சனி, 25 ஜனவரி, 2014

அழகிரி :ஸ்டாலின் பதவிக்காக எதையும் செய்வார் ! அவரை தலைவராக ஏற்கவே முடியாது !

சென்னை: திமுகவில் பதவிக்காக எதையும் செய்யும் மு.க.ஸ்டாலினை கட்சியின் தலைவராக ஒருபோதும் ஏற்க முடியாது என்று அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மு.க. அழகிரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட மு.க. அழகிரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: மு.க.ஸ்டாலினை நான் தலைவராக ஏற்க மாட்டேன் என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். இப்போதும் சொல்கிறேன். அவரை ஒரு போதும் தலைவராக ஏற்க மாட்டேன்.
என் மீதும், என் ஆதரவாளர்கள் மீதும் நடவடிக்கை எடுத்த பிறகு ஸ்டாலின் தலைமையை நாங்கள் ஏன் ஏற்க வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளால் நாங்கள் துவண்டு விடமாட்டோம்.
நான் சொல்வதை கேட்காத தலைவர், ஸ்டாலின் சொல்வதைத்தான் கேட்கிறார். தலைவரும், பொதுச் செயலாளரும் ஸ்டாலின் சொல்வதைத் தான் செய்கிறார்கள். எனக்கும் ஸ்டாலினுக்கும் தனிப்பட்ட முறையில் எந்த பிரச்சினையும் இல்லை. கட்சி ரீதியாகத்தான் பிரச்சினை உள்ளது

ஸ்டாலின் பதவிக்கு ஆசைப்படுபவர். ஆனால் நான் அப்படி அல்ல. ஒரு போதும் பதவிக்காக கவலைப்பட்டதே இல்லை
ஸ்டாலின் இப்போது தி.மு.க. தலைவர் மாதிரி செயல்பட ஆரம்பித்து விட்டார். அவருக்கு கட்சியில் பொருளாளர் பதவியை கொடுத்திருக்கிறார்கள். அவர் அதை மட்டும்தான் செய்ய வேண்டும். ஆனால் மற்ற கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு ஸ்டாலின் முக்கியத்துவம் கொடுக்கிறார்
ஸ்டாலினை பொருத்தவரை அவர் பதவிக்காக எதையும் செய்வார். இப்போதும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்.
எனக்கு எப்போதுமே கருணாநிதிதான் தலைவர். அவர் இல்லாத தி.மு.க.வை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.
மீண்டும் தலைவரை உடனடியாக சந்திக்கும் திட்டம் இல்லை. நான் எந்த தவறும் செய்யவில்லை. கட்சியில் எந்த குழப்பத்தையும் ஏற்படுத்தவில்லை.
அப்படி இருக்கும் போது நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? ஒரு போதும் மன்னிப்பு கேட்க மாட்டேன். அதுபோல விளக்கக் கடிதம் எதுவும் தலைமைக்கு அனுப்பமாட்டேன். இவ்வாறு மு.க. அழகிரி கூறினார்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக