வியாழன், 30 ஜனவரி, 2014

திருடிய பையில் பச்சிளம் குழந்தை... பையோடு போலீசில் சரணடைந்த ‘பாசக்காரத்’ திருடன்

மும்பை: தான் திருடிய பையில் விலைமதிப்பில்லாத குழந்தை இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த திருடன், அந்தக் குழந்தையை அநாதரவாக விட மனதில்லாமல், தான் போலீசில் சிக்குவதைப் பற்றியும் கவலைப்படாமல் குழந்தையோடு போலீசில் சரணடைந்த உணர்ச்சிகரமான சம்பவம் ஒன்று மும்பையில் நடந்துள்ளது. மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் மும்பை-பேலாபூர் ஹார்போர் ரயிலில் கேட்பாரன்றி பை ஒன்று அனாதையாக கிடந்ததை நோட்டமிட்ட அப்பகுதியை சேர்ந்த திருடன் கிஷோர் காலே (20) அதனை திருடியுள்ளான். ரயில் குர்லா ரயில் நிலையம் வந்தபோது, பைக்குள் என்ன பொருள் இருக்கிறது என்ற ஆவலில் அதை திறந்து பார்த்த கிஷோர் அதிர்ச்சி அடைந்துள்ளான். காரணம், பைக்குள் நகை, பணம் போன்ற பொருட்கள் இருக்கும் என எதிர்பார்த்த திருடனுக்கு, பைக்குள் பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தை இருந்தது தான். ஆனபோதும், குழந்தையை அப்படியே நிராதரவாக விட்டுச் செல்ல கிஷோருக்கு மனம் வரவில்லை. எனவே, உடனடியாக அருகே இருந்த காவலரிடம் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளான். அதனைத் தொடர்ந்து திருடிய குற்றத்திற்காக கிஷோரைக் கைது செய்த போலீசார், பின்னர் அக்குழந்தையை மருத்துவர்கள் துணையுடன் முதலுதவி கொடுத்து காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர். திருடனுக்கு இருந்த இந்த மனிதாபிமானம், அக்குழந்தையைப் பெற்ற பெண் மற்றும் அவரது உறவினர்களுக்கு இருந்திருந்தால், அக்குழந்தைக்கு இந்நிலைமையே ஏற்பட்டிருக்காது

tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக