செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

பொறுக்கி எடுத்த புரோக்கர் மேயர் சைதை துரைசாமி ! மேயரின் செட்டப் கூட்டம்

சைதை துரைசாமி பதவி ஏற்புமாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணைக்கிணங்க சென்னை மாநகராட்சியின் சார்பில் பொது நல சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம்’ – இப்படி ஒரு செய்தி அனைத்து நாளிதழ்களிலும் வெளியானது. இதைப் பார்த்தவுடன் சரி , இந்த கூட்டத்திற்கு கண்டிப்பாக போய் என்னதான் நடக்கிறது என்பதை பார்த்து வரவேண்டும் என்று யோசித்துக் கொண்டு இருந்தோம். இந்த நிலையில் புமாஇமுவின் அலுவலக முகவரிக்கு மாநகராட்சியின் சார்பில் மேற்கண்ட ஆலோசனைக் கூட்டத்திற்கு நம்மை கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. அதில், “உங்கள் சங்கம் சார்பில் 5 பேருக்கு மிகாமல் கலந்து கொள்ள வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது. வெற்றிலைப்பாக்கு வைத்து கூப்பிட்டும் போகாமலா இருப்பது? ‘மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணைக்கிணங்க சென்னை மாநகராட்சியின் சார்பில் பொது நல சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம்’ (2011-ம் ஆண்டு மேயராக பதவி ஏற்கும் சைதை துரைசாமி).
ஒய்.எம்.சி,ஏ. மைதானம் உள்ளே நுழைந்த உடன் மாநகராட்சி வாகனங்கள், போலீசு வாகனங்கள் என பலவும் நிரம்பி வழிந்தன. வாசலிலேயே மாநகராட்சி அதிகாரிகள் “ சார் ப்ளீஸ், இப்படி போங்க, சார் அந்த கட்ல திரும்புங்க” என்றார்கள். அலுவலகத்திற்கு சென்றால் மரியாதையை கிராம் கணக்கில் கொடுக்கும் இவர்கள் இங்கு கிலோ கணக்கில் வாரிக் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள்.

உள்விளையாட்டரங்கத்தில் மேயர் பேசிக்கொண்டிருந்தார். வெளியில் 5 டேபிள்கள் வரிசையாய் போடப்பட்டு ஒவ்வொன்றும் ஒரு மண்டலம் என அடையாளப்படுத்தப்பட்டு இருந்தது. பொது நல சங்கத்தினை சேர்ந்தவர்கள் ,தங்கள் பெயரை பதிவு செய்து ஒரு தாளில் கொடுக்க வேண்டும், அவர்கள் அதை வாங்கி வைத்துக்கொண்டு செயலலிதாவின் மூஞ்சியை படமாகப் போட்ட மாநகராட்சின் ஈராண்டு சாதனை என்ற ஆண்டு மலரை கையில் கொடுத்தார்கள். அதைப்படித்து விட்டு ஆகா , அம்மா சூப்பரா பண்ணியிருக்காங்கோ, பாருங்கோ என்று வீட்டிற்கு செல்லலாம், இல்லையெனில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் என பெயரிடப்பட்ட பெட்டிகளில் தங்கள் மனுவைப் போடுங்கள் என்று மரியாதையாக அதிகாரிகள் கூறினர்.
என்னவோ இன்னைக்கே எல்லாக்குறைகளையும் தீர்த்துவிடப்போவது போல பீலா விட்டுவிட்டு இப்போது பொட்டியில் குறையைப்போடுங்கள் என்கிறார்கள். சரி, வந்தாயிற்று, கொண்டு வந்த மனுக்களை பெட்டியில் போடுவோம், எனப் போட்டுவிட்டு மேயர் என்னவோ பேசிக்கொண்டு இருக்கிறாரே என்று அரங்கத்தினுள் நுழைந்தோம்
மேடையில் அம்மாவினால் சமூகத்திற்கு ஏற்பட்ட நன்மைகளையும், ஸ்டாலின், மா.சுவினால் சமூகத்திற்கு ஏற்பட்ட தீமைகளையும் விலாவாரியாக 1 மணி நேரமாக மேயர் பேசிக்கொண்டிருக்க, துணைமேயர், அனைத்து அதிகாரிகள் என கொலுவில் அனைவரும் பொம்மைகளாய் வீற்றிருந்தனர். எப்படியும் ஆயிரம் பேர் இருப்பார்கள், மண்டலங்கள் வாரியாக பொது நல சங்கப்பிரதிநிதிகள் உட்காருவதற்கு தோதாக பெயர்ப்பலகைகள் மாட்டப்பட்டிருந்தன. நமது தோழர்கள், பகுதி இளைஞர்கள் என 35 பேர் அரங்கத்திற்குள் நுழைந்தோம். அக்கூட்டத்தில் இருந்தவர்கள் அனைவரும் பொது நலச் சங்கப்பிரதி நிதிகளாம், பார்ப்பனர்கள், மேட்டுக்குடிகள், முன்னாள் அதிகாரிகள் என இவர்கள்தான் 99% பேர் இருந்தனர். பொது நலச்சங்கம் என்றால் ஏதோ பொது மக்களுக்கான சங்கம் என்றும் அதில் பொதுமக்களின் பிரதிநிதிகள் இருப்பார்கள் என்றால் அப்படி இல்லை. தீட்சிதர்கள் தங்களை பொது தீட்சிதர்கள் என்று அழைத்துக் கொள்வதைப் போல மேட்டுக்குடிகளின் நலச் சங்கங்கள் தற்போது பொது நலச்சங்கங்களாகி இருந்தன. உழைக்கும் மக்களின் சார்பில் சென்ற நாங்கள்அரங்கத்தின் கடைசியில் இருந்த இருக்கைகளில் அமர்ந்தோம். உழைக்கும் மக்கள் பொருளாதாரப்படி நிலையில் கடைசியில் இருப்பது போல அவர்களுக்கான  அமைப்பு என்பதால் நாம் கடைசியில் இருந்தோம்.
சைதை துரைசாமி
“இது சுத்தமான கை , கறைபடியாத கை எல்லாமே அம்மாவின் ஆசியோடு நல்லா நடக்கிறது” – சைதை துரைசாமி
அரங்கத்தில் இருந்தவர்களிடம் கையை உயர்த்திக்காட்டி “இது சுத்தமான கை , கறைபடியாத கை எல்லாமே அம்மாவின் ஆசியோடு நல்லா நடக்கிறது, ஸ்டாலினும் மா.சுப்பிரமணியனும் எவ்வளவோ அயோக்கியத்தனத்தை செய்து விட்டார்கள். பொது இடத்தை அபகரித்து விட்டார்கள் . அதை மக்களுக்காக மீட்டெடுத்துக் கொண்டிருப்பது சென்னை மாநகராட்சிதான். எந்த வார்டிலும் ஒரு சிறு குறை கிடையாது , இப்போது இந்தக் கூட்டம் எதற்கு என்றால் , மாநகராட்சிப் பணிகளை மக்களிடம் எடுத்துச் செல்வதற்கு பொது நலச்சங்கங்கள்தான் உதவ வேண்டும். உங்கள் கோரிக்கை மனுக்களை வெளியே உள்ள பெட்டியில் போடுங்கள், ஏதோ “ தண்ணீர், தண்ணீர்” படம் மாதிரி மனுக்களை குப்பைத் தொட்டியில் போட மாட்டோம், ஒரு வாரத்தில் உங்களை அழைத்து விசாரித்து எல்லாவற்றையும் உடனே சரி செய்வோம்.”
“சரி, அடுத்து ஒவ்வொரு மண்டலத்திற்குமான பொது நலச்சங்கங்களின் பிரதிநிதிகள் 5 பேர்கள் மட்டும் தங்கள் கோரிக்கைகளை கூறலாம், அது மனுவில் இல்லாததாக இருக்க வேண்டும்.ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அப்புறம் நீங்கள் பேசும் போது நான் குறுக்கில் பேசுவேன், அது சரியாகத்தான் இருக்கும்”.
ஆகா என்ன ஒரு சனநாயகவாதி! இவர் எப்படி மாநகராட்சி கூட்டத்தை நடத்துவார் பாருங்கள்.
மேயர் கூறியதும் ஆங்காங்கு சிறு சலசலப்புகள் ஏற்பட்டன. தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.
“5 பேர்தான் அனுமதியாம், அப்ப நாம் எதுக்கு வந்தோம்?” கடைசி வரிசையில் இருந்த நாம் முன்னேறி வந்தோம், நம்மைப்போல பலரும் மைக்கின் அருகில் செல்ல, மேயர் மீண்டும் கூறினார் .
“யார்? யார் ? பேச வேண்டும் என்பதை அதிகாரிகள் குறித்துக் கொடுத்து விட்டார்கள், வேறு யாரும் பேச முடியாது”.
மண்டல ஆணையரிடம் சென்றால் அவரோ “ உங்க பெயரை கொடுக்கவில்லை” என்றார்.
அதற்குள் “எல்லோரும் போய் சீட்ல உக்காருங்க, யாருக்கு தரணுமோ அவங்களுக்கு வயர்லெஸ் மைக் வரும்” – இது மேயர்.
அதற்குள் ஒரு பணக்கார மேட்டுக்குடி பெண்மணிமேடையில் ஏறி “ சார், மேயர் சார் அண்ட் ஹானரபிள் ஆபீசர்ஸ், குட் ஈவ்னிங் சார், ஐயம் கம்மிங் ப்ரம், விஜிபி கோல்டன் பீச் நியர், உத்தண்டி வெல் பேர் அசோசியேசன், எங்களுக்கு சூப்பரா ரோட் போட்டு குடுத்தீங்க, லைட் இருக்கு, எல்லாமே இருக்கு சார், தேங்க்யூ வெரிமச் சார், தேங்க்யூ சார் ”.
எழும்பூர் சந்தோஷ் நகர்
எழும்பூர் சந்தோஷ் நகரில் உரிமைகளுக்காக போராடிய புமாஇமு (கோப்புப் படம்).
அதற்கு மேயரோ ”உங்க பிரச்சினைய சொல்லுறீங்களா? மனுவில எழுதி போட்டு விட்டீங்களா?” “ எல்லாமே மனுவில இருக்கு சார்” என்று அவர் கிளம்ப, உண்மையில் இந்த அம்மா அவர்கள் பகுதி பிரச்சினையை எந்த ‘அழகில்’எழுதியிருக்கும் என்பதை நினைத்தால் பகீர் என்று தோன்றியது.
ஒரு பார்ப்பனர் எழுந்து பேசினார் “ அம்மா ஆட்சியில எல்லாமே நல்லா இருக்கு , பக்கிங்ஹாம் கேனல் வெரி வொர்ஸ்ட், டஸ்ட், அதை கிளீன் செஞ்சு, அகெய்ன் போட் விடணும்”
சரி இங்கேயே நின்று கொண்டிருந்தால் எதுவும் பேச முடியாது. 3 குழுவாகப் பிரிந்து வயர்லெஸ் மைக் எங்கு உள்ளதோ அங்கு சென்றோம். ஒரு மைக்கை சுற்றி எனக்கு உனக்கு என்று முணுமுணுத்தபடியே சிறு கூட்டம் நின்றது. இதற்கிடையில் முன்வரிசையில் ஒரு பார்ப்பன பெண் அவ்வப்போது சார் வாட்டர் இல்லை, அது இல்லை, இது இல்லை என்று பேசிக்கொண்டிருந்தார். அவரிடம் தற்போது இருக்கிறது மைக். “சா ர் கு ஈ வ்னி ங் சார், எ ங்க ளு க்கு நி றை ய செ ய் து இ ருக் கீங் க…….” வாய்ஸ் பிரேக் ஆனது. சரியாக கேட்கவில்லை. புமாஇமுவின் தோழர் சாரதி அந்த மைக்கை பிடுங்கினார்.
“5 பேர்தான் பேசணும்னா எதுக்கு எங்க எல்லாரையும் வரச் சொன்னீங்க? எல்லாம் வேலை வெட்டி இல்லாம இருக்கோமா என்ன?”
“எல்லோரையும் பேச வைத்தால் டைமாகும், உங்க குறை என்ன சொல்லுங்க – இது மேயர்.
“நாங்க 143 வது வட்டம், மாதா கோயில் நகர் நொளம்பூர். எங்க பகுதியிலே ஆயிரக்கணக்கான மக்கள் இருக்காங்க, இளைஞர்களுக்கான விளையாட்டுத்திடல் இல்லை, உடற்பயிற்சிக்கூடம் இல்லை, ஏன் பொதுக்கழிவறை இல்லை. நேத்து சக்குபாய்ன்னு ஒரு அம்மா பாத்ரூம் போகும் போது பாம்புகடிச்சு செத்துப்போயிட்டாங்க” என்று வெடித்தார் தோழர் சாரதி.
நாம் பேசிக்கொண்டு இருக்கும் போது துணைமேயர் பெஞ்சமின் , மேயரிடம் ஏதோ சொல்ல “உங்க பகுதி எல்லாம் விரிவாக்கப்பட்ட பகுதி, பாதாளசாக்கடை அமைக்காமல் எதுவும் செய்ய முடியாது, ரோடு போட்டு இருக்கோமா? லைட் போட்டமா அதை மட்டும் பேசு, அவ்வளவுதான், மைக்கை அங்க குடு” என்றார் மேயர்.
இதற்கிடையில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், கைத்தடிகள் ஓடிவர தோழரிடமிருந்து மைக் பிடுங்கி இன்னொரு மேட்டுக்குடி ஆசாமியிடம் தரப்பட்டது. அவர் “புரட்சித்தலைவி…… வாழ்……” என்று பேசிக்கொண்டு இருந்தார்.
பத்திரிகைகள், உளவுத்துறையினர் நம்மை சூழ்ந்து என்ன பிரச்சினை என்று கேட்க ஆரம்பித்தனர்.
“மாதா கோயில் நகர், நொளம்பூர் பகுதியில் சக்குபாய் என்ற 55 வயது பெண், நேற்று மாலை சிறு நீர் கழிக்கச்சென்ற போது பாம்பு கடித்து இறந்தார். இதைப்பற்றி பேசக்கூடாது என்கிறார் மேயர், இந்த ஆலோசனைக்கூட்டம் ஒரு ஏமாற்று” என்று கூறிவிட்டு புறப்பட்டோம்.
வாசலில் அதிகாரிகள் “ சார் மனுவை எழுதி பொட்டியில போட்டுட்டீங்களா? தேங்க்யூ வெரிமச் சார் ” பேசிக்கொண்டு இருந்தார்கள்.
தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்ற என்ன ஒரு நாடகம்? பொது நலச் சங்கங்கள் என்ற பெயரில் உள்ளவர்களில் தங்களுக்கு வேண்டியவர்களைப் பொறுக்கி எடுத்து புரோக்கர் வேலை பார்க்க வைப்பது, அதை அச்சு பிசகாமல் தொழில் முறைப்படி செய்வது –  மேயர் சைதை துரைசாமி அவர்களே நீங்கள் தரகு வேலையில் கொடி கட்டிப் பறக்கிறீர்கள் ! விரைவில் மக்கள் அணிசேரும் போது உங்கள் கொடி தரையில் வீழ்த்தப்படும். vinavu.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக