வியாழன், 16 ஜனவரி, 2014

ராஜ்யசபா - எம்.பி.,யாகிறார் பண்ருட்டி ராமச்சந்திரன்?

சமீபத்தில், விஜயகாந்தின் தே.மு.தி.க.,விலிருந்து விலகிய, பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு, அண்ணா விருது அறிவித்து, தமிழக அரசு கவுரவித்துள்ளது. அடுத்த கட்டமாக அவர், அ.தி.மு.க., சார்பில், ராஜ்யசபா எம்.பி., ஆக்கப்படுவார் என, செய்திகள் கசிந்துள்ளன.

விஜயகாந்த் கட்சியில், தனக்குரிய முக்கியத்துவம் குறைக்கப்படுவதாக கருதிய, பண்ருட்டி ராமச்சந்திரன், முதலில், தே.மு.தி.க., செயற்குழு கூட்டத்தை புறக்கணித்தார். அப்போது, விஜய காந்த் நேரடியாக தலையிட்டு, சமாதானம் செய்ததால், தாமதமாக கூட்டத்துக்கு வந்தார்.
ஆளும் கட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, சட்டசபைக்கு ஒரு முறை, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் கறுப்பு சட்டை அணிந்து வந்தனர். அப்போது, பண்ருட்டி ராமச்சந்திரன் மட்டும், வெள்ளை சட்டை அணிந்து வந்தார். மற்றொரு முறை, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்த போது, பண்ருட்டி ராமச்சந்திரன் மட்டும், சபைக்குள்ளேயே அமர்ந்திருந்தார்.இந்நிலையில் தான், எம்.எல்.ஏ., பதவி, கட்சி பதவி ஆகியவற்றிலிருந்து விலகினார் ராமச்சந்திரன். 'இதெல்லாம் திட்டமிட்டு நடத்தப்பட்டவை' என, தே.மு.தி.க., தொண்டர்கள்குமுறுகின்றனர்.

இதுகுறித்து, தே.மு.தி.க.,நிர்வாகி ஒருவர் கூறியதாவது:பண்ருட்டி ராமச்சந்திரனை, டில்லி தேர்தல் பிரசாரத்திற்கு வரும்படி அழைத்தோம்; ஆனால், வரவில்லை. கட்சியில் இருந்து ராஜினாமா செய்ததும், அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக, அறிவித்தார். இப்போது, அரசு சார்பில், விருது அறிவிக்கப்பட்டதும், 'மத்திய காங்., அரசை அகற்றுவதே இலக்கு' என, கூறுகிறார். எந்த கட்சி சார்பாக, இதை அவர் செய்வார்.டில்லியில் அரசியல் செல்வாக்கை பெற துடிக்கும், ஜெயலலிதாவிற்கு, கட்சியினரை வழிநடத்த முதிர்ச்சியான நபர் தேவை. அதற்கு சரியான நபராக, பண்ருட்டி ராமச்சந்திரன் இருப்பார். அதனால், விரைவில் நடக்கவிருக்கும், ராஜ்யசபா தேர்தலில், பண்ருட்டி ராமச்சந்திரன் எம்.பி.,யாக்கப்படலாம். அ.தி.மு.க.,வினரும், இதையே சொல்கின்றனர். இப்படி எல்லாமே, திட்டமிட்டு நடக்கிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது நிருபர் --

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக