சனி, 15 பிப்ரவரி, 2014

திருச்சியில் 200 ஏக்கரில் தி.மு.க. 10–வது மாநில மாநாடு !

திருச்சியில் தி.மு.க.வின் 10–வது மாநில மாநாட்டை கருணாநிதி இன்று(சனிக்கிழமை) காலை கொடி ஏற்றி தொடங்கிவைக்கிறார். இதற்காக 200 ஏக்கரில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
திருச்சியில் தி.மு.க. மாநாடு
திருச்சியில் உள்ள திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பிராட்டியூர் அருகே தி.மு.க.வின் 10–வது மாநில மாநாடு இன்றும்(சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) என இருநாட்கள் நடைபெறுகின்றன. இதற்காக அங்கு சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு உள்ளது. மாநாடு நடைபெறும் இடத்திற்கு அண்ணாநகர் என்றும் மாநாட்டு திடலுக்கு தந்தை பெரியார் பெயரும் சூட்டப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டில் உண்மை தொண்டர்கள் ,குண்டர்கள் அல்ல ,அதிக அளவில் உள்ள கட்சி இன்றும் .....திருச்சி நிருபிக்கிறதே ! 

மாநாட்டு திடலின் பிரதான நுழைவு வாயிலுக்கு தா.கிருஷ்ணன் முன் முகப்பு என்றும், உள் முகப்பிற்கு திருச்சி முன்னாள் நகராட்சி தலைவர் மா.பாலகிருஷ்ணன், மாநாட்டு பந்தலுக்கு வீரபாண்டி ஆறுமுகம் பெயரும், பொற்செல்வி அரங்கம் என்றும், மாநாட்டு மேடைக்கு வாசுகி முருகேசன் பெயரும் சூட்டப்பட்டு உள்ளன.
கருணாநிதி கொடி ஏற்றுகிறார்
மாநாட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் இரவே திருச்சிக்கு வந்து விட்டார். நேற்று மாநாட்டு திடலுக்கு சென்று பார்வையிட்டார்.
மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சிகள் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு தொடங்குகின்றன. பந்தலின் முகப்பில், தி.மு.க. கொடியை கருணாநிதி ஏற்றி வைத்து மாநாட்டை தொடங்கி வைக்கிறார். அப்போது இளைஞர் அணியினர் மற்றும் மகளிர் தொண்டர் அணியினரின் அணிவகுப்பு நடைபெறுகிறது. அணிவகுப்பு மரியாதையை கருணாநிதி ஏற்று கொள்கிறார்.
படத்திறப்பு
 தி.மு.க. பொது செயலாளர் அன்பழகன் மாநாட்டை திறந்து வைக்கிறார். அதன் பின்னர் மாநாட்டு பந்தலில் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. காலை 10.30 மணிக்கு இசை நிகழ்ச்சி நடக்கிறது. காலை 11 மணிக்கு மாநாட்டு வரவேற்புக்குழு தலைவர் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வரவேற்று பேசுகிறார்.
காலை 11.30 மணிக்கு படத்திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. தந்தை பெரியார் படத்தை கழக வெளியீட்டு செயலாளர் செல்வேந்திரனும், அண்ணா உருவபடத்தை திருச்சி சிவா எம்.பி.யும், சர்.பிட்டி தியாகராயர் படத்தை சபாபதி மோகனும், டி.எம்.நாயர் படத்தை கோவை மு.ராமநாதனும், டாக்டர் நடேசனார் படத்தை ஆலந்தூர் பாரதியும், புரட்சி கவிஞர் பாரதிதாசன் படத்தை கவிதை பித்தனும், மூவாலூர் மூதாட்டியார் படத்தை சுப்புலட்சுமி ஜெகதீசனும், சத்தியவாணிமுத்து படத்தை நூர்ஜகான்பேகமும், மொழிப்போர் தியாகிகள் உருவபடத்தை பொன்முடியும் திறந்து வைத்து பேசுகின்றனர். அத்துடன் காலை நிகழ்ச்சிகள் நிறைவு பெறும்.
பேராசிரியர் அன்பழகன் பேசுகிறார்
மதியம் 3 மணிக்கு இசை நிகழ்ச்சியுடன் மாலை நிகழ்ச்சிகள் தொடங்குகிறது. மாலை 4 மணிக்கு பல்வேறு தலைப்புகளில் தி.மு.க. முன்னணி நிர்வாகிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பேசுகின்றனர்.
இரவு 8 மணிக்கு தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் சிறப்புரையாற்றுகிறார். இரவு 9 மணிக்கு நாடகம் நடைபெறும். இத்துடன் முதல் நாள் மாநாட்டு நிகழ்ச்சிகள் நிறைவு பெறுகிறது.
2–வது நாள் நிகழ்ச்சிகள்
மாநாட்டு 2–ம் நாள் நிகழ்ச்சி நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு இசை நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. காலை 10 மணிக்கு தி.மு.க. முன்னணியினர் பல்வேறு தலைப்புகளில் பேசுகின்றனர். காலை 11 மணிக்கு மாநாட்டின் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.
பகல் 12 மணிக்கு மாநாட்டு தலைவர் கருணாநிதியை முன்மொழிந்து முதன்மை செயலாளர் ஆற்காடு வீராசாமி மற்றும் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் பேசுகிறார்கள். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றுகிறார். துணை பொதுச்செயலாளர்கள் துரைமுருகன், வி.பி.துரைசாமி, சற்குண பாண்டியன் ஆகியோரும் சிறப்புரையாற்றி பேசுகின்றனர். அத்துடன் அன்றைய காலை நிகழ்ச்சிகள் நிறைவடைகிறது.
கூட்டணி கட்சி தலைவர்கள்
மாலையில் தோழமை கட்சி தலைவர்களான திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன், மனித நேய மக்கள் கட்சி சட்டமன்ற குழு தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து, மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சி தலைவர் பொன்.குமார், இந்திய சமூக நீதி இயக்க தலைவர் பேராயர் எஸ்றா.சற்குணம், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் சந்தானம். பெருந்தலைவர் மக்கள் கட்சி அமைப்பாளர் என்.ஆர்.தனபாலன், தமிழ் மாநில தேசிய லீக் பொது செயலாளர் திருப்பூர் அல்தாப், அகில இந்திய வல்லரசு பார்வர்டு பிளாக் நிறுவன தலைவர் அம்மாசி, சிறுபான்மை சமூகப்புரட்சி இயக்க தலைவர் லியாகத் அலிகான் ஆகியோர் பேசுகின்றனர்.
கருணாநிதி சிறப்புரை
இறுதியாக இரவு 7 மணிக்கு மாநாட்டு தலைவரான கருணாநிதி சிறப்புரையாற்றுகிறார். அதனுடன் 2 நாள் மாநாடு நிறைவு பெறுகிறது.
மாநாட்டில் இரு நாட்களும் பல்வேறு தலைப்புகளில் பேசுபவர்கள் விபரம் மற்றும் தலைப்புகள் வருமாறு:–
டி.ஆர்.பாலு எம்.பி. – நாடாளுமன்றத்தில் நாம், கனிமொழி எம்.பி.–சமூக நீதி போரில் தி.மு.க., ஆ.ராசா எம்.பி.– திராவிடம் வளர்த்த தமிழ், தயாநிதி மாறன் எம்.பி.– இந்திய அரசியலில் தி.மு.க.வின் பங்களிப்பு, எல்.கணேசன்–நாடும்–ஏடும், ரகுமான்கான்– பாசிசப்பாதையில் அ.தி.மு.க. அரசு, கம்பம் செல்வேந்திரன்– கலைஞரின் படைப்பில் தென்றலும், புயலும், பொன்.முத்துராமலிங்கம்– மொழியுரிமை போராட்டங்கள்.
நடிகை குஷ்பு
பழனிமாணிக்கம் எம்.பி.– மாநில சுயாட்சியால் விளையும் மக்களாட்சி மாண்புகள், ஜெகத்ரட்சகன் எம்.பி.– கலைஞர் படைப்பில் முத்தமிழின் முத்திரைகள், எ.வ.வேலு எம்.எல்.ஏ.– தமிழின வரலாற்றை உருவாக்கும் தலைவர் கலைஞர், கடலூர் புகழேந்தி– மாணவரை உயர்த்தும் இனமானக்கொடி, கூத்தரசன்– வள்ளுவர் கண்ட சமுதாயத்தின் மாட்சி, செல்வகணபதி எம்.பி.– அ.தி.மு.க. ஆட்சியும்–தமிழக பொருளாதார வீழ்ச்சியும்.
 வாகை சந்திரசேகர்– திராவிட இயக்க வளர்ச்சியில் கலை உலகின் பங்களிப்பு, தென்னவன்– கலையுலகில் அண்ணாவும் கலைஞரும், புலவர் இந்திரகுமாரி– பெண்ணுரிமை பேசும் திருநாட்டில், குஷ்பு சுந்தர்– ஆதிக்கமற்ற சமுதாயம் அமைப்போம், புதுக்கோட்டை விஜயா– தமிழ்நாட்டில் சட்டம்–ஒழுங்கு, சண்முகம்– கழகமும், தொழிற்சங்க வரலாறும்.
சேதுசமுத்திர திட்டம்
காஞ்சனா கமலநாதன்– அ.தி.மு.க. ஆட்சியில் ஏழை படும் பாடு, தமிழச்சி தங்கபாண்டியன்– திராவிட இயக்கமும், சமூக நீதியும், குத்தாலம் கல்யாணம்– அண்ணாவும் கலைஞரும் காத்த அரசியல் கண்ணியம், வசந்தி ஸ்டான்லி எம்.பி.– சிறுபான்மை சமூகங்களின் காவல் அரண், விஜயா தாயன்பன்– திராவிட இயக்கமும்– மகளிர் முன்னேற்றமும், கோ.வி. செழியன் எம்.எல்.ஏ.– சட்டமன்றம் அன்றும்–இன்றும்.
நெல்லிக்குப்பம் புகழேந்தி– சாதி மத பேதம் களைவோம், கே.எஸ்.ராதாகிருஷ்ணன்– ஈழத்தமிழர் இன்னல் தீராதா?, ப.தாயகம் கவி– கலைஞர் அழைக்கின்றார்; இளைஞர்களே எழுந்து வா, விக்னேஷ்– இனம் காக்க இளைய தலைமுறையின் உறுதிமொழி, சுல்தானா பர்வீன்– கலைஞர் எழுத்தில், பேச்சில் சமுதாய புரட்சி, வக்கீல் பரந்தாமன்– கொள்ளை போகும் தமிழ்நாடு, தமிழன் பிரசன்னா– அ.தி.மு.க. அரசு போடும் பொய் வழக்குகள், குடியாத்தம் குமரன்–ஜனநாயகத்தின் வேர்கள், வக்கீல் சிவ.ஜெயராஜ்– சேது சமுத்திர திட்டம்–நூற்றாண்டு கனவு, கரூர் கணேசன்– மாநில சுயாட்சி–மத்தியில் கூட்டாட்சி.
மேற்கண்டவாறு பேசுபவர்கள் விவரம் அழைப்பிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 லட்சம் பேர் உட்கார ஏற்பாடு
மாநாட்டு பந்தலில் மேடைக்கு நேர் எதிரே முக்கிய பிரமுகர்கள், மாவட்ட செயலாளர்கள், தி.மு.க. முன்னணியினர் அமர்வதற்காக தனித்தனியாக இடம் பிரிக்கப்பட்டு அவற்றில் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு உள்ளது. மேடையின் நேர் எதிரே பந்தலின் கடைசி பகுதி வரை சுமார் ஒரு லட்சம் நாற்காலிகள் போடப்படுகின்றன.
பந்தலின் மற்ற பகுதிகளில் குளுமையாக இருப்பதற்காக ஆற்று மணல் லாரி, லாரியாக கொட்டப்பட்டு உள்ளது. தொண்டர்கள் அமர்வதற்கு வசதியாக அவற்றின் மேல் தரை விரிப்புகள் போடப்படுகிறது. மாநாட்டு பந்தலில் மட்டும் சுமார் 7 லட்சம் பேர் அமரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
தொண்டர்களுக்கு வசதி
மாநாட்டு பந்தலின் முன்பகுதியில் மாவட்ட தி.மு.க. செயலாளர் நேருவின் தம்பி மறைந்த தொழில் அதிபர் ராமஜெயம் பெயரில் கொடி மேடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மேடையில் 90 அடி உயர கொடி கம்பம் கறுப்பு, சிவப்பு வர்ணம் பூசி நடப்பட்டு வானுயர கம்பீரமாக காட்சி அளிக்கிறது.
மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள் குளிப்பதற்கு குளியல் அறைகளும், கழிவறைகளும் மாநாட்டு பந்தலின் பக்கவாட்டு பகுதியில் அமைக்கப்பட்டு உள்ளன. பந்தலின் ஒரு புறம் சைவ மற்றும் அசைவ உணவுகளை விற்பனை செய்யும் உணவகங்கள், சிற்றுண்டி, டீ, காபி உள்பட தின்பண்டங்கள் விற்பனை செய்யும் கடைகள், குளிர்பான கடைகளும் வைக்கப்பட்டு உள்ளன.
தலைவர்கள் கட்அவுட்கள்
மாநாட்டு திடலின் முன்பகுதியில் பெரியார், அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின், கூட்டணி கட்சி தலைவர்களான காதர் மொய்தீன் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள்), ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி), டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்) ஆகியோரின் கட் அவுட்கள் வைக்கப்பட்டு உள்ளன. இது தவிர மாநாட்டு திடலை சுற்றி எங்கு பார்த்தாலும் தி.மு.க. கொடி தோரணங்களாகவே காட்சி அளிக்கின்றன.
திருச்சி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. நகரின் முக்கிய இடங்களிலும் தி.மு.க. கொடிகள் ஏராளமாக கட்டப்பட்டு உள்ளன. dailythanthi.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக