வியாழன், 16 ஜனவரி, 2014

கேஜ்ரிவால் ஒரு சர்வாதிகாரி: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. பின்னி தாக்கு


வினோத் குமார் பின்னி
வினோத் குமார் பின்னி
தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாமல் மக்களை தமது கட்சி ஏமாற்றிவிட்டதாக குற்றம்சாட்டியுள்ள ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. வினோத் குமார் பின்னி, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை 'ஒரு சர்வாதிகாரி' என்று தாக்கிப் பேசியுள்ளார்.
மேலும், ஜனவரி 27-ம் தேதிக்குள் ஆம் ஆத்மி அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால், தாம் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப்போவதாக அறிவித்துள்ளார்.
டெல்லியின் லக்ஷ்மி நகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சர் ஏ.கே.வாலியை எதிர்த்து வென்றவர், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த வினோத் குமார் பின்னி.
கடந்த 2009 முதல் காங்கிரஸின் தீவிர தொண்டராக இருந்த இவர், 2011-ம் ஆண்டு அண்ணா ஹசாரே லோக்பால் போராட்டம் தொடங்கியபோது அவருடன் இணைந்தார். பிறகு கேஜ்ரிவாலுடன் சேர்ந்தார்.

டெல்லி அமைச்சரவையில் தமக்கும் இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் இருந்த பின்னி. ஆனால் கிடைக்கவில்லை. இதற்கு தனது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறினார். அதன் பிறகு அவரிடம் கேஜ்ரிவால் பேசி, கட்சியின் ஆட்சிமன்ற குழு உறுப்பினர்களில் ஒருவராக நியமித்தார்.
இந்த நிலையில், வினோத் குமார் பின்னியால் ஆம் ஆத்மி கட்சியில் மீண்டும் உட்கட்சி பூசல் எழுந்துள்ளது. அரவிந்த் கேஜ்ரிவால் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டார் என்று இவர் கடுமையாக சாடத் தொடங்கி இருக்கிறார்.
டெல்லியில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்கள் கூட்டத்தில் வினோத் குமார் பின்னி கூறும்போது, "நீங்கள் (கேஜ்ரிவால்) ஒரு சர்வாதிகாரி ஆகிவிட்டீர்கள். டெல்லி மக்களை ஏமாற்றுவதை நிறுத்துங்கள். எல்லா முடிவுகளுமே கட்சியின் மூடிய அறைக்குள் நான்கு - ஐந்து பேர்களால் எடுக்கப்படுகிறது. தம்முடன் கருத்து வேறுபாடு உள்ளவர்களிடம் அரவிந்த் கோபத்தை வெளிப்படுத்துகிறார். அவருக்கு எதிராக யாராவது பேசினால், அவர் கூச்சலிடத் தொடங்கிறார்.
ஒருமுறை பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறியும் (யூஸ் அண்ட் த்ரோ) கொள்கைகளையே அவர்கள் (ஆம் ஆத்மி) கையாள்கிறார்கள். முதலில் அவர்கள் அண்ணா ஹசாரேவையும் கிரண் பேடியையும் பயன்படுத்தினார்கள். கட்சிக்குள் இன்னும் பலர் நசுக்கபடுக்கிறார்கள்" என்றார் பின்னி.
ஆம் ஆத்மி தமது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் மக்களை ஏமாற்றிவிட்டதாகக் குற்றம்சாட்டிய அவர், டெல்லியில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தினமும் 700 லிட்டர் தண்ணீர் இலவசமாகத் தருவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, குறிப்பிட்ட அளவுக்கு மேலாக தண்ணீர் பயன்படுத்துவோருக்குக் கட்டணம் விதிப்பது எந்த வகையில் நியாயம்? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், மின் கட்டணத்தைப் பாதியாகக் குறைப்பதாக வாக்குறுதி அளித்துவிட்டு, மாதம்தோறும் 400 யூனிட்களைத் தாண்டினால் முழுக் கட்டணம் என்பதும் சரியல்ல என்று குற்றம்சாட்டினார்.
டெல்லி அமைச்சர்கள் அனைவரும் வி.ஐ.பி. பதிவு எண்களுடன் கூடிய பெரிய கார்களைப் பயன்படுத்தி வருவதாகவும் பின்னி குறைகூறினார்.
டெல்லியில் டென்மார்க் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிகழ்வைச் சுட்டிக்காட்டிய பின்னி, "டெல்லியில் பெண்களைப் பாதுகாக்க, இந்தப் புதிய அரசு என்ன செய்துள்ளது?" என்றும் கேள்வி எழுப்பினார்.
tamil.thehindu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக