ஞாயிறு, 5 ஜனவரி, 2014

திருவாரூர் தங்கராசு மரணம்! ரத்தகண்ணீர் திரைப்படத்திற்கு வசனம் எழுதிய நவீன சிந்தைனை மரபின் மூத்த அறிவாளி

1521537_10203156494979543_1958554309_nதிருவாரூர் தங்கராசு திராவிடகழகத்தின் தூணாக பெரியார் காலத்தில் இருந்தவர். எம்.ஆர்.ராதா நடித்து புகழ்பெற்ற 'ரத்தகண்ணீர்' திரைப்படத்திற்கு வசனம் எழுதியவர்.
சென்னையில் வசித்து வந்த இவர் உடல்நலக்குறைவு காரணமாக ஞாயிற்றுக்கிழமை காலமானார் என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் நவீன சிந்தனையை பெரியாரே துவக்கி வைக்கிறார்.
2000 ஆண்டுகளாக நம்பிக்கொண்டிந்த புனிதங்களை இந்து மதத்தை பார்ப்பனியத்தை கடவுளை தலைகீழாக்கி நொறுக்கியவர் பெரியாரே. 1925 க்குப் பிறகு தமிழகத்தில் புதிய எதிர் சிந்தனை மரபை அவரே உருவாக்கினார். அதையே தொடந்து மக்களிடம் கல்லடியும், செருப்பு வீச்சையும் எதிர்கொண்டு அஞ்சாமல் தொடர்ந்து பிரச்சாரமும் செய்தார்.
ராமாயணம், மகாபாரதம், பெரிய புராணம் இதன் பெருமைகளும் அதனூடக பார்ப்பன மற்றும் பார்ப்பனரல்லாத ஆதிக்க ஜாதிக்கர்களின் ஜாதித் திமிருமே, தமிழகத்தின் கலை வடிவங்களாக இருந்தன.
திரும்பும் திசையெங்கும் தெருக்கூத்து, நாடகம், தமிழ் இசை, கர்நாடக சங்கீதம், கதாகாலட்சேபம் என்று எளிய மக்களின் கலைவடிவங்கள் முதல் ஆதிக்ககாரர்களின் கலை வடிவம் வரை இதே கதைதான்.

தமிழகம் பல நூற்றாண்டுகளாக ஆதிக்க ஜாதி இந்துப் புராணக்குப்பைகளால் சக்கர வியூகம், பத்ம வியூகங்ளால் சுற்றி வளைக்கப்பட்டிருந்தது. அந்த வியூகத்தை உடைத்து உள் நுழைந்தவர் பெரியார் ஒருவரே.
பெரியார் சிந்தனை மரபில் பல மேதைகள் உருவாகினர். அதில் மிக முக்கியமானவர் திருவாரூர் தங்கராசு அய்யா. (தந்தைப் பெரியார் திராவிடர் கழகத்தின் மூத்த தலைவர்)
இந்துப் புராணங்களும் ராமனும் ராமாயணமும் அவரிடம் பட்ட பாடு சொல்லி மாளாது. நடிகவேள் எம்.ஆர். ராதாவுடன் இணைந்து அவர் நடத்திய ராமாயணம் நாடகம் அன்றைய காங்கிரஸ் அரசால் தடை செய்யப்பட்டது. ரத்தக்கண்ணீரில் அவருடைய பகுத்தறிவு வசனங்கள் இன்றும் என்றும் அது ஒரு பாடம்.
பள்ளிப் படிப்பை ஆரம்ப நிலையில் மட்டுமே படித்த திருவாரூர் தங்கராசு அவர்கள் தமிழ் புராணக்குப்பைகள் மேல் நடத்திய தாக்குதலை தடுக்க, எந்த பெரிய இந்துக் கண்ணோட்டம் கொண்ட மெத்தப் படித்த தமிழ் அறிஞர்களாலும் முடியவில்லை.
அவருடைய சிவனடியார் வரலாறு, சிவா விஷ்ணு லீலைகள் போன்றவை சேக்கிழரையும் பெரியபுராணத்தையும் சைவ சமயத்தையும் சந்தி சிரிக்க வைத்தவை.
பெரியார் சிந்தனையின் சிறப்பே தர்க்கம் (Logic). எவ்வளவு பெரிய விசயத்தையும் ஒரே ஒரு கேள்வியில் கந்தலாக்குவது.
பெரியாரின் அந்த மரபு திருவாரூர் தங்கராசு அய்யாவிடம் நிரம்பி இருந்தது.
சாதாரண பொதுக்கூட்டத்தில், இப்படி ஒரு கேள்வி கேட்டார் அய்யா தங்கராசு:
“ராமன் காட்டுக்குப் போறேன்னுதானே கிளம்பினான். அயோத்திக்கு எந்தப் பக்கம் காடு இருக்கு? வடக்கு பக்கம்தானே.. இமய மலையே அயோத்திக்கு வடக்குல தானே இருக்கு. அப்புறம் எதுக்குடா ராமன் காட்டுக் போறேன்னு தெற்கு பக்கம் வந்தான்? திருட்டுப் பய.. அதுலதான் நமக்கு எதிரான அரசியல் இருக்கு”
திருவாரூர் தங்கராசு அவர்கள் கேட்ட இந்தக் கேள்விக்கு இன்று வரை பதில் இல்லை.
நவீன சிந்தைனை மரபின் மூத்த அறிவாளியின் மரணம், மாற்று சிந்தனையாளர்களுக்கு பேர் இழப்பு. mathimaran.wordpress.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக