செவ்வாய், 7 ஜனவரி, 2014

வருமான வரியை ரத்துசெய்ய பாஜக திட்டம் ? அர்த்த கிரந்தி : வருமான வரி, கலால் வரி, சுங்க வரி, சேவை வரி உள்ளிட்ட நேரடி வரி மற்றும் மறைமுக வரியை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும்

நாட்டில் நடைமுறையில் உள்ள வரி விதிப்பில் உடனடி சீரமைப்பு தேவை. தற்போதுள்ள பலமுனை வரியை ரத்து செய்து, ஒரு முனை வரியை அமல் செய்ய வேண்டும். லோக்சபா தேர்தலில், நான், பா.ஜ.,வுக்கு ஆதரவு அளிக்க, இந்த கோரிக்கையை ஏற்க வேண்டும்' என, டில்லியில் நடந்த கூட்டத்தில், யோகா குரு ராம்தேவ், நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுத்தார்.'பா.ஜ., மத்தியில், ஆட்சி அமைத்தால், வரி சீர்திருத்தம் கொண்டு வரப்படும். ராம்தேவின் கோரிக்கையை ஏற்றுக் கொள்கிறேன்' என, மோடியும் உறுதி அளித்தார்.மோடி உறுதி அளித்துள்ள, வரி சீர்திருத்தம் குறித்து, பிரபல பொருளாதார நிபுணர், எம்.ஆர்.வெங்கடேஷ், 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி: ராம்தேவ் முன்வைத்துள்ள வரி சீர்திருத்தம் என்ன? 'அர்த்த கிரந்தி' என்ற அமைப்பு, பல ஆண்டுகளாக ஆய்வுகளை நடத்தி, ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், 'வருமான வரி, கலால் வரி, சுங்க வரி, சேவை வரி உள்ளிட்ட நேரடி வரி மற்றும் மறைமுக வரியை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும்;
ஒரு முனை வரியை மட்டும் அமல் செய்ய வேண்டும்' என, கூறியுள்ளது. இந்த வரி சீர்திருத்தத்தையே, ராம்தேவ் முன் வைக்கிறார். ஒரு முனை வரி எப்படி வசூலிக்கப்படும்? 'அர்த்த கிரந்தி' கூறும் வரி சீர்திருத்தத்தில், அதிகபட்சமாக, 100 ரூபாய் நோட்டு தான் புழக்கத்தில் இருக்கும். '500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது' என, அறிவிக்கப்படும். அனைத்து பண பரிவர்த்தனையும், வங்கி மூலம் மட்டுமே செய்ய வேண்டும். அதிகபட்சமாக, பெட்டிக் கடைக்கு சென்று பொருள் வாங்கினால் மட்டுமே, பணம் கொடுக்க முடியும். மற்றபடி, அனைத்து பண பரிவர்த்தனைகளும், வங்கிகள் மூலமே நடக்கும். இந்த பரிவர்த்தனையின் போது, 2 சதவீத வரி விதிக்கப்படும். இது தான், ஒருமுனை வரி. வேறு வரிகள் எதுவும் இருக்காதா? வங்கி மூலம் செய்யும் பண பரிவர்த்தனைகள் அனைத்துக்கும், 2 சதவீத வரிசெலுத்தினால் போதும்; மற்ற வரிகள் இருக்காது. வங்கி மூலம் பரிவர்த்தனை செய்வதை தவிர்க்க முடியாதா? வங்கி மூலம் பண பரிவர்த்தனை செய்தால், வரி செலுத்த வேண்டும். அதனால், அனைத்தையும் பணம் மூலம் செய்யலாமே என்ற எண்ணம் ஏற்படலாம். ஆனால், பணத்தை வங்கியிலிருந்து தானே பெற வேண்டும். அப்போது, வங்கியில் இருந்து எடுக்கும் பணத்துக்கு, வரி செலுத்த வேண்டும். அப்படியானால் அனைத்துத் தரப்பினரும் வரி செலுத்த நேரிடுமே? இந்தியாவில், 120 கோடி மக்கள் உள்ளனர். இவர்களில், 2.50 கோடி மக்கள் தான் வரி செலுத்துகின்றனர். அதுவும், வேலைக்கு  செல்பவர்களே, வருமான வரி செலுத்துகினறனர். இதைத் தவிர, சேவை வரி, கலால் வரி என, பல வரிகள் உள்ளன. இதன் மூலம், ஆண்டுக்கு, 9 லட்சம் கோடி ரூபாய் வருமானம், அரசுக்குக் கிடைக்கிறது.இந்நிலையில், இந்த வரிகளை ரத்து செய்துவிட்டு, ஒருமுனை வரியை அமல்படுத்தினால், இந்த வருவாயை பெற முடியுமா என, பல ஆண்டுகளாக ஆய்வு நடத்தியுள்ளனர். ஒவ்வொரு மாதமும், வங்கியில் நடக்கும் பண பரிவர்த்தனை எவ்வளவு; அதில், ரொக்கம் மூலம் நடப்பது எவ்வளவு; காசோலை மற்றும் பிற வங்கி ஆவணங்கள் மூலம் நடப்பது எவ்வளவு; ஆண்டுக்கு சராசரியாக நடக்கும் பண பரிவர்த்தனை எவ்வளவு என்றெல்லாம் கணக்கிட்டுள்ளனர். இந்த பரிவர்த்தனைக்கு, 2 சதவீத வரி விதித்தால், தற்போது அரசுக்கு கிடைக்கும் வரி வருவாய் கிடைத்துவிடும் என, சொல்கின்றனர்.எனவே, இனி அனைவரும் வங்கி மூலம் தான் பண பரிவர்த்தனையை செய்ய வேண்டிய கட்டாய நிலை ஏற்படலாம். 'அர்த்த கிரந்தி' முன்வைத்துள்ள வரி சீர்திருத்தத்தின் சாதக, பாதகங்கள் என்ன? 'அர்த்த கிரந்தி' அளித்துள்ள பரிந்துரைகள், 100 பக்கம் வரை உள்ளன. இதை முழுவதும் படித்து, ஆய்ந்து தான், சாதக, பாதகங்களை சொல்ல முடியும். பொதுவாக, வரி முறையில், புதிய சிந்தனையை, 'அர்த்த கிரந்தி' அமைப்பின் பரிந்துரைகள் ஏற்படுத்தி உள்ளதாகவே பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக