வெள்ளி, 31 ஜனவரி, 2014

இவ்வளவு கூட்டம் கூடியதா? அழகிரிக்கு நிஜமாகவே எக்கச்சக்க எண்ணிக்கையில் ஆதரவு இருக்கிறது!


தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் தென் மண்டல அமைப்புச் செயலாளரான மு.க.அழகிரி, நேற்று (வியாழக்கிழமை) மதுரையில் தனது பிறந்த நாளை எழுச்சியுடன் கொண்டாடினார். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் நடந்த பிறந்த நாள் விழாவில் வெளி மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான தி.மு.க.வினர் திரண்டதால், கட்சித் தலைமை கலக்கமடைந்துள்ளது.
பிறந்த நாளை ஆதரவாளர்களுடன் மதுரையில் கோலாகலமாக கொண்டாடிய போதிலும், ஸ்டாலின் பற்றி அவதூறான பேச்சுகளை பேசியதாக கருணாநிதி கூறிய குற்றச்சாட்டால் அழகிரியின் முகத்தில் சற்று கவலை தென்பட்டது. அதுமட்டுமின்றி அவரது மனைவி, மகன், மகள் உட்பட அவரது குடும்பத்தினரின் முகங்களிலும் கவலை இழையோடியதை கண்கூடாக் காண முடிந்தது.
மதுரை சத்யசாய் நகரில் உள்ள அவரது வீட்டில் அதிகாலையில் யாகம் நடத்தப்பட்டது. நாதஸ்வரம் இசைக்கப்பட்டது. அதன்பின் காலை 8.45 மணிக்கு அழகிரி தனது மனைவி காந்தி, மகள் கயல்விழி, மகன் துரை தயாநிதி மற்றும் குடும்பத்தினர், ஆதரவாளர்களுடன் சேர்ந்து கேக் வெட்டினார். அப்போது வாணவேடிக்கை (பகலில்!), பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.

முதல்நாள் இரவே வந்த வாழ்த்துக்கூறிய எம்.பி.க்கள் கே.பி.ராமலிங்கம், நெப்போலியன், ரித்தீஷ் ஆகியோர் ‘இரவோடு இரவாக மட்டும் உறவாட வரவில்லை’ என்று காட்டுவதற்காக, காலையிலும் வந்து பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டனர்.
பின்னர் வீட்டிலிருந்து காலை 9 மணிக்கு ராஜா முத்தையா மன்றத்துக்கு அழகிரி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார்.
அழகிரியின் காருக்கு முன் நூற்றுக்கணக்கான மோட்டார் சைக்கிள்கள் அணிவகுத்துக்குச் செல்ல, காருக்குப் பின்னால் நூற்றுக்கணக்கான கார்கள் அணி அணியாகத் தொடர்ந்து வந்தன. வழிநெடுகிலும் அழகிரிக்கு ஆதரவாளர்கள் குதிரை, யானைகள் மூலம் வரவேற்பு அளித்தனர்.
தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்த பின்னர், குதிரைகள் பூட்டிய சாரட் வண்டி தயாராக இருந்தது. சாரட் வண்டியில் அழகிரி, அவரது மகன் துரை தயாநிதி இருவரும் அமர, முன்னாள் துணை மேயரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அழகிரியின் நெருங்கிய ஆதரவாளருமான மன்னன் வண்டியை ஓட்டிச் சென்றார்.
“அர்ஜுனனுக்கு (சினிமா நடிகர் அர்ஜூன் அல்ல) சாரதியாக இருந்த கண்ணனைபோல, அழகிரிக்கு சாரதியாக இந்த மன்னன் எப்போதும் இருப்பான்” என்று பெருமையாக கூறியபடி மன்னன் சாரட் வண்டியை செலுத்த, தொண்டர்கள் உற்சாகமாக (உற்சாக பானமும் அருந்தியிருந்தனர்) முழக்கமிட்டனர்.
பின்னர் ராஜா முத்தையா மன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட அழகிரி, அங்கும் 63 கிலோவில் தயாரிக்கப்பட்ட கேக்கை வெட்டி தனது ஆதரவாளர்களுக்கு வழங்கினார். அடுத்தகட்டமாக ஆதரவாளர்கள் வரிசையாக அழகிரிக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். நலத்திட்டங்களாக மூன்று சக்கர சைக்கிள், தையல் மெஷின், அயர்ன்பாக்ஸ், வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன.
காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளி மாவட்டங்களிலிருந்து கார்கள், வேன்களில் ஆதரவாளர்கள் தி.மு.க. கொடியுடன் சாரை சாரையாக வரத் தொடங்கினார். தல்லாகுளம் முதல் மாட்டுத்தாவணி பஸ் நிலையம் வரை போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. பல வீதிகளை, போலீசார் ஒரு வழிப்பாதையாக மாற்றி ஆங்காங்கே வாகனங்களை திருப்பி அனுப்பினர்.
சித்திரைத் திருவிழாவின்போது கள்ளழகர் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்குவதைப்போல, அழகிரியை அழகராக சித்தரித்து குதிரை வாகனத்தில் கொண்டு வந்தனர். இதைப் பார்த்த அழகிரி புளகாங்கிதம் அடைந்தார்.
அழகிரி செல்லும வழியெங்கும் மேளதாளம்,  சிலம்பாட்டம், ஒயிலாட்டம், மயில் ஆட்டம், கரகாட்டம், காவடி ஆட்டம், செண்ட மேளம் என ஆட்டம், பாட்டத்துக்கு அளவே இல்லை. காதை பிளக்கும் வகையில் ஆதரவாளர்கள் பட்டாசுகளை வெடித்தனர். அதேபோல பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
அழகிரி தனது ஆதரவாளர்களுடன் ராஜா முத்தையா மன்றம் செல்லும்போது ஒவ்வொரு பகுதியையும் கடந்து செல்ல அரைமணி நேரத்துக்கும் மேலானது.
விழாவில் 10,000 பேருக்கு அசைவ பிரியாணி விருந்து வழங்கப்பட்டது. நடிகர் நெப்போலியன் ‘அஞ்சா நெஞ்சன் 63′ என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
பிறந்த நாள் கேக்கில், ‘மலர் பாதையா.. முள் படுக்கையா… எதைத் தேர்ந்தெடுத்தாலும் அண்ணன் வழியில் நாங்கள்’ என எழுதப்பட்டிருந்தது.
உசிலம்பட்டி தி.மு.க.வினர் மெகா சைஸ் அரிவாள் பரிசு வழங்கினர். விழா நடந்த இடத்துக்கு அருகே இருந்த பிளக்ஸ் போர்டுக்கு பால் உட்பட பல்வேறு அபிஷேகங்களை ஆதரவாளர்கள் செய்தனர்.
இவற்றையெல்லாம்விட ஒருவர் 12 அடி நீளத்தில் வாயில் வேல் குத்தி ‘அழகிரி சாமிக்கு’ வாழ்த்துத் தெரிவிக்க வந்தார்.
ஆதரவாளர்கள் பலர் துரை தயாநிதி படம் போட்ட சீருடை அணிந்து வந்திருந்தனர். “தம்பியும் அரசியல் களத்தில இறங்க போறாராம்ல..”
அழகிரிக்கு பாரதிய ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. வசந்தகுமார், ரஜினிகாந்த், பிரபு உள்பட ஏராளமான திரையுலக பிரமுகர்களும் போனில் வாழ்த்துத் தெரிவித்தனர்.
பிறந்த நாளுக்கு பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் யாரும் வரவில்லையென்றாலும், அவர்களின் அதிரு திருப்தியாளர்கள் அதிக அளவில் வந்திருந்தனர்.
இந்த பிறந்த நாள் விழாவை அழகிரி தனது பலத்தை நிரூபிக்கும் விழாவாக நடத்தி காட்டிவிட்டார். “இவ்வளவு கூட்டம் கூடியதா?” என கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் வியப்படைந்ததாக கூறப்படுகிறது.
அழகிரி இல்லாமல் நாடாளுமன்றத் தேர்தல் களத்தை சந்தித்தால், தென் மாவட்டங்களில், வெற்றி பாதிக்கப்பட்டுவிடுமோ என்ற சந்தேகம் கருணாநிதிக்கு ஏற்பட்டால், மீண்டும் கோபாலபுரத்தில் ‘வா ராஜா வா’ வரவேற்பு கிட்டலாம். அழகிரி எதிர்பார்ப்பதும், அதைத்தானே…!
நேற்று மதுரையில் அழகிரி விழாவுக்கு கூடிய ஆச்சரிய எண்ணிக்கையிலான கூட்டம், எதைக் காட்டுகிறது?
அழகிரிக்கு நிஜமாகவே எக்கச்சக்க எண்ணிக்கையில் ஆதரவு இருக்கிறது!
அல்லது-
தி.மு.க.வுக்குள் எக்கச்சக்க எண்ணிக்கையில் அதிருப்தியாளர்கள் இருக்கிறார்கள்!!
 VIRUVIRUPU:


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக