைத்த உடன், கூட்டணிக்கு, சம்மதம் தெரிவித்து விட்டால், அவர்களிடம், அதிக, 'சீட்' பெற பேரம் பேச முடியாது என்பதால்தான், பிரதமரை சந்திக்க, விஜயகாந்த் டில்லி சென்றதாகவும், அங்கு பிரதமரைச் சந்தித்துடன், காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியதாகவும் தெரியவந்துள்ளது.>செல்வாக்கை இழப்பார் ஒருவேளை காங்., தலைவர்களை, விஜயகாந்த் சந்தித்து பேசினாலும், அக்கட்சியுடன், லோக்சபா தேர்தலில், தே.மு.தி.க., கூட்டணி அமைக்காது. தானும், ஒரு அரசியல்வாதி என, மக்களுக்கு காட்டவே, பிரதமருடன் சந்திப்பு, காங்கிரசுடன் கூட்டணி போன்ற நாடகங்களை, விஜயகாந்த் அரங்கேற்றியுள்ளார் என, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக, அரசியல் விமர்சகர்கள் கூறியதாவது: ஊழல் எதிர்ப்பு மாநாடு நடத்திய விஜயகாந்த், காங்.,குடன் கூட்டணி அமைத்தால், செல்வாக்கை இழந்து விடுவார் என்பது கடைநிலை அரசியல்வாதிக்கும் தெரியும். அரசியலில் முதல்வர் நாற்காலிக்கு காய்நகர்த்தும், விஜயகாந்திற்கு இது தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. எனவே, தி.மு.க., கூட்டணியில், அதிக சீட்கள் பெறுவதற்காகவே, காங்., கட்சியை பகடையாக பயன்படுத்துகிறார்.பா.ஜ., கூட்டணியில், ம.தி.மு.க., - -பா.ம.க., இடம் பெறுவது உறுதியாகியுள்ளது. பா.ஜ.,வை தவிர்த்து, இந்த இரு கட்சி தலைவர்களும் விஜயகாந்திற்கு முரண்பாடானவர்கள். அதனால், பா.ஜ., கூட்டணியில் தே.மு.தி.க., இடம் பெற்றாலும், அக்கட்சிகளின் ஓட்டுக்கள், விஜய காந்த் நிறுத்தும் வேட்பாளருக்கு கிடைக்காது. புரிந்து கொள்ளவில்லை: எனவே, பா.ஜ., கூட்டணி காரியத்திற்கு ஆகாது என்ற முடிவிற்கு, விஜயகாந்த் ஏற்கனவே வந்து விட்டார். மேலும், முதல்வர் ஜெயலலிதாவிற்கு பதிலடி கொடுக்க, பலமான கூட்டணி அமைக்க வேண்டும் என்றும் விரும்புகிறார். இருந்தாலும், காங்கிரஸ் மத்தியிலும், தனக்கு செல்வாக்கு உள்ளது என்பதை காட்டிக் கொண்டால், 'சீட்' பேரம் பேச வசதியாக இருக்கும் என, நம்புகிறார். இது தெரியாமல், காங்., கட்சியினரும், தே.மு.தி.க.,வுடன் கூட்டணி என்று பரபரப்பாக பேசி வருகின்றனர். ஆனால், விஜயகாந்த் நடவடிக்கைகளையும், சீட் பேரத்திற்காக, அவர் நடந்தும் நாடகங்களையும், நன்கு உணர்ந்துள்ளார் கருணாநிதி. அதனால்தான், அவரை, 'ஸ்டன்ட்' நடிகர்; அப்படித்தான் இருப்பார் என, கூறியுள்ளார். விஜயகாந்தை, கருணாநிதி புரிந்துள்ள அளவுக்கு, காங்., கட்சியினர் புரிந்து கொள்ளவில்லை.இவ்வாறு, அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

- நமது சிறப்பு நிருபர் dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக