திங்கள், 20 ஜனவரி, 2014

கெஜ்ரிவால் இன்று தர்ணா: போலீஸ் திடீர் தடை ! மீறினால் contempt of court

ஆத் ஆத்மி கட்சி சார்பில் உள்துறை அமைச்சகம் முன் இன்று தர்ணா போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், டெல்லியில் போலீசார் தடை உத்தரவு பிறப்பித்து உள்ளனர். ஆனால் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.> தெற்கு டெல்லியின் மாள்வியா நகரில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக சட்ட மந்திரி சோம்நாத் பார்திக்கும், போலீசாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதைப்போல சகர்பூர் பகுதியில் இளம்பெண் ஒருவர் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கும், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி ராக்கி பிர்லாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த சம்பவங்களால் அதிருப்தி அடைந்த முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், இதில் தொடர்புடைய 4 போலீஸ் அதிகாரிகளை இடைநீக்கம் செய்யுமாறு காவல்துறை தலைவரை கேட்டுக்கொண்டார். ஆனால் இதற்கு போலீஸ் ஆணையர் பி.எஸ்.பஸ்சி மறுப்பு தெரிவித்தார்.

இது தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி சுசில்குமார் ஷிண்டேவை பின்னர் சந்தித்து பேசிய முதல்-மந்திரி, ‘கடமையை செய்யாத போலீசாரை இடைநீக்கம் செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.

இந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை எனில் மத்திய உள்துறை மந்திரியின் அலுவலகம் முன் 20-ந்தேதி (இன்று) முதல்-மந்திரி தலைமையில் ஆம் ஆத்மி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவர் என அக்கட்சி சார்பில் பின்னர் அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், உள்துறை மந்திரியின் அலுவலகம் அமைந்துள்ள டெல்லி மாவட்டம் முழுவதும் போலீஸ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, ‘குடியரசு தினம் விரைவில் கொண்டாடப்படுவதை முன்னிட்டு நாளை (இன்று) முதல் டெல்லி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலுக்கு வருவதாக’ போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆனால், ‘மாநில அரசின் கோரிக்கைப்படி 4 போலீஸ் அதிகாரிகளையும் இடைநீக்கம் செய்யாவிட்டால், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் உள்துறை மந்திரி அலுவலகம் முன் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும்’ என ஆம் ஆத்மி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

டெல்லி போலீசாருக்கும், மாநில அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், ஆம் ஆத்மியின் தர்ணா போராட்டத்துக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்திருப்பது அங்கு மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக